Published:Updated:

கங்கிராட்ஸ் காமன்மேன் ஏகே-47

இந்தியாவை அதிரவைத்த அரவிந்த் கெஜ்ரிவால்பாரதிதம்பி

கங்கிராட்ஸ் காமன்மேன் ஏகே-47

இந்தியாவை அதிரவைத்த அரவிந்த் கெஜ்ரிவால்பாரதிதம்பி

Published:Updated:
##~##

 ரவிந்த் கெஜ்ரிவாலை சுருக்கமாக 'ஏகே-47’ என்று அழைக்கிறது மீடியா. ராபர்ட் வதேராவின் டி.எல்.எஃப். ஊழல் தொடங்கி, நரேந்திர மோடி அரசின் எரிவாயு ஊழல் வரை... கெஜ்ரிவால் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியதால், அவருக்கு இந்தச் செல்லப் பெயர். கடந்த 2012 நவம்பரில் 'ஆம் ஆத்மி’ கட்சியை (சாமானியர்களின் கட்சி) தொடங்கியபோது, அவர்  ஊழலுக்கு எதிரான அதிரடி நபர் மட்டுமே. ஆனால், இப்போது உண்மையில் ஒரு ஏகே-47ஆக மாறி, 28 தொகுதிகளை வென்று, தலைநகர் டெல்லியில் 'காங்கிரஸின்’ ஆதிக்கத்தை தனது 'துடைப்பத்தால்’ பெருக்கித் தள்ளியிருக்கிறார்.  கட்சி ஆரம்பித்து ஒரு வருடத்தில் ஆம் ஆத்மி பெற்றிருக்கும் விஸ்வரூப வெற்றிதான் ஆச்சர்ய அதிர்ச்சி. அதனால்தான் முதல் இடம் பெற்ற பா.ஜ.க-வை விட்டுவிட்டு, எல்லோரும் இரண்டாம் இடம் பிடித்த கெஜ்ரிவால் குறித்துப் பேசுகின்றனர். ஒருவகையில் இது அண்ணா ஹசாரே தொடங்கிவைத்த எழுச்சி. அதை அரவிந்த் கெஜ்ரிவால் அறுவடை செய்திருக்கிறார். எனினும் கெஜ்ரிவாலுக்கு என தனித்த, குறிப்பிடத்தகுந்த அரசியல் பாத்திரம் உண்டு.

1968-ல் ஹரியானாவில் பிறந்த கெஜ்ரிவால், காரக்பூர் ஐ.ஐ.டி-யில் இயந்திரவியல் படித்தவர். சில காலம் டாடா நிறுவனத்தில் பணியில் இருந்தார். பிறகு, 1992-ல் அதை விட்டுவிட்டு ராமகிருஷ்ண மடம், நேரு யுவகேந்திரா போன்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டவர்,  1995-ல் சிவில் சர்வீஸ் பணிகளில் ஒன்றான ஐ.ஆர்.எஸ்-ஆகத் தேர்வுபெற்று இந்திய வருவாய்த் துறையில் இணைந்தார். 2006-ல் அவர் பணியில் இருந்து விலகினார். கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாவும் ஐ.ஆர்.எஸ். அதிகாரிதான். அவர் இப்போதும் பணியில் இருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கங்கிராட்ஸ் காமன்மேன் ஏகே-47

இதற்கு இடையில் 1999-ம் ஆண்டு அவர் ஐ.ஆர்.எஸ். பணியில் இருந்தபோதே, டெல்லியில் 'பரிவர்த்தன்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். பரிவர்த்தன் என்றால் 'மாற்றம்’ என்று பொருள். 'சிறிய விஷயங்களில் இருந்தே மாற்றம் தொடங்குகிறது’ என்ற அவரது முழக்கம் அவருக்குத் தனித்த அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. குறிப்பாக, அருணா ராயுடன் இணைந்து 'தகவல் அறியும் உரிமைச் சட்டம்’ அமல்படுத்தப்படுவதற்கு உரத்தக் குரல் கொடுத்ததில், இவரது பங்கு முக்கியமானது. டெல்லி மாநில அரசு, டெல்லி மாநகராட்சி, உணவு வழங்கல் துறை, வருமான வரித் துறை உள்ளிட்ட பல அரசுத் துறைகளில் புரையோடியிருக்கும் ஊழல்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலப்படுத்தினார். 'ஜன் லோக்பால் மசோதா கொண்டுவர வேண்டும்’ என்ற ஹசாரேவின் கோரிக்கைக்கு சட்டபூர்வ விளக்கம் அளிப்பதில் கெஜ்ரிவால் முன்னே நின்றார்.

ஒருகட்டத்தில் ஹசாரேவும் கெஜ்ரிவாலும் இரட்டைத் தலைவர்களாக உருவானார்கள். கூடிய லட்சக்கணக்கான இளைஞர் கூட்டம், அரசியல் மாற்றத்தை விரும்புவதை அரவிந்த் கண்டுகொண்டார். இதற்காக கடந்த ஆண்டு நவம்பரில் 'ஆம் ஆத்மி கட்சி’யை அவர் தொடங்கியபோது, ஹசாரே அதை விரும்பவில்லை.

ஜந்தர் மந்தரில் அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது கூடிய கூட்டத்தில் கால்வாசிகூட, அரவிந்த் கெஜ்ரிவாலின் உண்ணாவிரதத்துக்குக் கூடவில்லை. ஆனாலும், உற்சாகம் குலையாமல் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 70 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். அதை வெளிப்படையாக விமர்சித்த ஹசாரே, 'தேர்தல் பிரசாரத்தில் என் படங்களைப் பயன்படுத்தக் கூடாது’ என்றும், 'லோக்பால் போராட்ட நிதியை டெல்லி தேர்தலுக்குச் செலவழிக்கிறார்’ என்றும் குற்றம் சாட்டினார். எல்லாவற்றையும் மீறி கெஜ்ரிவால் அணியினர் பெரும் வெற்றி பெற்றதும், இப்போது ஹசாரே அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருக்கிறார். அப்படி அனுப்புவதைத் தவிர, அவருக்கு வேறு வழியும் இல்லை.

மற்ற அரசியல் கட்சிகளைப் போலவே, 'ஆம் ஆத்மி’ கட்சியும் தேர்தல் செலவுகளுக்காக நிதி சேகரித்தது. அதில் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்தபோது, தன் கட்சிக்கு சேர்ந்துள்ள நன்கொடை குறித்து வெளிப்படையாக அறிவித்தார் கெஜ்ரிவால். 'நாங்கள் தேர்தல் நிதிக்காக 20 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்தோம். அந்த அளவுத் தொகை சேர்ந்துவிட்டதால், இனி யாரும் அனுப்ப வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார். அதையும் மீறி அனுப்பியவர்களுக்கு, பணத்தைத் திருப்பி அனுப்பியது ஆம் ஆத்மி.

இத்தகைய நடவடிக்கைகள் மட்டுமின்றி... இதற்கு முன்பாக கெஜ்ரிவால் அம்பலப்படுத்திய சில ஊழல்கள் முக்கியமானவை. ஹரியானா மாநில காங்கிரஸ் அரசும், டி.எல்.எஃப். நிறுவனமும் இணைந்து சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு சலுகை வழங்கியதில் பல நூறு கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக ஆதாரங்களை வெளியிட்டார். மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் தனது தொண்டு நிறுவனம் மூலம் சுமார் 70 லட்சம் ரூபாய் சுருட்டியதை வெளியே கொண்டுவந்தார். பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி, தேசியவாத காங்கிரஸின் உதவியுடன் எப்படி எல்லாம் மகாராஷ்டிராவில் விவசாயிகளின் விலை நிலங்களை 'ஸ்வாகா’ செய்தார் என்பதை அம்பலப்படுத்தினார். முக்கியமாக, நரேந்திர மோடி அரசின் ஊழல்களை இவர் வெளியிட்டபோது அது தேசியப் பரபரப்பைக் கிளப்பியது.

கங்கிராட்ஸ் காமன்மேன் ஏகே-47

மோடி தலைமையிலான குஜராத் மாநிலத்தின் பெட்ரோலிய கார்ப்பரேஷன், கிருஷ்ணா-கோதாவரி படுகையில் உள்ள தனது எண்ணெய் வயல்களின் பங்குகளை, பார்பேடோஸ் (Barbados) நாட்டில் உள்ள 'ஜியோ குளோபல்’ என்ற ஓர் அநாமதேயக் கம்பெனிக்கு விற்றது. இதன் மூலம் அந்த கம்பெனியின் சொத்து மதிப்பு 64 டாலரில் இருந்து (சுமார் 4,000 ரூபாய்), 10,000 கோடியாக உயர்ந்தது. அதாவது, அப்படிப் போலியான நிறுவனங்களை உருவாக்கி, அதற்குப் பங்குகளைக் கைமாற்றி ஊழல் செய்யப்பட்டிருக்கிறது. இவற்றை வெளிப்படுத்திய கெஜ்ரிவால், 'ஸ்பெக்ட்ரம் ஊழலைவிட இது பெரியது’ என்றார்!

''நான் டெங்கு கொசுவைவிட ஆபத்தானவன். பா.ஜ.க-வையும் காங்கிரஸையும் கடிக்க ஆரம்பித்தால், அவர்களால் தாங்க முடியாது'' என்று தேர்தலுக்கு முன்பு சொன்ன கெஜ்ரிவால், அதை இப்போது நிரூபித்துவிட்டார். கெஜ்ரிவால், இந்த வெற்றிக்காக அதிகம் மெனக்கெடவில்லை. அதாவது, மற்ற அரசியல் கட்சிகளுடன் ஒப்பிடும்போது அவர் பெரிய பொதுக்கூட்டங்களையோ, பிரமாண்ட பிரசார நடவடிக்கைகளையோ எடுக்கவில்லை. 'ராஞ்சனா’ படத்தில் தனுஷ் அண்ட் கோ வீதிவீதியாகப் பிரசாரம் செய்து பெரும் அரசியல் ஜாம்பவான்களை வீழ்த்துவதைப் போல... ஆம் ஆத்மி வெற்றி பெற்றிருக்கிறது.

இதில் ஒரு வேடிக்கை, 'ஆம் ஆத்மி’ என்ற சொல், அரவிந்த் கெஜ்ரிவால் கண்டடைந்தது அல்ல. காங்கிரஸ் கட்சி தன்னை காலம் காலமாக தங்களை இப்படித்தான் அழைத்துக்கொள்கிறது. அந்த வார்த்தைகளை எடுத்து அதே காங்கிரஸை வீழ்த்தியிருக்கிறார்!

வி.ஆர்.எஸ். விமர்சனம்!

இந்திய வருவாய்த் துறை பணிக்கு 2006-ல் வி.ஆர்.எஸ். கொடுத்தாலும் 2011-ல்தான் கெஜ்ரிவால் பணிவிலகல் செய்யப்பட்டார். காரணம், 2000-ம் ஆண்டில் கெஜ்ரிவால் இரண்டு ஆண்டுகளுக்கு சம்பளத்துடன்கூடிய விடுப்பு எடுத்தார். மறுபடியும் பணியில் சேரும்போது குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பணியில் தொடர வேண்டும் என்பது அந்த விடுப்புக்கான நிபந்தனை. அதை மீறி, 2006-ல் கெஜ்ரிவால் வி.ஆர்.எஸ். கொடுத்தார்.

இப்படி ஒப்பந்தத்தை மீறி இடையில் வந்தால், விடுப்புக் காலத்துக்கான சம்பளத்தை அரசுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும். இதுவும் விதிமுறைதான். இதன்படி கெஜ்ரிவால் 9.27 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால், அதைச் செலுத்த மறுத்தார். அரசும் விடாப்பிடியாக இருந்தது. கடைசியில் பணத்தைக் கட்டிய பிறகுதான் 2011-ல் பணிவிலகல் தரப்பட்டது. இது கெஜ்ரிவால் மீதான விமர்சனங்களில் ஒன்றாக முன்வைக்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism