Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
##~##

திர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரை இறுதியாக அரங்கேறியிருக்கிறது நான்கு மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல்கள். ஊழல் கறை படிந்த காங்கிரஸைப் பெருக்கித் தள்ளித் துடைத்தெறிந்துவிட்டார்கள் வாக்காளர்கள். மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் ஆட்சியைத் தக்கவைத்ததோடு, காங்கிரஸ் வசம் இருந்த ராஜஸ்தானையும் கைப்பற்றியுள்ளது பா.ஜ.க. . டெல்லியிலும் அதற்கே பெரும்பான்மை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் கருவுற்று, பெயருக்கேற்ப சாமானியர்களின் கட்சியாகப் பிறந்து, இப்போது மாபெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்து, தேசத்தின் தலைநகரத்தையே அசரடித்து எழுந்து நிற்கும் 'ஆம் ஆத்மி’ கட்சியின் வரவுதான், இந்திய அரசியலுக்குப் புத்துணர்வு அளிக்கும் ஒரு விடிவெள்ளி!

'மதவாத பா.ஜ.க. மற்றும் ஊழல் காங்கிரஸ் மீது மக்கள் வெறுப்புற்று இருந்த நேரம், தன்னை ஒரு நல்ல மாற்றாக ஆம் ஆத்மி முன்னிறுத்திக்கொண்டது மட்டுமே இந்த மாபெரும் வெற்றியின் ரகசியம்’  என்று சுலபமாகச் சொல்லிவிட முடியாது. சாமானிய மக்களின் பிரம்மாஸ்திரமான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்தக்கோரிய அரவிந்த் கெஜ்ரிவாலின் அறப் போராட்டங்கள், இந்திய இளைஞர்களின் மனதில் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் விதைத்ததுதான் இதன் ஆரம்பம்!

சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா முதல் பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி வரை புரையோடிப்போயிருக்கும் ஊழலின் ஆணிவேரை இவர் அடுத்தடுத்து அம்பலப்படுத்தியபோது, லோக்பால் மசோதாவின் அவசியத்தையும், ஆம் ஆத்மி கட்சியின் அவசியத்தையும் மக்கள் முழுமையாகப் புரிந்துகொண்டார்கள். ஒருமித்த சிந்தனைகொண்ட செயல்வீரர்களை ஒன்றுதிரட்டி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான இளைஞர்கள் தங்கள் கட்சியை உருவாக்கினர். எந்தவிதமான மூடுமந்திரமும் இல்லாமல் வெளிப்படையாக நிதி திரட்டித் தேர்தலை எதிர்கொண்ட நேர்மை, தலைநகர வாக்காளனுக்கு அந்தக் கட்சி மீது நன்னம்பிக்கை துளிர்க்கச் செய்தது. ஆக, வியர்வை, உழைப்பு, வியூகங்களையும் தாண்டி, அறச் சிந்தனையும் அதன் நேர்மையான செயல்பாடுமே ஆம் ஆத்மிக்கு இந்த வெற்றியைக் கையளித்திருக்கின்றன. இது புதிய வெளிச்சம்.

எரிகிற கொள்ளிகளில் எது நல்ல கொள்ளி என்று எடுத்துப்பார்த்து அடுத்தடுத்து தலை சொறிந்துகொள்வதே இதுவரை இந்திய வாக்காளனின் அவலமாக இருந்தது. 'ஆம் ஆத்மி’ போன்ற கட்சிகள் ஒரு மாபெரும் மாற்றத்தின் ஆரம்பம். சாதி, மதம், பணம், பலம் எனக் குளிர்காய்ந்த வாக்கு அரசியலின் வாய்ச்சவடால்களுக்கு மத்தியில், இது மக்கள் அரசியலை முன்னிறுத்தும் துடைப்பம். அதை எடுத்து, தேசத்தின் அத்தனை ஊழல் குப்பைகளையும் அகற்றுவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism