Published:Updated:

‘காங்கிரஸ் கரடி’யைக் கட்டிப்பிடிப்பது யார்?

ப.திருமாவேலன்

‘காங்கிரஸ் கரடி’யைக் கட்டிப்பிடிப்பது யார்?

ப.திருமாவேலன்

Published:Updated:
##~##

 டந்து முடிந்த நான்கு சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸின் டவுசர் கழன்றுவிட்டது!

டெல்லி, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் என்று எல்லாக் கருத்துக் கணிப்புகளும் சொன்னது. ஆனால், இந்தத் தேர்தல்களில், 'பா.ஜ.க. வென்றுள்ளது’ என்பதைவிட 'காங்கிரஸ் தோற்றுள்ளது’ என்பதே உண்மை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த அளவுக்கு வெற்றி பெறுவோம் என்று பா.ஜ.க-வே நினைக்கவில்லை என்பதற்கு உதாரணம், மத்தியப்பிரதேசம். பா.ஜ.க. பொதுச் செயலாளர் அனந்தகுமார், தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு, ''மாநிலத்தில் பல அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மீது எதிர்ப்பு அலை வீசுவதை நாங்கள் அறிவோம். அதனால்தான் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களில் 43 பேருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பையே பா.ஜ.க. மறுத்துள்ளது. ஓரளவு எங்களுக்கு எதிர்ப்பு அலை வீசுவது உண்மைதான்'' - என்று சொல்லி இருந்தார்.

பா.ஜ.க. இரண்டாவது முறையாக மத்தியப்பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கிறது. அந்த மாநில முதலமைச்சர் சிவ்ராஜ்சிங் சவுகான், மாநிலத்தை வளர்ச்சி பொங்கிய மாநிலமாக மாற்றிவிடவில்லை. சீதைக்கு கோயில் கட்டுவது, முதியவர்களை இலவசமாக புனிதப்பயணம் அழைத்துச் செல்வது என்ற கவர்ச்சிகரமான திட்டங்களில் மூழ்கி இருந்தவர். ஊழல், முறைகேடுகள்கொண்ட குற்றச்சாட்டுகளும் அதிகம். சவுகானும் அவரது மனைவியும் பணம் எண்ணும் இயந்திரத்தை வீட்டில் வைத்திருப்பதாகவும், அதில் தினந்தோறும் எண்ணி எண்ணி பணம் வசூல் செய்வதாகவும் காங்கிரஸ் கட்சி, நாளிதழ்களில் விளம்பரமே கொடுத்தது. இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா மீது மான நஷ்ட வழக்குப் போட்டுள்ளார் சவுகான்.

‘காங்கிரஸ் கரடி’யைக் கட்டிப்பிடிப்பது யார்?

ராஜஸ்தானிலும் பா.ஜ.க. மீது விமர்சனங்கள் வைக்கப்படாமல் இல்லை. முன்பு பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோது, முதல்வராக இருந்த வசுந்துரா ராஜே சிந்தியா செய்த முறைகேடுகள் கொண்ட பட்டியலை காங்கிரஸ் கட்சி 100 பக்கங்களுக்கு மேல் தொகுத்து வெளியிட்டது. 'மாநிலத்தின் வளர்ச்சிக்கு பா.ஜ.க. எதுவும் செய்யவில்லை; பழம்பெருமை பேசிக்கொண்டே காலத்தைக் கடத்திவிட்டார்கள்’ என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

இதேபோல்தான் சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க-வும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. நக்சலைட்கள், மாவோயிஸ்ட்களை ஒடுக்குகிறோம் என்ற பெயரால் மலையின மக்களை பா.ஜ.க. வஞ்சித்தது. அந்த மாநிலத்தில் பிரசாரம் செய்தபோதுதான் ராகுல் காந்தி, 'பா.ஜ.க., திருடர்கள் கட்சி. நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கத் துணைபோகும் கட்சி’ என்று கடுமையாகச் சாடினார். ராணுவம், போலீஸ், துரோகிகள் துணைகொண்டு மலையின மக்களை வதைத்தார் பா.ஜ.க. அரசின் முதலமைச்சர் ராமன் சிங்.

இவை அத்தனையையும் ஒதுக்கி ஓரமாக வைத்துவிட்டு, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் மீண்டும் தாமரை மலர்ந்துள்ளது என்றால்... இதையெல்லாம் மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று பொருள் அல்ல. இவை அனைத்தையும்விட மத்திய காங்கிரஸ் அரசின் மீதான கோபம்தான் காரணம்! கடந்த ஒன்பது ஆண்டுகால மத்திய காங்கிரஸ் ஆட்சியின் மக்கள் விரோதப் போக்கைச் சகித்துக்கொள்ள முடியாத மக்கள், தாமரைக்கு குத்தித் தீர்த்துள்ளார்கள். கைச் சின்னத்தைப் பார்த்தாலே அவர்கள் வயிறு எரிந்துள்ளது!

பொதுவாக, சட்டமன்றத் தேர்தல்களை தேசியத் தலைவர்கள் மதிப்பது இல்லை. பிரதமர் நாற்காலிக்கு இது உதவாது என்ற அலட்சியமும் காரணமாக இருக்கலாம். சம்பிரதாயத்துக்கு, ஒரு பொதுக் கூட்டம் பேசிவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால், இந்த நான்கு மாநிலத் தேர்தல்களில் மாநிலத் தலைவர்கள், மாநில முதல்வர்களுக்கு இணையாக அலைந்தவர்கள் மன்மோகன் சிங், சோனியா, நரேந்திர மோடி, ராகுல் ஆகியோர். இந்த நால்வர் பேச்சுகள்தான் நாலா பக்கங்களும் எதிரொலித்தன. அது எழுதி வைத்துக்கொண்டு வாசித்த புள்ளிவிவரப் பட்டியல் அல்ல. லோக்கல் பேச்சாளர்களாக மாறி வெளுத்தெடுத்த ஆவேச உரைகள்.

‘காங்கிரஸ் கரடி’யைக் கட்டிப்பிடிப்பது யார்?

'பா.ஜ.க., திருடர்கள் கட்சி’ என்றார் ராகுல். 'காங்கிரஸைவிட விஷத்தன்மைகொண்ட கட்சி இந்தியாவில் உண்டா?’ என்று கேட்டார் மோடி. 'பதவி என்பது விஷம் போன்றது என்று என் தாய் சொல்லியிருக்கிறார்’ என்று ராகுல் சொன்னார். 'அப்படியானால் அதிக ஆண்டுகள் ஆட்சியில் இருந்து அதிக விஷத்தன்மைகொண்டது காங்கிரஸ்தானே?’ என்று கேட்டார் மோடி. ராகுலுக்கு திருமணம் ஆகாதது முதல், சோனியாவுக்கு உடல்நிலை மோசமாவது வரை அனைத்தையும் கிண்டல் செய்தது பா.ஜ.க. 'அவர்கள்தான் கொலைகாரக் கட்சி, ஒரு பெண்ணை வேவு பார்த்தவர் பிரதமர் வேட்பாளரா?’ என்று குற்றம் சாட்டியது காங்கிரஸ். இந்த மோதல், தரம் தாழ்ந்துவருவதை மக்கள் உணர்ந்தார்கள். அந்த நான்கு பேருக்குமே எல்லா ஊர்களிலும் கூட்டம் கூடியது. பல மணி நேரம் காத்திருந்து பார்த்தார்கள். ஆனால், இறுதியில் வாக்காளனின் விஷக் கொடுக்கு காங்கிரஸைத் துள்ளத் துடிக்கத் தீண்டியிருக்கிறது!

அதே சமயம், இந்தத் தேர்தல் முடிவுகள், பா.ஜ.க-வுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய அங்கீகாரம்; மோடியின் செல்வாக்குக்குக் கிடைத்த வெற்றி என்று அந்தக் கட்சி நினைத்தால் ஏமாந்துபோகும். இதற்கு உதாரணம் டெல்லி!

‘காங்கிரஸ் கரடி’யைக் கட்டிப்பிடிப்பது யார்?

இங்குதான் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக அரவிந்த் கெஜ்ரிவாலின் 'ஆம் ஆத்மி’ கட்சி இருந்தது. 'இந்தக் கட்சி, காங்கிரஸின் எதிர்ப்பு வாக்குகளை இரண்டாகப் பிரிக்கப் பயன்படுமே தவிர, வெற்றி பெறாது’ என்றே ஆரம்பத்தில் கணிப்புகள் கூறின. 'நாங்கள் ஆட்சியைப் பிடிக்கப் போகிறோம்’ என்று கெஜ்ரிவால் சொன்னபோது, காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீட்சித், ''யார் அவர்?'' என்று கேட்டார். பா.ஜ.க-வின் முதல்வர் வேட்பாளரான ஹர்ஷ் வர்தன், ''எங்களுக்கும் காங்கிரஸுக்கும்தான் போட்டி. மும்முனைப் போட்டி எல்லாம் டெல்லியில் இல்லை'' என்றார். இவர்கள் இருவரும் ஏமாற்றம் அடையும்வண்ணம், அகில இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும் அதிர்ச்சி அடையும் வகையில் 'ஆம் ஆத்மி’ வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸை அதலபாதாளத்துக்குத் தள்ளி... பா.ஜ.க-வுடன் சம அந்தஸ்து பெற்றிருக்கிறது ஆம் ஆத்மி.

காங்கிரஸுக்கு மாற்று பா.ஜ.க. மட்டும்தான் என்று மக்கள் நினைத்திருந்தால் 'ஆம் ஆத்மி’ இவ்வளவு வெற்றியைப் பெற்றிருக்க முடியாது. பா.ஜ.க-வைவிட சரியான மாற்று இருக்குமானால் அதனை ஆதரிக்கத் தயார் என்பதைத்தான் டெல்லி வாக்காளர்கள் உணர்த்துகிறார்கள். மத்தியப்பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் அப்படி ஒரு மாற்று அமையாமல் போனது, பா.ஜ.க-வுக்கு லாபமாகிவிட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் வெற்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு நல்ல தகவலைச் சொல்கிறது. மோசம், மிக மோசம்... என்ற இரண்டு கட்சிகளுக்கும் மாற்றி மாற்றி வாக்களிக்கும் மக்கள், புதிய நம்பிக்கைகளை வரவேற்கத் தயாராக இருக்கிறார்கள்!

‘காங்கிரஸ் கரடி’யைக் கட்டிப்பிடிப்பது யார்?

இரண்டு, மூன்று மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்காமல் போவது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. ஆனால், 'காங்கிரஸோடு சேர்ந்தால் தேறுவது சிரமம்’ என்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் மனதிலும் இப்போது ஏற்பட்டிருக்கும் பயம், நிச்சயம் இந்தியாவுக்கு நல்லது நடப்பதற்கான சின்ன சமிக்ஞை!

மலையில் இருந்து புறப்பட்ட பெருவெள்ளம், ஓர் ஊரையே மூழ்கடித்து கரைபுரண்டு வந்தது. விலை மதிப்பில்லாத பொருள்கள் எல்லாம் அந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அடுத்த ஊர்க்காரர்கள் இதைக் கைப்பற்றிக்கொண்டு இருந்தார்கள். பெரிதாக, கறுப்பாக ஒன்று உருண்டு வந்தது. நகைகள், பணம்கொண்ட பெட்டியாக இருக்கும் என்று நினைத்து ஓடிப்போய் அந்தக் கறுப்பு உருவத்தை இரண்டு கையால் அணைத்தான் ஒருவன். பிடி ஏதாவது கிடைக்காதா என்று திணறியபடி, உருண்டு வந்த அந்த உருவம்... ஒரு கரடி!

இப்போது இவன் கரடியை விடத் தயாராகிவிட்டான். ஆனால், கரடி இவனை விடத் தயாராக இல்லை.

காங்கிரஸை நினைக்கும்போது அந்தக் கரடி ஞாபகம்தான் வருகிறது. எந்தக் கட்சித் தலைவர்களாவது 'காங்கிரஸ் கரடி’யைக் கட்டிப்பிடிக்கத் துணிவார்களா என்ன?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism