Published:Updated:

கருணாநிதி- எம்.ஜி.ஆர்... அரசியல் கடந்த நட்பு!

கருணாநிதி- எம்.ஜி.ஆர்... அரசியல் கடந்த நட்பு!
கருணாநிதி- எம்.ஜி.ஆர்... அரசியல் கடந்த நட்பு!

மிழக அரசியலை இயக்கிக் கொண்டிருந்த கருணாநிதி இப்போது தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் உடல் நலக்குறைவால் ஓய்வில் இருக்கிறார். ஜூன் 3-ம் தேதி 94 வயதில் அடி எடுத்தும் வைக்கிறார். இன்னொருபுறம் அவர் சட்டமன்றத்தில் அடி எடுத்து வைத்து 60 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இந்த சூழலில், அரசியலைக் கடந்து எம்.ஜி.ஆருடன் நட்பு பாராட்டிய கருணாநிதி பற்றிய சிறப்பு பகிர்வு இது...

கோவையில் சந்தித்தார்கள்...

எம்.ஜி.ஆர் நடித்த முதல் திரைப்படம் சதிலீலாவதி. அதன்பிறகு பல படங்களில் எம்.ஜி.ஆர் நடித்தார். எல்லாமே சின்ன, சின்ன வேடங்கள்தான்.  கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்புகளை எம்.ஜி.ஆர் தேடிக்கொண்டே இருந்தார். அந்த கால கட்டத்தில் தியாகராஜ பாகவதர் நடித்த 'பில்ஹனன்' என்ற நாடகம் ரேடியோவில் ஒலிபரப்பானது. இந்த நாடகத்தை டி.கே.எஸ் சகோதரர்கள், தமிழகம் முழுவதும் மேடைகளில் அரங்கேற்றினர்.


நாடகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த காலகட்டத்தில் மேடை நாடகங்கள்தான் சினிமாக்களாக தயாரிக்கப்பட்டன. பில்ஹனன் நாடகத்தின் வெற்றியை பற்றி கேள்விப் பட்ட கோவை ஜூபிடர் சோமு, அதனை திரைப்படமாக தயாரிக்கத் திட்டமிட்டார். அதற்கான வேலைகளையும் தொடங்கினார்.


ஏ.எஸ்.ஏ. சாமியை டைரக்டராக ஜூபிடர் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. கதாநாயகனாக நடிக்க பல்வேறு பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. அப்போது ஹரிமுருகன் என்ற படத்தில் பரமசிவனாக நடித்த எம்.ஜி.ஆர் பெயரும் பரிசீலனை செய்யப்பட்டது. அந்தப் படத்தில் அவர் ஆனந்த தாண்டவக் காட்சியில் அற்புதமாக நடனம் ஆடி இருந்தார். எனவே, எம்.ஜி.ஆர் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த சமயத்தில் இசையமைப்பாளர் சிதம்பரம் ஜெயராமன் தன்னுடைய மைத்துனர் கருணாநிதிக்கு, இந்த புதிய படத்தில் வசனம் எழுத வாய்ப்புத் தர வேண்டும் என்று ஜூபிடர் சோமுவிடம் கேட்டார். அவரும் சரி என்று சொன்னார். அப்போது ஈரோட்டில் குடி அரசு பத்திரிகையில் கருணாநிதி பணியாற்றி வந்தார். ஜூபிடர் சோமு தயாரித்த புதிய படத்துக்கு வசனம் எழுதுவதற்காக கோவை வந்தார். அந்த புதிய படத்தில் நடிப்பதற்காக கோவை வந்தார் எம்.ஜி.ஆர். இருவரும் அங்குதான் சந்தித்துக் கொண்டனர். கருணாநிதியின் கதை வசனத்தில் வெளியான, எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த அந்தப் படம் ராஜகுமாரி. இந்த திரைப்படத்தின் போதுதான் இருவருக்கும் நட்பு தொடங்கியது. எம்.ஜி.ஆர் படிப்பதற்காக குடிஅரசு பத்திரிகை உள்ளிட்ட சுயமரியாதை இயக்கத்தின் புத்தகங்களைக் கொடுத்தார்.

கருணாநிதியின் வசனங்கள்

அடுத்ததாக மருதநாட்டு இளவரசி படத்துக்கு கருணாநிதிதான் வசனம் எழுத வேண்டும் என்று எம்.ஜி.ஆரும், அவரது அண்ணன் சக்ரபாணியும் ஆசைப்பட்டனர். எனவே, திருவாரூரில் இருந்து சென்னை வரும் படி கருணாநிதிக்கு கடிதம் எழுதினர். அதன் பேரில் சென்னை வந்த அவர்  ராம.அரங்கன்னல் அறையில் தங்கி இருந்தார். படப்பிடிப்பு முடிந்த பிறகு, கருணாநிதியை எம்.ஜி.ஆர் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்வார்.
கருணாநிதியும், அரங்கன்னலும் சேர்ந்து டிராம் வண்டியில் எம்.ஜி.ஆர் வீட்டுக்குப் போவார்கள். இவர்களைப் பார்த்ததும் எம்.ஜி.ஆரின் தாய் பலகாரங்கள் வாங்கி வந்து கொடுப்பார். பின்னர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், அரங்கன்னல் மூவரும் சேர்ந்து திரைப்படங்கள் பார்க்கவும், தாராசிங்-கிங்காங் குத்துச் சண்டைப் போட்டிகளைப் பார்ப்பதற்கும் செல்வார்கள்.
இதன் தொடர்ச்சியாக கருணாநிதி கதை வசனத்தில் மந்திரிகுமாரி படம் எடுக்கப்பட்டது. இதிலும் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்தார். இந்தப் படத்தில் இடம் பெற்ற வசனங்கள் பெரிதும் பேசப்பட்டன. இந்த படத்திற்கு அவர் எழுதிய வசனங்களைப் பார்த்துத்தான் பராசக்தி படத்தில் வசனம் எழுதுவதற்கு கருணாநிதிக்கு வாய்ப்புக் கிடைத்த து. பராசக்தி படத்துக்கு முதலில் திருவாரூர் தங்கராசுதான் வசனம் எழுதுவதாக இருந்தது. மந்திரிகுமாரியைப் பார்த்து விட்டுத்தான் கருணாநிதிக்கு இந்த வாய்ப்புக் கிடைத்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்த எம்.ஜி.ஆர் அங்கிருந்து விலகி தி.மு.க-வில் இணைந்தார். அப்போது கருணாநிதி பங்கேற்ற கல்லுக்குடி போராட்டத்தின் காரணமாகப் போடப்பட்ட கல்லுக்குடி வழக்கு நிதிக்காகவும், கழக நிதிக்காகவும் எம்.ஜி.ஆரின் நாடகக் கம்பெனி சார்பில் நாடகங்கள் நடத்தப்பட்டன. அப்போது கருணாநிதிக்கும்-எம்.ஜி.ஆருக்குமான நட்பு மேலும் வலுப்பட்டது.

அண்ணாவின் தம்பிகள்...

கருணாநிதி, எம்.ஜி.ஆர் இருவரையும் மேடையில் வைத்துக்கொண்டு அண்ணா அடிக்கடி இப்படிச் சொல்வார். இவர்கள் என் தம்பிகள் என்று அடிக்கடி சொல்வார். எம்.ஜி.ஆரின் மக்கள் செல்வாக்கையும், கருணாநிதியின் எழுத்தின் வீச்சையும் வைத்து அவர் அப்படிச் சொன்னார்.
அண்ணா மறைந்தபோது அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தபோது தி.மு.க-வுக்குள் கருணாநிதிக்கு ஆதரவான லாபியை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். ஆனால், தி.மு.க-வில் இருந்த பலர் நெடுஞ்செழியனைத் தேர்வு செய்யலாம் என்று கூறினர். அண்ணா அமைச்சரவையில் இரண்டாவது இடத்தில் இருந்த அவர்தான் முதல்வர் பதவிக்குப் பொருத்தமானவர் என்றும் கூறினார்.
ஆனால், எம்.ஜி.ஆர் நினைத்ததைச் செய்து முடித்தார். எஸ்.எஸ்.ஆர் ஆதரவுடன் எம்.எல்.ஏ-க்களுக்கு எம்.ஜி.ஆர் விருந்து வைத்தார். கருணாநிதிக்கு ஆதரவாக தி.மு.க எம்.எல்.ஏ-க்களிடம் பேசினார். தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவர் தேர்தல் நடைபெற்றது. நெடுஞ்செழியன், கருணாநிதி இருவரும் போட்டியிட்டனர். எம்.ஜி.ஆரின் ராஜதந்திரத்தின் படி கருணாநிதியே வெற்றி பெற்றார். தி.மு.க-எம்.எல்.ஏ-க்களின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல்வராகப் பதவியேற்றார்.
அண்ணா இல்லாமல் தி.மு.க சந்தித்த சட்டமன்றத்தேர்தல் 1971-ம் ஆண்டு நடைபெற்றது. தமிழகத்தின் தென்பகுதியில் இருந்து எம்.ஜி.ஆரும், வடபகுதியான செங்கல்பட்டில் இருந்து கருணாநிதியும் பிரசாரம் தொடங்கினர்.  எம்.ஜி.ஆருக்கு இருந்த ரசிகர்கள் கூட்டமும், கருணாநிதியின் பேச்சுக்குக் கிடைத்த ஆதரவு கூட்டமும் ஓட்டுக்களாக மாறின. தமிழகத்தில் மீண்டும் தி.மு.க ஆட்சி அமைந்தது. கருணாநிதி மீண்டும் முதல்வர் ஆனார்.

தொடர்ந்த நட்பு

எம்.ஜி.ஆருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று பரவலாகப் பேச்சு எழுந்தது. குறிப்பாக சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை எம்.ஜி.ஆர் விரும்பியதாகத் தகவல் வெளியானது. இது குறித்து கருணாநிதியிடமே எம்.ஜி.ஆர் கேட்டார். ஆனால், அமைச்சர் ஆக வேண்டுமானால் நடிப்பதற்கு முற்றுப்புள்ளி வைய்யுங்கள் என்று கருணாநிதி சொன்னதாக ஒரு தகவல் வெளியானது. நடிப்பதை நிறுத்த எம்.ஜி.ஆருக்கு விருப்பம் இல்லை. இந்த இடத்தில்தான் எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் விரிசல் தொடங்கியது.
பின்னர் தனிக்கட்சி தொடங்கி, தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தபோதும் கருணாநிதிக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையேயான நட்புத் தொடர்ந்தது. எம்.ஜி.ஆர் ஆட்சியில் சட்டப்பேரவையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கருணாநிதி பற்றி கடுமையாக விமர்சனம் செய்தபோது அதனை கண்டித்தவர் எம்.ஜி.ஆர். பல்வேறு அரசு விழாக்கள், பல்வேறு நிகழ்வுகளில் கருணாநிதியும்,எம்.ஜி.ஆரும் இணைந்து கலந்து கொண்டிருக்கின்றனர். அரசியலைக் கடந்த நண்பர்களாகவே இருந்தனர்.