Published:Updated:

'ஜெயலலிதா அம்மாவுக்கு என் தமிழ் அவ்ளோ புடிக்கும்!" - ரம்யாவின் ஃப்ளாஷ்பேக்

கு.ஆனந்தராஜ்
'ஜெயலலிதா அம்மாவுக்கு என் தமிழ் அவ்ளோ புடிக்கும்!" - ரம்யாவின் ஃப்ளாஷ்பேக்
'ஜெயலலிதா அம்மாவுக்கு என் தமிழ் அவ்ளோ புடிக்கும்!" - ரம்யாவின் ஃப்ளாஷ்பேக்

"தமிழ் மொழிமீது எனக்கிருந்த பிரியமும் ஆர்வமும்தான் எனக்கான தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுத்திருக்குது. என் முதன்மை இலக்கான சிங்கிங் கரியரும் நல்லாப் போயிட்டு இருக்கு'' என உற்சாகமாகப் பேசும் ரம்யா துரைஸ்வாமி, பலருக்கும் பரிட்சயமான நியூஸ் ரீடர். சமீபத்தில் வைரலாகி வரும் 'ஸ்மூல்'(smule) சிங்கிங் ஆப் மூலம் ஏராளமான பாடல்களைப் பாடி பலரின் கவனத்தை ஈர்த்துவருபவர். 

"சின்ன வயசுல இருந்தே எனக்குப் பாட்டுன்னா ரொம்பப் பிடிக்கும். சிங்கர் கனவோடு முறைப்படி மியூசிக் கத்துக்கிட்டேன். தமிழ் மொழி மேலயும் எனக்கு அலாதியான பிரியம். ஷோபனா ரவி மேடம் செய்தி வாசிக்கிறதைப் பார்த்து, நாமும் அழகா தமிழ் பேசி செய்தி வாசிக்கணும்னு ஆசைப்பட்டிருக்கேன். எனக்கு முதல் அடையாளம் கொடுத்தது இசைதான். ஏழாவது படிக்கும்போதே பாட ஆரம்பிச்சுட்டாலும் ஜெயா டிவியின் 'சொக்குதே மனம்' நிகழ்ச்சிதான் எனக்குச் சரியான அடையாளத்தைக் கொடுத்துச்சு. அந்தச் சமயத்தில், ஜெயா பிளஸ் சேனலில் நியூஸ் ரீடருக்கான வாய்ப்பு வந்துச்சு. டிரை பண்ணிப் பார்க்கலாமேன்னு ஆடிஷன்ல கலந்துகிட்டுத் தேர்வானேன். 

எனக்கான தனி அடையாளத்தோடு நியூஸ் வாசிச்சேன். பிறகு, பி.காம்., எம்பிஏ முடிச்சு ஒரு தனியார் நிறுவனத்தில் சேர்ந்தேன். கொஞ்ச நாளில் வேலையை ரிசைன் பண்ணிட்டு முழு நேரமும் மீடியாவில் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். ஜெயா டிவி-யில் நியூஸ் வாசிக்கும் வாய்ப்பு கிடைச்சது. அதன்மூலம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அன்பைப் பெறும் வாய்ப்பும் கிடைச்சுது. அவர் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சிகள் பலவற்றையும் தொகுத்து வழங்கும் வாய்ப்பும் கிடைச்சுது" என்கிற ரம்யா, ஜெயலலிதாவிடம் வாழ்த்துப் பெற்றதையும், அவர் இறந்த செய்தியை வாசிக்க இயலாத தருணத்தையும் கூறுகிறார். 

"ஒருமுறை போயஸ் கார்டனுக்கு என்னை அழைச்சு, 'நீ பெஸ்ட் நியூஸ் ரீடர். உன்னோட வாய்ஸும் தமிழ் உச்சரிப்பும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஜெயா டிவியில் நியூஸ் படிக்கிறவங்களில் நீதான் பெஸ்ட்' எனச் சொன்னவர், இருபது நிமிஷம் என்னோடு அன்பாகப் பேசினார். அந்தத் தருணத்துல நான் மெய்மறந்து இருந்தேன். அடுத்தடுத்து பல தருணங்களில் அவங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சுது. தைரியமான பெண்மணியாக, துணிச்சலான அரசியல் ஆளுமையாக அவங்க மேல எனக்கு அளவுகடந்த மரியாதை வந்துச்சு. அவங்க மரணம் என்னை ரொம்பவே பாதிச்சது. ஒரு நியூஸ் ரீடரா அவங்க மரணச் செய்தியைப் படிக்கவே முடியலை. அவங்க இறப்புச் செய்தியைப் படிக்க மாட்டேன்னு ஒரு வாரம் ஆபீஸுக்கு லீவு போட்டுட்டேன். பிறகும், அவங்க மரணத்தின் ஃபாலோ-அப் செய்திகளைப் படிக்கும்போது தடுமாற்றம் இருந்துச்சு'' என்கிறார் ரம்யா. 

சமீபத்தில் தனக்கு பெரிய ரீச் கொடுத்த ஸ்மூல் ஆப் பற்றி பேசியவர், "நியூஸ் ரீடர் வேலைக்கு இணையாக என் இசைப் பயணமும் மகிழ்ச்சியா இருக்கு. பல உள்நாட்டு, வெளிநாட்டு கச்சேரிகள், நிகழ்ச்சிகளில் பாடிட்டு இருக்கேன். இப்போ மூன்று படங்களில் பாடியிருக்கேன். சீக்கிரமே அந்தப் படங்கள் ரிலீஸ் ஆகப்போகுது. சில டிவோஷனல் ஆல்பமும் ரிலீஸ் செஞ்சிருக்கேன். இந்தச் சமயத்தில்தான் ஸ்மூல் ஆப் பற்றி தெரிஞ்சது. இந்த ஆப்ல பேக்ரவுண்டில் மியூசிக் பிளே ஆகும். நாம இருந்த இடத்திலிருந்தே பாடலாம். முதலில், சில ஆங்கிலப் பாடல்களைப் பாடினேன். அதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சுது. தொடர்ந்து 'ஏ... பாடல் ஒன்று', 'வளையோசை' உள்ளிட்ட நம்ம தமிழ்ப் பாடல்களையும் பாடி, ஆன்லைன்ல அப்லோடு செஞ்சேன். பெரிய ரீச் கிடைச்சுருக்கு. பாராட்டுகள் குவியுது. திறமை இருந்தும் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பவர்களுக்கு இந்த ஆப் பெரிய வரமாக அமையும்" என்றவரிடம், 'நடிப்பு வாய்ப்புகள் வந்ததுண்டா?' எனக் கேட்டதும், வெட்கப்படுகிறார். 

"ஆமாம். நியூஸ் ரீடரான கொஞ்ச நாளிலேயே ஆக்டிங் வாய்ப்பு வந்துச்சு. இப்போ வரை சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் வாய்ப்புகள் வந்துட்டுதான் இருக்கு. ஆனால், எனக்குப் பிடிச்ச சிங்கிங், நியூஸ் ரீடர் வேலையே போதும். அதிலேயே இன்னும் சிறப்பாக செயல்படுவோம் என முடிவெடுத்தேன். அதனால், நடிப்புப் பக்கம் போகலை'' என்கிறார் புன்னகையுடன்.