Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
##~##

ந்தியாவில் தேர்தல் திருவிழா களைகட்ட ஆரம்பிக்கிறது. 2014, மே மாதத்துக்குள் நாடு முழுவதும் பொதுத் தேர்தலை நடத்தி புதிய நாடாளுமன்றத்தை உருவாக்கும் பிரமாண்டப் பணி, இப்போது இந்தியத் தேர்தல் ஆணையம் வசம். நாட்டின் கடைக்கோடி மூலைகளிலிருந்தும் 543 எம்.பி-க்களைத் தேர்ந்தெடுக்க, சுமார் 8 லட்சம் வாக்குச்சாவடிகளுக்கு, 78 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களை வரவழைத்து அவர்களின் வாக்குகளைப் பதியச்செய்வது, உலகின் 'கடினமான பணி’களில் ஒன்று. வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளைக் கண்கொத்திப் பாம்பாகக் கவனிப்பது தொடங்கி, வாக்காளர்களுக்குப் பணமும் பரிசுப் பொருள்களும் வழங்கப்படாமல் தடுப்பது வரை நேர்மையாகவும், துணிச்சலாகவும், பாரபட்சமின்றி ஆற்ற வேண்டிய கடமைகள் ஏராளம் இருக்கின்றன ஆணையத்துக்கு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கட்சித் தாவல், கூட்டணி மாறல், கொள்கை விளக்கம்... எனத் தேர்தலுக்கு முன்னோட்டமான வினோதக் காட்சிகளை அரசியல்வாதிகள் அரங்கேற்ற ஆரம்பித்துவிட்டனர். வாக்காளன் மீது அவர்களுக்கு 'திடீர் பாசம்’ வரும். 'வறுமையை விரட்டுவோம்’, 'ஏற்றத்தாழ்வுகளைக் களைவோம்’, 'ஊழலை ஒழிப்போம்’ என்று ஒலிபெருக்கிகள் மீண்டும் வாக்குறுதிகளை முழங்கும். இத்தனை இரைச்சல்களுக்கு மத்தியில், 'யார் ஜெயித்துவந்தால் என்ன... எல்லாருமே ஒரே மாதிரிதானே’ என்ற சாமானியனின் சலிப்புப் குரல்களும் ஒலிக்கும்.

நரேந்திர மோடி குறித்து சிறுபான்மையினரின் அச்சம், காங்கிரஸ் ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகள், கோடிகளில் எகிறும் ஊழல்கள், நலியும் விவசாயம், சிக்கலாகிவிட்ட சில்லறை வியாபாரம், வணிகமாகிவிட்ட கல்வி, எட்டாக் கனியான மருத்துவம், பரம்பரை ஆட்சி, பழிவாங்கும் அரசியல், விண் முட்டும் விலைவாசி... என வாக்காளர்கள் நம் ஒவ்வொருவரும் ஆயிரமாயிரம் கோபங்களை அடைகாத்துக் காத்திருக்கிறோம். என்ன செய்ய, நம்மிடம் இருப்பது ஒரே ஒரு வாக்குதானே என்பவர்களுக்கு... இதுதான் நம் பிரம்மாஸ்திரம். நீங்கள் யாருக்குமே வாக்களிக்க விரும்பாவிட்டாலும், அந்த மனநிலையைப் பதியவும் 'நோட்டா’ இருக்கிறது.

அதற்கு முதலில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் விடுபட்டுப்போகாமல் இருக்கிறதா என்பதை இப்போதே உறுதிப்படுத்த வேண்டியது மிக முக்கியம். உலகின் மாபெரும் ஜனநாயகத்தில் பங்கெடுக்கும் மகத்தான வாய்ப்பை முதலில் உத்தரவாதப்படுத்துங்கள். நம் ஆள் காட்டி விரலின் ஒரு துளி மையால், இந்திய ஜனநாயகத்தின் மீது படிந்திருக்கும் கறைகளைத் துடைக்கத் தயாராவோம்.