Published:Updated:

தனித் தீவில் தி.மு.க.!

இதயம் துடிக்கும் கண்கள் பனிக்கும் கருணாநிதிப.திருமாவேலன், ஓவியம்: ரவி

தனித் தீவில் தி.மு.க.!

இதயம் துடிக்கும் கண்கள் பனிக்கும் கருணாநிதிப.திருமாவேலன், ஓவியம்: ரவி

Published:Updated:
##~##

 'சீ...ச்சீ... இந்தப் பழமும் புளிக்கும்!’ என்ற முடிவுக்கு இறுதியில் வந்துவிட்டார் கருணாநிதி!

பழைய நண்பர்களான பாரதிய ஜனதாவையும், கனிமொழியின் வெற்றி வரை கை கொடுத்த காங்கிரஸையும் சம தூரத்தில் வைத்து விமர்சித்து விளாசித்தள்ளிய கருணாநிதி, 'இந்த இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி இல்லை’ என்று அறிவித்திருப்பது ஜெயலலிதாவுக்கு அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால், காங்கிரஸ் நிலை இல்லாமல் தவிக்கிறது. சூன்யமான ஒரு சூழ்நிலையில் காங்கிரஸைக் கொண்டுபோய் தள்ளியிருக்கிறார் கருணாநிதி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கருணாநிதி அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்து, அதை எல்லோருக்கும் முந்திக்கொண்டு அறிவித்துவிட மாட்டார். தன் வலிமையைவிட, மாற்றான் வலிமையை அதிகமாக உணர்ந்தவர் அவர். அப்படிப்பட்ட கருணாநிதி, முந்திக்கொண்டு காங்கிரஸ், பா.ஜ.க. மீது பாய்ந்திருப்பது வித்தியாசமான காட்சி. ஜெயலலிதா பாணியை அவரும் பின்பற்றத் தொடங்கியதன் அடையாளம் இது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பொதுக் குழுவில் பேசிய, அந்தக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், ''யாரோடு கூட்டணி வேண்டும், யாரோடு வேண்டாம் என்பதை நீங்களே முடிவுசெய்யுங்கள். எந்தத் தொகுதியில் யார் போட்டியிடுவது, யார் வேட்பாளர் என்பதையும் நீங்களே முடிவுசெய்யுங்கள். ஜெயலலிதாவைப் போல சர்வாதிகாரியாக நடந்துகொள்ளுங்கள்...'' என்று கட்டளையிட்டார். இப்படி கருணாநிதி செய்வாரா என்பது போகப் போகத் தெரியும். ஆனால், கருணாநிதியும் ஜெயலலிதா பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டார் என்பது இந்தப் பொதுக் குழுவில் தெரிந்தது.

தனித் தீவில் தி.மு.க.!

காங்கிரஸையும் பா.ஜ.க-வையும் ஒதுக்கித் தனித்து நிற்பது (சில கட்சிகள் பின்னர் சேரலாம்!) என்று முடிவெடுத்ததன் மூலம், ஜெயலலிதாவைப் போலவே முடிவுகள் எடுத்துவிட்டார் கருணாநிதி. இது அவருக்கு வெற்றியைத் தருமா என்பது தேர்தல் காலச் சூழ்நிலையைப் பொறுத்தது. ஆனால், கருணாநிதியைப் பொறுத்தவரை இது கௌரவமான முடிவு. காங்கிரஸ் எவ்வளவு அவமானப்படுத்தினாலும் 'ஒட்டிக் கொண்டிருப்பவர்’ என்ற அவமானத்தையும், எதைச் செய்தாவது அடுத்து அமைய இருக்கும் ஆட்சியில் ஒட்டிக்கொள்ள தி.மு.க. நினைத்து பா.ஜ.க. பின்னால் அலைகிறது என்ற அவச்சொல்லையும் கருணாநிதி துடைத்தெறிந்துவிட்டார். தேர்தலில் தோல்வி அடையும் சூழ்நிலை ஏற்பட்டாலும் அது கௌரவமான தோல்வியாக இருப்பது மாதிரி பார்த்துக்கொண்டார் கருணாநிதி.

நிச்சயம், தி.மு.க-வுக்கு இது ஒரு நெருக்கடியான நேரம். பல்வேறு விமர்சனங்கள், பழிதூற்றல்கள், அவமானங்கள், அவச்சொற்கள் உள்ள நேரத்தில்... கூடுதல் பழிகள் ஏற்படாமல் தவிர்த்துவிட்டதுகூட கருணாநிதியின் சாமர்த்தியம்தான்!

காங்கிரஸை, கருணாநிதி கைகழுவிவிட்டிருப்பது காலம் கடந்த சமாசாரமாக இருந்தாலும், தவிர்க்க முடியாத இறுதி நெருக்கடி. ஈழத் தமிழர் பிரச்னை, கருணாநிதியின் 'தமிழினத் தலைவர்’ பிம்பத்துக்கு இழுக்கு ஏற்படுத்தியது. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம், கட்சித் தலைமைக்கும், குடும்பத் தலைமைக்கும் சோதனையைக் கொடுத்தது. 2ஜி விவகாரத்தில் காங்கிரஸும் தி.மு.க-வும் கடைசி வரை கண்ணாமூச்சி ஆடின. 'ராசாவே அனைத்துக்கும் காரணம்’ என்று பழிபோட்டுத் தப்பிக்க காங்கிரஸ் நினைத்தது. பிரதமரையும் ப.சிதம்பரத்தையும் இணைத்து மாட்டிவிட தி.மு.க. துடித்தது. ஆனால் காங்கிரஸ், தான் நினைத்ததை, நாடாளுமன்ற கூட்டுக் குழு இறுதி அறிக்கை வரை கொண்டுவந்து... ஆ.ராசாவை மட்டும் தனிமைப்படுத்தியது. கருணாநிதியின் கசப்புக்கும் ஆறாத காயத்துக்கும் இதுதான் அடிப்படைக் காரணம்.

இதோடு, சமீபத்தில் நடந்த நான்கு மாநில இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் அதலபாதாளத்துக்குச் சரிந்ததும் கருணாநிதி மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது. 'காங்கிரஸுடன் சேர்ந்தால், உள்ள செல்வாக்கும் போய்விடும்’ என்று கருணாநிதி உள்ளபடி நினைத்த பிறகுதான் காங்கிரஸைக் கழற்றிவிடும் இறுதி முடிவுக்கு வந்திருக்கிறார். மேலும், சோனியாவும் மன்மோகன் சிங்கும் மெள்ள ஒதுங்கி... ராகுல் அண்டு கோ காங்கிரஸ் தலைமையை நோக்கி நகர்ந்துவரும் சூழ்நிலையில் தனக்கான மரியாதை முன்னைப் போல இருக்காது என்றும் கருணாநிதி நினைத்தார். அதற்கான சிறு தூண்டிலாகத்தான், ஏற்காடு இடைத்தேர்தலில் ஆழம் பார்த்தார். 'தி.மு.க. வேட்பாளரை ஆதரியுங்கள்’ என்று காங்கிரஸ் தலைமைக்குக் கடிதம் எழுதினார் கருணாநிதி. தேர்தல் முடிந்த பிறகும் டெல்லியில் இருந்து பதில் இல்லை. இந்த உதாசீனம் மேலும் தொடரும் என்றே நினைத்தார்.

அனைத்துக்கும் மேலாக, அ.தி.மு.க-வுக்கும் காங்கிரஸுக்குமான கூட்டணி முயற்சிகள் எடுக்கப்பட்டன என்பதையும் கருணாநிதி உணர்ந்தார். இந்த அணி அமைந்தால் வெற்றி வாய்ப்பு உறுதி என்று மத்திய உளவுத் துறை அனுப்பிய அறிக்கை, இங்கேயே இருக்கும் மத்திய அரசின் பிரதிநிதி ஒருவர் ஜெயலலிதாவிடம் போனில் ஒருமுறையும், நேரில் ஒருமுறையும் பேசியது, முன்னாள் மத்திய அமைச்சரின் தூதுவராக பெங்களூரிலிருந்து முன்னாள் ஹீரோயின் ஒருவர் வந்து ஜெயலலிதாவைச் சந்தித்தது, ராகுலின் தூதர் ஒருவர் ஜெயலலிதாவுக்குப் பேசியது... என காங்கிரஸ், கார்டனை நோக்கி அலைமோதியது அனைத்தையும் கருணாநிதி அறியாதவர் அல்ல. ஜெயலலிதா, இந்த நட்பை நிராகரிப்பார் என்று கருணாநிதிக்குத் தெரியும். ஆனால், காங்கிரஸ் எடுத்த முயற்சிகள் மோசமானவை என்று நினைத்தார். அதனால்தான், பொதுக் குழுவில் பொருமித் தீர்த்தார்.

தனித் தீவில் தி.மு.க.!

''தனிப்பட்ட ஒரு காயத்துக்காக நாங்கள் அழவில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட காயம் அல்லது ராசாவுக்கு ஏற்பட்ட காயத்துக்காக நாங்கள் வருத்தப்படவில்லை. அவற்றை நாங்கள் சமாளிக்க முடியும். ஆனால், ஓர் இயக்கத்தையே, ஒரு பெரிய ஊழல் சாம்ராஜ்யத்தில் சிக்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் யார் யார் என்று எனக்கு இன்னமும் நன்றாகத் தெரியும். அதையெல்லாம் மறுத்துவிட்டு எப்படி அவர்களை நாங்கள் காப்பாற்றிக்கொண்டிருக்கிறோம் என்பது காப்பாற்றப்பட்டவர்களுக்குத் தெரியும்'' என்று கருணாநிதி சொன்னதுதான் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியது. இப்படி 'காப்பாற்றப்பட்டவர்களில் ஒருவரே’ அ.தி.மு.க. கூட்டணிக்கான முயற்சிக்குத் தூண்டுதலாக அமைந்ததுதான்... தேர்தலுக்கு நெடுநாட்களுக்கு முன்னதாகவே கருணாநிதியை ஆத்திரப்படவைத்து, அனைவரையும் முந்திக்கொண்டு அலறவைத்தது.

இதே போலத்தான் பா.ஜ.க-வின் நிலைமையும் தி.மு.க-வைப் பொறுத்தவரை அமைந்தது. கருணாநிதியை அன்று பா.ஜ.க. பக்கமாக ஈர்க்க ஒரு வாஜ்பாய் இருந்தார். இருவருக்கும் இணைப்புப் பாலமாக ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் இருந்தார். இன்று இவர்கள் ஆக்டிவாக இல்லை. கருணாநிதியை அறிந்த அத்வானிகூட ஒதுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், ராஜ்நாத் - நரேந்திர மோடி டீம் கருணாநிதிக்கே தூரமானது. இவர்கள் இருவரையும் நேரடியாகப் பார்த்து மனம் அறிய, தி.மு.க-விலேயே எவரும் இல்லை. யஷ்வந்த் சின்ஹா, அருண் ஜெட்லி... என்ற இரண்டாம் கட்டம் வரைக்கும்தான் இவர்களாலேயே எட்ட முடிந்தது.

'அ.தி.மு.க. இல்லாவிட்டால் தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கலாம்’ என்று சிலர் ஆலோசனை சொன்னபோது, அருண் ஜெட்லி, 'இந்தத் தேர்தலையே நாங்கள் ஊழல் எதிர்ப்பு என்ற அடிப்படையில்தான் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ், காமன்வெல்த், நிலக்கரி ஆகிய நான்கு ஊழல்கள்தான் எங்களது பிரதான பிரசாரம். அப்படி இருக்கும்போது தி.மு.க-வுடன் எப்படி அணி சேர முடியும்? தி.மு.க-வுடன் சேருவதால் தமிழ்நாட்டில் இருந்து 15 எம்.பி-கள் ஆதரவு எங்களுக்குக் கிடைக்கலாம். ஆனால், மற்ற 29 மாநிலங்களில் இதைப் பற்றி பேசும் தார்மீக யோக்கியதையை நாங்கள் இழந்துவிடுவோம்’ என்று சொல்லியிருக்கிறார். எந்த 2ஜி-யை வைத்து காங்கிரஸ் தங்களை மாட்டிவிட்டதோ, அந்த 2ஜி-யை வைத்து பா.ஜ.க. பிரசாரம் செய்யப்போகிற திட்டத்தோடு இருப்பது கருணாநிதிக்கு இன்னொரு பக்க இடியாகவும் மாறியது. இந்த நெருக்கடிதான் 'இருவருமே வேண்டாம்’ என்று முடிவெடுக்கும் நிலைமைக்குத் தள்ளிவிட்டுள்ளது.

தி.மு.க. நம்மைச் சேர்த்துக்கொள்ளுமா? எத்தனை இடங்கள் தரும்? என்று கட்சிகள் அலைந்த காலம் போய், 'நம்மோடு அணி சேர எந்தக் கட்சியும் விரும்பாவிட்டாலும்கூட, நாம் அதற்காகக் கவலைப்படப்போவது இல்லை. உடன்பிறப்பே நீ இருக்க... நான் எதற்காகக் கவலைப்பட வேண்டும்? யாருக்காக அஞ்சப் போகிறோம்? யாரும் அணி சேர வராவிட்டாலும்கூட தனியாக நிற்போம்!’ என்று கருணாநிதி சொல்லும் நிலைமைக்கு யதார்த்தம் ஏற்பட்டு விட்டது. ஆனாலும் இது ஒன்றும் அவமானம் அல்ல. அதிகாரத்தை அடைவதற்காகக் கொள்கையற்று ஒரு கூட்டணி அமைப்பதைவிட, தனித்தன்மையை நிலைநாட்ட தனியாக நிற்பது வரவேற்க வேண்டியதே!