Published:Updated:

''பச்சையாகச் சொன்னால், ஊழல் மேல்மட்டம் வரையிலும் நடக்கிறது'' - ஒப்புக்கொள்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

த.கதிரவன்
''பச்சையாகச் சொன்னால், ஊழல் மேல்மட்டம் வரையிலும் நடக்கிறது'' - ஒப்புக்கொள்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
''பச்சையாகச் சொன்னால், ஊழல் மேல்மட்டம் வரையிலும் நடக்கிறது'' - ஒப்புக்கொள்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

'புற்றுநோயை உண்டுபண்ணும் ரசாயனங்களை பாலில் கலக்கிறார்கள்', 'கமிஷனுக்காக மக்களின் உயிரோடு விளையாடுகிறார்கள் பால் முகவர்கள்' என்று தனியார் பால்  நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் மீது பகீர் புகார்களை கொட்டிவருகிறார்  பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. இத்தனை வருடங்களாக இல்லாமல், இப்போது திடீரென பால் நிறுவனங்களைக் குறிவைத்து, அமைச்சர் புகார் சொல்லக் காரணம் என்ன? அவரிடமே கேட்டோம்...

''இந்தத் துறைக்கு நான் பொறுப்பேற்று 6 மாதங்கள்தான் ஆகின்றன. தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து, ஆவின் உள்ளிட்ட அனைத்துப் பால் வகைகளையும் ஆய்வு செய்துவருகிறேன். இந்த ஆய்வில், சில தனியார் நிறுவனங்களின் பாலில், கலப்படம் செய்யப்படுவதும், பால் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு ரசாயனப் பொருட்கள் சேர்ப்பதுவும் தெரியவந்தன.  இதுகுறித்தப் புகார்களும் ஏற்கெனவே எங்கள் கவனத்துக்கு வந்துள்ளன. அதன் அடிப்படையிலும் முறையான ஆய்வுகளை மேற்கொண்டே இந்த உண்மைகளைத் தெரிந்துகொண்டோம். அதன் அடிப்படையிலேயே இப்படி ஒரு எச்சரிக்கையை நான் செய்யவேண்டியதானது.'' என்று தன்னிலை விளக்கம் கொடுத்த அமைச்சரிடம் தொடர்ந்து நமது கேள்விகளை முன்வைத்தோம். 

''ஆய்வு முடிவில், என்னென்ன ரசாயனங்களை பாலில் கலப்பதாகக் கண்டுபிடித்தீர்கள்?''

'''இது 3 மாதங்கள் கெடாமல் இருக்கும்' என்று பால் நிறுவனங்களே விளம்பரப்படுத்துகிறார்கள். எந்த மாடு இப்படியொரு பாலைக் கறக்கிறது? இயற்கையான பால், எப்படி 3 மாதங்கள் வரையிலும் கெடாமல் இருக்கும்? பால் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்க 'ஹைட்ரஜன் ஃபெராக்ஸைடு' என்ற வேதியியல் பொருளை கலக்கிறார்கள். மருத்துவத் துறையில், 'இறந்துபோனவர்களின் உடல்களைக் கெடாமல் பாதுகாத்து ஆய்வுகளை மேற்கொள்வதற்காக இந்த ஹைட்ரஜன் ஃபெராக்ஸைடைப் பயன்படுத்துவதாகவும், இந்த ரசாயனப் பொருள் புற்று நோயை உருவாக்கக்கூடியது' என்றும் மருத்துவர்களே கூறுகிறார்கள்.

பாலின் வெண்மை நிறத்துக்காக 'காஸ்டிக் சோடா' கலக்கிறார்கள். இது குடலையே அறுத்துவிடும் அளவுக்கு மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. இதுமட்டுமல்ல... சில செயற்கையான வேதிப் பொருட்களைக் கொண்டு பாலையே தயாரித்துவிடுகிறார்கள். இயற்கையான ஒரு லிட்டர் பால் 40 ரூபாய் என்றால், இப்படி செயற்கை முறையில் ஒரு லிட்டர் பால் தயாரிக்க வெறும் 15 ரூபாய்தான் செலவாகிறது என்கிறார்கள். லாபம் எவ்வளவு என்று நீங்களே கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள்!''

''பால் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்கள், 'தர ஆணையச் சான்று' வாங்கித்தானே விற்பனை செய்கிறார்கள்?''

''பச்சையாகச் சொன்னால், ஊழல் மேல்மட்டம் வரையிலும் நடைபெறுகிறது. எனக்குத் தெரியும். பணம் கொடுத்துவிட்டால், எந்தவித சோதனையும் இல்லாமலேயே தரச் சான்றுகளைக் கொடுத்துவிடுகிறார்கள். சான்றுகளை வைத்திருப்பதாலேயே அவர்கள் செய்யக்கூடிய தப்பை நியாயப்படுத்த முடியுமா? 

நான் சொல்வதை விட்டுவிடுங்கள்... கடைகளில் கிடைக்கும் தனியார் நிறுவனப் பாலை நீங்களே வாங்கி பரிசோதனை செய்துபாருங்கள். கிண்டி, மாதவரம் என்று எங்களது பரிசோதனை நிலையங்களில்கூட செய்யவேண்டாம்; தனியார் பரிசோதனை நிலையங்களிலேயே கொடுத்து சோதனை செய்துபார்த்து முடிவுகளைத் தெரிந்துகொள்ளுங்கள். மைசூரில்கூட மத்திய அரசின் பரிசோதனை நிலையம் இருக்கிறது. நீங்களே, சமூக ஆர்வலர்களை வைத்து அங்கேபோய் இப்படியொரு சோதனையை செய்துபார்த்து தெரிந்துகொள்ளுங்கள். ஒருவேளை நான் சொல்லும் குற்றச்சாட்டுப் பொய்யாக இருந்தால், நீங்கள் என்ன சொன்னாலும் நான் கேட்டுக்கொள்கிறேன். இப்போது நான் வெளிப்படையாக இதுகுறித்துப் பேசிவிட்டதால், இதுபோல் கலப்படம் செய்துகொண்டிருந்தவர்கள் ஓரளவு உஷாராகியிருப்பதற்கு வேண்டுமானால் வாய்ப்பு இருக்கிறது.''

''தனியார் பால் நிறுவனங்களை மிரட்டி அமைச்சர் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் என்று விஜயகாந்த் சந்தேகம் எழுப்பியிருக்கிறாரே?''

''தனியார் பால் உற்பத்தி நிறுவன உரிமையாளர்கள் யாரையும் நான் பார்த்ததும் இல்லை; பேச்சுவார்த்தை நடத்தியதும் இல்லை. நடக்கின்ற தவறுகளை எடுத்துச் சொன்னால், இப்படியொரு பழியை சுமத்துவதா? இப்படியெல்லாம் உள்நோக்கம் கற்பித்தால், எந்த அமைச்சர் இனிமேல் நியாயங்களை எடுத்துச் சொல்ல முன்வருவார்கள்?''

''ஆளுங்கட்சி அமைச்சரான நீங்கள், தவறு செய்தவர்கள் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்காமல், எதிர்க்கட்சியினர் போல், பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறீர்களே?''

''நீங்கள் சொல்வது சரிதான். பாலில் தண்ணீர் கலப்பதென்பது வியாபாரத்துக்காக சிலர் செய்கிற தவறு. ஆனால், இதுபோல் மக்களின் உயிருக்கே உலை வைக்கக்கூடிய ரசாயனக் கலப்பு என்பது கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம். ஆனால், 1,500 ரூபாய் அபராதம் அல்லது லைசென்ஸ் வைத்திருப்பவருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை என சட்டத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகள் எளிதாகத் தப்பிவிடுவார்கள். அப்படி நடக்கக்கூடாது. தவறு செய்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும், இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்ற நோக்கில்தான் அதிகாரிகளோடு தீவிரமாக ஆலோசனை செய்துகொண்டிருக்கிறேன். எனவே, ஆதாரங்களோடு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக்கொடுப்போம்.

அப்படியென்றால், இப்போது ஏன் நீங்கள் இப்படி வெளிப்படையாக பேட்டி கொடுத்தீர்கள்? என்று நீங்கள் கேட்கலாம். ஒரு கொலைகாரனை, குற்றவாளி என்று சட்டப்படி நிரூபிப்பதற்கு சாதாரணமாக 10 வருடங்கள் வரை ஆகிவிடுகிறது. இதுதான் நடைமுறை. இந்தக் கலப்படக்காரர்களுக்கும்கூட சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுப்பதில் காலதாமதம் நேரலாம். ஆனால், அதுவரையிலும் மக்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்தி பால் கலப்படத்தை தடுத்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனவேதான், வெளிப்படையாக பேட்டி கொடுத்தேன்.''

''உங்களுக்கு முன்பாக இதே துறையில், அமைச்சராக இருந்தவரோ  அல்லது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவோ இவ்விஷயத்தில் அக்கறை காட்டவில்லையே.... ஏன்?''

''ஜெ. இருந்தபோது இதுபோன்ற தவறுகள் நடந்ததா என்று தெரியவில்லை. தெரிந்திருந்தால் யாரையும் தப்பிக்க விட்டிருக்கமாட்டார். ஒரு உதாரணம் சொல்கிறேனே... விலையில்லாப் பொருட்களில், குறிப்பிட்டத் தயாரிப்பில் உள்ள மின்விசிறிகளின் தரம் குறைவாக உள்ளது என்று நானே ஜெ.விடம் புகார் செய்துள்ளேன். அந்தப் புகாரில் உண்மை இருப்பதை அறிந்த அவர், உடனே அந்தத் தயாரிப்பு முழுவதையும் கேன்சல் செய்துவிட்டார். 5 கன்டெய்னர்களில், வந்திறங்கிய மின்விசிறிகள் அனைத்தையும் திருப்பி அனுப்பிவிட்டார். அதுமட்டுமல்ல... அதனைத் தயாரித்த அந்தக் குறிப்பிட்ட கம்பெனியையே கருப்புப் பட்டியலில் சேர்த்துவிட்டார். அந்தளவு உறுதியான நடவடிக்கை எடுக்கக்கூடியவர். இப்போது, நானே இந்த விஷயத்தில் நேரடியாக களமிறங்கி சோதனை செய்ததால் இந்த அநியாயம் தெரியவந்திருக்கிறது.''

நாட்டின் மக்கள் தொகை 100 கோடியைத் தாண்டிவிட்ட பிறகும், மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைத்துவரும் ஒரே உணவுப் பொருள் 'பால்'! இந்த 'வெண்மைப் புரட்சி'யின் பின்னணியில் பல்வேறு மோசடிகள் நடைபெறுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகளும் எழுந்து அடங்கும். இப்போதாவது இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்தால் சரி!

- த.கதிரவன்