Published:Updated:

''எங்கள் உணவில் தலையிடலாமா?'' மாட்டிறைச்சி தடையும்... வலுக்கும் எதிர்ப்பும்!

சே.த.இளங்கோவன்
''எங்கள் உணவில் தலையிடலாமா?'' மாட்டிறைச்சி தடையும்... வலுக்கும் எதிர்ப்பும்!
''எங்கள் உணவில் தலையிடலாமா?'' மாட்டிறைச்சி தடையும்... வலுக்கும் எதிர்ப்பும்!

‘மிருகவதை தடுப்புச் சட்டத்தில் கொண்டுவந்த திருத்தத்தின்படி பசு, காளை, எருது, ஒட்டகம் ஆகிய விலங்குகளை இறைச்சிக்காக விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது' என்று மத்திய பி.ஜே.பி அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. இதை எதிர்த்து கேரளா முதல்வர் பினராயி விஜயன், ''மாடு விற்பனை தொடர்பான மத்திய அரசின் இந்த முடிவு நாகரிகமற்றது. இது, இந்தியாவின் பன்முகத் தன்மையை அழிக்கும் நடவடிக்கை. தற்போது மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொண்டால், நாளை மீன் சாப்பிடக் கூடாது என்று சட்டம் கொண்டுவருவார்கள். எனவே, மக்கள் இதற்கு எதிராகப் போராட வேண்டும்'' என்று உடனடியாக கருத்து தெரிவித்துள்ளார். இதேபோல தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ''இந்தத் தடையின் மூலமாக மதச் சுதந்திரம், தனிமனிதச் சுதந்திரம் நாட்டின் மதச்சார்பற்ற தன்மை, அரசியல் சட்டத்தால் அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் எல்லாவற்றையும் மறுக்கும் விதத்தில் ஓர் 'அறிவிக்கையை' மத்திய அரசே வெளியிடுவது 'நல்லாட்சியின்' இலக்கணம் அல்ல என்பதை மத்திய அரசுக்குத் தலைமை தாங்கும் பி.ஜே.பி உணரவேண்டும். இந்த உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசின் அறிவிப்பால் சிறுபான்மையினர், விவசாயிகள் பாதிக்கப்படுவர்'' என்றார். இதேபோன்று, மேலும் சில கட்சித் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

“அடிப்படை உரிமைகளைப் பாதிக்கக் கூடியது!”

எஸ்.நூர்முகம்மது, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுச் செயலாளர்: ''தடை உத்தரவு வகுப்புவாத நோக்கம் கொண்டது. குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கைகளையே நிறைவேற்றி வருகிறது பி.ஜே.பி. இதன் ஒரு பகுதியாக மாட்டிறைச்சியின் பேரால் தங்கள் ஆட்சியிலுள்ள மாநிலங்களிலும், தங்களுக்கு வலுவுள்ள இடங்களிலும் சிறுபான்மை மக்கள் மற்றும் தலித்கள்மீது கடுமையான தாக்குதல்களைப் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நடத்தி வருகின்றனர். உத்தரப்பிரதேசம் தாத்ரியில் மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்று காரணம் கூறி முகம்மது அக்லாக் அடித்தே கொல்லப்பட்டார்.

குஜராத் மாநிலம் உனாவில் செத்துப்போன மாட்டின் தோலை உரித்ததற்காக 4 தலித் இளைஞர்கள் இவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். பெஹ்லூக்கான் எனும் பால் வியாபாரி பால் வியாபாரத்துக்காகப் பசுக்களை வாங்கிவரும்போது ராஜஸ்தான் மாநிலத்தில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரால் சமூக விரோதிகளால் அடித்தே கொல்லப்பட்டார். மேலும் அஜ்மல், ரபீக் ஆகியோர் படுகாயப்படுத்தப்பட்டனர். இதன் தொடர்ச்சியாகத் தற்போது நாடு முழுவதும் கால்நடைச் சந்தைகளில் பசு, காளை, ஒட்டகங்களை இறைச்சிக்காக விற்கக்கூடாது என்று உத்தரவிட்டும், தகுதியற்ற கால்நடைகளைக்கூட விற்பனை செய்வதைத் தடை செய்தும், கால்நடை விற்பனைக்குப் பலவிதமான கடுமையான நிபந்தனைகளை விதித்தும் உத்தரவிட்டுள்ளது. மத்திய பி.ஜே.பி அரசின் இந்த உத்தரவு, மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கக் கூடியது.

ஒருவன் எந்த உணவை உண்ண வேண்டும் என்று அரசே தீர்மானிப்பது அநீதியானது. மேலும், இதனால் உயர்சாதி மக்களின் உணவுப் பழக்கத்தை இதர பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மையோர் மற்றும் தலித்கள் மீது அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தித் திணிக்கும் தன்மைகொண்டது. இது, ஒற்றைக் கலாசாரத்தைத் திணிக்கும் சங் பரிவாரத்தின் அஜண்டாவை மத்திய ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி நிர்பந்தமாக அமலாக்கும் முயற்சியாகும்.''

“சட்டத்தைத் திரும்பப்பெற போராட்டம்!”

கொளத்தூர் மணி, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர்: “பசுவதை தடைச் சட்டம் இந்தியா முழுமைக்கும் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், மோடி ஆட்சிக்கு பிறப்பித்த ஆணையை அப்படியே ஏற்று மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்காமலேயே மத்திய அரசு சுற்றுச்சூழல் துறை வழியாகச் சந்தைகளில் கால்நடைகளை இறைச்சிக்காக விற்பதற்குத் தடை போட்டுவிட்டது. இனி ஒவ்வொரு வீட்டிலும் இறைச்சி சமைத்தால் சமைத்த உணவை கண்காணிப்புக் குழுவின் பரிசோதனைக்கு உட்படுத்திச் சமைக்கப்பட்டது மாட்டிறைச்சி அல்ல என்று உள்ளூர் வருவாய் அலுவலர் கால்நடை மருத்துவரிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற்றபிறகே சமைத்த உணவைக் குடும்பத்தினர் சாப்பிடவேண்டும் என்று அவசரச் சட்டம்கூட வரலாம்.

புத்தர் இயக்கம் செல்வாக்குப் பெறும் காலம்வரை மாட்டிறைச்சியை ருசித்து ரசித்து வயிறுமுட்ட விழுங்கியவர்கள் வேத - புரோகிதர்கள். யாகங்களில் பசுக்களைக் கால்நடைகளை எரித்து, பிறகு அவற்றைச் சுவைத்து உண்டார்கள் என்பதை வேதங்களே கூறுகின்றன. இப்போது பிறப்பிக்கப்பட்டுள்ள மிருகவதை தடைச் சட்டத்தின்படி வேதங்களின் இந்தப் பிரிவுகளுக்குத் தடைபோட்டு இதைப் பரப்புவதோ, ஓதுவதோ கிரிமினல் குற்றம் என்று அறிவித்திருக்க வேண்டும். அதைச் செய்வார்களா? இந்தப் பாசிச சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் உள்ள ஒருமித்த கருத்துடைய கட்சிகள், இயக்கங்கள் ஒன்றிணைந்து ஒரே குரலில் இந்தச் சட்டத்தைத் திரும்பப்பெறவைக்கும் போராட்டங்களை உடனே தொடங்கிட வேண்டும்.'' 

“இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது!”

எஸ்.எம்.பாக்கர், இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர்: “மத்திய அரசு அறிவித்துள்ள இந்தச் சட்டம், இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது. கோயில்களில் திருவிழாக்களின்போது பிராணிகள் பலியிடப்படுகின்றன. கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தமது மத நம்பிக்கையின் அடிப்படையில் ஆடு, மாடு, ஒட்டகங்களை அறுத்துப் பலியிட்டு வருகிறார்கள். மத்திய பி.ஜே.பி அரசின் இந்தத் தடை, இந்திய மக்களின் உணவுப் பழக்கத்தில், மத நம்பிக்கையில் தலையிடுவதாகும். எனவே, மத்திய அரசு விதித்துள்ள இத்தடையை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும். அ.தி.மு.க அரசு இந்தத் தடைச் சட்டத்தை ஏற்க முடியாது என அறிவிக்க வேண்டும். மக்கள் அனைவரும் ஓரணியில் நின்று மத்திய பி.ஜே.பி அரசின் இந்தச் சட்டத்தை எதிர்த்து மிக வலிமையாக போராட வேண்டும்." 

“பண்பாட்டு ஒடுக்குமுறை!”

வி.நாராயணசாமி, புதுச்சேரி முதல்வர்: “இனி, அடுத்து கோழிக்கறி சாப்பிடக்கூடாது என்பார்கள். அதற்கடுத்து, ஒட்டுமொத்தமாக எதையுமே சாப்பிடாதீர்கள் என்பார்கள். இது, சர்வாதிகார ஆட்சி என்பதையே காட்டுகிறது.”

வைகோ, ம.தி.மு.க. பொதுச் செயலாளர்: “இந்தத் தடை உத்தரவு இந்தியாவின் நம்பகத்தன்மையைச் சீர்குலைக்கிறது. இதனால் நாட்டில் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் இறைச்சி விற்பனை பாதிப்படைகிறது. இது, சிறுபான்மை வழிபாட்டு உரிமையைப் பாதிக்கிறது. மேலும், சிறு தெய்வங்கள், நாட்டார் கோயில் வழிபாடுகளில் பலியிடுதலைத் தடுக்கும் ஒரு முயற்சியுமாகும்.'' 

கி.வீரமணி, திராவிடர் கழகத் தலைவர்: “இந்த தடை உத்தரவு அரசியல் சட்ட விரோதம்; நியாய விரோதம்; பண்பாட்டு ஒடுக்குமுறையாகும். இதன்மூலம்  இந்துத்வா ஆட்சி நடத்துகிறோம் எனப் பறைசாற்றுகிறார்கள்.”

‘எங்கள் உணவு... எங்கள் உரிமை’ என்ற உணர்வோடு, மத்திய அரசு உத்தரவுக்கு எதிர்ப்புகள் வலுக்கின்றன.