Published:Updated:

பசு vs மாட்டிறைச்சி...! ஓர் உலகளாவிய வரலாறு

பசு vs மாட்டிறைச்சி...! ஓர் உலகளாவிய வரலாறு

பசு vs மாட்டிறைச்சி...! ஓர் உலகளாவிய வரலாறு

பசு vs மாட்டிறைச்சி...! ஓர் உலகளாவிய வரலாறு

பசு vs மாட்டிறைச்சி...! ஓர் உலகளாவிய வரலாறு

Published:Updated:
பசு vs மாட்டிறைச்சி...! ஓர் உலகளாவிய வரலாறு
பசு vs மாட்டிறைச்சி...! ஓர் உலகளாவிய வரலாறு

மோடி ஆட்சியைப் பிடித்து 3 ஆம் ஆண்டில், மீண்டும் மாட்டுக்கறி விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த 3 ஆண்டுகளில் மாட்டுக்கறியை வைத்து விவாதங்கள், சண்டைகள், அடிதடிகள் என வளர்ந்து வந்த பிரச்னைகள் உச்சக்கட்டமாக கொலைகள் வரையிலும் சென்றுள்ளன. சங்பரிவாரங்கள் தொடர்ந்து வைத்துவரும் கோரிக்கையில் ஒன்று, 'பசுவதை சட்டம்'. பி.ஜே.பி-யும் இதைத் தனது தேர்தல் அறிக்கைகளில், குறிப்பிடத் தவறுவதில்லை. பசுவைக் காப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை பி.ஜே.பி அரசு எடுத்து வருகிறது.

இப்போது விலங்குகள் இறைச்சிக்காக விற்கப்படுவதைத் தடை செய்து இருக்கிறது. 'இறைச்சி சாப்பிடத் தடையில்லை; இறைச்சிக்காக விற்பதைத்தான் தடை செய்திருக்கிறோம்' என்று பி.ஜே.பி ஆதரவாளர்கள் சொன்னாலும், இரண்டுக்கும் என்ன பெரிய வித்தியாசம் என்று புரியவில்லை. இதன் மூலம், மக்களுக்கு மாட்டுக்கறி சகஜமாக கிடைக்காது என்று தெரிகிறது. வழக்கம்போல கேரளாவில், இந்த அறிவிப்புக்கு எதிராகப் பெரும் குரல் எழுந்து இருக்கிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன் "இந்தத் தடையை எல்லாம் ஏற்க முடியாது" என்று கூறி இருக்கிறார். தமிழகத்திலும் இந்தத் தடையை எதிர்த்து குரல் வந்துகொண்டு இருக்கிறது. தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலின், "நாட்டின் பன்முகத்தன்மை இந்த மாட்டிறைச்சித் தடையால் பாதிக்கும்; அதைத் திரும்பப் பெறவேண்டும்" என்று கூறி இருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“நம்மை பெற்ற தாயை விட தாய்ப்பசு பல வழிகளில் சிறந்தது. நம் தாய் ஓரிரு வருடங்களுக்கு தாய்ப்பால் கொடுக்கிறார். நாம் வளர்ந்தபின், அவரைப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால், தாய்ப் பசு நம்மிடம் புல்லையும், தானியங்களையும் தாண்டி எதையும் எதிர்பார்ப்பதில்லை. நம் தாய் அடிக்கடி உடல்நலம் குன்றி நம்மிடம் சேவையை எதிர்பார்க்கிறார். தாய்ப் பசு எப்போதாவதுதான் உடல்நலம் குன்றும். நம் தாய் இறந்தால், நமக்கு ஈமச்சடங்கு செலவுகள் இருக்கும். தாய்ப் பசு இறந்தாலும், இருந்தாலும் நமக்கு பயன்தரக்கூடியது". இதைச் சொன்னது மகாத்மா காந்தியடிகள். மேற்சொன்னவற்றை மதக்கண்ணோட்டத்தோடு பார்க்காமல், ஒரு விவசாய சமூகத்தில், பசு முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் பார்க்கலாம். 

ஆனால், பசுவை இந்துக்களின் சின்னமாக மாற்றிய அரசியல் இங்கே நடக்கிறது. இந்த அரசியல், 'புத்த மதத்துக்கும் பார்ப்பனீய மதத்துக்கும் நடந்த  பிரச்னையின் உச்சம்' என்கிறார் டாக்டர் அம்பேத்கர். புத்தர் வளர்ந்துவந்த வேதகாலத்தில், விலங்குகளை யாகங்களின் தீயிலிட்டு பலியிடும் பழக்கம் அதிகளவில் நடைபெற்றுவந்தது. இந்த விலங்குகளில் பசுவும் உண்டு. இதை புத்தர் கடுமையாக எதிர்த்தார்.

"வேதகாலத்தில், மாட்டுக்கறி உள்பட மாமிசம் சாப்பிடுவது இயல்பாக இருந்தது என்பது ரிக்வேதத்தில் இருக்கிறது. இதை பௌத்த மதத்தின் சூத்திரங்களும் உறுதிப்படுத்துகின்றன. பௌத்த மதத்தின் வளர்ச்சியைத் தடுக்கவும், பசுவால் இழந்த பெருமையை மீட்கவும்தான் பார்ப்பனீயம் பசுவை புனிதமாக்கியதோடு, மரக்கறி உணவுக்கும் மாறியது" என்று பல ஆதாரங்களுடன் விளக்குகிறார் அம்பேத்கர். 

''இந்து மதத்தின் தீண்டாமைக்கும், தாழ்த்தப்பட்டவர்கள் மாட்டுக்கறியை சாப்பிடுவதற்கும் முக்கியப்பங்கு இருப்பதாக அவர் கூறுகிறார். தாழ்த்தப்பட்டவர்களை இந்துக்களிடம் இருந்து பிரிப்பது இந்த மாட்டுக்கறிதான். மேலோட்டமாகப் பார்த்தாலே இந்து மதத்தில் உணவுப்பழக்கத்தை வைத்து இரண்டு விலக்கப்பட்ட பிரிவுகள் (Food Taboo) இருக்கின்றன. அது இந்துக்களை சைவ உணவு சாப்பிடுபவர்கள், மாமிசம் சாப்பிடுபவர்கள் என்று பிரிக்கிறது. இன்னொரு விலக்கப்பட்ட பிரிவாக மாட்டுக்கறி சாப்பிடுபவர்களைப் பிரிக்கிறது. அது இந்துக்களை மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள், மாட்டுக்கறி சாப்பிடாதவர்கள் என்று பிரிக்கிறது. இதில், முதல் பிரிவினர், தீண்டாமைக்கு உள்ளாக வில்லை. இரண்டாம் பிரிவினர் தீண்டாமைக்கு உள்ளாகிறார்கள்" என்று விவரிக்கிறார் அம்பேத்கர். பேராசிரியர் டி.என்.ஜா எழுதிய 'பசுவின் புனிதம் (THE MYTH OF THE HOLY COW)' என்ற புத்தகம் இதை மேலும் பல ஆதாரங்களுடன் விளக்குகிறது.

பசுவதை தடுப்பு சட்டம் என்பதற்கும், மாட்டுக்கறி சாப்பிடுவது என்பதற்கும் நீண்ட வரலாறு இருப்பதை இதன் மூலம் அறியலாம். 

சரி, இப்போது தற்காலத்துக்கு வருவோம்...இன்று மாட்டுக்கறி என்பது உலகம் முழுவதும் விரும்பிச் சாப்பிடும் ஒரு உணவாகி இருக்கிறது. இந்தியாவிலும் மாட்டுக்கறி எல்லாத்தரப்பட்ட மக்களாலும் சாப்பிடக்கூடியதாக இருந்தாலும், மேற்சொன்ன 'புனிதங்கள்' இன்றும் பார்க்கப்படுகிறது என்பதை மறுக்க முடியாது. ஒரு உயர்சாதி இந்துவாக தன்னை கருதக்கூடிய இளைஞன் மாட்டுக்கறி சாப்பிடுவதை விரும்புவதில்லை. அவனை ஏதோ ஒரு உளவியல் தடுக்கிறது. கேரளா அளவுக்கு தமிழ்நாட்டில், மாட்டுக்கறி பரவலாக சாப்பிடப்படுவதில்லை. தென்னகத்திலேயே இப்படி என்றால், வடமாநிலங்களில் மாட்டுக்கறியை வைத்து  மிகப்பெரிய பிரச்னை நடக்கிறது.

ஒரு வடஇந்திய நண்பருடன் எனக்கு நேர்ந்த உரையாடலை இங்கே தரவிரும்புகிறேன். நானும் அவரும் லண்டனில் பணிபுரிந்துகொண்டு இருந்தோம். அவர் நன்கு படித்தவர். இளம் வயதிலேயே லண்டனில் வேலைபார்க்கும் வாய்ப்பைப் பெற்றவர். அவர் தினம் இரவு தூங்கும் முன் பாகிஸ்தானில் இருந்து ஒளிபரப்பாகும் வானொலி ஒன்றைக் கேட்பார். எனக்கு அது மிகவும் வித்தியாசமாகப்பட்டது. ''ஏன் நண்பா, தினம் பாகிஸ்தான் செய்திகளை கேட்கிறாய்?'' என்று கேட்டேன். அதற்கு அவர், ''நம்மைப்பற்றி (இந்தியர்கள் பற்றி) அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்துகொள்ளத்தான்'' என்றார். ''இது உனக்கு தேவையில்லாதது நண்பா'' என்று கூறினேன். மேலும் அவரிடம் பேசுகையில், வடஇந்தியாவில் இருக்கும் இந்து - இஸ்லாமிய பிரிவினை புரிந்தது. ''எங்கள் வீடுகளில் நாங்கள் இஸ்லாமியர்களை உள்ளே விடமாட்டோம்'' என்றார். எனக்கு பெரும் அதிர்ச்சி. ''என்ன சொல்லுகிறாய்? ஏன் விட மாட்டீர்கள்?'' என்று கேட்டேன். அவர், தயங்கிக்கொண்டே சொன்னார். ''அவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள் என்பதால்" என்று. எனக்கு அதிர்ச்சியாகவும், வேடிக்கையாகவும் இருந்தது. ''ஏன் நண்பா, லண்டனில் நமக்கு வேலை கொடுத்த ஆங்கிலேயர்களும், தினமும் அலுவலகத்தில் நம் உணவு மேஜையில், நம்முடன் உட்கார்ந்து சாப்பிடும் ஐரோப்பியர்களும் மாட்டுக்கறியைத்தானே சாப்பிடுகிறார்கள். அதெல்லாம் உனக்கு இயல்பாக இருக்கிறதே...?'' என்று கேட்டேன். ''நீ சொல்வது சரிதான் நண்பா'' என்றார். மாட்டுக்கறி விவகாரம் வடஇந்தியாவில் ஏன் மிகப்பெரிய அளவுக்குப் பேசப்படுகிறது என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ளலாம்.

பசு என்பது இந்து மதத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதற்கு இன்னொரு அனுபவத்தைப் பகிர விரும்புகிறேன். சமீபத்தில், இந்தோனேசியாவில் இருக்கும் பாலித்தீவுக்கு சென்றேன். பாலித்தீவு இந்து மதத்தின் முக்கியமான இடமாக பார்க்கப்படுகிறது. பாலித்தீவின் மக்கள் தொகையில் 83 சதவிகிதம் இந்துக்கள். அந்தத்தீவின் பூர்வகுடிகள் இந்து மதத்தை ஏற்று வாழ்வதும், இந்துக் கோவில்கள் தீவு முழுக்கப் பரவி கிடப்பதும் அந்தத் தீவு இந்துக்களின் மனதுக்கு நெருக்கமாக இருப்பதற்கு காரணமாக இருக்கிறது. 3 நாள் விடுமுறைக்காக நாங்கள் அங்கே சென்று இருந்தோம். எங்களை அழைக்க ஒரு ஓட்டுநர் வந்திருந்தார். எங்களைப் பார்த்து இந்தியர்கள் என்று தெரிந்ததும், ''நீங்கள் இந்துவா?'' என்று கேட்டார். நான், ''ஆமாம்'' என்றேன். ''நானும் இந்து தான்'' என்றார். சிறிதுநேரத்திலேயே, தான் ஒரு சத்ரியன் என்றார். தமிழ்நாட்டில் இருந்து சென்ற எனக்கு, 'சாதியை இப்படி வெளிப்படையாக சொல்கிறாரே' என்று கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும், பாலியைப்பற்றி ஏற்கெனவே கொஞ்சம் படித்துவிட்டு சென்றதால், எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை பெரிதாகக் காட்டிக்கொள்ளவில்லை. பாலியில் சாதிய கட்டமைப்பு இருக்கிறது. (பார்ப்பன, சத்ரிய, வைசிய சாதிகள் 5 சதவிகிதமும், சூத்திரர்கள் 95 சதவிகிதமும் இருக்கிறார்கள்). அவரிடம் பேசி அந்த மண்ணின் கலாசாரத்தைக் கொஞ்சம் புரிந்துகொள்ள முயன்றேன். அவரிடம் நிறைய கேள்விகளைக் கேட்டுக்கொண்டும் நம் ஊரின் கலாசாரத்தைப் பகிர்ந்துகொண்டும் வந்தேன். உணவுப் பழக்கவழக்கத்தைப் பற்றி பேச்சு வந்தது.

பின்வரும் உரையாடல் எனக்கும் அவருக்கும் நடந்தது.

நான் : ''உங்கள் நாடு இஸ்லாமிய நாடு. மாட்டுக்கறி சாதாரணமாக கிடைக்கும் அல்லவா?''

ஓட்டுநர் : ''ஆமாம். கிடைக்கும். ஆனால், பாலித்தீவில் நாங்கள் யாரும் மாட்டுக்கறி சாப்பிட மாட்டோம்.''

நான் : ''ஓ அப்படியா, பன்றிக்கறி சாப்பிடுவீர்களா?''

ஓட்டுநர் : ''பன்றிக்கறி சாப்பிடுவோம். அதில் ஒன்றும் பிரச்னை இல்லை.''

நான் : (சிரித்துக்கொண்டே), ''அப்போ பாலித்தீவில் இருக்கும் இஸ்லாமியர்கள் என்ன செய்வார்கள்?''

ஓட்டுநர் : ''அவர்கள் பன்றிக்கறி சாப்பிட மாட்டார்கள். மாட்டுக்கறி சாப்பிடுவார்கள்.''

நான் : ''விந்தையாக இருக்கிறது. பாலித்தீவை தாண்டினால், மாட்டுக்கறி சகஜம். பன்றிக்கறிக்கு தடை. பாலித்தீவில் பன்றிக்கறி சகஜம், மாட்டுக்கறிக்கு தடை.''

ஓட்டுநர் : ''உங்கள் ஊரில் எப்படி?''

நான் : ''எங்கள் ஊரிலும் இதேப் பிரச்னை இருக்கிறது. அங்கே உயர் சாதி இந்துக்களாக தங்களைக் கருதிக்கொள்பவர்கள் மாட்டுக்கறியை சாப்பிடமாட்டார்கள். தாழ்த்தப்பட்டவர்களும், இஸ்லாமியர்களும் சகஜமாக மாட்டுக்கறியை சாப்பிடுவார்கள். மாட்டுக்கறியையும், மாட்டையும் வைத்து ஒரு பெரிய அரசியலே எங்கள் ஊரில் நடக்கும்.''

ஓட்டுநர் : ''அப்படியா, நீங்கள் மாட்டுக்கறி சாப்பிடுவீர்களா?''

நான் : ''முன்பு சாப்பிடாமல்தான் இருந்தேன். இப்போது,  சாப்பிட ஆரம்பித்துவிட்டேன்'' என்றேன். 

பின்பு, பாலித்தீவின் கலாசாரத்தில் இறந்தவர்களை எரிக்கும் திருவிழா மிகமுக்கியமானது என்பதை தெரிந்துகொண்டேன். அரச குடும்பத்தினர், கோவில் பூசாரிகள் இறந்தால், அவர்களின் இறுதிச் சடங்குகள் பெரிதாக நடக்கும். இந்த இறுதிச் சடங்குகளுக்கு நிறைய நேரமும் பணமும் தேவைப்படுவதால், சாதாரண மக்கள் இறந்தால் உடல்கள் உடனடியாக எரிக்கப்படாது. அவர்கள் உடல்கள் புதைக்கப்பட்டு சில வருடங்கள் கழித்து எரிக்கப்படும்.  3 அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை, கிராம குழுவில், அதுவரை எரிக்கப்படாத உடல்களை எடுத்து எரிப்பார்கள். மொத்தமாக எரிப்பதன்மூலம், பணம் இல்லாதவர்களின் சுமையைக் கொஞ்சம் குறைக்கிறார்கள்.

நான் அந்த எரிக்கும் இடத்தைச் சென்று பார்த்தேன். அதை அரண்மனை என்று சொல்கிறார்கள். அந்த அரண்மனையின் வாயிலில் ஒரு மிகப்பெரிய தேரும், அதில் பெரிய பசு உருவம் ஒன்றும் நின்றுகொண்டு இருந்தது. அந்தப் பசுவை புனிதப்பசு என்று குறிப்பிடுகிறார்கள். இறந்தவர்களின் உடலை அந்த பசுவுக்குள் வைத்து எரிக்கிறார்கள்.

பசு கடல்கடந்தும் இந்துக்களின் வாழ்க்கையில் முக்கியப் பங்கை வகிக்கிறது என்பதை மேற்சொன்னதில் இருந்து புரிந்துகொள்ளலாம். இன்று, இந்தியாவிலும் இதுதான் பிரதிபலிக்கிறது.