Published:Updated:

"என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!" - பேசத் தொடங்கினார் கருணாநிதி

"என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!" - பேசத் தொடங்கினார் கருணாநிதி
"என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!" - பேசத் தொடங்கினார் கருணாநிதி

"என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே" 

மேடையில் கரகரத்த குரலில் கருணாநிதி முழங்கினால், குழுமியிருக்கும் மொத்தக் கூட்டமும் ஆர்ப்பரிக்கும். ''கதையாசிரியர், எழுத்தாளர் என்பது மட்டுமல்ல...  சிறந்த பேச்சாளர் என்பதும் 'கருணாநிதி' என்ற ஆளுமையின் அடையாளம்" என்பார்கள் அவர் கட்சி சாராத தலைவர்களும். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, சட்டமன்றத்தில் கருணாநிதி பேசுவதற்கு கூடுதல் நேரம் வழங்கப்படும். ஏனெனில், எம்.ஜி.ஆருக்கு எப்போதும் கருணாநிதியின் பேச்சு மொழி பிடிக்கும். எதிரும் புதிருமாகப் போட்டியிட்ட ஜெயலலிதாவும்கூட, ''கருணாநிதியின் பேச்சு முறை பிடிக்கும்'' என ஒருமுறை குறிப்பிட்டுள்ளார். பேச்சின் மூலம் ஒரு பெரும் கூட்டத்தைத் தம் பக்கம் திருப்பி வைத்திருந்தவர் கருணாநிதி. அப்படிப்பட்டவர், சில மாதங்களுக்கு முன் திடீரென தொண்டை, நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்து அவர் வீட்டுக்குத் திரும்பிய பின்னரும் தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. தொடர்ச்சியான இந்த சிகிச்சைகளால், கருணாநிதி பேசமுடியாத சூழல் ஏற்பட்டதோடு பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதும் தடைபட்டது. கருணாநிதியை நேரில் சந்திக்க முடியாத தி.மு.க தொண்டர்கள் முரசொலியில் அவ்வப்போது இடம்பெற்ற அவரின் படத்தைப் பார்த்து திருப்திப் பட்டுக்கொண்டனர். ஆனால், 'கால மேகம் மாறிவருகிறது. தலைவரின் மௌனம் உடைந்துவிட்டது' எனச் சமூக வலைதளங்களில் குதூகலமாகப் பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர் தி.மு.க-வினர். ''ஆம்... எங்கள் தலைவர் வாய்திறந்து பேசிவிட்டார்'' என்கின்றனர் உற்சாகமாக. அதற்குச் சான்றாக நமக்கொரு பதிவை வாட்ஸ்அப்-பில் பகிர்ந்தனர். 

இதோ 'தலைவர் கலைஞரின் உடல்நிலை குறித்து கழக முன்னோடி துரைமுருகன்' எனத் தலைப்பிட்ட பதிவு :

தொண்டைக்குழி வழியாக குழாயை உள்ளே விட்டு அடிக்கடி சளி எடுக்க வேண்டி இருப்பதால், பேச இயலவில்லை...

கடந்த இருதினங்களுக்கு முன் குழாயை எடுத்துவிட்டு துவாரத்தையும் அடைத்து மருத்துவர்கள் பேசச் சொன்னார்கள்.

தலைவரிடம் ''உங்கள் பெயர் என்ன?'' எனக்கேட்க...

"என் பெயர் கருணாநிதி'' என்றார்.

அடுத்ததாக 

''உங்களுக்கு யாரைப்பிடிக்கும்?'' எனக்கேட்க...

''அறிஞர் அண்ணா'' என்றார்.

பின்னர், என்னை ''யார்?'' எனக்கேட்க...

"துரை'' என்றதும், என் கண்கள் கசிந்தன.

மீண்டு வருவார் தலைவர்...

'வைரவிழா நாயகர்'

கலைஞர் '94'

- இப்படிக்கு துரைமுருகன்.

இந்தப் பதிவைப்  படித்ததும் ''உண்மையா?'' என்றோம் ஆச்சர்யத்துடன். "என்ன ப்ரோ இப்படி கேட்குறீங்க? தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலை மோசமானதும் நாங்கள்லாம் துடிச்சுட்டோம். சீக்கிரம் குணமாகணும்னு நினைச்சோம். வீட்டுலயும் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வீட்ல டி.வி பார்க்க ஆரம்பிச்சாரு. மத்தவங்க அவருக்கு அன்றாட செய்திகளைத் தெரியப்படுத்த சத்தமா பேப்பர் படிச்சுக் காட்டுவாங்க. தினமும் செயல் தலைவர் ஸ்டாலின் ரெண்டு முறையாவது வந்து பார்த்துட்டு போவாரு. தொண்டையில் டியூப் போடப்பட்டிருப்பதால தலைவரால பேசமுடியாது. அதனால எது வேணும்னாலும் செயல் தலைவரோட கையை மெதுவா அழுத்துவாரு தலைவர். அந்த தொடுதலைப் புரிஞ்சுக்கிட்டு செயல் தலைவரும் உதவுவாரு. கொஞ்சம் கொஞ்சமா தலைவரோட சிகிச்சையில் முன்னேற்றம் வந்தது. இந்த நேரத்திலதான் 'தலைவர் பேசினார்'னு அண்ணன் துரைமுருகன்கிட்டயிருந்து பதிவு வந்தது. ஜூன் 3ஆம் தேதி வைர விழாவுக்கு எப்படியும் தலைவர் கருணாநிதி வருவார்ங்கிற எங்க நம்பிக்கை கூடியிருக்கு" என்றனர் தூக்கலான உற்சாகத்துடன்.  நாம் இது குறித்து தி.மு.க-வின் முதன்மைச் செயலாளர் துரைமுருகனிடம் பேசினோம்.

"தலைவர் உடல்நிலை சூப்பரா இருக்கு. நல்ல நினைவாற்றலோடு இருக்கிறார். பேப்பர் படிக்கச் சொல்லிக் கேட்பாரு. அதுல பிரச்னை ஒன்றுமில்லை. தொண்டையில குழாய் வைத்திருந்ததால பேசமுடியாம இருந்தாரு. அப்புறம்தான் ரெண்டு நாள் முன்னாடி குழாயை எடுத்துட்டு மருத்துவர்கள் பேசச் சொன்னாங்க. தலைவரும் பேசினார். அந்த நொடி எனக்கு ஏற்பட்ட சிலிர்ப்பு... ஒருபுதுவிதமான உணர்வு" என்றார் மகிழ்ச்சி பீறிட. அவரிடம் ,''வைரவிழா மேடையில்  கருணாநிதியைப் பார்க்கலாமா?'' என்றோம். "அது மருத்துவர்களைப் பொறுத்தது, சிகிச்சையைப் பொறுத்தது. கட்டாயம் வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கும் இருக்கிறது." என்றார். அவரின் பதிலில் தெரிந்த அழுத்தம், எதிர்பார்ப்பைக் கூட்டுவதாக உள்ளது.