Published:Updated:

கருணாநிதியின் முதல் போராட்டம் எது தெரியுமா..?

கருணாநிதியின் முதல் போராட்டம் எது தெரியுமா..?
கருணாநிதியின் முதல் போராட்டம் எது தெரியுமா..?

இந்திய அரசியலில் மூத்த தலைவராக விளங்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதி,  ஜூன் 3 ஆம் தேதி தன்னுடைய 94-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். வாழ்க்கையில் பல மேடுபள்ளங்களைக்  கடந்து வந்திருப்பவர் அவர். அவருடைய பிறந்தநாளில், அவரைப் பற்றிய  சுவையான 10 விஷயங்கள் இங்கே !

கருணாநிதியின் முதல் போராட்டம் எது தெரியுமா..?

1. கருணாநிதி எட்டாம் வகுப்பு மாணவராக இருந்தபோது (1939) பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியில், 'நட்பு' என்ற தலைப்பில் பேசியதுதான் அவருடைய முதல் மேடைப் பேச்சு.

2. கருணாநிதி, தீவிர கிரிக்கெட் ரசிகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. சிறுவயதில் கருணாநிதிக்குப் பிடித்தமான விளையாட்டாக இருந்தது கிரிக்கெட் அல்ல, ஹாக்கி. திருவாரூர் ஃபோர்டு ஹைஸ்கூல் ஹாக்கி டீமுக்காக மாவட்ட அளவில் விளையாடியிருக்கிறார்.

3. திருச்சி வானொலி நிலையத்துக்கு 1944-ல் கருணாநிதி அனுப்பிவைத்த நாடகம், ' இதனை ஒளிபரப்ப இயலாது' என்ற பதிலுடன் திரும்பி வந்தது. ஆட்சியாளர்களை அந்த நாடகத்தின் வசனங்களும் கதாபாத்திரங்களும் வெளுத்து வாங்கியதே அதற்குக் காரணம்.  'குண்டலகேசி' என்ற அந்த நாடகம்தான் பிற்காலத்தில் 'மந்திரிகுமாரி' என்ற படமானது...

4.  நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி (1953) ஆறாயிரம் தொடக்கப் பள்ளிகளை ராஜாஜி தலைமையிலான தமிழக அரசு மூடியது. "மாணவர்கள் பள்ளிக் கல்விக்கு பாதி நேரமும் 'குலத்தொழில்' கற்க  மீதி நேரமும் ஒதுக்கும்படி" ராஜாஜி அறிமுகப்படுத்திய 'குலக்கல்வி' திட்டத்துக்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியது. எப்போதும் போல் பெரியார் முதல் குரல் கொடுத்தார். அண்ணா போராட்டம் அறிவித்தார். ஆண்டை  நினைவூட்டும் விதமாக  53 பொதுக்கூட்டங்களில்  குலக்கல்வி முறையை எதிர்த்து   கருணாநிதி, தொடர் உரையாற்றினார்... விளைவு, ராஜாஜி பதவி விலகினார். முதல்வராக காமராஜர் பொறுப்பேற்றார்.

5. திருவாரூர் முத்துவேலர் என்பதை சுருக்கி டி.எம்.கருணாநிதி என்றுதான் தொடக்கத்தில் கையெழுத்திட்டு வந்தார் கருணாநிதி. பின்னர், மு.கருணாநிதி என்று அதை மாற்றிக் கொண்டார். 'உடன்பிறப்புக்கு' எழுதும் கடிதத்தில் மட்டும் அவர் மு.க. என்றே கையெழுத்திடுவார்.

6. நடுத்தெரு நாராயணன், பெரிய இடத்துப் பெண், சாரப்பள்ளம் சாமுண்டி, அரும்பு, ஒரு மரம் பூத்தது, ஒரே ரத்தம், வான்கோழி, சுருளிமலை,வெள்ளிக்கிழமை, புதையல் போன்ற தலைப்புகளில் சமூகம் தொடர்பான காவியங்களைப் படைத்தவர் கருணாநிதி. தென்பாண்டி சிங்கம், பலிபீடம் நோக்கி, ரோமாபுரி பாண்டியன், பொன்னர்-சங்கர், பாயும்புலி பண்டாரக வன்னியன் போன்ற வரலாற்றுக் காவியங்களும் கருணாநிதியின் எழுத்தாற்றலுக்கு சான்றாகத் திகழ்கின்றன. கருணாநிதியின் வாழ்க்கையையும்,  எழுபதாண்டு அரசியல் களத்தையும் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும் நூலாக அமைந்திருப்பது, 'நெஞ்சுக்கு நீதி' !  இந்நூலின் ஆறாம் பாகம் 2013-ல் வெளியிடப்பட்டது.  

7. தமிழ்நாடு அரசின் மாநில செய்தி வெளியீடாக வரும் தமிழ்நாடு அரசு செய்திப்பிரிவு (படச்சுருள்) படத்தையும்,  தமிழ்நாடு அரசு இதழான 'தமிழரசு' (தமிழ்- ஆங்கிலம்) இதழையும் உருவாக்கியவர் கருணாநிதிதான்.

8. சரளமாக ஆங்கிலத்தில் பேசியதில்லை என்றாலும் கருணாநிதியின் ஆங்கில ஞானம் சற்றே அசத்தலானது... கருணாநிதியின் பேட்டி முடிந்ததும், சில நிமிட காத்திருப்பில் அந்தப் பேட்டியின் முழுமையை  அறிக்கையாக அவருடைய உதவியாளர்கள்  நிருபர்களுக்கு கொடுத்து விடுவார்கள்...

ஒரு நாள் அப்படி அறிக்கை கொடுப்பதில் சற்றே தாமதம். ஜெராக்ஸ் எடுக்கப் போன உதவியாளர் வரவில்லை. "சார், நாங்கள் எடுத்த பேட்டியை அப்படியே  சொல்கிறோம்,  நீங்கள் 'டிக்டேட்' செய்தால் போதும்" என்றனர் நிருபர்கள். "நீங்கள் (நிருபர்கள்) சொல்வது போல் நான் டிக்டேட் செய்தால் நான் 'டிக்டேட்டர் ' (சர்வாதிகாரி) ஆகிவிடுவேனே"  என்றார் கருணாநிதி.  அந்த 'டைமிங்' ஆற்றலை கருணாநிதியிடம் அடிக்கடி காணலாம்.

9. கருணாநிதிக்கு பிடித்த வசனம், "மனசாட்சி உறங்கும்  சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது.

10. கருணாநிதியின் முதல்போராட்டமே கல்வி உரிமைக்கான போராட்டம்தான். திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் கருணாநிதியை ஆறாம் வகுப்பில் (1936) சேர்க்க மறுத்து விட்டனர். ' என்னை படிக்க விடவில்லை என்றால் எதிரேயிருக்கும் தெப்பக் குளத்தில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்வேன்' என்று  பள்ளிக்கு எதிராகப் போராடியதோடு  தெப்பக் குளத்தில் குதிக்கவும் முற்பட்டார் கருணாநிதி. வேறுவழியின்றி அவரை பள்ளியில் சேர்த்துக் கொண்டது பள்ளி நிர்வாகம்... கருணாநிதியின் முதல் போராட்டமே வெற்றிதான்.