Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்
##~##

'கொண்டாட்டம்’ என்பதன் மெய்ப்பொருள் என்ன? அது, கூட்டம் கூடிக் கூச்சல் போடுவது அல்ல; தள்ளுபடி விலையில் தவணைப் பொருள்கள் வாங்குவதும் அல்ல. இடைவிடாத இந்தப் பூமியின் இயக்கத்தில் நமது இருப்பை நினைவூட்டிக்கொள்ளும் இனிய ஏற்பாடு. நம் மேன்மையின் நினைவுகளை நமக்கு நாமே மீட்டிக்கொள்ளும் சந்தோஷம். பழையன துறந்து, புதியன ஏற்கும் புத்துணர்ச்சி.

அந்த வகையில், இந்த 2014-ம் ஆண்டின் வரவு நமக்கு புன்னகையைப் பரிசளிக்கட்டும். அதே நேரம், புத்தாண்டின் மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கும் இந்தத் தருணத்தில் எது கொண்டாட்டம் என்பதை நாம் மறு வரையறை செய்வோம்.

பழம்பெருமைகளைக் கண்டடைந்து, பாதுகாப்பது ஒரு வகை. அது வரலாற்றுக் கொண்டாட்டம். ஆதிச்சநல்லூர், கொடுமணல், பொருந்தல் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகள் மூலம் தமிழர்களின் நாகரிகம், சிந்து-சமவெளி நாகரிகத்துக்கு முற்பட்டது என்பதற்கான தரவுகள் கிடைத்துள்ள நிலையில் இத்தகைய மேன்மைகளை நாம் உலகுக்கு உணர்த்த வேண்டும்.

அதுபோலவே சமகாலத்தில் நம்மிடையே வாழும் அர்ப்பணிப்புமிக்க மகத்தான மனிதர்களை அடையாளம் கண்டறிந்து கொண்டாட வேண்டும். சொந்த நலன் பாராது, சமூக நலனுக்காக தன் வாழ்நாள்களைச் செலவிடுபவர்களை நம் நினைவுகளில் ஏந்திக்கொள்ள வேண்டும். தனி மனிதர்கள் மட்டுமல்ல... இயக்கமாக, அமைப்பாக இணைந்து இயங்கும் செயற்பாட்டாளர்களை நமது அடுத்த தலைமுறையின் முன்னுதாரணங்களாகக்கொண்டு முன்நகர்த்த வேண்டும். ஏனெனில், அவர்கள் நம் அனைவருக்காகவும் சிலுவை சுமக்கிறார்கள்.

அதைவிட முக்கியமாக, நாம் 'அவர்களில்’ ஒருவராக மாற வேண்டும். கைதட்டுவதில் இருந்து, கை கோக்கும் இடம் நோக்கி நகர்வோம். சேர்ந்து இயங்குவதைவிட பெரிய கொண்டாட்டம் வேறு ஏது?

புத்தாண்டு நல்வாழ்த்துகள்!