Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்
##~##

ரிசி, கத்திரிக்காய், மாம்பழம், வாழைப்பழம் என எதை வாங்கப் போனாலும், 'இயற்கை விவசாயத்தில் விளைந்ததா?’ என்று கேட்டு வாங்கும் குரல்கள் பெருகத் தொடங்கியுள்ளன. கம்பு, கேழ்வரகு, தினை, சாமை என வழக்கொழிந்துகொண்டிருக்கும் பாரம்பரியத் தானியங்களின் மீது, மக்களின் பார்வை அழுத்தமாக விழுந்திருக்கிறது. நகரம், கிராமம், படித்தவர், படிக்காதவர் என எல்லாத் தரப்பு மக்களிடமும் இயற்கை மீதான அன்பும், அல்லாதவை மீதான விழிப்பு உணர்வும் துளிர்விடத் தொடங்கியுள்ளன!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'இயற்கையோடு இணைந்து நமது பாட்டன், பூட்டன் செய்த பாரம்பரிய விவசாய முறைதான் ஆகச் சிறந்தது’ என்பதை உலகின் நடுநிலையான விவசாய விஞ்ஞானிகள் பலரும் ஏற்றுக்கொள்கின்றனர். 'ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைக் கொட்டி, மண்ணை மலடு ஆக்காமல் இருந்தால் நாம் விளைவிக்கும் உணவுகள் நஞ்சு ஆகாது. நிலத்தடிநீரும் வற்றாது’ என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளனர்.

இந்த விழிப்பின் விதையை 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மண்ணில் விதைத்தவர், இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார். பசுமைப் புரட்சியால் வந்த ரசாயன விவசாயத்தின் தீமைகளைப் புரிந்துகொண்டு, ஒற்றை மனிதராக தமிழகத்தில் தன் காலடி படாத ஊரே இல்லை எனும் அளவுக்கு நடையாய் நடந்திருக்கிறார் - இயற்கைக் கொடி பிடித்து!

வீடு, மனைவி, மக்கள்... அனைத்தையும் விடுத்து, பசுமைப் பணிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இந்த விவசாயப் போராளி, தற்போது விதைக்கப்பட்டுவிட்டார். இது, ஈடு செய்யமுடியாத இழப்பு அல்ல... ஈடு செய்யவேண்டிய இழப்பு. ஆம், வழக்கம்போல அஞ்சலிக் கூட்டம் நடத்தி, மாலை, மரியாதை செய்து மறப்பதால் பொருள் இல்லை. மாறாக, அவர் எந்த நோக்கத்தை நிறைவேற்ற, காலம் எல்லாம் ஓடி ஓடி அலைந்தாரோ, அதை நாம் நிறைவேற்ற வேண்டும். அந்தப் பெரும்பணியை நாம் ஒவ்வொருவரும் நம் தோளில் சுமக்கத் தயாராக வேண்டும். அப்போதுதான் இயற்கை விவசாயம் கொழிக்கும்; எதிர்வரும் தலைமுறைகள் செழிக்கும்!

பொங்கலோ பொங்கல்!