Published:Updated:

டி.டி.வி.தினகரனிடம் படையெடுக்கும் எம்எல்ஏ-க்கள்! அதிர்ச்சியில் பழனிசாமி அணி

டி.டி.வி.தினகரனிடம் படையெடுக்கும் எம்எல்ஏ-க்கள்! அதிர்ச்சியில் பழனிசாமி அணி
டி.டி.வி.தினகரனிடம் படையெடுக்கும் எம்எல்ஏ-க்கள்! அதிர்ச்சியில் பழனிசாமி அணி

டி.டி.வி.தினகரனை நேற்று 11 எம்எல்ஏ-க்கள் சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், இன்று மேலும் ஏழு எம்எல்ஏ-க்கள் சந்தித்திருப்பது, முதல்வர் பழனிசாமி அணியை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தானத்தைத் தொடர்ந்து, தினகரனுக்கு எதிராகக் காய் நகர்த்தியது, முதல்வர் பழனிசாமி அணி. இரண்டாகப் பிரிந்துகிடக்கும் அ.தி.மு.க-வை ஒன்று சேர்க்கும் முயற்சியில் முதல்வர் பழனிசாமி அணியினர் செயல்பட்டனர். முதல்கட்டமாக சசிகலாவையும் தினகரனையும் கட்சியிலிருந்து தள்ளிவைப்பதாக அறிவித்தனர். இதையடுத்து, கட்சியிலிருந்து விலகியிருப்பதாக தினகரன் அறிவித்தார். இதனிடையே, இரட்டை இலைச் சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைதுசெய்யப்பட்டார். ஒரு மாத சிறைக்குப் பின்னர் ஜாமீனில் வந்த தினகரன், நேற்று பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலாவை சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்புக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கட்சியிலிருந்து தினகரன் தள்ளிவைக்கப்பட்டுள்ளார். அவரது தலையீடு இல்லாமல் ஜெயலலிதா ஆட்சி நடைபெறுகிறது என்று தெரிவித்தார். "இன்னும் 60 நாள்கள் பொறுத்திருப்பேன். கட்சி வளர்ச்சியடைய வில்லையென்றால், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பேன்" என்று தினகரன் கூறியிருந்தார். இதனிடையே, அனைத்து    அமைச்சர்கள் அறையிலும் முதல்வர் பழனிசாமி படங்கள் இன்று வைக்கப்பட்டது.

இந்த நிலையில், தினகரனுக்கு ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுகொடுத்துவருகின்றனர். பெரம்பூர் எம்எல்ஏ., வெற்றிவேல், ஆண்டிபட்டி எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன், சாத்தூர் எம்எல்ஏ சுப்பிரமணியன் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-கள் நேற்று தினகரனை அவரது அடையாறு இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இன்று, பரமக்குடி எம்எல்ஏ முத்தையா, மதுரை வடக்கு எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, கலசப்பாக்கம் பன்னீர்செல்வம், செய்யாறு மோகன், அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்பாலாஜி, தோப்பு வெங்கடாசலம், பழனியப்பன் ஆகியோர் தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அவர்களுடன் தினகரன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார்.

எம்எல்ஏ-க்கள் அடுத்தடுத்து தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்துவருவது, முதல்வர் பழனிசாமி அணியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.