Published:Updated:

தினகரனின்  அடுத்தடுத்த விக்கெட்டுகள்!  - அமைச்சர்களுக்கு எம்.எல்.ஏக்களின் அதிர்ச்சி

தினகரனின்  அடுத்தடுத்த விக்கெட்டுகள்!  - அமைச்சர்களுக்கு எம்.எல்.ஏக்களின் அதிர்ச்சி
தினகரனின்  அடுத்தடுத்த விக்கெட்டுகள்!  - அமைச்சர்களுக்கு எம்.எல்.ஏக்களின் அதிர்ச்சி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அணி திரளும் எம்.எல்.ஏக்களால் அமைச்சர்கள் திணறி வருகின்றனர். ' சட்டமன்றத் தேர்தலில் மாவட்ட அமைச்சர்களின் உதவியோடு வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களை எல்லாம் தினகரன் வளைத்து வருகிறார். அமைச்சர்களின் சமாதானத்தையும் எம்.எல்.ஏக்களில் பலர் ஏற்கவில்லை. ஆட்சிக் கவிழ்ப்பை நோக்கி அரசு சென்று கொண்டிருக்கிறது' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்துவிட்டுத் தினகரன் திரும்பிய அதே வேளையில், ' கட்சியில் இருந்து அவர் ஒதுங்கியிருக்க வேண்டும்' என அறிவித்தார் நிதி அமைச்சர் ஜெயக்குமார். ' என்னைக் கட்சியை விட்டு நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு மட்டுமே உள்ளது. ஜெயக்குமாருக்கு வானளாவிய அதிகாரம் எதுவும் வழங்கப்படவில்லை' எனப் பதில் கொடுத்தார் தினகரன். இந்நிலையில், இன்று காலை தினகரன் வசிக்கும் அடையாறு வீட்டுக்கு ஆளும்கட்சி எம்.எல்.ஏக்கள் தங்க.தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், செந்தில்பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்ட பலர் அடுத்தடுத்து வருகை தந்தனர். இதுவரையில் 24 எம்.எல்.ஏக்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானதையடுத்து, மாவட்ட எம்.எல்.ஏக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தினகரன் அணியின் தங்க.தமிழ்ச்செல்வன் பேசும்போதும், ' சிலரை அடையாளம் காட்டவே எம்.எல்.ஏக்கள் தினகரனை சந்தித்து வருகின்றனர். ஜெயக்குமார் எந்த அடிப்படையில் அறிக்கை வெளியிடுகிறார் என்று தெரியவில்லை' எனக் கொதித்தார். 

" நேற்றைய கணக்கின்படி தினகரனுக்கு 11 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளதாகத் தெரிவித்தனர். 'பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படத் தீர்மானித்துவிட்டால், அவர் அணியில் உள்ள 12 எம்.எல்.ஏக்களும் நம்மை ஆதரிப்பார்கள்' என முதலமைச்சருக்கு, சக அமைச்சர்கள் எடுத்துக் கூறியுள்ளனர். ' உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்' என சிக்னல் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், இன்று காலை முதல் நடக்கும் சம்பவங்களால் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறார் பழனிசாமி. ' நம்மைப் புறக்கணித்துவிட்டு பன்னீர்செல்வம் போல துரோகம் செய்கின்றவர்களுக்கு, நாம் யார் என்பதைக் காட்ட வேண்டும்' என்பதில் தினகரன் அணியினர் உறுதியாக உள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவைக்கு எதிராக உள்ள எம்.எல்.ஏக்களை அணி திரட்டும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளனர் வெற்றிவேலும் தங்க.தமிழ்ச்செல்வனும். சில நாட்களுக்கு முன்பு ரகசியக் கூட்டம் போட்ட செந்தில்பாலாஜி தரப்பினரும் அட்டவணை சமூகத்து எம்.எல்.ஏக்களும் தினகரன் வளையத்துக்குள் வந்துவிட்டனர். 'நாற்பதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களை தினகரன் அணிக்குக் கொண்டு வந்து வலுவைக் காட்ட வேண்டும்' எனத் திட்டம் போட்டுச் செயல்படுகின்றனர்" என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். 

" தினகரன் பக்கம் எம்.எல்.ஏக்கள் செல்லும் தகவல் கேள்விப்பட்டவுடன், நேற்று இரவே அமைச்சர்கள் பலரும் எச்சரிக்கையுடன் இருந்தனர். தங்கள் மாவட்டத்து எம்.எல்.ஏக்களைத் தீவிரமாகக் கண்காணித்தனர். சிலரைத் தொடர்பு கொண்டபோது எதிர்முனையில் எந்த பதிலும் இல்லை. அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்குத் தேவையானதைக் கொடுத்து அமைதிப்படுத்தும்படி அறிவுறுத்தியது எடப்பாடி பழனிசாமி தரப்பு. அதற்குள் தினகரன் அணியினர் முந்திக் கொண்டனர். இன்று காலை சோளிங்கர் எம்.எல்.ஏ பார்த்திபன், குடியாத்தம் எம்.எல்.ஏ ஜெயந்தி பத்மநாபன், ஆம்பூர் எம்.எல்.ஏ பாலு உள்ளிட்டோர் தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு அளித்தனர். வேலூர் மாவட்டத்தில் இருந்து மூன்று விக்கெட்டுகள் பறிபோனதை, மாவட்ட அமைச்சர் வீரமணியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உடனே இந்த எம்.எல்.ஏக்களைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர் அமைச்சரின் ஆதரவாளர்கள்.

இதற்குப் பதில் அளித்த அதிருப்தி எம்.எல்.ஏ ஒருவர், ' தினகரனை சந்திப்போம் என நினைத்து நான் இங்கு வரவில்லை. சசிகலாவை சந்திக்க தினகரன் மூலம் அப்பாயிண்மென்ட் கேட்டிருந்தோம். சசிகலாவை சந்திக்க முடியாததால் தினகரனை சந்தித்தோம்' எனப் பதில் சொல்ல, ' மன்னார்குடி சொந்தங்களையே சசிகலா சந்திப்பதில்லை. உனக்கு அனுமதி கொடுப்பாரா? என்ன பேரம் பேசினார்கள்?' என அமைச்சரின் ஆதரவாளர்கள் கிடுக்கிப்பிடி போட, ' என்ன பண்ணச் சொல்றீங்க. சட்டமன்றத் தேர்தலில் அம்மா பணம் கொடுத்ததால் ஜெயிக்க முடிஞ்சுது. இந்தமுறை தேர்தல் வந்தால் செலவுக்கு யார் பணம் கொடுப்பாங்க? அமைச்சர்கிட்ட நிறைய பணம் இருக்கு. எங்ககிட்ட என்ன இருக்கு?' என எதிர்க்கேள்வி கேட்டுள்ளனர். இதனால் அதிர்ந்து போன அமைச்சரின் ஆதரவாளர்கள், ' தேர்தலில் உங்களுக்கு சீட் வாங்கிக் கொடுக்க அமைச்சர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்னு தெரிஞ்சும் இப்படித் துரோகம் பண்றீங்களே. இது சரியா?' எனக் கேட்டபோது, எதிர்முனையில் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இதேநிலைதான், மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலவுகிறது. 'நேரம் கிடைக்கும்போதே சம்பாதித்துக் கொள்ள வேண்டும்' என்பதில் எம்.எல்.ஏக்கள் பலர் தெளிவாக உள்ளனர். ஆட்சி நீடிப்பதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. இந்த மனநிலையை தினகரன் ஆட்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்" என்கிறார் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான ஆதரவாளர் ஒருவர். 

இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ ஜெயந்தி பத்மநாபனை தொடர்பு கொண்டோம். " இதைப் பற்றி பேசும் நிலையில் நான் இல்லை" என்றதோடு முடித்துக் கொண்டார்.