Published:Updated:

அங்காடி தெருவின் கதை! :மினி தொடர்! பகுதி 1

அங்காடி தெருவின் கதை! :மினி தொடர்! பகுதி 1
அங்காடி தெருவின் கதை! :மினி தொடர்! பகுதி 1

க்கா, சுடிதார் தைக்கனுமா, ஒன் அவர்ல தைச்சு கொடுக்குறோம். வாங்கக்கா” என்று கையில் துணிப்பையுடன் போகும் இளம் பெண்ணை பார்த்து அழைக்கிறார் ஒருவர். அவர் கையில், தான் வேலைபார்க்கும் டெய்லர் கடையின் விசிட்டிங் கார்டுகள் இருக்கின்றன. அவர் அழைத்த அந்தப் பெண் மறு மொழி சொல்லாமல் கடந்து சென்ற பின்னர், இன்னொரு பெண்ணைப் பார்த்து அதே போன்று ரிபீட் செய்கிறார். தி நகர் ரங்கநாதன் தெருவில் மனித கடலுக்கு நடுவே ஒரு ஸ்டூலை வைத்து, அதற்கு மேல் பாத்திரத்தை வைத்து அதில் முக்கோண வடிவில் சமோசாக்களை அடுக்கி வைத்தவாறே, "ரெண்டு சமோசா பத்து ரூபா" என்று கூவி, கூவி விற்கிறார் இளைஞர் ஒருவர்.

நுகர்வு கலாசாரம்

"ரெண்டு நைட்டி  100 ரூபா, வாங்க மேடம்" என்று கடையின் இரண்டு பக்கமும் நைட்டிகளை விற்பனைக்கு வைத்திருக்கும் ஒருவர்  தெருவில் போகும் மனித கடலில், பெண்களைப் பார்த்து அழைக்கிறார்.

வியாபார குரல்களும், விற்பனைக் குரல்களும் தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் சென்று கொண்டிருப்பவர்களுக்கு கலவையாக காதில் விழுகிறது. காதில் ஹெட் போனை மாட்டிக்கொண்டு, போனில் தென் மாவட்டத்தில் இருக்கும் நண்பர் ஒருவருடன் பேசுகிறார் இளைஞர் ஒருவர், "மாப்ள நான் இப்போ தி.நகர் ரங்கநாதன் தெருவுல இருக்கேன். நீ ஒரு ஜீன்ஸ் வேண்டும்னு கேட்டியே. என்ன கலர் வேணும்னு சொன்ன" என்று கேட்கிறார். பேசியவர் முகத்தில் தி.நகரில் இருந்து பேசுகிறோம் என்பதில் ஏகப்பட்ட பெருமிதம். அவரது வார்த்தைகளில் உற்சாகம் பெருக்கெடுக்கிறது. தமிழகத்தில் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களையும் ஈர்க்கும் தி நகர் நுகர்வு கலாசாரம் இப்போது மாபெரும் வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது.

பிழைப்புக்காக...

தியாகராய நகரின் பிரமாண்ட கட்டடங்களின் முதல் செங்கல் ஏதோ ஒரு செங்கல் சூளையில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம். அதேபோலத்தான் அங்கிருக்கும் பிரமாண்ட கட்டங்களின் உரிமையாளர்கள் தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் பிறந்து பிழைப்புக்காகச் சென்னை நகரை, தி.நகரை நோக்கி வந்தவர்களாகத்தான் இருக்கின்றனர்.

நாம் சந்தித்த சமோசா விற்பவர் ஆகட்டும், கோயில் செயலாளர் ஆகட்டும், சாக்ஸ் விற்பவராகட்டும் எல்லோரும் சொல்லும் ஒரே வார்த்தை 'பிழைப்பு'-க்காத்தான் இங்கு வந்தேன் என்பதுதான். பிழைப்புக்காகத் தி.நகர் வந்தவர்களை இங்கிருக்கும் அங்காடி தெருக்கள் ஏமாற்றவில்லை.

ரங்கநாதன் தெருவில் சமோசா விற்கும் சரவணன், அரியலூரைச் சேர்ந்தவர். சொந்த ஊரில் நிலம் இருக்கிறது. விவசாயம் செய்கிறார். இப்போது விவசாயத்தை அவரது குடும்பத்தினர் கவனித்துக் கொள்கின்றனர். "நான் பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இங்க வந்தேன். பல்லவாரத்துல சமோசா செஞ்சு இங்க எடுத்துட்டு வந்து விப்போம். இப்ப வெயிலா இருக்கிறதால சாயங்காலம் 5 மணிக்கு வருவோம். ராத்திரி 10 மணி வரைக்கு விப்போம். ஒரு நாளைக்கு 700 ரூபா கிடைக்கும். செவ்வாய் கிழமை அவ்வளவா யேவாரம் இருக்காது. அன்னைக்கு ரெஸ்ட் எடுத்துப்போம். 15 நாளைக்கு ஒரு தடவை பல்லவன் எக்ஸ்பிரஸ்ல அரியலூர் போயிட்டு வந்துடுவேன். குடும்பம் எல்லாம் அங்கதான் இருக்கு. பரவாயில்ல. பொழப்பு ஓடுது" என்கிறார் நம்பிக்கையோடு.

தி.நகரின் பழைமையான அடையாளங்களில் ஒன்று சிவா விஷ்ணு கோயில். அந்த கோயிலில் செயலாளராக இருக்கிறார் வேணுகோபால். அவரது தந்தை காலத்தில் பிழைப்புக்காக தி.நகர் வந்திருக்கிறார்கள். "எங்க அப்பா, ஈயபாத்திரம் செய்றவர். 50 வருஷத்துக்கு முன்னாடி அப்பா பிழைப்புத் தேடி இங்க வந்தார். நான் ராமகிருஷ்ணா மிஷின் ஸ்கூல்லதான் படிச்சேன். அப்போ ரெங்கதான் தெருவுல மூணு கடைதான் இருந்துச்சு. அதுல ஒரு கடை கும்பகோணம் பாத்திரக்கடை. இன்னொரு கடை லிப்கோ புஸ்தக கடை. அப்புறம் இன்னொரு கடை இருந்துச்சு. அப்போ தி.நகர்ல பஸ்ஸ்டாண்ட் எல்லாம் இல்ல. அந்த இடத்தில செடி, கொடிங்க வளர்ந்து புதர்மண்டிக்கிடக்கும். அந்த இடத்த மக்கள் திறந்தவெளி கழிப்பிடமா உபயோகிச்சாங்க. இந்தபக்கம் உஸ்மான் ரோட்டில ஒரு எருக்கம் புதர் இருந்தது. அதுவும், திறந்தவெளி கழிப்பிடமாத்தான் இருந்துச்சு. இன்னைக்கு தி.நகர் வளர்ச்சியை பார்க்கும்போது எனக்கே ஆச்சர்யமாத்தான் இருக்கு" என்கிறார் வியப்புடன்.

பிரமாண்டத்துக்குப் பின்னால்.,.

இன்றைக்கு புகழ் பெற்ற நிறுவனமாக விளங்கும் நல்லி சில்க்ஸ் உரிமையாளர் நல்லி குப்புசாமியின் தந்தை காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். பிழைப்புக்காகத்தான் அவர்கள் குடும்பம் சென்னை வந்தது. இன்றைக்கு நல்லி என்ற பிராண்ட் நிலைத்திருக்கிறது. பெண்கள் உள்ளாடைகளுக்கு புகழ் பெற்று விளங்கும் நாயுடு ஹால் உரிமையாளர் நாயுடு, குடியாத்தத்தைச் சேர்ந்தவர், சிறுவயதில் வீட்டில் கோபித்துக் கொண்டு ரயில் ஏறி வந்தவரை, டெய்லராக இருந்த பெரியவர் அழைத்து வந்து டெய்லரிங் பயிற்சி கொடுக்கிறார். அதில் இருந்து படிப்படியாக வளர்ச்சியடைந்த நாயுடு இன்று ஊரெல்லாம் பேசும் நாயுடு ஹால் என்ற பிரமாண்ட பிராண்டை நிலை நிறுத்தி விட்டுச் சென்றிருக்கிறார். இப்படி இன்றைய பிரமாண்டத்துக்கும் பின்னால், பல ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு தொடக்கப்புள்ளி இருந்திருக்கிறது. தி.நகரின் தொடக்கப்புள்ளி எது? அடுத்த அத்தியாயத்தில் இருந்து தொடர்ச்சியாகப் பார்க்கலாம்...

(தொடரும்)