Published:Updated:

‘இலக்கு எம்.எல்.ஏக்கள்தான்; தினகரன் அல்ல!’ - எடப்பாடி பழனிசாமியின் மெளன யுத்தம் #VikatanExclusive

‘இலக்கு எம்.எல்.ஏக்கள்தான்; தினகரன் அல்ல!’ - எடப்பாடி பழனிசாமியின் மெளன யுத்தம் #VikatanExclusive
‘இலக்கு எம்.எல்.ஏக்கள்தான்; தினகரன் அல்ல!’ - எடப்பாடி பழனிசாமியின் மெளன யுத்தம் #VikatanExclusive

‘இலக்கு எம்.எல்.ஏக்கள்தான்; தினகரன் அல்ல!’ - எடப்பாடி பழனிசாமியின் மெளன யுத்தம் #VikatanExclusive

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியனின் மறைவுக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டு, கட்சிப் பணியில் ஈடுபட்டுள்ளதை உறுதி செய்திருக்கிறார் அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி.தினகரன். "இன்று காலை வரையில் 29 எம்.எல்.ஏக்கள் தினகரனை சந்தித்துள்ளனர். அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களுக்கும் இருந்த மோதல்தான் வேறு வழிகளில் வெளிப்படுகிறது. இதைப் பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவலைப்படவில்லை' என்கின்றனர் கொங்கு மண்டல எம்.எல்.ஏக்கள். 

'அ.தி.மு.கவில் எத்தனை அணிகள் உள்ளன?' என்ற கேள்விக்கு விடை தெரியாத அளவுக்கு பல துண்டுகளாக சிதறியுள்ளனர் நிர்வாகிகளும் எம்.எல்.ஏக்களும். சட்டசபைக் கூட்டத் தொடர் வரும் 14 ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதால், ஒவ்வொரு மாவட்ட எம்.எல்.ஏக்களையும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. ஆட்சி நீடிப்பதற்குத் தேவையான எம்.எல்.ஏக்களை பன்னீர்செல்வம் கொடுத்தாலும் தினகரன் கை ஓங்கியிருப்பதை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். இதையடுத்து, இன்று மதியம் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்த இருக்கிறார் பன்னீர்செல்வம்." ஆட்சி நிர்வாகத்துக்குள் தினகரன் தலையீடு இருப்பதைத் தொடக்கம் முதலே பேசிவந்தோம். எங்கள் பேச்சை அவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இப்போது தினகரனை சந்திக்கச் செல்லும் எம்.எல்.ஏக்களைப் பார்த்தால், நாங்கள் சொன்னதுதான் உண்மை என்பது உறுதியாகியிருக்கிறது. தொடக்கம் முதலே மௌனமாக இருந்து வரும் எடப்பாடி பழனிசாமி, தற்போது பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறார்" என விவரித்த அ.தி.மு.க அம்மா அணியின் நிர்வாகி ஒருவர், 

"எடப்பாடி பழனிசாமியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியைத் தொடங்கி இருக்கிறார் தினகரன். கூவத்தூரில் முகாமில் பேசப்பட்ட விஷயங்களில் பலவற்றை நிறைவேற்றவில்லை. தவிர, எம்.எம்.ஏக்களில் பலரும் அமைச்சர் கனவில் மிதந்து கொண்டிருக்கிறார்கள். வேறு சிலரோ, எவ்வளவு கிடைத்தாலும் லாபம் என்ற எண்ணத்தில் தினகரன் பக்கம் சாய்ந்துவிட்டனர். நேற்று தினகரனை சந்திக்க வந்த எம்.எல்.ஏக்களில் சிலர், 'பன்னீர்செல்வம் போலவே, எடப்பாடி பழனிசாமியும் உங்களுக்கு எதிராக செயல்படுகிறார். 'சிறையில் இருந்து நீங்கள் வந்துவிடக் கூடாது' என்பதில் கொங்கு மண்டல அமைச்சர்கள் சிலர் உறுதியாக இருந்தனர். இது தமிழக அரசா? கொங்கு மண்டல அரசா? என்பதைப் போல, தனி லாபியை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். ஜெயக்குமார், வேலுமணி, வீரமணி, தங்கமணி உள்பட சிலரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியாக வேண்டும். அதற்காக நீங்கள் என்ன சொன்னாலும் கேட்பதற்குத் தயாராக இருக்கிறோம்' எனக் கூறியுள்ளனர். இதற்குப் பதில் கொடுத்த தினகரனோ, 'எடப்பாடி பழனிசாமி நமக்கு எதிராகப் போக மாட்டார் என்றுதான் உறுதியாக நம்பினோம். பொறுமையாகவே அனைத்தையும் கவனிப்போம். நம்முடைய பலத்தை அவர் உணர்வார்' என விளக்கியிருக்கிறார். ஆளும்கட்சி தொலைக்காட்சியிலும் முதலமைச்சர் நடத்தும் ஆய்வுப் பணிகள் குறித்த செய்திகளும் தினகரன் குறித்த செய்திகளும் வழக்கம்போல வரத் தொடங்கியுள்ளன. பன்னீர்செல்வத்தை முழுவதுமாக ஒதுக்கி வைத்துவிட்டு, எடப்பாடி பழனிசாமியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வேலைகளை தீவிரப்படுத்தியிருக்கிறார் தினகரன்" என்றார் விரிவாக. 

"ஆனால், இந்த விவகாரத்தை வேறு மாதிரி கையாண்டு வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி" என விவரித்த கொங்கு மண்டல எம்.எல்.ஏ ஒருவர், " இதுவரையில் பரவலாக எம்.பிக்கள் யாரும் தினகரனை நேரில் சென்று சந்திக்க வரவில்லை. எம்.எல்.ஏக்கள் மட்டும்தான் அவரை நோக்கிச் செல்கின்றனர். இதற்கு முழுக் காரணம், அமைச்சர்கள் மீதுள்ள அதிருப்திதான். அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் இடையில் ஈகோ உருவாகிவிட்டது. இதில் சமரசம் ஏற்படும் என உறுதியாகக் கூற முடியாது. பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் அமைச்சர் கனவில் இருக்கிறார்கள். அதனால்தான் எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பன்னீர்செல்வம்போல முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுச் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை இறக்கிவிட்டால், மாற்று அரசு அமைவதற்கு வாய்ப்பில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது, தினகரன் பக்கம் உள்ள அனைத்து எம்.எல்.ஏக்களும் ஆட்சிக்கு எதிராகக் கையெழுத்து போட வேண்டும். அப்படி ஒரு சூழல் வரும்போது, ஸ்டாலின் ஆதரவு இருந்தால்தான் ஆட்சியைக் கவிழ்க்க முடியும். இவர்கள் அப்படி ஒரு காரியத்தில் இறங்கினால், 'ஆட்சியைக் கவிழ்த்த துரோகி தினகரன்' என மக்கள் மத்தியில் பிரசாரம் செய்வோம். இவர்களால், இன்னும் இரண்டரை மாதங்களுக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியாது. 

எனவே, தினகரனை எம்.எல்.ஏக்கள் சந்திப்பது குறித்து நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ‘தினகரனை நாம் நேரடியாகக் கையாள வேண்டியதில்லை. எம்.எல்.ஏக்களை சரி செய்தால் போதும்' என்ற மனநிலையில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆட்சியில் இருக்கும் இரண்டு அமைச்சர்கள் தினகரனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அவர்கள் யாரும் அவரைச் சென்று சந்திக்கவில்லையே? நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துவிட்டால், ஸ்டாலினா? எடப்பாடியா? என்ற அரசியல் உருவாகும் எனவும் கணக்குப் போடுகிறார். நேற்று இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, 'நாம் எதற்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. நம்மை நோக்கி எதுவும் வராது. நம்மிடம் பந்து வரும்போது அதை எப்படிக் கையாள வேண்டும் என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன். பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளை எல்லாம் நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. கற்பனைக்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. நம்மைப் பற்றி பேசுகின்றவர்கள் பேசிப் பேசியே ஓய்ந்து போவார்கள். 28 எம்.எல்.ஏக்களையும் ராஜினாமா செய்ய வைத்து, என்னைப் பதவியில் இருந்து யாரும் நீக்கப் போவதில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் யாரும் கையெழுத்துப் போடப் போவதில்லை. அதுவரையில் தினகரனை எத்தனை பேர் சந்தித்தால் நமக்கென்ன?' எனப் பேசினார். அதனால்தான், எந்தக் கேள்விகளுக்கும் நேரடி விளக்கம் அளிக்காமல், அமைச்சர் ஜெயக்குமாரை பேச வைக்கிறார்" என்றார் விரிவாக. 

அடுத்த கட்டுரைக்கு