ஸ்பெஷல் -1
Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்
##~##

ப்புக் கடலில் மெள்ள மின்னட்டும் ஒரு வெளிச்சப் புள்ளி. தமிழக-இலங்கை மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை ஒரு சின்ன நம்பிக்கையையாவது விதைக்கட்டும். இரு தரப்பிலும் அறுபடும் வலைகள், வதைபடும் மீனவர்கள் என்ற துயர நிலையை மாற்றி, இரு கரை மீனவர்களை கடல் தாயின் ஒரு மடிப் பிள்ளைகளாக மாற்றும் முயற்சியை இந்தப் பேச்சுவார்த்தை தொடங்கட்டும். இன்னும் இன்னும் அடுத்தடுத்த ஆலோசனைகள், இரு தரப்பையும் நல்வழிப்படுத்தட்டும்.

கால் நூற்றாண்டு காலமாக தமிழ்நாட்டு மீனவர்களின் அவல வாழ்வினை நாம் அறிவோம். இலங்கை ராணுவத்தின் துப்பாக்கி ரவைகள் பலிகொண்ட மீனவ உயிர்களின் எண்ணிக்கை சுமார் 500-க்கும் மேல். கை உடைந்து, கால் உடைந்து முடமாக்கப்பட்டோர் சில நூறு பேர். மீன்கள் பறிக்கப்பட்டு, வலைகள் அறுக்கப்பட்டு, படகுகள் சிதைக்கப்பட்டு தொழில் செய்ய முடியாமல் முடக்கப்படுவோர் கதைகள் ஆயிரம். இப்போது புதிதாக, மீனவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைப்பதுடன் பறிமுதல் செய்த படகுகளை 'நாட்டுடைமையாக்குவோம்’ எனக் கொக்கரிக்கிறார்கள். 'புலிப் பூச்சாண்டி’க் காட்டி இத்தனையையும் நிகழ்த்திய இலங்கை அரசு, அதை இப்போதும் தொடர்வது பயங்கரம்.

எனினும் இன்னொரு பக்கம், இலங்கைத் தமிழ் மீனவர்களின் குரலை நாம் சற்றே காதுகொடுத்துக் கேட்க வேண்டும். கடந்த 30 ஆண்டு காலப் போரின் விளைவாக அவர்களிடம் நவீன மீன்பிடி உபகரணங்கள் ஏதும் இல்லை. அவர்களிடம் இருப்பவை எல்லாம் பாரம்பரியப் படகுகளும் வலைகளுமே. ஆனால், தமிழகத்தின் விசைப்படகு முதலாளிகள் பகாசுர வலைகளுடன் கடலுக்குச் சென்று மொத்தக் கடல் வளத்தையும் கொத்துக்கொத்தாக அரித்து வந்துவிடுவதில்தான் பிரச்னைகள் வெடிக்கின்றன. இதை நிகழ்த்துவதும், லாபம் அடைவதும் சில நூறு விசைப்படகு முதலாளிகள்கள்தான். எனினும், இன்னலுக்கு உள்ளாவது இரு கரைகளின் பெரும்பான்மை மீனவர்களே. இந்த யதார்த்தச் சூழலை உள்வாங்கிக் கொள்வதுடன், மீன்பிடியை முறைப்படுத்தவும் வேண்டும்.  

'பேச்சுவார்த்தை’ என்பதே கண்துடைப்பாக மாறிவிட்ட காலம் இது. இந்த மீனவர் பேச்சுவார்த்தை முடிவும் இன்னுமொரு கண்துடைப்பாக, நாடாளுமன்றத் தேர்தலுக்கான தந்திரமான நாடகமாக இருக்கக் கூடாது. அப்படியின்றி, ஈழப் போரை வைத்து 'போர் நிறுத்த அரசியல்’ செய்ததுபோல இதையும் இன்னொரு தேர்தல் நாடகமாக்கினால், மீனவர்கள் உங்களை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்... மன்னிக்க மாட்டார்கள். ஒருநாளும் மறக்கவே முடியாதபடி நிச்சயம் தண்டிப்பார்கள்!