ஸ்பெஷல் -1
Published:Updated:

“காங்கிரஸுக்கு எதிரி காங்கிரஸில்தான் இருக்கிறார்கள்!”

சுளீர் மணிசங்கர் அய்யர்ம.கா.செந்தில்குமார், படங்கள்: தி.விஜய், ஓவியம்: பாரதிராஜா

##~##

 'நரேந்திர மோடிக்கு டீக்கடை அமைக்க உதவுவோம்!’ - மணிசங்கர் அய்யர் இப்படிச் சொல்லியதாகக் கிளம்பிய பரபரப்பு, இன்னும் அடங்கவில்லை. அஸ்ஸாம் டீ குடித்தபடி சகஜமாகப் பேசுகிறார் மனிதர். எதற்கும்... எதற்குமே அலட்டிக்கொள்ளவே இல்லை மணிசங்கர். ஆனால், அவரும் பதறும் ஒரு விஷயம் இருக்கிறது. அது... இறுதியில்!

'' 'மோடி இந்தியாவின் பிரதமராக வர முடியாது. ஒருவேளை டீ விற்க விரும்பினால், நாங்கள் அவருக்கு ஓர் இடம் பிடித்து, டீக்கடை வைக்க ஏற்பாடு செய்து தருகிறோம்!’ - ஒரு பிரதமர் வேட்பாளரைப் பற்றி இப்படிப் பேசலாமா?''

''ஒண்ணு புரிஞ்சுக்கோங்கோ... நரேந்திர மோடி பத்தி நான் அப்படிச் சொல்லவே இல்லை. ஒரு பிரதமரா இருந்தா, அவருக்கு நம்ம நாட்டு வரலாறு தெரியணும்; பொருளாதாரம், விஞ்ஞான அறிவு இருக்கணும்; சட்டம் என்ன சொல்லுதுன்னு தெரிஞ்சிருக்கணும். ஆனா, மோடியோ அலெக்ஸாண்டர், பாடலிபுத்ராவுக்கு வந்தார்னு சொல்றார். தட்சசீலா எங்க இருக்கு, நாளந்தா எங்க இருக்குனுகூட அவருக்குத் தெரியலை. தன் கட்சியை உருவாக்கியவர் யார்னே அவருக்குத் தெரியலை. ஷாமா பிரசாத் முகர்ஜியை மறந்துட்டு 'கிருஷ்ணா ஷாம்’ங்கிறார். தி.மு.க-வுல பெரியார், அண்ணாதுரை யார்னு தெரியாம இருந்தா, மடையன்னு நினைக்க மாட்டாங்களா? அப்படிப்பட்டவரை ஒரு கட்சிக்குத் தலைவராப் போடுவாங்களா? அதைத்தான் நான் சுட்டிக்காட்டினேன்.

'வேறு எந்தத் திறமையும் இல்லாமல் இருந்தால் அவரால் பிரதமராக முடியாது. ஆனால், டீ விற்க விரும்பினால் நாமே ஒரு ஸ்டால் கொடுக்கிறோம்’னு ஜாலியாச் சொன்னேன். முன்னபின்ன நான் சொன்ன எல்லாத்தையும் எடுத்துட்டு, 'டீக்கடை வெச்சுத் தர்றேன்’னு சொன்னதா மட்டும் பரப்புனா, அது சரியா?

இத்தனைக்கும் மோடிதான் 'ராணி-ராஜா’னு அசிங்கமான தனி மனிதத் தாக்குதலில் ஈடுபடுறார். அதுக்கு முதல்ல அவரை நீங்க மன்னிப்புக் கேட்கச் சொல்லுங்கோ!''

“காங்கிரஸுக்கு எதிரி காங்கிரஸில்தான் இருக்கிறார்கள்!”

'' 'நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வென்றால் ராகுல்தான் பிரதமர்’ என ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சொல்லிவரும் நிலையில், ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் என்ன தயக்கம்?''

'' 'இதுதான் தேர்தல் முடிவு’னு இப்பவே யாராவது கணிக்க முடியுமா? அப்புறம் எப்படி 'பிரதமர் வேட்பாளர்’னு ஒருத்தரை அறிவிப்பேள்!? தேர்தலைச் சந்திக்கும் குழுவுக்கு ராகுல்தான் தலைவர்னு தெளிவாச் சொல்லியாச்சு. ஒருவேளை தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமைந்தால், அனைவருடனும் கலந்து பேசி யார் பிரதமர்னு சொல்லுவோம். ஒருவேளை தோத்துட்டா, யார் எதிர்க் கட்சித் தலைவர்னு சொல்லுவோம். அவ்வளவுதான்!''

'' 'தமிழகத்தில் காங்கிரஸ், ஆட்சியைப் பறிகொடுத்து 47 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் 47 ஆண்டுகளானாலும் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது’ எனப் பேசியுள்ளீர்கள். இந்த அளவுக்குத் தமிழகக் காங்கிரஸின் பின்னடைவுக்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?''

''நாம ஆட்சியில் இல்லாம இருக்கிற நேரத்தில் ஒற்றுமையை உருவாக்கிக் கடுமையாக அரசியல் வேலை செய்யாமல், கோஷ்டி அரசியலிலேயே சுத்திண்டு இருந்தா இன்னும் 47 ஆண்டுகளானாலும், நம்மால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாதுனு சொல்லியிருக்கேன். ஆனா, நம்மால் என்னைக்குமே வர முடியாதுனு நான் சொல்லலையே. முதல்ல கட்சிக்குள்ளேயே ஓர் இணைப்பு வேணும். அது கோஷ்டி இணைப்பு. முதல்ல எல்லோரையும் ஒண்ணாச் சேர்த்து அவர்களுக்கு நியாயமானப் பதவிகளை அளித்து, சத்தியமூர்த்தி பவன்ல ஒரு புரட்சி நடக்கணும். அந்தப் புரட்சியின் அடிப்படையில் சென்னையிலேயே உட்கார்ந்து அரசியல் செய்யாமல், கட்சியின் கீழ்மட்டம் வரை போகணும். எப்படி மத்த ரெண்டு திராவிடக் கட்சிகளும் தன் ஆட்களை கிராமம் வரை நியமித்து வேலை வாங்குறாங்களோ, அப்படி அரசியல் செய்தால் ஏன் காங்கிரஸ் திரும்பவும் வர முடியாது? 'இங்க நாம வர வாய்ப்பே இல்லை. டெல்லியில வந்தா, அதைவெச்சு ஆதாயம் பார்த்துரலாம்’னு நினைச்சுண்டு இங்க உட்கார்ந்து கோஷ்டி அரசியல் பண்ணிண்டு இருந்தா, இதே சூழ்நிலையில்தான் மாட்டிண்டு இருப்போம். யார் கோஷ்டி அரசியல் செய்கிறாரோ, அவருக்கு இந்தக் கட்சியில் இடம் கிடையாதுனு டெல்லித் தலைமை முடிவு செய்யணும். அப்படிச் செய்தால், எப்போதும் நாங்கள் எதிர்க் கட்சியாக இருக்க வேண்டியது இல்லை!''

“காங்கிரஸுக்கு எதிரி காங்கிரஸில்தான் இருக்கிறார்கள்!”

''வாசன், சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஞானதேசிகன், தங்கபாலு... போன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கு?''

''யார் பேரையும் குறிப்பிட்டு நான் எதையும் சொல்ல விரும்பலை. ஆனா, நீங்க கிட்டத்தட்ட எல்லாத் தலைவர்களின் பேரையும் குறிப்பிட்டிருக்கீங்க. இதுல என் பேரைச் சேர்க்காமல் இருப்பதுதான், எனக்குப் பெருமை. நான் எந்தக் கோஷ்டியும் கிடையாது. எனக்குனு தனி கோஷ்டியும் கிடையாது. மயிலாடுதுறையில் காங்கிரஸையே உருவாக்கப் பார்க்கிறோம். ஒருசிலர் என்னோட கலந்துக்கிறதுக்கு மனசு இல்லைன்னாலும்கூட, என்னை எதிர்த்தாலும் அவர்களை நான் எதிர்க்கிறது இல்லை. நான் ஒரு தமிழகத் தலைவரே கிடையாது. என் வேலையை என் தொகுதியில் பார்த்துண்டு வர்றேன். அந்தத் தொகுதியை எனக்கு அளித்தது ராஜீவ். அதனால் அவர் நினைவிலேயே தொடர்ந்து இந்த 23 ஆண்டுகளாக வேற எந்தத் தொகுதிக்கும் போகாமல், ஜெயிக்கிறேனோ... தோத்துப்போறேனோ... என் அரசியலை அந்த ஒரே தொகுதியில் பார்த்துண்டு இருக்கேன். 1998-ல் சுயேட்சையா அங்க நின்னேன். எனக்குக் கிட்டத்தட்ட 75 ஆயிரம் ஓட்டுகள் கிடைச்சது. அதைப் பார்த்து ரெண்டு திராவிடக் கட்சிகளும் அசந்துபோயிட்டாங்க.

இன்னொரு விஷயம் நீங்க பார்க்கணும், நான் பிறந்தது, லாகூர்ல. வளர்ந்தது, வடஇந்தியாவுல. பணியாற்றினது, வெளிநாட்டுல. பிறகு ராஜீவ் வாய்ப்பு தந்ததால், காவிரி மண்ணுக்கு வந்தேன். வந்த ஆரம்பத்துல சிரிச்சுண்டு சொல்லுவேன்... 'நீங்க பேசுறது செந்தமிழ். நான் பேசுறது என் தமிழ்’னு சிரிப்பேன். அந்தளவுக்கு என் தமிழ் கேலியா இருக்கும். இன்னைய தேதிக்கு ஆனந்தவிகடன் போன்ற ஒரு பத்திரிகைக்கு தமிழ்ல பேட்டி அளிச்சிட்டிருக்கேன். மக்களோடு மக்களா மாறிவர முயற்சி செய்திருக்கேன்னு எனக்குப் பெருமையா இருக்கு.

“காங்கிரஸுக்கு எதிரி காங்கிரஸில்தான் இருக்கிறார்கள்!”

என் போன்ற ஒரு வெளியூர்க்காரரால் இங்க வந்து தமிழர்களோட கலந்துண்டு அவர்களோட அன்பைப் பெற முடியும்போது, காங்கிரஸ் கட்சியால் தாராளமா இதைச் செய்ய முடியும். காங்கிரஸுக்கு எதிரி காங்கிரஸுக்குள்ளதான் இருக்காங்க.

இப்ப வர்றப்ப ஒரு தேவாலயத்தை நான் கிராஸ் பண்ணினேன். அதுல, 'ஐ ஆஸ்க் யூ டு லவ் ஈச் அதர். ஐ லவ் யூ’னு எழுதியிருந்துச்சு. 'தயவுசெய்து இந்த விஷயத்தை தமிழகக் காங்கிரஸ்காரர்கள்ட்ட போய்ச் சொல்லுங்கோ’னு உங்கக்கிட்ட இதைச் சொல்லணும்னு நினைச்சேன்; சொல்லிட்டேன். நீங்களும் சொல்லிடுங்கோ!''

''தொகுதிப் பங்கீட்டில் மயிலாடுதுறை காங்கிரஸுக்கு இல்லைனு சொல்லிட்டா, என்ன சார் பண்ணுவீங்க?''

''ஏன் இப்படித் திடீர்னு அபசகுனமாப் பேசுறீங்க? இதுக்குப் பதில் சொல்ல விரும்பலை. இப்படி வரக் கூடாதுங்கிறதுதான் என் ஆர்வமான ஆசை. லோக்கல்ல எந்தளவுக்கு மக்களுக்கு என்னோட ஓர் உறவு இருக்கோ, அந்தளவுக்கு வேற எந்தக் கட்சியிலும் எந்தத் தலைவருக்கும் கிடையாது!''