Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
தலையங்கம்

'பிளாஸ்டிக் பிடியில் இருந்து சென்னையை மீட்க ஹெலிகாப்டரில் பறந்து முதலமைச்சர் ஆய்வு’ என்ற செய்தி, மலரும் நினைவுகளை ஏற்படுத்தியது. சென்ற முறை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடுகளைக் கருதி, அதைத் தடை செய்ய முயற்சிகள் தொடங்கினார். ஆனால், முயற்சி அப்போது முழுமை பெறவில்லை!

அது கடற்கரையோ, மலைப் பகுதியோ... ஈரமும் எழிலும் சேர்ந்து கொஞ்ச வேண்டிய பகுதிகள்கூட மழை நீரை உறிஞ்ச முடியாமல் வறண்டு வாடுவதைக் காண்கிறோம். மீதமான உணவோடு வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளை விழுங்கும் கால்நடைகள் உயிருக்குத் துடிக்கும் பரிதாபமும் நிகழ்கிறது. 'குப்பையை எரிக்கிறேன்’ என்று பிளாஸ்டிக் பொருட்களையும் சேர்த்து எரிக்கும் சிலரால், டைஆக்ஸின் எனும் விஷ வாயு பொங்கி வந்து கர்ப்பிணிப் பெண்களின் கருவில் இருக்கும் குழந்தைகளைக்கூட ஊனமாக்கும் அபாயம் உள்ளது.  

நீர்நிலைகளும் கழிவுநீர்க் கால்வாய்களும் மக்காத பொருட்களால் அடைபட்டு,  தரைப் பகுதித் தண்ணீரே உறிஞ்ச இயலாதபடி திரையிட்டு மூடப்படுவது இன்றைய தலைமுறையோடு வருங்காலத்து சந்ததிகளையும் வாட்டி எடுக்கக் கூடிய அழிவு!

குறிப்பிட்ட 'மைக்ரான்' தடிமனுக்குக் குறைவான, மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான சட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதை அமல்படுத்துவதில் சுற்றுச்சூழல் துறையின் திணறல் ஒருபுறம் என்றால், ஒத்துழைப்பு தர வேண்டிய மக்களிடமும் அக்கறை மிகக் குறைவுதான்!

சிகரெட் பெட்டி மீது அதன் தீமைகளை அச்சிட்டு எச்சரிப்பதுபோல, பிளாஸ்டிக் பொருட்கள் மீதும் விழிப்பு உணர்வு வாசகம் அவசியம். பிளாஸ்டிக் கழிவைக் கொண்டு சாலை அமைக்கும் வழிமுறையை மதுரை பேராசிரியர் ஒருவர் சில காலம் முன்பு அறிமுகப்படுத்தினார். அதையும் அரசாங்கம் தீவிரமாகத் தத்து எடுக்கலாம். இவற்றோடு சேர்த்து, 'மழை நீர் சேகரிப்பு'போல பிளாஸ்டிக் எதிர்ப்புத் திட்டத்தையும் முதல்வர் கட்டாயப்படுத்தினால், இதற்கு ஆதரவு கூடுமே!