Published:Updated:

விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு..! மத்திய அமைச்சர் என்ன சொல்கிறார்?

விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு..! மத்திய அமைச்சர் என்ன சொல்கிறார்?
விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு..! மத்திய அமைச்சர் என்ன சொல்கிறார்?

றட்சி காரணமாகக் கடந்த 2016 ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 1,600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துவிட்டதாகத் தேசியக் குற்றப்பிரிவு ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது. 2011 - 2015 ஆம் ஆண்டுகளில் மட்டும் 6,076 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த ஆவணம் மேலும் குறிப்பிடுகிறது. இந்த உயிரிழப்பைத் தடுத்து நிறுத்தக்கோரி விவசாயிகள் நாடு முழுவதும் போராடி வருகிறார்கள். அதில், ஒரு பகுதியாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் போராடிய விவசாயிகள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அந்தத் துப்பாக்கிச் சூட்டில் 5 விவசாயிகள் பலியானதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு பொறுப்பேற்க வேண்டிய மத்திய அமைச்சர் பொறுப்பில்லாமல் பதில் சொல்லியிருப்பது விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விவசாயப் பொருளுக்கு உரிய விலை நிர்ணயம், கடன் தள்ளுபடி உள்ளிட்டக் கோரிக்கைளை வலியுறுத்திக் கடந்த 2 ஆம் தேதி முதல் மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் தொடர் போராட்டத்தை ஒடுக்கநினைத்த அந்த மாநில அரசு, வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு விவசாயிகளைக் கொன்று குவித்துள்ளது.

கடந்த 6 ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் உள்ள மான்ட்சர் மாவட்டத்தில், விவசாயிகள் பேரணியைத் தொடங்கியுள்ளனர். அப்போது, ஆளும் பி.ஜே.பி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக வந்த விவசாயிகளைப் போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். போலீஸாரின் தடுப்பை மீறிச் சென்றவர்களைக் காட்டுமிராண்டித்தனமாகச் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்ததாக அரசு கணக்கு காட்டுகிறது.ஆனால், பேரணியை நடத்திய ராஷ்டிரிய மஸ்தூர் சங்கத்தைச் சேர்ந்த சிவக்குமார் ஷர்மா, "இந்தத் தூப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.

''பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மறுவாழ்வுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், அவர்களின் போராட்டத்தை எப்படி ஒடுக்கலாம் என்கிற திட்டத்தைத் தீட்டுவதிலேயே மத்திய, மாநில அரசுகள் இருக்கின்றன'' எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பொதுவாகப் பிரதமர் மோடி, எந்தப் போராட்டத்துக்கும் செவிசாய்ப்பதில்லை."தலைநகரில் வந்து போராடிய தமிழக விவசாயிகளைக் கண்டுகொள்ளாத பிரதமரா, அந்த மாநிலத்தில் நடந்த விவசாயக் கொலைக்குப் பொறுப்பேற்கப் போகிறார்'' என்று அவர்கள் மேலும் கொதிக்கின்றனர். ''பிரதமர்தான் அப்படி என்றால், மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் செய்தது அதைவிடக் கொடுமையானது'' என்கின்றனர் அவர்கள்.

மத்திய அமைச்சர் செய்தது என்ன?

பீகார் மாநிலம் மொதாரி நகர்ப் பகுதியில், யோகா குரு பாபா ராம் தேவ் சார்பில் மூன்று நாள்கள் யோகா நிகழ்வு நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராதா மோகன் சிங், மிகவும் அமைதியாக யோகாசனங்களைச் செய்தார். அவர், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த நேரத்தில் மத்தியப் பிரதேச விவசாயிகள்மீது துப்பாக்கிச் சூடு நடந்துமுடிந்து.. அந்த மாநிலமே வன்முறையில் முழ்கியிருந்தது. அப்போது, யோகா நிகழ்வுக்கு வந்த செய்தியாளர்கள், ''விவசாயிகள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம்'' குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "யோகா செய்யுங்கள்" என்றார்.

பின்னர் சுதாரித்துக்கொண்ட அவர், ''விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. மத்திய அரசு விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களைச் செய்துவருகிறது. அப்படியான நிலையில் எதிர்க் கட்சியினர் தேவையில்லாமல் மத்திய அரசு மீது பழியைச் சுமத்திவருகின்றனர். அதனைச் சாதாரண மக்கள் பொருட்படுத்தமாட்டார்கள். 'விவசாயிகளுக்காகப் போராடுகிறோம்' என்று போலியாகக் கூறிக்கொள்பவர்களால்தான், விவசாயிகளுக்கு இந்த நிலை ஏற்படக் காரணம் என்பதை அவர்கள் உணரவேண்டும்'' என்றார்.

''விவசாயிகள் துப்பாக்கிச் சூடு குறித்து கேட்டால், 'யோகா செய்யுங்கள்' என்று சொல்கிறாரே.. இதுதான் மத்திய அமைச்சருக்கான

ஆக்கபூர்வ நடவடிக்கையா'' என்று கேள்வி எழுப்புகிறார் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அரிச்சலூர் செல்வம். "மத்திய அரசுக்கு விவசாயிகள் மீது எந்த அக்கறையும் இல்லை. ஒட்டுமொத்தமாக இங்கு சிறுகுறு விவசாயிகள் இருக்கக்கூடாது என்பதே ஆளும் பி.ஜே.பி-யின் கணக்கு. மேற்கத்திய நாடுகளில் இருப்பதுபோன்று கார்ப்பரேட் விவசாயத்தைக் கொண்டுவரவே மத்திய அரசு இப்படியான அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது. அதனால், 'விவசாயிகள் எப்படிடாவது செத்து மடியட்டும்... நாம், நமது கார்ப்பரேட் விளைச்சலை அறுவடை செய்யலாம்' என்று காத்திருக்கிறது. விவசாயத்தை நம்பியுள்ளவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டால் தங்களுக்கு வசதியாக இருக்கும் என்று கருதுகிறது. வாஜ்பாய் பிரதமராக இருந்தேபோதே அதற்கான விதை தூவப்பட்டது. 'ஒரு லட்சம் கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது' என்று கூறுவார்கள்; ஆனால், உண்மையில் அதில் 10 சதவிகிதம் மட்டுமே பயிர்க்கடன் வழங்கப்பட்டிருக்கும். மற்ற அனைத்தும் கார்ப்பரேட் சார்ந்ததாக இருக்கிறது'' என்றார்.

 விவசாயம்தான் இந்தியாவின் முதுகெலும்பு .. இங்கே முதுகெலும்பை  உடைத்துவிட்டு யாரை உயிர்வாழ வைக்கப்போகிறார்கள் என்பதுதான் சாமான்யனின் கேள்வி.