Published:Updated:

“யாரிடம் முறையிடுவது என்றே தெரியவில்லை!” கலங்கும் அற்புதம்மாள்

“யாரிடம் முறையிடுவது என்றே தெரியவில்லை!” கலங்கும் அற்புதம்மாள்
“யாரிடம் முறையிடுவது என்றே தெரியவில்லை!” கலங்கும் அற்புதம்மாள்

“யாரிடம் முறையிடுவது என்றே தெரியவில்லை!” கலங்கும் அற்புதம்மாள்

“அவன் மட்டும் வெளியே இருந்திருந்தா, இந்நேரம் எங்களுக்கு 20 வயசுல ஒரு பேரனோ... பேத்தியோ இருந்து இருந்திருப்பாங்க.. ஜோலார்பேட்டையில மக்களோட மக்களா அமைதியான, அழகான குடும்பமா நாங்க வாழ்ந்திட்டு இருந்திருப்போம். எங்களை அவன் கையில வெச்சு தாங்கி இருப்பான்” என்று தன் நினைவில் மட்டும் கட்டமைத்துள்ள ஒரு வாழ்க்கையை நம்மிடம் பகிர்கிறார் அற்புதம்மாள்.
 
பேரறிவாளன் சிறைக்குச் சென்று 26 ஆண்டுகள் ஆகிவிட்ட சூழலில், அவருக்கு பின்னால், பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் பரோலிலும், விடுதலையாகியும் வெளிவந்துவிட்ட சூழ்நிலையில் பேரறிவாளனுக்கு மருத்துவச் சிகிச்சைக் கூட மறுக்கப்படுகிறது.
  
இப்படியான சூழலில் பேரறிவாளனின் சொந்த ஊரான ஜோலார்பேட்டையைச் சேர்ந்த மக்களும் பேரறிவாளனுக்காக குரல் கொடுக்க களத்தில் இறங்கவிருக்கிறார்கள். நாளை (ஜூன் 11, 2017) பேரறிவாளன் விடுதலை தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பை ஒருங்கிணைத்திருக்கும் நிலையில் அற்புதம்மாளுடன் பேசினோம். அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் ஜெயலலிதா மீது வைத்திருந்த நம்பிக்கை தெரிந்தது. அந்த நம்பிக்கையை அவரது பெயரைச் சொல்லி அரசாங்கம் நடத்துபவர்கள் பொய்யாக்கிக்கொண்டிருப்பதும் வெளிப்பட்டது.  

“அம்மா உயிருடன் இருந்திருந்தாங்கன்னா...”

 “ஜெயலலிதாம்மா மட்டும் உயிருடன் இருந்திருந்தாங்கனா நிச்சயம் என் மகன் பரோலிலாவது வெளியே வந்துருப்பான்” என்று சொல்லி முடிக்கும் முன்பே குரல் உடைகிறது அற்புதம்மாளுக்கு. வார்த்தைகளுக்கு வழிவிட, வெளியெங்கும் சில நிமிடத்துக்கு மெளனம் படர்கிறது. தன்னைதானே ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் பேசத் தொடங்குகிறார்" தமிழகத்தின் இரும்பு மனுஷி. 

“ராஜீவ் கொலைக்கு பின்னாடி பல அரசியல் காரணங்கள் இருக்கு. அறிவு சிக்க வைக்கப்பட்டுருக்கானு ஜெயலலிதாம்மா புரிஞ்சுக்கிட்டாங்கப்பா... கடைசியா அவங்களைப் பார்த்தப்ப...  பேரறிவாளன் ஃபைலைத்தான் பார்த்துக்கிட்டு இருக்கேன். இன்னும் ரெண்டு நாள்ல கையெழுத்து போட்டுறேனு சொன்னாங்க... ஆனா, அதுக்குள்ள என்னென்னவோ நடந்திருச்சு. அவன் பரோல்ல வந்திருந்தா கூட கொஞ்சம் எங்க வலி ஆறி இருக்கும் ”என்று கண்களைத் துடைத்துக்கொள்கிறார். 
 
“புல்லர் விடுதலையும்... மாநில உரிமையும்”

“1993-ம் ஆண்டு குண்டு வெடிப்பு வழக்குல கைது செய்யப்பட்ட காலிஸ்தான் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தேவிந்திரபால் சிங் புல்லருக்கு கடந்த வருஷம் மட்டும் இரண்டு முறை பரோல் வழங்கி இருக்காங்க... ஆனால், பல முறை விண்ணப்பித்தும், அறிவுக்குத் தொடர்ந்து பரோல் கொடுக்க மறுக்குறாங்க?  எனக்கு 70 வயசு ஆகுதுப்பா... அறிவு அப்பாவுக்கு 76 வயசு ஆகுது... இந்த வயசுலக்கூட நாங்க எங்க பிள்ளையோட இருக்கக் கூடாதா...? விண்ணப்பதுல எங்க உடல்நிலையைக் காரணமா சொல்லிதான் பரோல் கேட்டோம். அப்பவும் மறுத்துட்டாங்க... குறைந்த பட்சம் அறிவு உடல்நிலையையாவது அவங்க கணக்குல எடுத்திருக்கலாம்லப்பா...” என்றவர் சிறிது நேரம் மெளனமாகிறார். 

சொற்களை எடுதாளத் தடுமாறியப்படியே பேசுகிறார், “அவனுக்கு வேலூர்ல சிகிச்சை அளிக்க வசதி இல்லைனு சொல்லிட்டாங்கப்பா... அதனாலதான், ஜெயலலிதாம்மா உயிருடன் இருந்தப்ப, அறிவை சென்னைக்கு மருத்து சிகிச்சைக்காக வர அனுமதி கொடுத்தாங்க... ஆனா, இப்ப அதுக்கும் அனுமதி கொடுக்க மறுக்குறாங்கப்பா... இவங்க எல்லாம் அறிவு ஜெயிலேயே சாகணும்னு நினைக்கிறாங்களா...? யாரிடம் முறையிடுவது என்றே தெரியவில்லை” என்று சொல்லும்போது வெடித்து அழுதுவிட்டார்.

இது, பேரறிவாளன் வழக்கு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமில்ல. மாநில உரிமை சம்பந்தமானதும்தான். பரோல் வழங்க மாநில அரசுக்கே உரிமை இருக்குங்கிற விஷயத்துல ஜெயலலிதாம்மா தெளிவா இருந்தாங்க... ஆனா, இன்னைக்கு அவர் பெயரைச் சொல்லி ஆட்சி நடந்துபவர்களுக்கு அந்தத் தெளிவு இருக்கானு தெரியலை. அம்மா வழியிலதான் இந்த ஆட்சி நடக்குதுனு  அவங்க சொல்றது நிஜம்னா... பேரறிவாளனுக்கு பரோல் வழங்கணும்” என்றார்.

அமைச்சர்கள் தங்கள் அறை சுவர்களிலிருந்து மட்டும் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றிவிட்டார்களா... இல்லை தங்கள் நினைவுகளிலிருந்தும் அகற்றிவிட்டார்களா...? இரண்டு அணிகளும் அம்மா வழியில் நடப்பது உண்மையெனில், அவர்கள் இந்த 70 வயது தாயின் கேள்விகளுக்கு உரிய பதிலை அளிக்க வேண்டும். வெற்று தியானங்கள்... பேரறிவாளன் விஷயத்தில் தீர்க்கமான முடிவுதான்... ஜெயாவின் ஆன்மாவைச் சாந்தியடையச் செய்யும்!

அடுத்த கட்டுரைக்கு