Published:Updated:

மனைவி சொல்லே மந்திரம்!

விஜயகாந்தின் பா.ஜ.க. பாசம்?ப.திருமாவேலன்படங்கள்: பா.கந்தகுமார், தே.சிலம்பரசன்

மனைவி சொல்லே மந்திரம்!

விஜயகாந்தின் பா.ஜ.க. பாசம்?ப.திருமாவேலன்படங்கள்: பா.கந்தகுமார், தே.சிலம்பரசன்

Published:Updated:
##~##

 டிப்பை ரசிக்கிறார்கள் என்று தெரிந்ததும் ஓவராக நடிப்பார்கள் அல்லவா? அப்படித்தான் விஜயகாந்த்!

கடந்த ஒரு மாத காலமாக அனைத்துக் கட்சிகளுக்கும் அல்வா கொடுத்துவந்த விஜயகாந்த், 'அத்தனைக்கும் விடையை உளுந்தூர்பேட்டையில் வைத்துச் சொல்வேன். அதுவரை காத்திருங்கள்’ என்றார். உளுந்தூர்பேட்டை மாநாடும் வந்தது. பேச மைக் பிடித்ததில் இருந்தே வாட்ச் பார்க்க ஆரம்பித்தார். ''10 மணிக்குள் பேசி முடிக்க வேண்டும். இல்லையென்றால் போலீஸ் வழக்கு போட்டுவிடுவார்கள். என் சினிமா வாழ்க்கையில் அதிகப்படியான தடவை போலீஸ் அதிகாரியாகத்தான் நடித்தேன். அதற்காக இப்போது வெட்கப்படுகிறேன்; வேதனைப்படுகிறேன். இந்த மாதிரி நடந்துகொள்வதற்குப் பதில், அவர்கள் தூக்கு போட்டுச் சாகலாம்'' என்று போலீஸாரை சாபம் விடுவதற்காகவே மாநாடு நடத்தியவரைப் போல, 10 நிமிடத்துக்கு ஒரு முறை அவர்களைக் கொட்டியபடியே இருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடும் கூட்டத்தில் சிறு அசம்பாவிதம் நடந்தால் என்ன ஆவது என்ற பொறுப்பு துளிகூட  இல்லாமல், ஒருசில போலீஸ்காரர்களைக்கூட ஜெயலலிதா அரசு அனுப்பி வைக்கவில்லை என்ற வேதனையே அவரை இப்படிப் பேசவைத்தது. இறுதியில் எதற்காக இந்த மாநாட்டை ஏற்பாடு செய்தாரோ, அந்த செய்திக்கு விஜயகாந்த் வந்தார்.

'கூட்டணி வெச்சுப் போட்டியிடலாமா?’ என்று கேட்டார். கும்பல் கத்தியது. அடுத்து, 'தனியாகப் போட்டியிடலாமா?’ என்று கேட்டார். கும்பல் இன்னும் கூடுதலாக கத்தியது. ''பாருங்க! இதுக்குதான் அதிகமாக் கைதட்டுறாங்க... எல்லாரும் பாருங்க'' என்று கூட்டத்தைப் பார்த்துக் கைகாட்டினார். 'எல்லாரும் தனியாத்தான் நிற்கணும்னு சொல்றாங்க’ என்று சொல்லிக்கொண்ட விஜயகாந்த், அடுத்து உஷார் ஆனார். ''ஆனால் தலைமை என்ன முடிவு எடுத்தாலும் அவங்க ஏத்துப்பாங்க'' என்று சொல்லிவிட்டு, ''எல்லோரும் அமைதியாக வீட்டுக்குப் போங்க. பாதுகாப்பாக போய்ச் சேருங்க'' என்று அனைவரையும் வழி அனுப்பிவைத்தார்.

மனைவி சொல்லே மந்திரம்!

இப்படி ஒரு காட்சியை விஜயகாந்த் அரங்கேற்றிக்கொண்டு இருந்தபோது, அவரது மனைவியும் கட்சியின் வழிகாட்டுநருமான பிரேமலதா, அமைதியாகச் சிரித்தபடி விஜயகாந்தைப் பார்த்துக்கொண்டே இருந்தார். தனித்துப் போட்டியிடுவதா, கூட்டணி வைத்துப் போட்டியிடுவதா என்று கருத்துச் சொல்லும் அதிகாரம், மேடையில் இருப்பவர்களுக்கு இல்லை போலும். அனைவருமே அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அவர்களில் சிலர் வேட்பாளர்கள் ஆகலாம் என்பதால் பயத்தோடும் காணப்பட்டார்கள்.

'உளுந்தூர்பேட்டையில் சொல்வேன்’ என்ற விஜயகாந்த், அங்கும் சொல்லாமல் ஊமைப்பேட்டையாக அதனை மாற்றிவிட்டுப் போய்விட்டார்!

கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவில் கருத்துக் கேட்கலாமே தவிர, மாநாடுகளில் கருத்துக் கேட்க முடியாது. அது கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கும் இடம். அங்கே கேட்ட பிறகு, கூட்டணி பற்றி அறிவிப்பேன் என்று சொல்வதே முதல் காமெடி. அடுத்து, விஜயகாந்த் எதைச் சொன்னாலும் விசில் அடித்து கூச்சல் போட்டார்களே தவிர, அமைதியாக அவர் பேச்சைக் கேட்டு, கை தூக்கிக் கருத்துச் சொல்லும் ஒழுங்கு அங்கு இல்லை. 'அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கலாமா?’ என்று விஜயகாந்த் கேட்டாலும், அந்தக் கூட்டம் விசில் அடித்திருக்கும்.

அப்படிப்பட்ட நிலைமையில் நடந்த மாநாட்டில் என்ன முடிவை, கருத்துக்கணிப்பை எடுக்க முடியும்? இது விஜயகாந்துக்கும் தெரியும். அவர், தன்னுடைய ஆசைகள் நிறைவேறும் வரைக்கும் தனது முடிவுகள் அறிவிப்பதைத் தள்ளிப்போட நினைக்கிறார். அதற்கான தந்திரங்களில் ஒன்றாகத்தான் உளுந்தூர்பேட்டை மாநாடு முடிந்துவிட்டது. இன்னும் இரண்டு வாரங்களுக்கு, படத்தை ஓட்ட நினைக்கிறார் விஜயகாந்த்.

விஜயகாந்துக்கு மூன்று வலைகள் வீசப்பட்டன. பாரதிய ஜனதா ஒரு பக்கம், தி.மு.க. இன்னொரு பக்கமுமாக பலமான வலைகளை விரித்தன. காங்கிரஸ் தனது பலவீனமான வலையை கடைசியாக விரித்தது. காங்கிரஸுக்கு ஆரம்பத்திலேயே பதிலைச் சொல்லிவிட்டார் விஜயகாந்த். 'காங்கிரஸ், இந்தியா முழுவதும் தோற்கப்போகிறது. அந்த நேரத்தில் அத்தோடு சேருவது சரியில்லை’ என்பது விஜயகாந்த் கணிப்பு. ஜி.கே.வாசன் ஆதரவாளர்களிடம் மட்டும், 'உங்கள் ஐயாவைத் தனியாக வரச் சொல்லுங்கள். வந்தால் நாம் இருவரும் சேர்ந்து கூட்டணி அமைப்போம்’ என்று விஜயகாந்த் சொல்லிப் பார்த்தார். ஆனால், 'கட்சி ஆரம்பிக்கும் சூழ்நிலை இப்போது இல்லை’ என்று ஜி.கே.வாசன் அமைதியாகிவிட்டதால், காங்கிரஸ் கூட்டணி தொடக்கத்திலேயே காவு வாங்கப்பட்டது.

அடுத்து தி.மு.க...

கடந்த ராஜ்யசபா தேர்தலில் கனிமொழியை வெற்றி பெறவைக்க தே.மு.தி.க. ஆதரவை தி.மு.க. கேட்டது. அப்போது பலரும் பிரேமலதா, சுதீஷ், அவருக்குத் தெரிந்தவர், தெரிந்தவருக்குத் தெரிந்தவர் என்று பலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லிக்கொண்டார்கள். ஆனால், கடைசி வரைக்கும் இவர்களால் விஜயகாந்தை பேச்சுவார்த்தைக்குக்கூட நேரடியாக அணுக முடியவில்லை. அதனால், 'நாடாளுமன்றத் தேர்தலுக்கான பேச்சுவார்த்தைகளை நானே பார்த்துக்கொள்கிறேன், வேறு யாரும் தலையிட வேண்டாம்’ என்று ஸ்டாலின் சொன்னதாக தி.மு.க-வில் தகவல் பரவியது.

மனைவி சொல்லே மந்திரம்!

ராஜ்யசபா தேர்தலுக்காக திருச்சி சிவாவை அவசரப்பட்டு அறிவித்ததே அதற்காகத்தான். 'பிரேமலதாவை ராஜ்யசபா எம்.பி. ஆக்க விஜயகாந்த் நினைக்கிறார். அப்படியானால் வலிய வந்து நம்முடைய ஆதரவைக் கேட்பார். சிவாவை வாபஸ் வாங்கச் சொல்வதன் மூலமாக தே.மு.தி.க. ஆதரவை அடுத்து நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் சேர்த்துப் பெறலாம்’ என்று கருணாநிதி திட்டமிட்டார். தன்னுடைய கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் கருணாநிதியே இதனைச் சொன்னார். ஆனாலும் விஜயகாந்த் அசைந்துகொடுக்கவில்லை.

'கூட்டணியைப் பற்றி நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொன்னதாகச் சொல்லப்படும் ஸ்டாலின் தரப்பில் இருந்து, அவரது குடும்பத்துப் பிள்ளை ஒருவர் விஜயகாந்தின் குடும்பத்துக்கு தெரிந்த ஒரு இளைஞரைப் பார்த்துப் பேசினார். அவரும் விஜயகாந்திடம் இந்தப் பிள்ளையை அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. கோவை தொழிலதிபர் ஒருவரும், நெல்லை நிறுவன உரிமையாளர் ஒருவரும் இதற்காக தி.மு.க. தரப்பால் அனுப்பிவைக்கப்பட்டார்கள். 'நீங்கள் சொன்னதை கேப்டனிடம் சொல்லிவிட்டோம்’ என்றார்களே தவிர, ம்ஹூம், எந்தப் பயனும் இல்லை.

விஜயகாந்துக்கும் தி.மு.க-வுக்கும் முக்கியமான மூன்று பிரச்னைகள் உண்டு. அதனைத் தீர்க்காமல் இந்தக் கூட்டணி ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. ஒன்று, கோயம்பேட்டில் இருந்த திருமண மண்டபத்தை, பாலம் கட்டப்போகிறோம் என்று அன்றைய மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு இடித்தார். இரண்டாவது, மதுரவாயல் அருகில் உள்ள இடத்தில் ஆக்கிரமிப்பு இருந்ததாகச் சொல்லி தமிழகத்தை ஆட்சி செய்த தி.மு.க. அரசு எடுத்தது. மூன்றாவது, நடிகர் வடிவேலுவை அழைத்துவந்து, விஜயகாந்தை மிக அசிங்கமாகத் திட்டியது. இந்த மூன்று விஷயங்களில் முறையான சமாதானம் சொல்லப்படாமல் தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க விஜயகாந்த் சம்மதிக்க மாட்டார். இப்படி விவகாரமான விஷயங்கள் இருப்பதே தெரியாதவர்களும், விஜயகாந்த் கேட்டால் பதில் சொல்லத் தெரியாதவர்களும் பேச்சுவார்த்தைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். தி.மு.க. தனக்காக அலைவதை விஜயகாந்த் ரசித்தார். எனவே, பா.ஜ.க. கூட்டணியை டென்ஷனில் வைத்திருக்க இதனைப் பயன்படுத்திக்கொண்டார் விஜயகாந்த்.

இது தி.மு.க. தலைமைக்குப் புரியவே இல்லை. புரிந்திருந்தால், அழகிரியை நீக்குவதற்கான காரணங்களில் ஒன்றாக விஜயகாந்தை அவர் விமர்சித்துப் பேசியதை தலைமைக் கழக அறிக்கையில் சொல்லியிருப்பார்களா? அழகிரி நீக்கப்பட்ட பிறகு, 'இதுபோன்ற எத்தனையோ நாடகங்களை நாங்கள் பார்த்துவிட்டோம்’ என்று பிரேமலதா சொன்ன பிறகுதான் கருணாநிதிக்கு உறைத்தது. 'அவர் அளவுக்கு நாடகங்களை நான் பார்த்தது இல்லை’ என்று விரக்தியில் கருணாநிதி சொல்லியாகவேண்டியது ஆயிற்று.  

மனைவி சொல்லே மந்திரம்!

உளுந்தூர்பேட்டை மாநாட்டில் அ.தி.மு.க- வையும் தி.மு.க-வையும் திட்டித் தீர்த்தார்கள். அதன் மூலமாக தி.மு.க-வுடனும் கூட்டணி இல்லை என்பது முடிவான முடிவாக ஆகிவிட்டது. மிச்சம் இருப்பது, பாரதிய ஜனதாதான்.

இந்த மாநாட்டில் காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க-வை அனைவரும் விமர்சித்தார்களே தவிர பா.ஜ.க-வை அதனுடைய மதவாத அரசியலை யாரும் விமர்சிக்கவில்லை. விஜயகாந்த் மட்டும் ஓர் இடத்தில், ''இனிமேல் சாதி, மதம் ஆகியவற்றை வைத்து யாரும் அரசியல் நடத்த முடியாது'' என்று சொன்னார். மத அரசியலை அவர் எதிர்த்தால், பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்க முடியாது. பா.ஜ.க-வுடன் சேர்ந்தால், சாதிப் பிரச்னைகளைக் கிளப்பியதன் மூலமாக விமர்சனத்துக்குள்ளான பா.ம.க-வுடன் சேர்ந்தாக வேண்டும். என்ன செய்யப்போகிறார் விஜயகாந்த்?

பா.ஜ.க. கூட்டணிக்கு பிரேமலதா பச்சைக் கொடி காட்டியதாகச் சொல்கிறார்கள். உளுந்தூர்பேட்டை கூட்டத்தில் நான்கைந்து தடவை, 'என் மனைவி பிரேமலதா சொன்னதை வழிமொழிகிறேன்’ என்றே விஜயகாந்த் சொன்னதை வைத்துப் பார்த்தால், அந்தக் கூட்டணியில் கூடுதல் தேவைகளை அடைவதற்காகத்தான் விஜயகாந்த் இப்படி இழுக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism