Published:Updated:

'சட்டமன்றத்தில் ஸ்டாலின் சொன்னது பொய்!’ - செல்லூர் ராஜூ

'சட்டமன்றத்தில் ஸ்டாலின் சொன்னது பொய்!’ - செல்லூர் ராஜூ
'சட்டமன்றத்தில் ஸ்டாலின் சொன்னது பொய்!’ - செல்லூர் ராஜூ

'சட்டமன்றத்தில் ஸ்டாலின் சொன்னது பொய்!’ - செல்லூர் ராஜூ

''விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் எதிர்க் கட்சித் தலைவரும், தி.மு.க செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் பொய்யான தகவல்களை அளித்துவருகிறார். இதையே சட்டமன்றத்திலும் கூறுகிறார்'' என திருச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்தார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திருச்சி மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். முதலில் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், கலெக்டர் ராசமணி, திருச்சி எம்.பி ப.குமார் ஆகியோர் சகிதமாகக் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, “தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் நலன் மற்றும் மேம்பாட்டைக் கருத்தில்கொண்டு, விவசாய உற்பத்தியை இரண்டு மடங்காகவும், விவசாயிகளின் வருவாயை மூன்று மடங்காகவும் பெருக்குவதற்கு, விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் குறிக்கோளுடன் கடந்த 6 ஆண்டுகளில்... அதாவது, 2011 முதல் 31.03.2017 வரையிலான காலத்தில் மாநிலத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலமாக 58 லட்சத்து 57 ஆயிரத்து 408 விவசாயிகளுக்கு 27,442.22 கோடி ரூபாய் அளவுக்குப் பயிர்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், 2016 - 2017 முதல் 2020 - 2021 வரையிலான 5 ஆண்டுகளுக்குப் பயிர்க்கடன் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் வழங்கக் குறியீடுகள் நிர்ணயம் செய்யப்பட்டு, பயிர்க் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2016 - 2017-ஆம் ஆண்டில், வறட்சி மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள் போன்ற காரணங்களால் தமிழகம் பாதிக்கப்பட்ட நிலையிலும் 4,227.98 கோடி ரூபாய் அளவுக்குப் பயிர்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 986 விவசாயிகளுக்கு 819.70 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. 2015 - 2016-ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை பெறப்பட்டுள்ளது. இத்தொகையினை உடனடியாக விவசாயிகள் கணக்கில் வரவுவைத்து அவர்களுடைய துயர் துடைக்க வேண்டும்'' என்றார்.

அடுத்து அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி, எம்.பி குமாருடன் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி, மணிகண்டம் ஒன்றியம், நாச்சிக்குறிச்சி கிராமத்தில் உள்ள உய்யக்கொண்டான் திருமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் அமைந்துள்ள வாழைத்தார் குளிரூட்டும் மற்றும் கனியவைக்கும் நிலையத்தைப் பார்வையிட்டு ஆய்வுசெய்த செல்லூர் ராஜூ, அந்த மையத்தில் காய்கறிகள் வழங்கிய விவசாயிகள் 10 நபர்களுக்கு 1 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார்.

பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளுக்கு இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளிடம் இருந்து நேரடிக் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கான லாபம் பெருகியதோடு, குறைந்த விலைக்குக் காய்கனிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. எய்ம்ஸ் மருத்துவமனை எல்லா மாவட்டங்களுக்கும் தேவைப்படுகிறது. மத்திய அரசு மூன்று இடங்களைக் கேட்கிறது. அதைத் தமிழக அரசு வழங்கியுள்ளது. அதன்படி, மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு ஆய்வுகள் நடந்துள்ளன. நாம் எல்லோரும் தமிழர்கள். நான் அமைச்சர் என்கிற முறையில் அதைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு வரவேண்டும் எனச் சொல்ல விருப்பமில்லை. ஆனால், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் தமிழகத்துக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள். அவர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். மத்திய அரசு பற்றிக் கேட்காதீர்கள். எங்களுடையச் செயல்பாடுகளைப் பற்றிக் கேளுங்கள்'' என்று முன் நிபந்தனையோடு தொடர்ந்தவர், ''2006 தி.மு.க ஆட்சியில் விவசாயக் கடன் 7 ஆயிரம் கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்ததாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால், 3 ஆயிரத்து 215 கோடி ரூபாயை மட்டும்தான் பயிர்க் கடன் தள்ளுபடி செய்தார்கள். இதுதான் உண்மை. அதோடு மொத்தம் 5 ஆயிரத்து 15 கோடி ரூபாய் மட்டும்தான் தள்ளுபடி செய்யப்பட்டது. அதிலும், முறைதவறிக் கொடுக்கப்பட்ட கடன்களையும், வாராக்கடன்களையும் தி.மு.க ஆட்சியில் தள்ளுபடி செய்துவிட்டு, விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ததாகக் கூறிவருகிறார்கள். அதிலும், ஒரு குடும்பத்துக்கு மட்டும் 80 லட்சம் ரூபாயைத் தள்ளுபடி செய்துள்ளார்கள். அரசாங்கம் கட்டிய வட்டித் தொகை அனைத்தையும் இஷ்டத்துக்குச் சேர்த்து இவர்கள் கணக்குச் சொல்கிறார்கள். இதையே சட்டமன்றத்திலும் ஸ்டாலின் பதிவுசெய்கிறார். உண்மையில், அ.தி.மு.க அரசு 2016 முதல் 2017 வரை மட்டும் தமிழகத்தில் 5,280.25 கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்துள்ளது. அம்மா அரசு, விவசாயிகளுக்குப் பல்வேறு முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. நாங்கள் தள்ளுபடி செய்ததில் பயனடைந்தவர்கள் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டு அவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கியுள்ளோம். விவசாயிகள்தான் நம்நாட்டின் முதுகெலும்பு, அதனால் தேர்தலின்போது ஜெயலலிதா, விவசாயிகளுக்குக் கொடுத்த 55 வாக்குறுதிகளில் 10 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டன” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு