Published:Updated:

முதல்வராகிறாரா தினகரன்? டெல்லி காட்டிய பச்சைக்கொடி!

முதல்வராகிறாரா தினகரன்? டெல்லி காட்டிய பச்சைக்கொடி!
முதல்வராகிறாரா தினகரன்? டெல்லி காட்டிய பச்சைக்கொடி!

முதல்வராகிறாரா தினகரன்? டெல்லி காட்டிய பச்சைக்கொடி!

ஆளும் கட்சியாகவே அ.தி.மு.க இருந்தாலும், கட்சியின் உடைந்த பாகங்கள் சற்று அதிகமாகவே காணப்படுகின்றன. உடைந்துபோன ஒவ்வொரு துண்டிலும் தொண்டர்கள் கூட்டம் ஏதோ எதிர்பார்ப்பில் குவிந்துகிடக்கிறது. பளபளக்கும் வேட்டிகள், சட்டைகள், உள்ளங்கை அகலத்துக்கு நடுவிரலில் மின்னும் மோதிரங்கள், அடிவயிற்றைத் தொடும் தங்க டாலர்கள் போன்ற அடையாளங்கள் ஏதும் இப்போது உள்ள தொண்டர்களிடம் இல்லை. செப்டம்பர் 22, 2016-க்கு முதல்நாளோடு அந்தத் தங்கங்கள் போன இடம் தெரியவில்லை... சொல்ல முடியாத விரக்தி, ஏமாற்றம், நம்பிக்கைத் துரோகம் என நவரச உணர்ச்சி மொத்தமும் கட்சியின் உண்மையான தொண்டர்களின் உணர்வில்வந்து உட்கார்ந்துகொண்டிருக்கிறது. கட்சியில் பிரிந்துள்ள அணிகள் இணையுமா, இணையாதா என்ற கேள்விக்கான பதிலை தமிழ்நாட்டுக்குள்ளேயே அ.தி.மு.க தொண்டர்கள் தேடுவதும், அதற்கான பதில் டெல்லியில் ஒளிந்திருப்பதும்தான் இன்றைய தமிழக அரசியல் களமாக உள்ளது.  

தொண்டர்களால் இதை உணர முடிகிறது. ஆனால், கண்டுபிடித்து கட்சியைக் கரையேற்றும் தனித்திறன்கொண்ட ஆளுமையை அடையாளம் காண்பதுதான் அவர்களுக்கான பெரிய வேலையாக இருக்கிறது. 'அம்மா சாவுக்கு நீதி கேட்கிறார்', முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்; 'அம்மா ஆட்சியைத்தான் நாங்கள் நடத்திக்கொண்டிருக்கிறோம்' என்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி... 'அம்மாவின் சின்னம் இரட்டை இலையைத் தக்கவைத்துக் கொள்ள தினகரன், தன்னைத்தானே தியாகம் செய்துகொண்டார்' என்று பெருமிதம்கொள்கிறது, தினகரன் ஆதரவுப் பட்டாளம்... 'சிறையில் இருக்கும் சின்னம்மாவைவிட்டால், வேறு யாரால் நாட்டை நடத்த முடியும்'  என்று மார்தட்ட ஒரு கூட்டம் இருக்கிறது... இது போதாது என்று அ.தி.மு.க தொண்டர்கள் கட்சி, தீபா கட்சி, தீபாவின் கணவர் மாதவன் கட்சி என்று கணக்குக்குச் சில கட்சிகள் வருகின்றன. அங்கும் அ.தி.மு.க ஆதரவுத் தொண்டர்களின் வாசம் இருக்கிறது. சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி என்று தொண்டர்கள் ஆளுக்கொரு ஆதரவாக வெவ்வேறு பக்கமாய் சிதறிக் கிடக்கிறார்கள். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதில் எந்த இடத்திலும் நுழைந்து தன் கருத்தைச் சொல்லவில்லை... ஆனால், தன்னுடைய நிலைப்பாடாக, கோட்டையில் அமைச்சர்களின் அறையில் தன் புகைப்படத்தை வைக்கச் சொல்லி உத்தரவு போட்டிருக்கிறார். இப்போது அமைச்சர்களின் அறையில் பெரிய புகைப்படத்தில் ஜெயலலிதாவும், சிறிய புகைப்படத்தில் முதல்வர் எடப்பாடியும் சுவரில்  புகைப்படமாகச் சிரிக்கிறார்கள். இந்த நிலையில்தான், இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டில் டி.டி.வி.தினகரன் கைதாகிறார். விசாரணை என்ற பெயரில் டெல்லிக்கும், சென்னைக்கும் பல நாட்கள் திரிந்த அவருக்கு, கடந்த 1-ம் தேதியும், அதே வழக்கில் சிக்கிய இருவருக்கு அடுத்தடுத்த நாட்களிலும்  ஜாமீனும் கிடைத்தது. இந்த ஜாமீனின் பின்னணியில் ஜனாதிபதி தேர்தல் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மத்திய பி.ஜே.பி. அரசும், ஜனாதிபதி தேர்தலும் டி.டி.வி.தினகரன் என்கிற மையப்புள்ளியை வைத்தே சுழன்றுகொண்டிருக்கிறது. என்கிறது, தினகரனின் நம்பிக்கை வட்டாரங்கள்.

அவர்களிடம் கேட்டபோது, "ஜெயலலிதா மறைவுக்குப் பின்னால் தமிழ்நாட்டில் தன்னுடையச் செல்வாக்கை நிலைநிறுத்தும் முயற்சியில் மட்டுமே, பி.ஜே.பி. தீவிரம் காட்டிவந்தது.  இப்போதோ, ஜனாதிபதி தேர்தலின்போது மயிரிழையில்கூட எதுவும் மாறிவிடக் கூடாது என்ற எச்சரிக்கையுடன்தான் டி.டி.வி.தினகரனிடம் சரண்டர் ஆகியிருக்கிறது. அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ ஏடான 'டாக்டர் நமது எம்.ஜி.ஆர்' நாளேட்டில் மோடியின் மூன்றாண்டு ஆட்சி, மாட்டுக்கறி போன்றவைகளை விமர்சித்து தொடர் குறுங்கட்டுரைகளும், கார்ட்டூன்களும் தொடர்ந்து வெளியாகின. அனைத்துமே பி.ஜே.பி-க்கு எதிர்ப்பைக் காட்டும் விதமாகத்தான் எழுதப்பட்டது. 'டாக்டர் நமது எம்.ஜி.ஆர்' பத்திரிகையில் வந்த செய்தி, கார்ட்டூன்கள் குறித்து முதல்வர் எடப்பாடியிடம், டெல்லி கோபத்தைக் கொட்டியது. டெல்லியின் கோபத்தைத் தணிக்கும் விதமாகத்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மூத்த மந்திரி ஜெயக்குமாரைவிட்டு அதற்கு விளக்கமளிக்கச் சொன்னார். ஜெயக்குமாரும், 'டாக்டர் நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையில் வந்தது, கட்சியின் கருத்து அல்ல' என்று பேட்டி கொடுத்தார். இப்படிப்பட்டச் சூழ்நிலையில்தான் டெல்லிக்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சார்பாக, தந்திகள் பறந்தன. 'தினகரனும், சின்னம்மாவும்தான் கட்சி... எடப்பாடி பழனிசாமியை அங்கே உட்காரவைத்தவருக்கு நாளையே வேறொருவரை உட்காரவைக்கவும் தெரியும்... ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க-வின் பெரும்பான்மை வாக்களிப்பை நீங்கள் பெற விரும்பினால், தினகரனுக்கு ஜாமீன் அளிப்பதைப் பற்றி பரிசீலியுங்கள்' என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. 'ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும்வேளையில் இப்படி எந்தப் பிரச்னையும் வரக்கூடாது. குறிப்பாய் ஓ.பி.எஸ் அணியினரின் வாக்குகளையும் பி.ஜே.பி வேட்பாளருக்கு ஆதரவாக வாங்கப் பாருங்கள்' என்று டெல்லியில் இருந்து பதிலும், தினகரனுக்கு ஜாமீனும் ஒன்றாக வந்தது. இந்தத் தகவல்கள் அனைத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்கு அறிவார். 

சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம்!

சசிகலாவும், தினகரனும் கட்சியில் இல்லை என்று ஓ.பி.எஸ் அணிக்குக் காட்டவும், சசிகலா - தினகரன் கட்சிக்குள் இருப்பதை விரும்பாதவர்களுக்குச் சொல்லவும்தான் கட்சி அலுவலகத்தில் வைத்த அவர்களின் படங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன. ஆனாலும், தினகரன் குறித்தோ, சசிகலா குறித்தோ எந்த விமர்சனமும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களால் வைக்கப்படவில்லை. 'இது ஜோடிக்கப்பட்ட நாடகம். சசிகலா - தினகரன் சொல்படிதான் கட்சியே நடக்கிறது' என்று ஓ.பி.எஸ் அணியின் மூத்த தலைவரான மதுசூதனன் சொன்னார். அவருக்குத் தெரிந்த ஒரு விஷயம் டெல்லிக்கும், இங்குள்ள அமைச்சர்களுக்கும் தெரியாமல் இருக்குமா என்ன? அனைவருக்கும் தெரியும்... இருந்தபோதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பி.ஜே.பி தலைமையைக் குளிர்விக்க மந்திரி ஜெயக்குமார் மூலமாகவே தினகரன், சசிகலாவுக்கு எதிராகப் பேட்டியளிக்கவைத்தார். இந்தநிலையில்தான் சிறையிலிருந்து வெளிவந்த தினகரனின் பலத்தை டெல்லிக்குக் காட்டும்விதமாகத் தினகரன் வீட்டுக்கு அவர் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் திரண்டனர். முதல்வரின் வீட்டில் இருக்கும் கூட்டத்தைவிட, ஜாமீனில் விடுதலையாகி வீட்டில் இருக்கும் டி.டி.வி.தினகரனைப் பார்க்கத்தான் கூட்டம் தினமும்  அதிகமாகி வருகிறது. நேற்று முன்தினத்திலிருந்து, டி.டி.வி.தினகரன் வீட்டில் இல்லை. ஜனாதிபதி தேர்தல் நெருங்கிவிட்ட வேளையில் அவர் அங்கிருந்தே அ.தி.மு.க-வின் இரு அணிகளின் ஆதரவையும் பி.ஜே.பி வேட்பாளருக்கு வாங்கும் வேளையில் பிஸியாக இருக்கிறாராம். தினகரன் டெல்லியில் இருந்தாலும் அவருடைய சென்னை வீட்டில் தொண்டர்களின் கூட்டம் குறையவில்லை. இந்திய  ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கான தேர்தல் வரும் ஜூலை 17-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 20-ம் தேதியும் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கத் தற்போது 4 ஆயிரத்து 896 பேர் உள்ளனர். இன்றுள்ள நிலவரப்படி பாராளுமன்றத்தில் பி.ஜே.பி., காங்கிரஸுக்கு அடுத்து 3-வது பெரிய கட்சியாக அ.தி.மு.க-தான் உள்ளது. சட்டசபையிலும் அ.தி.மு.க.வே அதிக எம்.எல்.ஏ-க்களை வைத்துள்ளது. தமிழகச் சட்டசபையில் எடப்பாடி அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தபோது,  11 எம்.எல்.ஏ-க்கள் கட்சி கொறடா உத்தரவை மீறி ஆளும் கட்சியை எதிர்த்தும், ஓ.பன்னீர்செல்வம் அணியை ஆதரித்துமே வாக்களித்தார்கள். ஆளும் கட்சியான எடப்பாடி அரசு நினைத்திருந்தால் 11 எம்.எல்.ஏ-க்களின் பதவியை அன்றே பறித்திருக்க முடியும். ஆனால், அடுத்து வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அந்த 11 எம்.எல்.ஏ-க்கள் அளிக்கப்போகும் வாக்குகளை மனதில்வைத்தே அவர்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது" என்றனர்.

ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கு வந்ததும், தமிழ்நாட்டின் முதல்வர் நாற்காலி குறித்தும் நீண்டதோர் ஆய்வு நடக்கக் கூடும். அதன்பின்னர்தான் டி.டி.வி.தினகரன் அணியில் ஓ.பன்னீர்செல்வம் அணி கலந்து கட்சியைக் காப்பாற்றுமா... எடப்பாடி அரசுக்குத் தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுகொடுத்து ஆட்சி நகருமா என்பது தெரியவரும். ''சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் மனநிலையில் நான் இல்லை'' என்று டி.டி.வி.தினகரன் அண்மையில் தெரிவித்ததை அவர் ஆதரவாளர்கள் வேறுமாதிரியாகப் புரிந்துவைத்துள்ளனர். "நேரடியாக முதல்வர் பதவி ஏற்றுக்கொண்டு ஆறுமாதம் கழித்து முதல்வராகவே அண்ணன் தினகரன் இடைத்தேர்தலைச் சந்திக்கவுள்ளார். டெல்லியிலும் அதற்கு பச்சைக்கொடி காட்டியாகிவிட்டது" என்றனர், அவர்கள். தமிழ்நாட்டில் நான்காவது முதல்வர், அதுவும் இரண்டாண்டுக்குள் என்ற நிலை வருமா என்று போகப்போகத்தான் தெரியும்...

அடுத்த கட்டுரைக்கு