Published:Updated:

“தனிக்கட்சி முதல் போயஸ் கார்டன் என்ட்ரி வரை.. ஜெ. தீபாவை இயக்குவது யார்...?”- தொண்டர்களின் மைண்ட் வாய்ஸ்

“தனிக்கட்சி முதல் போயஸ் கார்டன் என்ட்ரி வரை..  ஜெ. தீபாவை இயக்குவது யார்...?”-   தொண்டர்களின் மைண்ட் வாய்ஸ்
“தனிக்கட்சி முதல் போயஸ் கார்டன் என்ட்ரி வரை.. ஜெ. தீபாவை இயக்குவது யார்...?”- தொண்டர்களின் மைண்ட் வாய்ஸ்

“தனிக்கட்சி முதல் போயஸ் கார்டன் என்ட்ரி வரை.. ஜெ. தீபாவை இயக்குவது யார்...?”- தொண்டர்களின் மைண்ட் வாய்ஸ்

மிழக அரசியல் களம், நாளொரு பரபரப்பும், பொழுதொரு குழப்பமுமாகவே சென்றுகொண்டிருக்கிறது. போயஸ்கார்டனுக்குச் சென்று ஜெ. தீபா அரசியல் பரபரப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளார்.

ஜெயலலிதா, கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட சில தினங்கள் கழித்து, அங்கு வந்த ஜெ.தீபா, தனது அத்தையைப் பார்க்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்தார். அப்போதுதான், தீபா யார் என்றே பெரும்பாலான அ.தி.மு.க. தொண்டர்களுக்குத் தெரிய வந்தது. ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, தமிழகத்தில் அரங்கேறிய பல்வேறு அரசியல் சதுரங்க விளையாட்டுகளில் தீபாவும் ஒரு அங்கமாகவே மாறிவிட்டார்.

ஜெ. மரணம் அடைந்தவுடன், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கடுமையாக எதிர்த்து வந்த ஜெ. தீபா, ஓரிரு மாதங்கள், சற்றே அமைதியாக இருந்தார். 'ஜெ. பிறந்தநாளில் தனது முடிவை அறிவிப்பேன்' என்று கூறிவந்த நிலையில், பிப்ரவரி மாதம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தியானத்தைத் தொடர்ந்து மௌனம் கலைத்த பின், ஜெ. நினைவிடம் வந்த தீபா, "ஓ.பி.எஸ்ஸூடன் இணைந்து இரட்டைக்குழல் துப்பாக்கி போல செயல்படுவேன்" என்று பேட்டியளித்தார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அரசு அமைந்ததும், இரட்டைக்குழல் துப்பாக்கியை மறந்துவிட்டு, "தனியாக எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை"-யைத் தொடங்கி, சென்னை ஆர்.கே.நகர்த் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டார். இதற்கிடையே, தீபா பேரவையில் உறுப்பினராகச் சேர்வதற்கும், நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டதிலும் பெருந்தொகை கைமாறப்பட்டு, அந்தப் பணம் மோசடி செய்யப்பட்டதாக, தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் ஆகியோர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

இதுஒருபுறமிருக்க, தீபாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் கணவர் மாதவன் பிரிந்து சென்றதாக தகவல் வெளியானது. பின்னர் திடீரென தீபா கணவர் மாதவன், "எம்.ஜி.ஆர், ஜெயலலிதா திராவிட முன்னேற்றக்கழகம்" என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். ஓ.பி.எஸ். தியானம் முதல் மாதவன் கட்சி தொடங்கியது வரை அனைத்துமே ஜெ. நினைவிடத்தில்தான் அரங்கேறியது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வேட்பாளராகப் போட்டியிட்ட தீபா, அதன் பின்னர் சிறிதுகாலம் ஊடகங்களுக்கு பேட்டி எதுவும் கொடுக்காமல் ஒதுங்கி இருந்ததுடன் மௌனம் காத்தார்.

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தார் அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். அவர், ஜாமீனில் வெளியே வரும்வரை, அமைதியாக இருந்த தீபா, ஞாயிற்றுக்கிழமை திடீரென்று, தனக்கு வேண்டிய ஊடக நிருபர் மற்றும் ஒளிப்பதிவாளரை அழைத்துக்கொண்டு போயஸ்கார்டன் வீட்டுக்குச் சென்று அரசியல் பரபரப்பை மீண்டும் ஏற்படுத்தியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க-வின் ஒரு பிரிவினர் ஜெயலலிதா மரணத்துக்கு சி.பி.ஐ விசாரணைகோரி வரும் நிலையில், எடப்பாடி தலைமையிலான அரசில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள், தங்களுக்கும் டி.டி.வி தினகரனுக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆனால், 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள், தினகரனைச் சந்தித்து தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற நாடகங்களுக்கு மத்தியில், ஜெ.தீபாவும் போயஸ்கார்டன் சென்று, ஜெயலலிதாவின் வீடு தனக்குத்தான் சொந்தம் என்று கூறி, மீண்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

போயஸ்கார்டன் வீட்டுக்கு தீபா சென்றதால் 'தள்ளு,முள்ளு' என்ற செய்திதான் நேற்று அனைத்து ஊடகங்களிலும் இடம்பெற்ற ஹாட் நியூஸானது.

"இதில் என்னதான் நடந்தது?" என்று கார்டன் வட்டாரங்களைத் தொடர்புகொண்டு பேசினோம். "திடீரென்று தீபாவும், சிலரும் போயஸ்கார்டன் வந்தனர். தங்கள் கைகளில் சில ஃபைல்களை வைத்திருந்தனர். சகோதரர் தீபக்கைச் சந்திக்கச் செல்வதாகக் கூறிக் கொண்டு வீட்டுக்குள் செல்ல முயன்றனர். ஆனால், தீபக் அந்த நேரத்தில் அங்கு வரவில்லை. மேலும் வரச்சொல்லவில்லை என்று தீபக் மறுத்துள்ளார். அங்கு வந்தவர்களை வெளியேற்ற அங்கிருந்த போலீஸாரும், தனியார் நிறுவன பாதுகாவலர்களும் முயன்றனர். அப்போது, அங்குவந்த ஊடகத்துறையிருக்கும், பாதுகாவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எந்த அடிப்படையில் தீபா வந்தார்? அவரை பின்னணியில் இருந்து இயக்குவது யார் என்று தெரியவில்லை. பின்னர், அங்கு திரண்டிருந்த செய்தியாளர்களிடம் அவர் பேட்டியளித்தார். இதுதான் நடந்தது" என்று தெரிவிக்கிறார்கள் கார்டன் தரப்பினர்.

"அரசியலில் இறங்கப்போவதாகத் தெரிவித்து, தனிக்கட்சி தொடங்கிய தீபா, பின்னர் ஏன் அதில் தீவிரம் காட்டவில்லை. ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ்ஸை சந்திக்கச் சென்றது ஏன்? அல்லது அவரை சந்திக்க அறிவுறுத்தியது யார்? ஓ.பி.எஸ்ஸூடன் இணைந்து செயல்படுவதாகக் கூறிவிட்டு, தனியாக பேரவையைத் தொடங்கியது ஏன்? ஆர்.கே.நகர்த் தொகுதியில், ஆர்வமின்றி பிரசாரம் செய்ததன் பின்னணி என்ன? கணவர் மாதவனுக்கும், அவருக்கும் உண்மையிலேயே கருத்துவேறுபாடு உள்ளதா?" இதுபோன்ற பல கேள்விகளுக்கு  இன்னமும் பதில் அளிக்கவில்லை.

தவிர, "சசிகலாவுடன் சேர்ந்து தனது சகோதரர் தீபக்கும் ஜெயலலிதாவை கொலை செய்து விட்டதாக இப்போது கூறும் தீபா, அதுதொடர்பாக இவ்வளவு காலம் ஏன் புகார் தெரிவிக்கவில்லை? ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு தனக்குச் சொந்தம் என்று சொல்லும் தீபா, நீதிமன்றத்தில் அதுகுறித்து வழக்குத் தொடராதது ஏன்?" போன்ற கேள்விகளுக்கும் இதுவரை விடை இல்லை.

தமிழகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான அ.தி.மு.க தொண்டர்கள் ஏற்கெனவே ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், தினகரன் என பிரிந்துள்ள சூழ்நிலையில், தீபா அவ்வப்போது இதுபோன்று 'ஸ்டன்ட்களை' நடத்துவது, தொண்டர்களை மேலும் குழப்புவதாகவே அமையும். தீபாவின் உண்மையான நோக்கம் என்ன? என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். தீபாவின் பின்னணியில் இருந்து, அவரை இயக்குவது யார்? என்ற சந்தேகம் அ.தி.மு.க தொண்டர்கள் மட்டுமல்லாது, தமிழக மக்களுக்கும் தற்போது எழுந்துள்ளது. இதற்கெல்லாம் தீபா பதிலளிப்பாரா?

அடுத்த கட்டுரைக்கு