Published:Updated:

தடைசெய்யப்பட்ட மூன்று படங்கள்... திமிறும் இயக்குநர்கள்!

தடைசெய்யப்பட்ட மூன்று படங்கள்... திமிறும் இயக்குநர்கள்!
தடைசெய்யப்பட்ட மூன்று படங்கள்... திமிறும் இயக்குநர்கள்!


கேரளாவில் திரையிட இருந்த மூன்று ஆவணப்படங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசின் கொள்கைகளுக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கிற கதைக்களம் கொண்ட ஆவணப்படங்கள் அவை என்பதால், அவற்றுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும், இது படைப்பாளிகளின் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல் என்றும் கொதிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்..

கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் வரும் 16 முதல் 20-ஆம் தேதிவரை பத்தாவது சர்வதேச ஆவணப்படங்கள் மற்றும் குறும்பட விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் திரையிடுவதாக இருந்த மூன்று ஆவணப்படங்களுக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அனுமதி மறுத்து, அவற்றைத் திரையிடத் தடை விதித்துள்ளது. தடைக்கான எந்தக் காரணத்தையும் மத்திய அரசு இதுவரை வெளியிடவில்லை.

ஹைதராபாத் மாணவர் ரோகித் வெமூலா பற்றிய "அன்பேரபள் பீயிங் ஆஃப் லைட்னஸ் (Unbearable Being of Lightness)", டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்களைப் பற்றி விளக்கும் "மார்ச் மார்ச் மார்ச் (March March March)", ஜம்மு-காஷ்மீரின் அரசியல் சூழலை விவரிக்கும்  "இன் த ஷேடு ஆஃப் ஃபாலன் சினார் (In the shade of fallen chinar)" என்பவையே அந்த மூன்று ஆவணப்படங்கள். மத்திய அரசின் இந்த தடை நடவடிக்கை, ஆவணப்படங்களை உருவாக்கியவர்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இது, 'நாட்டின் சமூக நீதிக்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும் விடுக்கப்பட்ட சவால்' என்று அவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ரோகித் வெமூலாவும், போராட்டக் களமும்

ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் படித்துவந்த ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமூலா, 'கருத்துரிமை போராளி' என்று பெயர்பெற்றவர். கடந்த 17-01-2016 அன்று தற்கொலை செய்து கொண்டார். பல்கலைக்கழகம் எடுத்த சில நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, "இந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்று, பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் மத்திய அமைச்சர்கள் பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்மிருதி இரானி ஆகியோர் பதவி விலக வேண்டும்" என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் 'ஷாப்காம்' என்ற இடத்தில் நடைபெற்ற மாணவர்களின் போராட்டக் களம் மற்றும் ரோகித் வெமூலாவின் மரணம் குறித்த பின்னணியை விளக்குகிறது "அன் பேரபள் பீயிங் ஆஃப் லைட்னஸ்" ஆவணப்படம். பின்.என் ராமசந்திரா என்பவர் இயக்கியுள்ள இப்படம் 45 நிமிட நேரம் ஓடக்கூடியதாகும். 
"ரெட் சல்யூட்... ப்ளூ சல்யூட்...", "அம்பேத்கர், கன்சிராம்" என்ற முழக்கங்களோடு மாணவர்களின் போராட்டப் பாசறையை விரிவாக படம்பிடித்துக்காட்டும் வகையில் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 

ஜே.என்.யூ பல்கலைக்கழக போராட்டக்களம்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகமான ஜே.என்.யூ  மாணவர்களின் கருத்துக்கு எதிராக, மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையை வெளிச்சம்போட்டுக் காட்டும் வகையில், மற்றொரு ஆவணப்படமான "மார்ச் மார்ச் மார்ச்" எனும் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஜே.என்.யூ-வில் படிக்கும் மாணவியான காத்து லகோஷி இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த ஆவணப்படத்துக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது கன்ஹையா குமார், உமர் காலித் போன்ற போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் கைது மற்றும் அதைக் கண்டித்து நடந்த மாணவர்களின் போராட்டம் போன்றவற்றை இப்படம் விவரிக்கிறது. அதற்கான ஆவணங்களாக, போராட்டத்தின்போது தொலைக்காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட செய்திகள் மற்றும் ஒளிப்படப் பதிவுகள் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. தனது படத்திற்கு அரசு தடை விதித்திருப்பது பற்றி 'பேஸ்புக்' பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள லகோஷ், "குறும்பட திரைப்பட விழா என்பது கலாசாரத்தையும், கலையையும் வளர்க்கும் தளம்.இந்தநிலையில் எங்களுடைய ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.இந்த நடவடிக்கையானது கலை மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதாகும்.இந்தப் படங்களால்,பி.ஜே.பி-யின் முகத்திரை கிழிந்துவிடுமோ என அஞ்சி அவற்றுக்கு அரசு தடைவிதித்துள்ளது.இந்தத் தடையை எதிர்த்து நீதிமன்றத்திறகுச் செல்வோம்" என்று பதிவிட்டுள்ளார். 

ராணுவமும், கலைஞர்களும்... 

இந்த இருபடங்களைப் போன்றே மற்றொரு ஆவணப்படமான காஷ்மீரின் அரசியல் சூழலை விவரிக்கும் "இன் தி ஷேட் ஆஃப் ஃபாலன் சினார்" என்ற படத்திற்கும் மத்திய அரசு தடைவிதித்துள்ளது. ஷான் செபாஸ்டியன் மற்றும் பசில் நிக் என்ற இருவர் சேர்ந்து  இந்தத் திரைப்படத்தை இயக்கியுள்ளனர். ஓவியக் கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களை மையமாகவைத்து, இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது.காஷ்மீரின் நெருக்கடியான சூழ்நிலையை அந்தக் கலைஞர்கள் எவ்வாறு கையாண்டு தங்களின் திறமைகளை மேம்படுத்தி, வலிமை பெற்றனர் என்பதே இப்படத்தின் முக்கிய கருவாகும். 

இப்படம் குறித்து ஷான் செபாஸ்டியனிடம் பேசியபோது, "கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தப்படத்தை எடுத்தோம்.

காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்களை வைத்து எடுத்துள்ளோம். இசை, ஓவியம், பத்திரிகை எனப் பலதரப்பட்ட கலைத்துறையினரையும் சந்தித்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம். பிரிவினைவாதிகளுக்கும்,ராணுவத்துக்கும் இடையே நடந்த வன்முறையிலும் இந்தக் கலைஞர்கள் எப்படி தங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டார்கள் என்பதை அதில் கூறியுள்ளோம். அதேநேரத்தில் காஷ்மீரின் நலன் அடங்கியிருக்கிறதா? அங்குள்ள பிரச்னைகளை இவர்கள் இசையில் எப்படி பயன்படுத்தினார்கள் என்பது குறித்தும் தெரிவித்துள்ளோம்.காஷ்மீர் மக்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை குறித்தும் குறிப்பிட்டிருந்தோம்.அதன் காரணமாகவே மத்திய அரசு இந்தப் படத்தைத் திரையிடுவதற்குத் தடைவிதித்துள்ளது.தடை செய்யப்பட்ட மூன்று படங்களுமே மத்திய அரசு தொடர்புடைய பிரச்னைகளை உணர்த்தக்கூடிய படம் என்ற ஒரே காரணத்தால்,அந்தப்படங்களை ஆளும் பிஜேபி அரசு தடை செய்துள்ளது. காஷ்மீர் தொடர்பான பி.ஜே.பி-யின் நிலைப்பாட்டிற்கு எதிராக எங்களுடைய படம் இருப்பதாக அரசு கருதுகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்துப் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்" என்றார்.

மூன்று ஆவணப்படங்களுமே மக்களின் கருத்துச் சுதந்திரம் குறித்தும்,போராட்டக்களங்கள் பற்றியும் பேசுகிற படங்களாகும். மக்களின் உரிமைகளைப் பேசுகிறபோது, அந்தப் படங்களில் ஆளும் பி.ஜே.பி அரசின் நிலைப்பாடு வெட்டவெளிச்சமாக தெரிவிக்கப்பட்டிருப்பதுடன், கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான அரசின் நடவடிக்கைகளும் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளன என்கிறார்கள் கருத்துரையாளர்கள்.