Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்
##~##

மார்கழி, தை முடிந்த பின்னும் பனி விலகவில்லை. ஆனால், எதிர்வரும் கோடையை நினைத்தால், நமக்கு இப்போதே தூக்கம் கெடுகிறது. மின்சாரமற்ற இரவுகளின் புழுக்கமும், கொசுக்களின் ரீங்காரமும் எண்ணிப்பார்க்கும்போதே அச்சுறுத்துகின்றன. மனிதர்களின் இயல்பு வாழ்க்கை, குழந்தைகளின் படிப்பு, தொழிற்சாலைகளின் இயக்கம்... என அனைத்தையும் முடக்கிப்போடும் மின்வெட்டுக்கு என்னதான் தீர்வு?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அனல், புனல், அணு... என நடப்பில் உள்ள மின் உற்பத்தி வடிவங்கள் அனைத்துமே சூழலுக்குக் கேடு விளைவிப்பவை என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். கேடு இல்லாத மின்சாரம் எனில், அவை காற்று, சூரிய ஒளி போன்ற மரபு சாரா எரிசக்திமூலம் கிடைப்பவையே. காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முன்னிலை வகிக்கிறது. ஆனால், அதன் உற்பத்தித் திறன் ஆண்டு முழுவதும் சம அளவில் இருப்பது இல்லை. இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு தமிழக அரசு சூரிய மின்சக்திக் கொள்கையை வெளியிட்டது.

இதன்படி ஒரு கிலோவாட் சூரிய மின்சக்தி தயாரிக்கும் திட்டத்துக்கு, மத்திய அரசு 30 சதவிகித மானியம் வழங்குகிறது. இப்போது மாநில அரசு 20 சதவிகித மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளது. அதாவது ஆகும் செலவில் சரிபாதியை அரசு தந்துவிடும். மீதியை நாம் செலவிட்டால் போதும். சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய நினைக்கும் தொழில்முனைவோருக்கு இந்தத் திட்டம் உண்மையிலேயே வரப்பிரசாதம். தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில் சூரிய மின்சக்தியின் உற்பத்தித் திறன் வெறும் 20 மெகாவாட்தான். இதை 3,000 மெகாவாட்டாக உயர்த்த வேண்டும் என்பது அரசின் இலக்கு. கடந்த ஆண்டுகளில் அனுபவித்த மின்வெட்டின் கொடுமையும், தற்போது அரசு வழங்கும் மானியமும் இந்த இலக்கை எட்டிப்பிடிக்க உதவக்கூடும்.

ஆனால், அரசு ஒரு விஷயத்தைக் கவனத்தில்கொள்ள வேண்டும். சூரிய மின்சக்தியைத் தன் வீட்டில் அமைத்துக்கொள்வது எல்லோருக்கும் சாத்தியம் அல்ல. லட்சங்களில் முதலீடு செய்யவேண்டிய இந்தத் திட்டத்தின் பக்கம், எல்லோரும் போக முடியாது. கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம்... போன்றவை மக்களின் அடிப்படைத் தேவைகள். இவற்றை நிறைவேற்றித் தரவேண்டியது அரசின் தலையாயக் கடமை.

எனினும், ஆபத்து இல்லாத தொழில்நுட்பம் என்ற அடிப்படையிலும், எதிர்கால மின் தேவையைத் தீர்க்க எஞ்சியுள்ள ஒரு வாய்ப்பு என்ற அடிப்படையிலும் நம் முன்னே நம்பிக்கையாக ஒளிர்கிறது சூரிய மின்சக்தி.