Published:Updated:

“நான் எடப்பாடி ஆதரவும் இல்லை... தினகரன் ஆதரவும் இல்லை!” - தனியரசு தடாலடி

“நான் எடப்பாடி ஆதரவும் இல்லை... தினகரன் ஆதரவும் இல்லை!” - தனியரசு தடாலடி
“நான் எடப்பாடி ஆதரவும் இல்லை... தினகரன் ஆதரவும் இல்லை!” - தனியரசு தடாலடி

''அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெறுவதற்குப் பணம் கொடுக்கப்பட்டது'' என்று ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ சரவணன் பேசியதாக வெளியாகியிருக்கும் வீடியோ தமிழக அரசியலுக்குள் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. அ.தி.மு.க அல்லாத கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்குப் பெரும் தொகை கொடுக்கப்பட்டதாகக் கூறுகிறது அந்த வீடியோ தகவல். அதன் அடிப்படையில், அ.தி.மு.க கூட்டணிக் கட்சியான 'தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை'யின் நிறுவனத் தலைவர் தனியரசுவிடம் பேசினோம்....

''சசிகலா அணிக்கு ஆதரவு கொடுக்க உங்களுக்கு 10 கோடி ரூபாய் வரையிலும் தரப்பட்டதாக வெளியான ரகசிய வீடியோ தகவலுக்கு, இதுவரையிலும் நீங்கள் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லையே?''

''எனக்கு இருக்கும் மக்கள் பணிகளில் இதுபோன்ற செய்திகளை எல்லாம் நான் கவனத்தில் எடுத்துக்கொள்வதே இல்லை. பண்பு இல்லாத, தகுதி இல்லாத மனிதர்கள் சொன்னதாக இருக்கட்டும் அல்லது அந்த மனிதரே அதை மறுப்பதாக இருக்கட்டும்... இதுபோன்ற நெகட்டிவான விஷயங்களை ஊடகப் பரபரப்புக்காக வெளியிடுவதென்பது காலங்காலமான நடைமுறைதான். அந்த வரிசையில் ஊடகக்காரர்கள் அவர்களது கடமையைச் செய்கிறார்கள்.

பொறுப்புள்ள, பண்புள்ள ஒரு தலைவர் யாரேனும் இதுபோன்றக் குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தால், அந்த செய்தியை மறுக்கிற அல்லது விளக்குகிற கடமை எனக்கும் இருக்கிறது. ஆனால், தகுதியே இல்லாத, பண்பற்ற யாரோ ஒருவர் கிளப்பிவிடக்கூடிய வதந்திகளுக்கும் பொய்ப் பிரச்சாரத்துக்கும் நான் என்ன மறுப்பு சொல்ல வேண்டியதிருக்கிறது?''

''இவ்விஷயம் குறித்து ஊடகத்தில் பரபர விவாதங்கள் நடைபெற்றுவரும் சூழலில், உங்களது மௌனம், குற்றச்சாட்டை ஒப்புக்கொள்வதாக ஆகிவிடாதா?''

''அரசியலில், 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிற எங்களைப்போன்ற நன்னெறியாளர்களுக்கு இதெல்லாம் ஒரு பரபரப்பே அல்ல; இதுவும் வழக்கமான ஒரு செய்தி அவ்வளவுதான். ஜனநாயக நாட்டில் யாரும் யார் மீதும் குற்றச்சாட்டுக்களைக் கூறலாம். குற்றச்சாட்டுக்கு அப்பாற்பட்டவர்கள் யார் இருக்கிறார்கள் என்று நீங்களே சொல்லுங்கள்... ராமன், சீதை, ராவணன், நபிகள், இயேசுபிரான்.... என்று எல்லோர் மீதும் விமர்சனம் இருக்கிறது. உலகத்தில் விமர்சனத்துக்கு  ஆளாகாத ஒரு மனிதரைப் பற்றிச் சொல்லுங்களேன்.... 

விமர்சனங்களை உள்வாங்கிக்கொண்டு செயலில் நேர்மையாக இருப்பவர்களைத்தான் மக்கள் தங்களது முன்னுதாரணமாக எடுத்துக்கொள்வார்கள். அதேபோல், நானும் இணக்கமாக எடுத்துக்கொண்டு எப்போதும்போல், நேர்மையாகவும், கண்ணியமாகவும், சமுதாயத் தொண்டு, அரசியல் தொண்டு என வழக்கம்போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.''

''சசிகலா அணிக்குப் போட்டியாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் எம்.எல்.ஏ-க்களை விலைபேசினார்கள் என்ற தகவலும் சம்பந்தப்பட்ட வீடியோவில் இருக்கிறதே... இது வீடியோ மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கிறதே...?''

''ஆரம்பத்திலேயே சொன்னதுதான்... அந்த வீடியோவில் இருக்கும் நபரே 'அது என் வாய்ஸ் இல்லை' என்கிறார். பின் எப்படி அது நம்பகத்தன்மையை அதிகரிக்கும்? அது ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பாக இருந்தால்கூட அதுபற்றி நாம் விவாதிக்கலாம். ஆனால், அது யாரோ திருட்டுத்தனமாக இப்படிப் பேசவைக்க வேண்டும் என்ற நோக்கில் எடுத்ததா... அல்லது பணம் கொடுத்து இப்படிப் பேச வைக்கப்பட்டதா... என்று எதுவும் தெரியவில்லை.''

''இப்போது நீங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரா? அல்லது டி.டி.வி தினகரன் ஆதரவாளரா?''

''நான் ஜெயலலிதாவின் ஆதரவாளன். கோடிக்கணக்கான தொண்டர்களின் உழைப்பில் வளர்ந்த அ.தி.மு.க என்ற கட்சியைத் தலைமை ஏற்று வழிநடத்திச் சென்றவர் ஜெயலலிதா. மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக தனது கடைசி நிமிடம் வரையிலும் கட்சியை வழிநடத்தியவர் ஜெயலலிதா. அவரின் நல்ல நோக்கம் நிறைவேற, அ.தி.மு.க-வுக்கான எனது ஆதரவு தொடர்ந்து நீடிக்கும். அது எடப்பாடி ஆதரவா, தினகரன் ஆதரவா என்றெல்லாம் நான் பிரித்துப் பார்க்கவில்லை... 122 எம்.எல்.ஏ-க்களும் தனித்தனிக் கோஷ்டிகளானாலும்கூட எனக்குக் கவலையில்லை. என்னுடைய ஆதரவு எப்போதும் அ.தி.மு.க-வுக்குத்தான்! அ.தி.மு.க தலைமையிலான ஆட்சிதான் நிலைத்திருக்க வேண்டும்!''