Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
##~##

ணம் உள்ளவர்களும் பலம் உள்ளவர்களும் மட்டுமே போட்டியிடக்கூடியதாக இல்லாமல், சாமானியர்களும் பங்கேற்கும் களமாக தேர்தல் களம் திகழ்ந்தால் மட்டுமே, அங்கு உண்மையான ஜனநாயகம் பரிபாலனத்தில் இருக்கிறது என்று அர்த்தம். ஜனநாயகத்தைப் பணநாயகமாக மாற்றும் அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைந்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பணத்தை வாக்காளர்களுக்கு வாரியிறைப்பது, படாடோபமாகப் பிரசாரம் செய்வது போன்ற நடைமுறைகளைத் தடுக்கும் பொருட்டு, பல தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க இருப்பதாக அறிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம். குறிப்பாக, வேட்பாளர்கள், வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதைத் தடுக்க, கிராம அளவில் இளைஞர்களைக்கொண்ட கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படுமாம். வாக்காளர்களுக்கு யாரேனும் பணம் அளித்தால், அதைக் கண்காணிப்புக் குழுவில் இருக்கும் இளைஞர்கள் வீடியோ அல்லது புகைப்பட ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வழிவகை செய்யப்பட இருக்கிறதாம். அப்படிப் பதியப்படும் புகார்கள் மீது 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்படும் என்கிறது தேர்தல் ஆணையம்!

வரவேற்று ஆதரவளிக்க வேண்டிய அறிவிப்பு. ஆனால், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு மீது மக்களுக்கு உண்மையான நம்பிக்கை வரவேண்டுமானால், 'இது சம்பிரதாய அறிவிப்பு அல்ல; உறுதியான செயல் திட்டம்’ என்ற நம்பிக்கையை வாக்காளர் மனதில் பதியச்செய்ய வேண்டும்.

குங்குமச்சிமிழில், சேலைகளில், உணவுப் பொட்டலங்களில், திருமண அழைப்பிதழ்களில், சாராய விருந்துகளில்... என விதவிதமாகக் கோடிக் கோடியாகப் பணம் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட 'திருமங்கலம் ஃபார்முலா’வை நாம் பார்த்திருக்கிறோம். அதையும் மிஞ்சும் வகையில் சமீபத்தில் அசுரத்தனமாக ஆக்டோபஸ் கரங்களை நீட்டிய 'ஏற்காடு ஃபார்முலா’வையும் பார்த்தோம். இதுவும் இன்னபிறவுமாக தேர்தல்களின்போது நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதியப்பட்டன, எவ்வளவு பேர் கைதுசெய்யப்பட்டார்கள், அவர்கள் மீது என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, அதன் பின்னணியில் செயல்பட்ட வேட்பாளர்களுக்கும், அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தண்டனைகள்தான் என்ன?

வாக்காளரின் மனதில் எழும் இந்தச் சந்தேகங்களைக் களைந்தால், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் பொது மக்களும் ஆர்வமாகப் பங்கேற்பார்கள். இல்லையென்றால், இந்த அறிவிப்பை மற்றுமொரு வெற்றுத் தண்டோரா என்றே வாக்காளன் கருதுவான்!