Published:Updated:

“மோடியை நம்பிப் பிழைப்பவர்கள் அல்லவே நாங்கள்!” - எழுத்தாளர் ஜோ டி குரூஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“மோடியை நம்பிப் பிழைப்பவர்கள் அல்லவே நாங்கள்!” - எழுத்தாளர் ஜோ டி குரூஸ்
“மோடியை நம்பிப் பிழைப்பவர்கள் அல்லவே நாங்கள்!” - எழுத்தாளர் ஜோ டி குரூஸ்

“மோடியை நம்பிப் பிழைப்பவர்கள் அல்லவே நாங்கள்!” - எழுத்தாளர் ஜோ டி குரூஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ழுத்தாளர்களும் சர்ச்சைகளும் ஒன்றோடுஒன்று பிணைந்தது. ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு எழுத்தாளர் ஜோ டி குரூஸின் அடுத்த படைப்பான ‘வேர் பிடித்த விளைநிலங்கள்’ கட்டுரைத் தொகுப்பு வெளியாக இருக்கிறது. இந்த சூழலில், புத்தகத்தில் அவர் பதிவுசெய்திருக்கும் வாழ்வியல் மற்றும் தற்கால அரசியல் குறித்தும், அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதன் மீதான சர்ச்சைகள் மற்றும் அரசியல் நிலைப்பாடு குறித்து அவர் எதிர்நோக்கும் கேள்விகள் குறித்தும் அவர் அளித்த பேட்டியிலிருந்து... 

''தொடர்ந்து துறைமுகங்கள், அது சார்ந்த வாழ்வியல் மற்றும் அரசியலைப் பற்றி உங்கள் எழுத்துகள் பதிவுசெய்திருக்கின்றன. அந்த வகையில், இந்தப் படைப்பு எதைப் பற்றிப் பேசுகிறது?'' 

''விழித்துக்கொண்டிருப்பவர்கள் எல்லாம் விழித்திருப்பவர்களாக இல்லை. சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் இங்கே வெவ்வேறு விதமான வாழ்க்கை இருக்கிறது. அது, அத்தனைக்கு இடையேயும் அவர்கள் உணர்வோடு இருப்பது அவசியம். அதைத்தான் இதில் பதிவுசெய்திருக்கிறேன்.'' 

''புத்தகத்தில் மத்திய அரசின் இனையம் பகுதி துறைமுகத் திட்டம் தொடர்பாகக் குறிப்பிட்டிருக்கீறீர்கள்; அதுதொடர்பாக ஆவணப் படம் ஒன்றும் உருவாக்கியுள்ளீர்கள்; அந்தத் திட்டத்தை நீங்கள் எதிர்க்கக் காரணம் என்ன?'' 

''சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதில், மக்கள் நலனுக்காகச் செயல்படுத்தப்பட்ட திட்டம் எல்லாம் அந்தக் காலத்தில் செய்யப்பட்டதுதான். அண்மைய அரசுகள் கொண்டுவந்த திட்டங்களில் எதுவும் மக்கள் நலனுக்குப் பயன் தருவது இல்லை. தனிமனிதச் சுயநலம் அதிகரித்துவிட்டதால் பொதுமக்களுக்காக உழைப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அந்த வகையில் கடற்கரைப் பகுதிகளுக்காக அரசு கொண்டுவரும் எந்தத் திட்டமும் போலியான கொள்கைப் பரப்புதலோடும், எந்த வகையிலும் சாத்தியமில்லாத இடத்திலும் முறையிலும் பொருளாதாரச் சூழலிலும் உருவாகும்போதுதான் அது எதிர்க்கப்படும். ஏற்கெனவே பல துறைமுகத் திட்டங்கள் அவசரமாகத் தொடங்கப்பட்டு எல்லாம் பாதியிலேயே செயலிழந்து கிடக்கின்றன. இனையம் பகுதி சரக்குத் துறைமுகத் திட்டம் அப்படியானதுதான். அதற்கான தேவை அந்தப் பகுதியில் இல்லை. மீனவர்கள் அதிகம் வசிக்கும், ஏற்கெனவே மீன்பிடித் துறைமுகம் கட்டிமுடிக்கப்படாமல் பாதியிலேயே விடப்பட்டிருக்கும் அந்தப் பகுதியில் இந்தச் சரக்குத் துறைமுகத் திட்டத்தை மக்களிடம் திணித்தால் இந்திய அரசு பெரும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்திக்கும். இதனை எனது முப்பது வருட துறைமுகம் சார்ந்த அனுபவத்தில் சொல்கிறேன்.'' 

''ஆனால், அந்த திட்டத்தால் மக்களுடைய பொருளாதாரம் மேம்படுமே?''

''சேது சமுத்திரத் திட்டம் கொண்டு வந்தபோதும் இப்படித்தான் சொன்னார்கள். ஆனால், எந்த மக்களின் வளர்ச்சிக்கு அது உதவியது? தனிமனிதர்கள் அதைக் கையகப்படுத்திக் கொண்டார்கள். முதலில் இனையம் துறைமுகம் செயல்படுத்தப்படுவதற்கான தேவை இருக்க வேண்டும்; இடம் இருக்க வேண்டும். துறைமுகம் அமைப்பதற்கு பல்லாயிரக்கணக்கில் நிலம் தேவை. இவை எதுவும் அந்த இடத்தில் இல்லை. கேட்டால், 'கடலில் துறைமுகம் அமைக்கப்படும்' என்கிறார்கள். கடலில் துறைமுகம் அமைப்பது போன்ற சாத்தியக் கூறுகள் இதுவரை எங்குமே கேள்விப்பட்டதில்லை. ஏற்கெனவே வல்லார்பாடம் பகுதியில் துறைமுகம் அமைக்கப்பட்டு, அது இன்று தனது வருவாயில் 30 சதவிகிதம்கூட எட்டமுடியாத நிலையில் இருக்கிறது. சென்னைத் துறைமுகமும் இன்று பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கக் காரணம் துறைமுகத்தை விரிவுபடுத்த முடியாத சூழல்தான். இனையம் பகுதியில் இருக்கும் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது ஒருபக்கம். ஆனால், இந்தத் துறைக்கே தேவையில்லாத திட்டம் இது என்பதுதான் உண்மை. முந்தைய தலைவர்களிடம் மக்கள்மீது உண்மையிலேயே ஓர் அக்கறைத் தன்மை இருந்தது. தற்போது அக்கறை இருப்பது போன்ற போலித்தன்மைதான் இருக்கிறது.''

''இதுவரை மத்திய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்த நீங்கள், திடீரென எதிராகக் குரல்கொடுக்கக் காரணம் என்ன?''

''நான் மத்திய அரசுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தேன் என்று யார் சொன்னது? அந்தந்த அரசு வரும்போது திட்டங்களைச் செயல்படுத்துவேன் என்று சொன்னால்... அதனை வரவேற்பதும், அவை செயல்படுத்தப்படாத நிலையில் அதுபற்றிக் கேள்வி கேட்பதும் மனித இயல்பு. அதற்காக அவர்களுடைய சித்தாந்தங்களை விடாமல் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.''   

''சித்தாந்தம் என்று குறிப்பிட்டதும் கேட்கத் தோன்றுகிறது, தொடர்ந்து இந்துத்துவ அடையாளங்களை உங்கள் எழுத்துகளில் பதிவுசெய்து வருகிறீர்கள். இது, தற்போது இருக்கும் அரசுக்கு ஆதரவான நிலைப்பாடாகத் தெரிகிறதே?'' 

'' 'இந்துத்துவம்' என்று நீங்கள் சொல்கிறீர்கள்; என் அப்பனும் ஆத்தாளும் பற்றிப் பதிவுசெய்கிறேன் என்று நான் சொல்கிறேன். முற்போக்காளர்கள் சிலர் நான் இந்துத்துவம் பேசுகிறேன் என்று சித்தரித்து அரசியல் செய்கிறார்கள். அதனால் ஒரு பயனும் இல்லை. நாடு வீழ்ச்சியில் இருந்தபோது மோடி சில திட்டங்களை அறிவித்தார்; நாட்டுப்பற்று உடையவராகத் தெரிந்தார். அதனால், அவருக்கு ஆதரவு அளித்தேன். இப்போதும் ஆதரவளிக்கிறேன் அவர் சொன்னதையெல்லாம் செய்துவிட மாட்டாரா என்றுதான் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். அதற்காக அவர் செய்வது எல்லாம் சரி என்று கூறுவதற்கு அவரை நம்பிப் பிழைப்பவர்கள் அல்லவே நாங்கள்.''  

''மாபரத்தி, பகவதியம்மன் என்று கலாசார அடையாளங்களை எழுத்துகளில் பதிவுசெய்வதால் சமுதாய அடிப்படையிலான சிக்கல்கள் ஏதேனும் ஏற்பட்டதுண்டா?'' 

''இல்லை. இன்றளவும் ஒரு குறிப்பிட்ட சமூகத்திலிருந்து குமரியம்மனுக்கான வருடாந்திர கயிறு எடுத்துச் செல்லும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இது, சுமார் நானூறு வருடப் பாரம்பர்யம். நான் வேற்று மதத்தைத் தழுவியவன் என்பதற்காக, என் அப்பனையும் ஆத்தாளையும் பாரம்பர்யத்தையும் மறந்துவிடக் கூடாது.''

''இறுதியாக ஒரு கேள்வி. ஜல்லிக்கட்டு விவகாரம், என்னூர் துறைமுக கப்பல் விபத்து என தொடர்ந்து மீனவர்கள் மீதான அரசியல் திணிப்புகள் இருந்துகொண்டிருக்கிறதே?''

''எழுபது வருட சுதந்திர இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் இனக்குழுக்களைப் பிரிக்கும் சூழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. தமிழக அரசியலில் பல்வேறு கட்சிகள் மீனவர்களைப் பிரித்து ஆண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் இருக்கும் மீனவர்களுடைய மொத்த எண்ணிக்கை இரண்டரை கோடி மீனவர்கள் என்பது மாபெரும் அரசியல் சக்தி. பண்டையக் காலம் தொட்டே பரதவர் என்று அழைக்கப்பட்ட சமூகம் இது. 

அகநானூறில், 

'இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி,

வலம்புரி மூழ்கிய வான் திமிற் பரதவர்'

என்றே குறிப்பிட்டிருக்கிறார்கள். 

இன்றைய அரசியல், அவர்களை இனக்குழுக்களில் இருந்து விலக்கிச் சாதியக் கட்டமைப்புக்குள் தள்ளியிருக்கிறது. இந்த நிலை மாறி அவர்கள் மீண்டும் ஓர் இனமாக ஒன்றிணையும் நிலையில், அந்த இரண்டரை கோடி மக்களும் அரசியலை நிர்ணயிப்பவர்களாக உருவெடுக்க முடியும்.''

புத்தகம்: ’வேர் பிடித்த விளைநிலங்கள்’

எழுத்தாளர்: ஜோ டி குரூஸ்

பதிப்பாளர்: ஜீவா படைப்பகம்

தொடர்புக்கு: 98413 00250

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு