Published:Updated:

1998ல் கருணாநிதி இப்படித்தான் கூறினார்! விளக்கிய சபாநாயகர் தனபால்!

1998ல் கருணாநிதி இப்படித்தான் கூறினார்! விளக்கிய சபாநாயகர் தனபால்!
1998ல் கருணாநிதி இப்படித்தான் கூறினார்! விளக்கிய சபாநாயகர் தனபால்!

1998ல் கருணாநிதி இப்படித்தான் கூறினார்! விளக்கிய சபாநாயகர் தனபால்!

அ.தி.மு.க எம்எல்ஏ-க்கள் கூவத்தூர் விடுதியில் இருந்தபோது, சசிகலா அணி கோடிகளில் பேரம் பேசியதாக, 'டைம்ஸ் நவ்' ஆங்கிலத் தொலைக்காட்சி திடுக்கிடும் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டது. அந்த வீடியோவில், கூவத்தூரிலிருந்து தப்பி வந்த எம்எல்ஏ., சரவணனின் உரையாடல் இடம்பெற்றிருந்தது. அந்த வீடியோவில் பேசும் சரவணன், 'சசிகலா அணியில் இணைவதற்காக 6 கோடி ரூபாய் வரை தருவதாகக் கூறினார். இந்த விவகாரம்குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கையை இரண்டாவது நாளாக இன்றும் நிராகரித்தார், சபாநாயகர் தனபால்.

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் அவர் அளித்த நீண்ட விளக்கத்தில், "எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் தி.மு.க. உறுப்பினர்கள் நேற்றைக்கே இந்தப் பிரச்னையை எழுப்பினார்கள். நானும் மிகவும் பொறுமை காத்தேன். தி.மு.க. உறுப்பினர்களை அமைதிகாக்க கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் நான் போராடினேன். தாங்கள் தற்போது எழுப்பும் பிரச்னை சம்பந்தமாக ஒருசிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன். எதிர்க் கட்சித் தலைவரும் துணைத் தலைவரும் இங்கே பேசியபோது, பத்திரிகையில் வந்துள்ளது என்று சொன்னார்கள்.  பத்திரிகைச் செய்தியை ஆதாரமாக வைத்துப் பேசினார்கள்.

ஆதாரம் பத்திரிகைச் செய்தி.  அவர்கள் சொன்னது. நான்காவது சட்டமன்றப் பேரவையில், அப்போதைய பேரவைத் தலைவர், 1972 லே It is not in order to speak on the basis of newspaper reports என்றும், Whenever Members referred to matters appearing in newspapers they should do so only after verifying the same என்று தீர்ப்பளித்துள்ளார். எட்டாவது சட்டமன்றப் பேரவையில், அப்போதைய பேரவைத் தலைவர் 1985 ஆம் ஆண்டுகளில் பத்திரிகையை மேற்கோள்காட்டி பேசக்கூடாது எனத் தீர்ப்பளித்துள்ளார். அதேபோல பத்தாவது சட்டமன்றப் பேரவையிலே இன்றைய பத்திரிகைகளில் என்னென்ன வந்திருக்கிறது என்பது விவாதமல்ல என்று 1996 ஆம் ஆண்டில் தீர்ப்பளித்துள்ளார்கள். பதினோராவது சட்டமன்றப் பேரவையில், பத்திரிகையில் வந்த செய்தியை ஆதாரமாகக் கூறுவது சரியல்ல என்று அன்றைய பேரவைத் தலைவர் தீர்ப்புரைத்துள்ளார். இதுபோன்று, நிறையத் தீர்ப்புரைகள் உள்ளன.  இதுவரையில் 15 சட்டமன்றப் பேரவைகளிலும் பேரவைத் தலைவர் விதிகளைப் பின்பற்றி, மரபைப் பின்பற்றி தீர்ப்புரைகளை வழங்கியுள்ளார்கள்.

ஏன் பத்திரிகைச் செய்தியை ஆதாரமாகவைத்து இங்கே விவாதிக்கக்கூடாது என்பதற்கு ஓர் உதாரணத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பத்திரிகைச் செய்தியை ஆதாரமாக வைத்து,  27-3-1997 அன்று இதே சட்டமன்றப் பேரவையில் விவாதம்  நடைபெற்றது. அன்றைக்கு உறுப்பினராக இருந்த சி.ஞானசேகரன் ஒரு பிரச்னையைக் கிளப்பினார். அன்றைக்கு  அவர் பேசியது, "பேரவைத் தலைவர் அவர்களே, இன்று காலை, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, ஜூனியர் விகடன் போன்ற பத்திரிகைகளில் உண்மையிலேயே தமிழ் மாநிலக் காங்கிரஸைச் சார்ந்திருக்கிற எங்களுக்கெல்லாம் பேரதிர்ச்சியைக் கொடுக்கக்கூடிய ஒரு கலர் போட்டோவை நாங்கள் பார்த்தோம்" என்றும் சொல்லி, ஒருசில கருத்துகளைச் சொல்கிறார். பின்னர் பேசிய உறுப்பினர்கள் கே.சுப்பராயன், டாக்டர் தே.குமாரதாஸ், சோ. பாலகிருஷ்ணன், ஆர்.சொக்கர் ஆகியோரும் உறுப்பினர் சி.ஞானசேகரன் கருத்துக்கு வலு சேர்க்கின்ற விதத்திலேயே தங்கள் கருத்துகளைப் பதிவுசெய்திருக்கிறார்கள். திருநாவுக்கரசு, பத்திரிகையில் வந்த புகைப்படம் உண்மையல்ல என்று பேசுகிறார். பதிலுரை வழங்கிய அன்றைய முதலமைச்சர் கருணாநிதி, ஏடுகளில் வந்துள்ள இந்தப் புகைப்படம் ஒரு புதிய திருப்பமாக அமைந்துள்ளது, இதுகுறித்து மாநில அரசு விசாரித்து, மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்படும் என்று சொல்லியுள்ளார்.

அதன் பின்னர் பேசிய ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.வெங்கடசாமி, புகைப்படத்தில் உள்ளவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் என்று தெரிவித்ததால், அவருக்கு முன்னால் பேசிய அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்தும் உண்மைக்கு மாறானதாகிறது. எதற்காக ஏற்கெனவே நடைபெற்ற ஒரு நிகழ்வைப் பற்றி இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், பத்திரிகையிலே செய்தி வந்தாலும், நிரூபிக்கத்தக்க ஆதாரம் இல்லாத வரையில் அது சம்பந்தமாக அவையில் பேசப்பட்டு, அது பதிவு செய்யப்பட்டால், அது சரியாக இருக்காது என்பதால் சொல்கிறேன். அன்றைக்கு, பேரவை முன்னவராக இருந்த பேராசிரியர் அன்பழகன், 2010 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 10ஆம் நாள் இங்கே உரையாற்றுகையில் சொல்கிறார்.

பேரவைத் தலைவர் அவர்களே, ஒரு செய்தி தன்னுடைய காதுக்கு வந்தால்கூட, அது ஒரு குற்றச்சாட்டாக வடிவம் எடுக்கிறதென்று சொன்னால், அந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டு அறிந்த பின்னர்தான் இந்த அவையிலே சொல்ல வேண்டும். வெளியிலே எத்தனையோ செய்திகள் வரலாம். அப்படி வருகிற செய்திகளையெல்லாம் இங்கே பதிவு செய்தவற்கு இது பதிவுத்துறை அலுவலகமல்ல. இன்னும் சொல்லப்போனால், இந்த அவையிலே உள்ள யாரையும் அவமதிக்கிற செய்தியை வெளியிலே யார் சொன்னாலும் அதை மறுபடியும் இங்கே வந்து சொல்வதற்குத் தேவையான அனுமதி இந்த அவையிலே கிடையாது. அப்படி அவமதிக்கக்கூடிய, குறை சொல்லக்கூடிய ஒரு குற்றச்சாட்டு இருக்குமானால், முன்கூட்டி அதை அவைத் தலைவரிடத்திலே தெரிவித்து, அதற்கான ஆதாரம் காட்டிவிட்டு அதற்குப் பிறகுதான் இந்த அவையிலே சொல்ல வேண்டும். அப்படியல்லாமல் விதியை மீறிச் சொல்கிற செய்தி எதுவாக இருந்தாலும் இந்த அவையிலே பதிவுசெய்யப்படக் கூடாதென்று கேட்டுக்கொள்கிறேன் என்று சொல்லியுள்ளார்.

அதேபோல 2011 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் நாள், இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவர், அன்றைக்கு அமைச்சராக இருந்தார், அவர் உரையாற்றுகையில், பத்திரிகையிலே வரக்கூடிய செய்திகளையெல்லாம் வைத்துப் பேசுவது முறையல்ல. தயவுசெய்து ஆதாரம் இருந்தால் பேசலாம் என்கிறார். அதேபோல 1998 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 20 ஆம் நாள், அன்றைய முதலமைச்சர் கருணாநிதி,  பத்திரிகையில் வருகின்ற ஹேஸ்யங்களை வைத்து நாம் இங்கே விவாதம் செய்வது அழகல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் தி.மு.க. நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அது சம்பந்தமான வழக்கு நிலுவையிலுள்ளது. இந்த நிலையில் இது சம்பந்தமாக உறுப்பினர்கள் இங்கே பேசுவது சரியாக இருக்காது என்கிற காரணத்தால்தான், அதை நான் அனுமதிக்க மறுக்கிறேன். நான் நேற்றைக்கே என்னுடைய தீர்ப்பை அளித்துவிட்டேன். பேரவைத் தலைவரின் தீர்ப்புகுறித்து யாரும் விமர்சிக்க முடியாது" என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு