Published:Updated:

கருணாநிதியின் லகான்... ஸ்டாலின் கையில்!

திருச்சியில் புதுக்காட்சிப.திருமாவேலன்படங்கள்: கே.ராஜசேகரன், என்.ஜி.மணிகண்டன்

கருணாநிதியின் லகான்... ஸ்டாலின் கையில்!

திருச்சியில் புதுக்காட்சிப.திருமாவேலன்படங்கள்: கே.ராஜசேகரன், என்.ஜி.மணிகண்டன்

Published:Updated:
##~##

 தோற்று நிற்கும்போதுதான் தி.மு.க. தொண்டனின் ரத்தம் உஷ்ணமேறும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது திருச்சி!

ஆளும் கட்சி கோதாவில் வேகம் காட்டுபவர்கள், அமைச்சர் பதவி பெற்றவர்கள். எதிர்க் கட்சியாக இருக்கும்போது எதிரிகளை அச்சுறுத்துவது தி.மு.க. தொண்டன்தானே! கூட்டம் கூட்டமாக, குடும்பம் குடும்பமாக, வேகம் வேகமாக இத்தனை லட்சம் பேரைக் கூட்டிக் காட்டும் சக்தி, இன்னும் தி.மு.க-விடம் இருக்கிறது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தி.மு.க-வின் உயிர் நாடி என்பது அண்ணா அறிவாலயத்திலோ, கோபாலபுரத்திலோ இல்லை. ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு இருக்கிறது என்பதை பிப்ரவரி 15, 16 நாட்களில் நடந்த தி.மு.க-வின் 10-வது மாநில மாநாடு புரியவைத்திருக்கிறது.

முன்வரிசைகளில் 500 பேர் உட்கார சொகுசு சோபா. அடுத்து 25 ஆயிரம் பேருக்கு மேல் உட்கார நாற்காலிகள்... அதற்கும் கடைசியாக 40, 50 ஏக்கரில் ஆற்று மணல் பரப்பு. அதில்தான் அடிமட்டத் தொண்டன் அமர்ந்து மாநாட்டு நிகழ்வுகளை ரசித்துக்கொண்டிருந்தான். கீழே உட்கார்ந்து கூட்டம் கேட்பது அவமானமாக ஆகி, 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அந்த மணல் பரப்பு முழுக்கவும் மனிதத் தலைகளாக, தேனீக் கூட்டமாக மொய்த்துக்கிடக்க... கடலைப் பருப்பும் பட்டாணியும் வாங்கி வைத்துக்கொண்டு, மதியம் 3 மணிக்கு மேலும் சாப்பாட்டுக்குக் கலையாமல் உரைகளைக் கேட்டுக்கொண்டிருந்த அடிமட்டத் தொண்டன் மனதில், 'யாரும் வருவார், யாரும் போவார்... ஆனால், இது என் கட்சி. நான் இருப்பேன், கடைசி வரை இருப்பேன்’ என்ற கர்வம் தெறித்தது.

பொதுவெளியில் கருணாநிதியும் தி.மு.க-வும் எத்தனையோ விமர்சனங்களை எதிர்கொண்டு நிற்கும்போது, கழகத்தவர் மத்தியில் உறுதி ஊறிக்கொண்டே இருப்பது, திருச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியின் லகான்... ஸ்டாலின் கையில்!

இரட்டை மலை அடிவாரத்தில் காடாகக் கிடந்த 355 ஏக்கரைக் கைப்பற்றி, அரசு இயந்திர எதிர்ப்புகளைச் சமாளித்து, முப்பதே நாட்களில் கோட்டைக் கொத்தளங்களை எழுப்பும் சக்தி கே.என்.நேருவுக்கு இருப்பதும் நிரூபணம் ஆகியுள்ளது. அதனால்தான், தனது தலைமை உரையில், ''நேருக்கு நேர் நேருதான். அவர் கழகத்தின் மேரு'' என்றார் கருணாநிதி. பேராசிரியர் அன்பழகன், ''இந்த மாநாட்டின் வெற்றிக்கு நேருவின் உழைப்பும், தலைவர் கலைஞரின் எழுத்தும்தான் காரணம்'' என்றார். ''மற்ற மாவட்டச் செயலாளர்கள் கோபித்துக்கொள்ளக் கூடாது. இப்படி ஒரு மாநாட்டை இதுவரை யாரும் நடத்தவில்லை. அதை இனிமேல் யாரும் நடத்தவும் முடியாது. ஏன் நேருவே நினைத்தாலும் முடியாது'' என்று மு.க.ஸ்டாலின் சொன்னார். ''இந்தக் கூட்டத்தைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்!'' என்றார் கனிமொழி. நாடாளுமன்றத் தேர்தல் வருகிறதே என்ற நடுக்கத்தில் இருந்த தி.மு.க. தலைமைக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது இந்த மாநாடு!

ஆம். இப்படி ஒரு டானிக் கருணாநிதிக்கும் தேவைப்பட்டது. கட்சித் தொண்டர்களுக்குமே அவசியமானது. 'யாரோடுதான் கூட்டணி..? யாரோடும் கூட்டணி இல்லாவிட்டால் எத்தனை இடங்கள் வெற்றி பெற முடியும்?’ என்று நித்தமும் புலம்பிக்கொண்டிருந்தவர்களை, 'நாற்பதும் நமதே’ என்று சொல்ல வைத்திருக்கிறது திருச்சி.

உற்சாகம் ஓ.கே.! ஆனால், வியூகம் என்ன? அதைத்தான் திரும்பத் திரும்பக் கேட்டார் ஸ்டாலின். வழக்கமாக, 'தலைவரே வியூகம் அமைத்து ஆணையிடுங்கள். அதற்குக் கட்டுப்பட்டுச் செயல்படுவோம். முடித்துக் காட்டுவோம். உங்கள் காலடியில் வைப்போம்’ என்றுதான் ஸ்டாலின் சொல்வார். இந்த மாநாட்டில்தான், 'தலைமைக்கான’ தகுதியோடு கட்சிக்கும் கருணாநிதிக்கும் தன்னுடைய எண்ணம் என்ன என்பதை தைரியமாக ஸ்டாலின் சொன்னார். ''தலைவர் கலைஞர் அவர்களே, பொதுச்செயலாளர் அவர்களே வியூகம் அமைத்துத் தாருங்கள். ஆணையிடுவது உங்கள் பணி. அதனை முடித்துக்காட்டுவது இளைஞர் அணி'' என்று சொன்ன ஸ்டாலின், அடுத்துச் சொன்னதுதான் முக்கியமானது.

கருணாநிதியின் லகான்... ஸ்டாலின் கையில்!

''யார் நம்மோடு கூட்டணி வருகிறார்கள், யாரோடு நாம் கூட்டணி இருக்கக் கூடாது என்றெல்லாம் ஏற்கெனவே பொதுக்குழுவிலே தீர்மானங்களாக நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறீர்கள். மேடையில் இருக்கின்ற எங்களைப் போன்றவர்கள் மட்டுமல்ல, இதோ இங்கு தரையிலே அமர்ந்திருக்கக்கூடியவர்களும் அதே உணர்வோடுதான் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மனதிலே பதிய வைத்துக்கொள்ள வேண்டும்'' என்று சொன்னார் ஸ்டாலின்.

கடந்த மாதம் நடந்த தி.மு.க. பொதுக்குழுவில், காங்கிரஸுடனும் கூட்டணி வைக்க முடியாது, பாரதிய ஜனதாவுடனும் கூட்டணி வைக்க முடியாது என்பதற்கான காரணங்களை அடுக்கி கருணாநிதி பேசியிருந்தார். 2ஜி ஸ்பெக்டரம் பிரச்னையில் தி.மு.க-வை மாட்டிவிட்டு பழிபோட்டது காங்கிரஸ் கட்சிதான் என்பதை வெளிப்படையாகச் சொன்னார். அப்படிப்பட்ட கட்சியுடன் கூட்டணி வைக்க இயலாது என்றும் கருணாநிதி பேசினார். இதற்குக் காரணம், 'காங்கிரஸுடன் கூட்டு சேர்ந்தால் தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டியிருக்கும்’ என்று ஸ்டாலின் நினைத்து, அதனை கருணாநிதியிடம் வலியுறுத்திச் சொன்னதுதான். அதனை மனபூர்வமாக ஏற்றுக் கொண்டவராக அன்று கருணாநிதி பேசினார்.

கருணாநிதியின் லகான்... ஸ்டாலின் கையில்!

ஆனால் காங்கிரஸ் கட்சி, நேரடியாகவும் மறைமுகமாகவும் தி.மு.க-வுக்கு நெருக்கடிகள் கொடுத்துவருகிறது. தூதுவர்களையும் அனுப்பி வருகிறது. 'நாங்கள் விஜயகாந்தை அழைத்து வருகிறோம். நீங்கள் எங்களோடு சேருங்கள். நீங்கள் 20 இடங்களை எடுத்துக்கொள்ளுங்கள். காங்கிரஸும் தே.மு.தி.க-வும் 20 இடங்களை எடுத்துக்கொள்கிறோம்’ என்பது மாதிரியான தூண்டில்கள் போடப்பட்டு வருகின்றன. இது கருணாநிதியின் மனதில் சலனத்தை ஏற்படுத்தி வருகிறது.

'வலுவான கூட்டணியை அமைக்காவிட்டால் வெற்றி பெற முடியாது’ என்பது கருணாநிதியின் கணக்கு. 'ஐந்து தொகுதிகள் வென்றாலும் மரியாதையாக வெல்ல வேண்டும். காங்கிரஸுடன் சேருவது, பிரிவது. மீண்டும் சேருவது... பின்னர் பிரிவது என்று மாறி மாறிச் செயல்படுவது கட்சியின் நம்பிக்கையைக் குலைக்கும்’ என்பது ஸ்டாலின் கருத்து.

தலைவருக்குத் தரும் மரியாதை ஸ்டாலினுக்குத் தரப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இதுவரை அவர் கட்சியின் கொள்கை முடிவுகளில் தலையிடுபவராக இருந்தது இல்லை. கருணாநிதியிடம் ஏதாவது ஆலோசனை சொல்வாரே தவிர, அதை மீறி கருணாநிதி நடந்தால்கூட வருத்தப்படவோ, விமர்சிக்கவோ, தடுக்கவோ மாட்டார். ஆனால் முதல் தடவையாக, 'நீங்கள்

கருணாநிதியின் லகான்... ஸ்டாலின் கையில்!

இப்படித்தான் முடிவெடுக்க வேண்டும். கடந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுதான் மேடையில் இருப்பவர்களும், மேடைக்குக் கீழே இருப்பவர்கள் நினைப்பதும்’ என்று சொல்வதன் மூலமாக கருணாநிதியின் கொள்கை என்ற லகானையும் ஸ்டாலின் கைப்பற்ற ஆரம்பித்துள்ளார். திருச்சியில் நடந்து முடிந்திருக்கும் தி.மு.க. மாநாட்டின் திருப்புமுனை எது என்று கேட்டால் இதுதான்!

'தலைவரே... தேர்தல் வியூகம் என்ன என்பதை நீங்கள் சொல்லவேண்டும்’ என்று வழக்கத்துக்கு மாறாக ஸ்டாலின் வலியுறுத்த, வழக்கமாக கர்ஜிக்கும் கருணாநிதி கொஞ்சம் அடக்கியே வாசித்தார். 'யாரெல்லாம் மதவாதத்துக்கு எதிராக இருக்கிறார்களோ, அவர்கள் எல்லாம் இந்த அணியில் சேரலாம்’ என்று மையமாக முடித்தார்.

அகில இந்திய அளவில் மதவாதத்துக்கு எதிராக இரண்டு அணிகள் இருக்கின்றன. ஒன்று காங்கிரஸ் தலைமையில் அமைந்துள்ளது. இன்னொன்று கம்யூனிஸ்ட்களால் ஒருங்கிணைக்கப்படுவது. கம்யூனிஸ்ட்கள் அணியில், ஜெயலலிதா இருக்கிறார். அதனால் அங்கு கருணாநிதி சேர முடியாது. மீதம் இருப்பது காங்கிரஸ் அணி. அதில் சேருவது கருணாநிதியின் முடிவாக இருக்குமானால், அதனை ஸ்டாலின் ஏற்பாரா என்பதே, இப்போது உடன்பிறப்புகளின் மனதில் தொக்கி நிற்கும் கேள்வி!

அன்று, 'காங்கிரஸ் ஆண்டது போதும் மக்கள் மாண்டது போதும்’ என்று சொல்லி தேர்தல் களத்தில் குதிக்கலாமா வேண்டாமா என்று  தொண்டர்களிடம் அண்ணா வாக்கெடுப்பு நடத்திய இடம் திருச்சி. இப்போது காங்கிரஸுடன் சேரலாமா வேண்டாமா என்ற கண்ணுக்குத் தெரியாத கருத்துக் கணிப்பை கருணாநிதி தொடங்கியிருக்கும் இடமும் திருச்சிதான். தொண்டர்களின் முடிவைத் திரிக்காமல் செயல்படுத்துவார்களா கருணாநிதியும் ஸ்டாலினும்?

மாநாட்டுக் கிராமம்!

திருச்சி பிராட்டியூர் ஒண்டி கருப்பசாமி கோயில், அந்த வட்டாரத்தில் மிகவும் பிரசித்தம். ஆடி மாதந்தோறும் இங்கு பக்தர்கள் கூடி ஆடு வெட்டிக் கொண்டாடுவார்கள். இதன் அடிவாரத்தில்தான் தி.மு.க. மாநாடு நடந்தது. 355 ஏக்கர் பரப்பில் சேறும் சகதியுமாக புதர் மண்டிக்கிடந்த இடத்தில் 155 ஏக்கரை மாநாடுக்கும், 200 ஏக்கரை வாகனங்கள் நிறுத்துவதற்கும்

கருணாநிதியின் லகான்... ஸ்டாலின் கையில்!

ஒதுக்கினார் நேரு. 5 ஆயிரம் லோடு செம்மண் அடிக்கப்பட்டு தரை இறுக்கப்பட்டது. தொண்டர்கள் அமரும் இடத்தில், 300 லாரி ஆற்று மணல் கொட்டப்பட்டது.

1,100 அடி நீளமும், 600 அடி அகலமும் கொண்ட பந்தல் அது. இதில் மேடை மட்டும் 200 அடி நீளம், 80 அடி அகலம். மேடை முழுக்கவே காங்கிரீட் கொண்டு அமைக்கப்பட்டது. கருணாநிதியின் வாகனம் மேடையேற சறுக்குப்பாதையும் உண்டு. மேடைக்குப் பின்புறம் ஆறு அறைகளும், மேடைக்கு வெளியே கருணாநிதி, ஸ்டாலினுக்காக இரண்டு பிரத்யேக குடில்களும் உருவாக்கப்பட்டன.

தொண்டர்கள் குளிக்க 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த் தொட்டிகளும், குடிக்க 28 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டிகளும் அந்த வளாகத்தில்  அமைக்கப்பட்டன. 14 மோட்டார் பம்புகள், 6 ஆயிரம் விளக்குகள், 30 எல்.இ.டி. ஸ்க்ரீன்கள், 162 கி.மீட்டர் தூரத்துக்கு கறுப்பு-சிவப்பு கொடிகள் என ஏக அமர்க்களம்!

மொத்தப் பந்தலையும் அமைத்தவர் 'பந்தல்’ சிவா. கலை இயக்குநராக மேடையையும், கட்-அவுட்களும் உருவாக்கியது ஜே.பி.கிருஷ்ணா. பந்தலுக்கு முன் இருந்த கோட்டையை உருவாக்கியவர் சென்னையைச் சேர்ந்த மாமுண்டி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism