Published:Updated:

'தினகரன்'னு சொன்னாலே கடன்காரனைப் போல பாக்குறாங்க! - பொன்னம்பலம்

'தினகரன்'னு சொன்னாலே கடன்காரனைப் போல  பாக்குறாங்க! - பொன்னம்பலம்
'தினகரன்'னு சொன்னாலே கடன்காரனைப் போல பாக்குறாங்க! - பொன்னம்பலம்

அதிமுகவின் இரு அணிகளும் இனி இணைய வாய்ப்பில்லை என்பது அந்த கட்சியில் நடுநிலை வகித்த பிரபலங்களுக்கும் புரிய ஆரம்பித்துவிட்டதுபோல. குறிப்பாக சினிமாக்கலைஞர்கள். இரு அணிகளும் இணையும் என்ற எதிர்பார்ப்பில் இரு தரப்பிலும் பட்டும் படாமல்  ஒதுங்கியிருந்த அவர்கள் ஒவ்வொருவராக விலக ஆரம்பித்திருக்கிறார்கள். நேற்று ஆனந்தராஜ், இன்று கபாலி பொன்னம்பலம். அதிமுகவின் தலைமைக்கழக பேச்சாளரும் நடிகருமான பொன்னம்பலம் அதிரடியாக  நேற்று பாஜகவில் இணைந்திருக்கிறார். “எந்த திட்டமிடலும் இல்லை கடந்த 3 மாசமாக போகிற இடத்திலெல்லாம் அம்மாவை ஆஸ்பத்திரியில பார்த்தீங்களான்னு மக்கள் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமத்தான் பொசுக்குனு பாஜகவில் சேர்ந்திட்டேன்” என்கிறார் பொன்னம்பலம்.
அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

கட்சிக்கு நெருக்கடியான நேரத்தில் ஏன் இப்படி முடிவெடுத்துட்டீங்க…..

முடிவை நான் எடுக்கவில்லை. மக்களே எடுக்கவைத்தார்கள். அம்மா இருந்தவரை கட்சி கட்டுக்கோப்பாகவும் கவுரமாகவும் இருந்தது. அவருக்குப்பின் ஆளாளுக்கு தலையெடுத்து அம்மாவின் பெயரை கெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அம்மாவின் மரணத்திற்குப்பின் அத்தனை நெருக்கடியிலும் கட்சிக்கு விசுவாசமாகத்தான் இருந்தேன். ஆனால் தொடர்ந்து கட்சித்தலைமையின் செயல்பாடுகள் வெறுப்பைத் தந்தன. அம்மா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விவகாரத்தில் சசிகலா தரப்பு தேவையற்று மவுனம் காத்து அவப்பெயரை சம்பாதித்துக்கொண்டனர். அவர்களின் இந்த செயலுக்கு பொதுக்கூட்டம் செல்கிற இடங்களில் நாங்கள்தான் அவமானப்பட வேண்டியிருந்தது.

எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது அவர் இறந்துவிட்டதாக கருணாநிதி பிரசாரம் செய்தார். அப்போது இரட்டை விரலைக் காட்டும் எம்.ஜி.ஆரின் போட்டோவை வெளியிட்டு அதை உடைத்தெறிந்தார்கள். அம்மா மருத்துவமனையில் இருந்த 90 நாட்களில் எத்தனையோ வதந்திகள் உலவின. ஒருபோட்டோ வெளியிட்டிருந்தால்கூட யாரும் வாய்திறந்திருக்கமாட்டார்கள். தேவையில்லாமல் மவுனம் காத்து அதை பெரிய விவகாரமாக்கிவிட்டார்கள். அம்மாவின் மீதுள்ள பாசத்தில் போகிற இடங்களில் எல்லாம் “நீங்களாவது ஆஸ்பத்திரியில அம்மாவை பார்த்தீங்களான்னு தொண்டர்கள் கேட்கிற கேள்விகளுக்கு எங்களால் பதில் சொல்லமுடியவில்லை. பதில் சொல்லவேண்டியவர்கள் மக்களை சந்திக்காமல் பத்திரமாக இருந்துகொண்டார்கள். இதுவே என்னைப்போன்றவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டது.  இதனால் கொஞ்சகாலமாகவே அரசியலில் இருந்து ஒதுங்கிவிட நினைத்திருந்தேன்.

ஜெயலலிதாவின் மரணத்தில் உங்களுக்கு சந்தேகம் உள்ளதா?

எனக்கு இருக்கிறதா, இல்லையா என்பது முக்கியமில்லை. மக்கள் கேட்கிறார்களே..அதற்கு பதில் சொல்லவேண்டாமா…,சாதாரண குப்பன் சுப்பன் இறந்தால் கூட சந்தேகம் எழுந்தால் காவல்துறை விசாரிக்கும். ஆனால் ஒரு மாபெரும் தலைவியின் மரணத்தில் இத்தனை சந்தேகம் எழ வாய்ப்பு ஏற்படுத்தியிருக்கக்கூடாது. சந்தேகம் எழுந்துவிட்டால் அதை உரியவர்கள் தெளிவுபடுத்தவேண்டுமல்லவா? எனக்கு தெரிந்தவரையில் சசிகலா மற்றும் ஓரிரு மருத்துவர்கள் தவிர மருத்துமனையில் அம்மாவை சந்தித்தவர்கள் யாருமில்லை. மத்திய அரசின் பிரதிநிதிகள் முதல் கவர்னர் வரை யார் வந்தபோதும் ஒரே ஒரு மருத்துவர்தான் “அம்மா நலமா இருக்கிறார்” என கிளிப்பிள்ளை போல் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். 

அதைக்கேட்டு எங்களில் சிலர் அம்மா கையாட்டினார், சிரித்தார், இட்லி சாப்பிட்டார் என சொன்னார்கள். ஆனால் ஒருவரும் சந்திக்கவில்லை. அம்மாவை வான்வழியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருப்பார்கள்? சாதாரண ஒருவனாக நான் கேட்கிறேன். உயரடுக்கு பாதுகாப்பு கொண்ட ஒரு முதலமைச்சர் வீட்டில் ஒரு சிசிடிவி காமிராக் கூட அன்று என்பதை சிறுபிள்ளையும் நம்பாது. வீட்டில் இல்லையென்றால் உலகப்புகழ்பெற்ற மருத்துவமனை என சொல்லிக்கொள்கிற அந்த மருத்துவமனையிலகூடவா ஒரு காமிராவும் இல்லை?... அம்மா உள்ளே சேர்ந்தது முதல் ஒரு போட்டோ அல்லது வீடியோ என ஒரு ஆதாரமும் வெளியிடப்படாதது தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் மனதில் ஆயிரம் கேள்விகளை எழுப்புகிறது. இது சந்தேகத்தை எழுப்பாதா மக்களுக்கு? இதை அழுத்தமாக யாரும் கேள்வி கேட்காத வருத்தம் எங்களைப்போன்ற லட்சக்கணக்கான தொண்டர்களிடம் உள்ளது.

 மரணத்தில் நீதி கேட்கிறார் ஓ.பி.எஸ். தினகரன் அணி மீது அதிருப்தி என்றால் ஓ.பி.எஸ் அணியில் சேர்ந்திருக்கலாமே…

கட்சியில் கவுரவமாக சைரன் காரில் பவனி வந்தவரை ஓ.பி.எஸ்க்கு அம்மாவின் மரணத்தில் சந்தேகம் எழவில்லை.  தனது பதவிக்கு ஆபத்து வந்ததும் அம்மாவின் மரணத்தில் சந்தேகம் என்றால் அவரது நேர்மையை எப்படி நம்புவது...ஒரு முதலமைச்சர் பதவியில் இருப்பவர் தன்னை மிரட்டினால் அதை உரிய இடத்தில் சொல்லி பாதுகாப்பு தேட முடியாதா, குழந்தையைப்போல் 'மிரட்டி எழுதிவாங்கினார்கள்' என்றார். அவரின் பதவிக்கு ஆபத்து என்றபின் அவருக்கு அம்மா ஞாபகம் வந்து தியானம் செய்யப்போனார். அதையும் வீட்டில் செய்யாமல் ரோட்டுக்கு வந்து பத்திரிகை, மீடியாக்கள் முன்தான் செய்தார். 

அம்மா அத்தனை செல்வாக்குடன் வைத்திருந்த கட்சியையும் அதன் தலைவர்களையும் மக்கள் சமூக வலைத்தளங்களில் சகட்டுமேனிக்கு கேலிக் கிண்டல் செய்யறாங்க. அதிமுக மக்களின் செல்வாக்கை இழுந்துவிட்டதற்கு இதுவே சான்று. மக்களை நேரில் சந்திக்கும்போது நீங்க இ.பி.எஸ் அணியா, ஓ.பி.எஸ் அணியா னு மக்கள் கேட்கிறபோது கூசிப்போகுது மனசு. “அம்மாவை நீங்களாவது  நேரில் பார்த்தீங்களா“ன்னு சட்டையைப் பிடிக்கிறாங்க...இதுக்கெல்லாம் பதில் சொல்லமுடியாமத்தான் ஒரு முடிவெடுக்கவேண்டியதாகிவிட்டது. மேலும் அம்மாவின் இறப்புக்குப்பின் மக்கள் நலத்திட்டங்களில் இந்த அரசு கவனம் செலுத்தவில்லை. 24 மணிநேரமும் தங்கள் சொந்தப் பிரச்னைகளைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.

என் சொந்த சகோதரனுக்கு அரசிடம் இருந்து வரவேண்டிய சிறு தொகை ஒன்றுக்காக கடந்த 6 மாதமாக காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு அலைந்துகொண்டிருக்கிறார்.கட்சியின் தலைமைக்கழக பேச்சாளன் எனக்கே இந்த நிலை என்றால் சாமான்யன் நிலை என்ன?...கூவத்துார் விவகாரம் அதிமுக வரலாற்றில் ஒரு பெரும் கறை. மக்கள் பிரதிநிதிகளை அடைத்து வைத்து ஆறு கோடி, பத்து கோடி என விலைபேசியதெல்லாம் கேவலமான அரசியல். அதிமுகவுக்கு இனி எக்காலத்திலும்  இதனால் மதிப்பு இருக்காது. உண்மையில் இந்த
செயல்களால் இரு அணிகள் மீதும் அம்மாவின் ஆன்மாவேகூட ஆத்திரமாகத்தான் இருககும். 

அதனால்தான் பாஜக வை தேர்ந்தெடுத்தீர்களா....

ஆம்...அம்மாவுக்கு திமுக எதிரி. அதனால் எனக்கும் எதிரி. ஒரு இந்து என்ற முறையில் இப்போது மத்திய அரசு மேற்கொண்டுவரும் சில நடவடிக்கைகள் எனக்கு பிடித்திருந்தது. இருப்பினும் சேரும் எண்ணம் இருந்ததில்லை. உண்மையில் பொன்.ராதாகிருஷ்ணனை நான் திட்டமிட்டு சந்திக்கவில்லை. நேற்று தினகரனை சந்திக்க கிளம்பிக்கொண்டிருந்தபோது நண்பர் ஒருவர் எங்கே போறீங்க என்றார். தினகரனை பார்க்கப்போறேன் என்றேன். அதற்குப்பின் அவரிடம் எந்த பதிலுமில்லை. என்னை கடன்காரனைப்போல் பார்த்துவிட்டு கிளம்பிவிட்டார். எனக்கு அவமானமாகப்போய்விட்டது. அப்போது யதேச்சையாக வீட்டுக்கு வந்த பாஜக நண்பர் ஒருவர், “பொன்.ராதாகிருஷ்ணனை பார்க்கப்போறேன் கூட வருகிறீர்களா ” என்றார். சும்மாதான் போனேன். அங்கு சென்றபின் மனதில் ஏதோ உத்தரவு வந்ததுபோல் இருந்தது. ஆன் தி ஸ்பாட் என் ஆசையை பொன்.ராதாகிருஷ்ணனிடம் சொல்லி கட்சியில் சேர்ந்துவிட்டேன். பதவி, பொறுப்பு எதற்காகவும் இந்த முடிவெடுக்கவில்லை. கவுரவமான ஒரு இடத்தில் இருந்து மக்கள் பணியாற்றவேண்டும் அவ்வளவுதான்.

உங்கள் சக கலைஞர்கள் என்ன முடிவில் இருக்கிறார்கள்...

அவர்களும் கிட்டதட்ட என் மனநிலையில்தான் உள்ளார்கள். ஆனால் அவர்கள் ரஜினி சாரின் முடிவுக்காக காத்திருக்கிறார்கள். ரஜினி சாரின் உடல்நிலை, வயது காரணமாக அவர் தனிக்கட்சி துவங்குவாரா என்பது தெரியவில்லை. மேலும் இத்தனை கட்சிகளுக்கு மத்தியில் தனிக்கட்சி துவங்குவாரா என்பதும் சந்தேகமே. ரஜினி தன் நிலைப்பாட்டை அறிவித்தால் அவர்களும் ஒரு முடிவெடுப்பார்கள். அநேகமாக பாஜகவில் கவுரவமாக ரஜினியுடன் வருவது அவர்களின் திட்டம் என்றே நினைக்கிறேன். எப்படியிருந்தாலும் அதிமுகவை கைகழுவும் முடிவில்தான் உள்ளனர்.  எம்.ஜி.ஆர் ஜெயலலிதா சினிமாக்கலைஞர்கள் என்பதால் அவர்கள் எங்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் அளித்ததோடு பரிவோடும் எங்களை நடத்தினார்கள். ஆனால் இனி அதை எதிர்பார்க்கமுடியாது.  

பின் செல்ல