Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

கவல் தொழில்நுட்பத் துறையின் தமிழகத் தலைமையிடம் போல, பிரமாண்டமாக அமைந்திருக்கும் சென்னை சிறுசேரி ஐ.டி. பூங்காவில் நிகழ்ந்த கொடூரம் இது. அங்கு உள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த உமா மகேஸ்வரி என்ற 23 வயது இளம் பொறியாளர், சிப்காட் வளாகத்துக்கு உள்ளேயே புதர்க் காட்டுக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டிருக்கிறார். பல்லாயிரம் பேர் பணிபுரியும் அந்த வளாகத்தில், கிட்டத்தட்ட ஒன்பது நாட்கள் கிடந்திருக்கிறது சடலம்.  

உடல் முழுக்கக் காயங்களுடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ள உமாவின் கொலை நிகழ்ந்தது எப்படி என்ற மர்மத்தின் முடிச்சுகள் இன்னும் அவிழவில்லை. புகார் அளிக்கப்பட்டும், நிலைமையின் விபரீதம் புரியாமல் விசாரணையைத் தாமதப்படுத்திய காவல் துறை ஆய்வாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதே சமயம் இந்த விஷயத்தில் உரிய கண்காணிப்பை மேற்கொள்ளாத காவல் துறை மட்டும்தான் குற்றவாளியா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'அந்தப் பெண் அன்று வாகன வசதி வேண்டாம் என்று அவராகவே எழுதிக் கொடுத்துள்ளார்’ என்று நிறுவனம் தெரிவித்ததாகக் காவல் துறை சொல்கிறது. ஒருவேளை அது உண்மையாக இருந்தாலும், உமா மகேஸ்வரி கொல்லப்பட்டுக்கிடந்தது அவர் பணிபுரிந்த நிறுவனம் அமைந்துள்ள அதே வளாகத்தில்தான்! பன்னாட்டு நிறுவனங்களால், தன் வளாகத்துக்குள்கூட தன் ஊழியர்களுக்குப் பாதுகாப்புக்கு உத்தரவாதத்தை அளிக்க முடியாதா?

தகவல் தொழில்நுட்பத் துறையில் எண்ணற்ற வேலைவாய்ப்பு, இணையற்ற ஊதியம் என்ற நிலை இப்போது இல்லை. படித்தவர்களுக்கு வேலை இல்லை; வேலை கிடைத்தாலும் நல்ல சம்பளம் இல்லை. இருக்கும் வேலையே எப்போதும் பறிபோகும் சூழ்நிலை. ஊழியர்களின் கையறு நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, சலுகைகள் படிப்படியாக வெட்டப்படுகின்றன. ஆனால், நகரத்தில் இருந்து 20, 25 கி.மீ. தூரம் வெளியில் அமைந்திருக்கும் இந்த நிறுவனங்கள், கிராம ஊராட்சியில் தொழில் நடத்துவதாகச் சொல்லி அரசின் அத்தனை சலுகைகளையும் அனுபவிக்கின்றன.

இரவு-பகலாக கணினித் திரையில் கண் விழித்து மன இறுக்கத்தில் வாழ்வை நகர்த்தும் ஐ.டி. தொழிலாளர்கள் இப்போதேனும் ஒன்றுசேர வேண்டும். 'யாருக்கோ நடப்பதுதானே...’ என்று விலகிச் செல்லாமல் கரம் கோக்க வேண்டும். உங்கள் அடிப்படைக் கோரிக்கைகளை அடர்த்தியான குரலில் முன்வைத்தால் மட்டுமே வருங்காலத்திலேனும் உமா மகேஸ்வரிகளின் மரணங்களைத் தவிர்க்க முடியும்!