Published:Updated:

''என் மகளை மாவட்டச் செயலாளராக நியமியுங்கள்!'' - 'முரட்டு பக்தனின்' கோரிக்கையை நிறைவேற்றிய மு.க. ஸ்டாலின்

''என் மகளை மாவட்டச் செயலாளராக நியமியுங்கள்!'' - 'முரட்டு பக்தனின்' கோரிக்கையை நிறைவேற்றிய மு.க. ஸ்டாலின்
''என் மகளை மாவட்டச் செயலாளராக நியமியுங்கள்!'' - 'முரட்டு பக்தனின்' கோரிக்கையை நிறைவேற்றிய மு.க. ஸ்டாலின்

தூத்துக்குடி மாவட்ட தி.மு.கவைப் பொறுத்தவரையில் எல்லாமே என்.பெரியசாமிதான்.  ’’எல்லாம் அவரே.. அவரே எல்லாம்” என்ற நிலையில்தான் இருந்தது. வார்டு கவுன்சிலர் முதல் மேயர் பதவி வரை இவரது கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்குத்தான் பதவியே கிடைக்கும் என்ற நிலை இருந்து வந்தது. கட்சியில் ஒருவரை உச்சத்துக்குக் கொண்டு வருவதும், அதே நேரத்தில் கட்சியை விட்டு காணாமல் செய்வதும் இவருக்கு கைவந்த கலை. முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் , முன்னாள் எம்எல்ஏ டேவிட்செல்வன், முன்னாள் எம்பி-க்கள் ராதிகாசெல்வி, ஜெயதுரை என இவரை அரசியலில் எதிர்க்க முடியாமல் கட்சியை விட்டு ஒதுங்கியவர்களின் பட்டியல் நீளும். கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தூத்துக்குடி மாவட்ட தி.மு.கவை தன் முழுக் கண்காணிப்பில் வைத்திருந்த பெரியசாமி கடந்த மே மாதம் 26 ஆம் தேதி நுரையீரல் சம்மந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.  

சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரியசாமி, இறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு உடல்நிலையைப் பார்த்துக் கொள்வதில் முழுக்கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் கூறியதாலும், கட்சி வேலைகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்பதால் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, தன் உடல்நலத்தை காரணம் காட்டி, ’’ தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி வேண்டாம்,’’ எனச் சொல்லி லெட்டர் கொடுத்துள்ளார்.

 ’’இப்போ கட்சியைப் யாரு பாத்துகிறாங்க’’ என ஸ்டாலின் கேட்க, ‘’என் மகள் கீதாஜீவனும், மகன் ஜெகனும்தான் பாத்துக்கிறாங்க’’ எனச் சொல்லியிருக்கிறார் பெரியசாமி.  ’’ உங்களுக்குப் பதிலா வேற யாரை நியமிக்க..?’’ என்று ஸ்டாலின் கேட்க, ‘’என் மகன் அல்லது மகளை நியமிக்கலாம்’’ என ஒரு கோரிக்கையை வைத்தாராம் பெரியசாமி.

‘’இப்போதைக்கு ஒன்னும் பிரச்னையில்லை இப்படியே போகட்டும். நீங்க ஆலோசனை சொல்லுங்க மகள் அல்லது மகன் உங்களுக்கு உதவியா இருந்து கட்சி வேலையைப் பார்க்கட்டும்’’னு சொன்னாராம் ஸ்டாலின்.

இந்தி திணிப்பு மற்றும் நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரி தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் ஆ.ராசா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிதான் பெரியசாமி கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சி. இதில் கூட பெரியசாமி கலந்து கொள்வாரா, மாட்டாரா ? என்ற எதிர்பார்ப்பில் அவரது மகன் ஜெகன் மற்றும் உதவியாளர்கள் கைத்தாங்கலாகவே மேடைக்கு அழைத்து வந்தனர்.

அ.தி.மு.கவில் இருந்து தி.மு.கவிற்கு வந்த தற்போதைய திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனும், ம.தி.மு.கவில் இருந்து தி.மு.கவுக்கு வந்த தற்போதைய தி.மு.க மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயலும் பெரியசாமியுடன் அரசியல் யுத்தம் செய்து வந்தனர்.  

பெரியசாமி லெட்டர் கொடுத்த விவகாரம் தெரிந்ததும் மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிக்க தனித்தனியாக காய் நகர்த்தி வந்தனர் அனிதாவும், ஜோயலும்.   

பெரியசாமி இறந்த கடந்த 26 ஆம் தேதி காலை சென்னையில் நேரடியாக அஞ்சலி செலுத்தியதோடு,

மறுநாள் பெரியசாமியின் தூத்துக்குடி போல்பேட்டையிலுள்ள வீட்டுக்கு ஸ்டாலினும், கனிமொழியும் நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தினர். அன்று தூத்துக்குடியிலேயே தங்கி மறுநாள் (27 ஆம் தேதி) பெரியசாமியின் இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்டு, சில நாள்களுக்கு முன்பு தூத்துக்குடியில் நடந்த பெரியசாமியின் உருவப்படத் திறப்பு மற்றும் புகழஞ்சலி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பெரியசாமியின் படத்தை திறந்து வைத்தார்.

அதில் பேசிய ஸ்டாலின், ‘’ பெரியசாமி கலைஞர் மீது அதிக பாசம் உள்ளவர். அவரைப் பார்த்தால் மேல்மட்டத்தில் இருக்கும் நாங்களே பயப்படுவோம். அதனால்தான் கலைஞர் பெரியசாமிக்கு ‘’முரட்டு பக்தன்’’ என்ற பெயர் வைத்தார். வேறெந்த மாவட்டச் செயலாளருக்கும் இப்படி பெயர் வைத்து கலைஞர் அழைத்ததில்லை. ஒரு மாவட்டச் செயலாளருக்கு எடுத்துக்காட்டாக செயல்பட்டவர் பெரியசாமி. தூத்துக்குடியில் தி.மு.க வேரூன்றுவதற்கும் வளர்வதற்கும் முக்கியக் காரணமாக இருந்தவர் பெரிசாமி’’ என பேசினார்.  

அனிதா ராதாகிருஷ்ணன், ஜோயல் மற்றும் பெரியசாமி குடும்பத்தில் கீதாஜீவன் அல்லது ஜெகன் ஆகியோரது போட்டியில் பெரியசாமியின் இடத்தில் அடுத்தது யார் ? என்ற எதிர்பார்ப்புக்கிடையில் கடந்த 17 ஆம் தேதி தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பின்படி, வடக்கு மாவட்டச் செயலாளராக பெரியசாமியின் மகளும் தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏ கீதாஜீவனையும், தெற்கு மாவட்டச் செயலாளராக அனிதா ராதாகிருஷ்ணனையும் அறிவித்துள்ளது தி.மு.க தலைமை.

பெரியசாமி இறப்பதற்கு முன் லெட்டர் கொடுக்கும்போது ஸ்டாலினிடம் வைத்த கோரிக்கையின் படி மகள் கீதாஜீவன் அல்லது மகன் ஜெகன் ஆகிய இருவரில் மகள் கீதா ஜீவனை வடக்கு மாவட்டச் செயலாளராக அறிவித்து பெரியசாமியின் கடைசி கோரிக்கை, ஆசையை நிறைவேற்றியிருக்கிறார் ஸ்டாலின்.