Published:Updated:

இதற்காகத்தான் ராம்நாத் கோவிந்தை முன்னிறுத்துகிறதா பி.ஜே.பி!?

இதற்காகத்தான் ராம்நாத் கோவிந்தை முன்னிறுத்துகிறதா பி.ஜே.பி!?

இதற்காகத்தான் ராம்நாத் கோவிந்தை முன்னிறுத்துகிறதா பி.ஜே.பி!?

இதற்காகத்தான் ராம்நாத் கோவிந்தை முன்னிறுத்துகிறதா பி.ஜே.பி!?

இதற்காகத்தான் ராம்நாத் கோவிந்தை முன்னிறுத்துகிறதா பி.ஜே.பி!?

Published:Updated:
இதற்காகத்தான் ராம்நாத் கோவிந்தை முன்னிறுத்துகிறதா பி.ஜே.பி!?

ந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக பீகார் மாநில ஆளுநர் ராம்நாத் கோவிந்தை பி.ஜே.பி. அறிவித்துள்ளது.

இந்துத்துவ கொள்கையைத் தீவிரமாக முன்னிறுத்தும் தலைவர்களையே முதல்வர்களாகவும், இதர உயரிய பதவிகளிலும் பி.ஜே.பி அமர்த்தி வருவது தொடர்கிறது. அதன் ஒருபகுதியாகவே, நாட்டின் 14-வது குடியரசுத் தலைவர் தேர்தலிலும் தனது வேட்பாளராக ராம்நாத் கோவிந்தை அக்கட்சி அறிவித்துள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தலித் சமூகத்தைச் சேர்ந்த 71 வயதான ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக நிறுத்தப்படுவதாக பி.ஜே.பி தலைவர் அமித் ஷா அறிவித்தார். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த், தற்போது பீகார் மாநில ஆளுநராக உள்ளார்.

பி.ஜே.பி-க்கு நாடாளுமன்ற மக்களவையில் போதிய பெரும்பான்மை பலம் இருந்தாலும், மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை. தவிர, இந்தியாவின் 10 மாநிலங்களில் பி.ஜே.பி ஆட்சியில் உள்ளது. இதன்காரணமாக, குடியரசுத்தலைவர் வேட்பாளரை போட்டியின்றி தேர்வுசெய்வதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவை ஏற்கெனவே கோரியிருந்தது. எனினும், பி.ஜே.பி தன்னிச்சையாக தனது குடியரசுத்தலைவர் வேட்பாளரை அறிவித்துள்ளது.

இந்நிலையில், யார் இந்த ராம்நாத் கோவிந்த்? அரசியலுக்கு எப்படி வந்தார்? குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதன் பின்னணி என்ன என்பது குறித்து பார்ப்போம்.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 1945 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி பிறந்தவர் ராம்நாத் கோவிந்த். பி.காம். பட்டம் பெற்ற இவர், கான்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று 1971 ஆம் ஆண்டு வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். இவருக்கு 1974 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர் சவிதா. ராம்நாத்-சவிதா தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

1977 ஆம் ஆண்டு முதல் 1979 ஆம் ஆண்டு வரை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞராகவும், 1980 முதல் 1993 ஆம் ஆண்டுவரை உச்சநீதிமன்ற வழக்கறிஞராகவும் இருந்துள்ளார். கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் மத்திய அரசின் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு நிலைகளில் வழக்கறிஞராக பணியாற்றிய ராம்நாத் கோவிந்த், சமூகத்தின் அடித்தட்டு மக்கள் குறிப்பாக SC, ST வகுப்பைச் சேர்ந்த பெண்களின் பல்வேறு பிரச்னைகளுக்கான சட்ட ஆலோசனையை இலவசமாக வழங்கியுள்ளார்.

1994 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் அரசியலுக்கு வந்த அவர், தொடர்ந்து இரண்டு முறை அதாவது 2006 ஆம் ஆண்டுவரை மொத்தம் 12 ஆண்டுகாலம் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தார். தனது பதவிக்காலத்தில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், உள்துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல், சட்டம் மற்றும் நீதித்துறை உள்ளிட்ட முக்கிய நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2002 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக பங்கேற்று உரையாற்றினார்.

தவிர, 1998 முதல் 2004 ஆம் ஆண்டுவரை பி.ஜே.பி-யின் தலித் அமைப்பான தலித் மோர்ச்சாவின் தலைவராகவும், கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளராகவும் பதவி வகித்துள்ளார். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக செயல்பட்டவராக பார்க்கப்படும் ராம்நாத் கோவிந்த், மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தி, உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் ஊரகப் பகுதிகளில் கல்வியைக் கொண்டுசேர்ப்பதற்கான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார்.

2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது உத்தரப்பிரதேச மாநில பி.ஜே.பி பொதுச்செயலாளராக இருந்த ராம்நாத் கோவிந்த், தனது செயல்பாடுகளின் மூலம் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் நரேந்திர மோடியிடம் நற்பெயர் பெற்றார். அதன் காரணமாகவே, அவர் பீகார் மாநில ஆளுநராக 2015 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நாட்டின் மிக உயரிய குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் முன்னிறுத்தப்பட்டுள்ளார் ராம் நாத் கோவிந்த். இவர் வரும் வெள்ளிக்கிழமை மனுத்தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பி.ஜே.பி மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட பலரின் பெயர்கள் குடியரசுத்தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் விருப்பப்பட்டியலில் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நாளை மறுநாள் டெல்லியில் நடைபெறவுள்ளது. 

இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகள் மீதான தாக்குதல்கள், ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் சர்ச்சைக்குரிய பேச்சு, மாட்டிறைச்சி விவகாரம் போன்ற பல்வேறு பிரச்னைகளில் சிக்கித்தவிக்கும் பி.ஜே.பி, தலித்துகளுக்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தை மாற்றும்நோக்கில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்தை குடியரசுத்தலைவர் வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளது. ஆனால், பி.ஜே.பி-யின் இந்த அரசியல் விளையாட்டு எதிர்க்கட்சிகளுக்கு மிகப்பெரும் தலைவலியை உண்டாக்கியுள்ளது என்றே கூறலாம். 

மேலும், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் 73 தொகுதிகளை பி.ஜே.பி கைப்பற்றிய நிலையில், அண்மையில் முடிவடைந்த அம்மாநில சட்டமன்றத் தேர்தலில் மூன்றில் இருமடங்கு தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதன்மூலம் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை நாட்டின் உயரிய பதவிக்குத் தேர்ந்தெடுப்பது என்று பி.ஜே.பி முடிவு செய்துள்ளது. மேலும், தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தியதன் மூலம், எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையைக் குலைப்பதும் பி.ஜே.பி-யின் திட்டமாகும்.
பி.ஜே.பி-யை ஒரு தலித் விரோத கட்சியாக விமர்சித்து வரும் எதிர்க்கட்சிகள், ராம்நாத் கோவிந்த்-ஐ வேட்பாளராக ஏற்றுக்கொள்ளுமா அல்லது அவருக்கு ஆதரவு அளிக்க மறுக்கும்பட்சத்தில், என்ன காரணத்தைக் கூறி எதிர்க்கப்போகின்றன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!