Published:Updated:

`சராசரி சொத்துமதிப்பு ரூ.18 கோடி; 93% கோடீஸ்வரர்கள்!' - `ரிச்'சான ஹரியானா எம்.எல்.ஏ-க்கள்

ஜனநாயக ஜனதா கட்சியைச் சார்ந்த உறுப்பினர்களுடைய சராசரி சொத்து மதிப்பானது 25.26 கோடியாக உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஹரியானா தேர்தல் போட்டி
ஹரியானா தேர்தல் போட்டி

ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கான தேர்தலின் முடிவுகள் இழுபறியாக நீடித்த நிலையில் சுயேச்சை உறுப்பினர்கள் ஆதரவோடு பா.ஜ.க ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்நிலையில் அம்மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேர் கோடீஸ்வரர்கள் என்ற கணக்கெடுப்பை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms- ADR) நடத்தியுள்ளது. இந்த ஆய்வின் முடிவில் கடந்தமுறை தேர்வான 90 உறுப்பினர்களில் 75 உறுப்பினர்கள் ஒரு கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்புடன் 84 சதவிகித கோடீஸ்வர உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றமாக இருந்தது. அதேநேரம், இந்தமுறை 9 சதவிகிதம் அதிகரித்து கோடீஸ்வர உறுப்பினர்களின் எண்ணிக்கை 93 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாகத் தெரியவருகிறது.

வாக்குப் பதிவு
வாக்குப் பதிவு

இதற்கு முன்பு நடந்த தேர்தலில் 12.97 கோடியாக இருந்த அம்மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களுடைய சராசரி சொத்து மதிப்பானது, இம்முறை 18.29 கோடியாக அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கட்சி வாரியாகத் தொகுக்கப்பட்ட தரவுகளிலிருந்து பா.ஜ.க-வில் உள்ள 40 உறுப்பினர்களில் 37 பேரும், காங்கிரஸ் கட்சியின் 31 உறுப்பினர்களில் 29 பேரும் கோடீஸ்வரர்கள். 10 உறுப்பினர்களைப் பெற்று அம்மாநிலத்தின் கிங் மேக்கராகத் திகழும் துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சியைச் சார்ந்த உறுப்பினர்களுடைய சராசரி சொத்து மதிப்பானது 25.26 கோடியாக உள்ளது. மொத்தமுள்ள 90 உறுப்பினர்களில் காங்கிரஸின் 4 பேர், பா.ஜ.க-வில் இருவர் மற்றும் ஜ.ஜ.க-வின் ஒரு உறுப்பினர் உட்பட 12 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்று தெரியவந்துள்ளது. மேலும், சட்டப்பேரவையிலுள்ள 57 உறுப்பினர்கள் 40 வயதைக் கடந்தவர்கள் என்றும், 62 பேர் இளங்கலை பட்டங்களைப் பெற்றுள்ளனர் என்பது அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.