Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்

'ஜெய் ஜவான்... ஜெய் கிஸான்’ என்பது இந்திய தேசத்தின் கோஷம். ஆனால், அலட்சியம், ஊழல், சதி... எனத் துர்குணங்கள் பாதுகாப்புத் துறையில் பயங்கரமாக ஊடுருவிவிட்ட அச்சம் எழுகிறது. கடந்த ஏழு மாத காலத்தில் இந்தியக் கடற்படையில் 11 விபத்துகள் நடைபெற்றுள்ளன. பாதுகாப்புத் துறைக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் 16-வது பொதுத் தேர்தலை நடத்தப்போகிறோம்.

 கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிந்துரக்ஷக் என்ற நீர்மூழ்கிக் கப்பல் மும்பை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது, விபத்துக்குள்ளாகி மூழ்கியது. 18 வீரர்கள் பலியானார்கள். இதையடுத்து சிறியதும் பெரியதுமாக பல விபத்துகளை நமது கடற்படை வரிசையாகச் சந்தித்தது. கடந்த மாத இறுதியில், சிந்துரத்னா என்ற நமது இன்னொரு நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளாகி, இரண்டு வீரர்கள் பலியானார்கள். எஞ்சிய வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். நவீனத் தகவல்தொடர்பு யுகத்தில், நவீன ஆயுதங்களுடன் இருக்கும் அந்த வீரர்கள், அதிர்ஷ்டத்தின் உதவியால்தான் உயிர் தப்ப நேர்ந்தது என்பது அவமானம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடற்படைத் தளபதியாக இருந்த டி.கே.ஜோஷி, விபத்துகளுக்குப் பொறுப்பேற்று பதவி விலகினார் என்றபோதிலும், விபத்துகள் தொடர்கின்றன. கல்விக்கும் சுகாதாரத்துக்கும் ஒதுக்குவதைவிட ராணுவத்துக்கு மிக அதிக நிதி ஒதுக்கும் ஒரு நாட்டில் ஏன் இத்தகைய விபத்துகள், உயிரிழப்புகள் தொடர்ந்து நடக்கின்றன? காரணத்தை ஆராய்ந்தால், கருவிகளின் பழுதுதான் காரணம் எனச் சொல்லப்படுகிறது. 'சிந்துரத்னா விபத்துக்கு, காலாவதியான மின்கலம்தான் காரணம்’ என்று போகிறபோக்கில் அறிக்கை தருகிறார்கள். எனில், காலாவதியானது மின்கலம் மட்டும்தானா?

தேசப் பொருளாதாரத்தின் பெரும் பகுதியை உள்வாங்கிக்கொள்ளும் ராணுவம், அந்தப் பணத்தை முறையாக செலவு செய்கிறதா? ஊழலற்ற நிர்வாகம் ராணுவத்திலேனும் நடக்கிறதா? நிலைமை இவ்வாறு இருக்க, வல்லரசு வசனம் பேசி நம்மை தேசியப் பெருமிதத்தில் திளைத்திருக்கச் செய்யும் திருப்பணியை மட்டும் எல்லோரும் தவறாமல் செய்கின்றனர்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.. இந்தத் தேசத்தின் ஆன்மா உங்களை உற்றுக் கவனித்துக்கொண்டிருக்கிறது. நீரில் மூழ்கியிருக்கும் உங்கள் ஊழல் கப்பல், ஒருநாள் வெளியில் வந்துதான் தீரும். அப்போது மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism