Published:Updated:

கருணாநிதி - ஜெயலலிதாவின் நேருக்கு நேர்!

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் தமிழா...’ ப.திருமாவேலன், ஓவியங்கள்: கண்ணா

கருணாநிதி - ஜெயலலிதாவின் நேருக்கு நேர்!

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் தமிழா...’ ப.திருமாவேலன், ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
கருணாநிதி - ஜெயலலிதாவின் நேருக்கு நேர்!

மூன்று மாதங்களாக மூளையைக் குழப்பிக்கொண்டிருந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிக் கணக்குகளுக்கு விடை கிடைத்த வாரம் இது!

காங்கிரஸோடு சேர்வார் என்று கருதப்பட்ட கருணாநிதி, அந்தக் கட்சியை அலட்சியப்படுத்த பா.ஜ.க-வைச் சேர்த்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜெயலலிதா, அவர்களைச் சீண்டாமல் போக... தமிழகத்தின் ஏகபோகமாக இதுவரை இருந்த இந்த இரண்டு பிரதான கட்சிகளுக்கு மாற்றாக, மூன்று எதிரிகள் முளைத்து நிற்கிறார்கள்; அது அடுத்த வாரத்தில் நான்காக மாறலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒன் மேன் ஆர்மியாக 'நாற்பதும் நமதே’ என்று ஜெயலலிதா கிளம்பி, ஓர் ஆண்டு காலம் ஆகிவிட்டது. 'அம்மாதான் அடுத்த பிரதமர்’ என்று அதில் காமெடியைச் சேர்த்தார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

இந்த ஆசையோடு தேசிய அளவிலான 11 கட்சிக் கூட்டணிக்குள் போனார் ஜெயலலிதா. அதில் இணைந்தவர்களின் வாக்கு வங்கியைக் காட்டிலும், பிரதமர் ஆசைக் கனவாளர்கள் அதிகம் இருந்தனர். முலாயம் சிங், நிதீஷ் குமார், தேவகவுடா... எனத் திரும்பிய பக்கம் எல்லாம் 'பிரதமர் வேட்பாளர்கள்.’

ஜெயலலிதா பெயரைச் சொன்னால், மறுநிமிடமே தனக்குப் பக்கத்தில் இருக்கும் முலாயம், நிதிஷ் ஓடிப்போவார்கள் என்ற பயம்தான் காரத்துக்கு. போயஸ் கார்டன் வந்து ஜெயலலிதாவைச் சந்தித்தபோது காரத் இதையே சொன்னார். இருவரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, 'ஜெயலலிதாவைப் பிரதமராக முன்மொழிவீர்களா?’ என்று கேட்கப்பட்டபோது காரத் ஏதோ சொல்ல வாய் எடுத்தார். அவர் கையில்தான் மைக் இருந்தது. ஆனால், படக்கென்று அதை வாங்கி, ''அதற்கான கேள்வி இப்போது எழவில்லை. தேர்தலுக்குப் பிறகே அது பரிசீலிக்கப்படும்'' என்று இறுக்கமான வார்த்தைகளை உதிர்த்துவிட்டு வீட்டுக்குள் போனார் ஜெ. காரத் மட்டும் அன்று பதில் சொல்லி இருந்தால், அன்றே கம்யூனிஸ்ட்கள் கழற்றிவிடப்பட்டு இருப்பார்கள். தன்னை முன்மொழிய மறுத்தவர்களுக்கு எதற்கு இரண்டு என்று யோசித்ததன் விளைவுதான் ஒரே ஒரு தொகுதி மிட்டாய் என்று முடிவெடுக்கப்பட்டது.

கருணாநிதி - ஜெயலலிதாவின் நேருக்கு நேர்!

மேலும் 'ஜெயலலிதா தொடர்பான வழக்கு பெங்களூரூவில் நடப்பதால், அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது சரியாக இருக்காது’ என்று கம்யூனிஸ்ட் தலைவர் டெல்லியில் அடித்த கமென்ட் வந்ததும்... அந்த ஒன்றும் பறிபோனது. கம்யூனிஸ்ட்கள், கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளப்படாத குறையாக வெளியேற்றப்பட்டார்கள். முந்தைய சட்டமன்றத் தேர்தலில் வைகோ, கடந்த தேர்தலில் விஜயகாந்த், இந்தத் தேர்தலில் கம்யூனிஸ்ட்கள்... இந்த மூவரின் கண்ணீர்க் கதைகளைக் கேட்டால், இனி ஜெயலலிதாவுடன் யாருமே கூட்டணி வைக்கத் தயங்குவார்கள் என்பது மட்டுமல்ல, தேசிய அளவிலும் நம்பகத்தன்மையை அவர் இழந்தும் போனார்.

'யாருமே எனக்கு அவசியம் இல்லை’ என்ற தைரியத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்படவில்லை. எடுத்திருந்தால் ஸ்ரீதர் வாண்டையார், ஜான் பாண்டியனோடு ஏன் அவர் போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டும்? உள்ளுக்குள் பயம் இருப்பதன் அடையாளம் இது. ஆனாலும், எவரையும் அரவணைத்துச் செல்லும் மனம் இல்லை. இத்தகைய அரசியல் விமர்சனங்கள் இருந்தாலும் 40 தொகுதிகளிலும் இரட்டை இலையை நிறுத்துவது என்பது எம்.ஜி.ஆரே எடுக்காத தைரிய நடவடிக்கை. எவர் தயவும் இல்லாமல் இந்தக் கட்சியை நடத்த முடியும் என்ற அசாத்திய துணிச்சல் இது.

கருணாநிதி - ஜெயலலிதாவின் நேருக்கு நேர்!

ஜெயலலிதாவின் இதே துணிச்சலில் ஓரளவு ஸ்டாலினுக்கும் வந்தது... நிச்சயம் ஆச்சரியம்!

என்ன ஆனாலும் சரி, காங்கிரஸோடு சேர்ந்துவிடக் கூடாது என்ற முடிவோடு இருந்தவர் ஸ்டாலின். கருணாநிதியை கழுத்தையும் பிடித்து காலையும் பிடித்து நடிக்க முடிந்த காங்கிரஸின் லீலைகள், ஸ்டாலினிடம் செல்லுபடி ஆகவில்லை. தே.மு.தி.க-வுடன் பேச்சு வார்த்தைகள் நடந்தது உண்மை. ஆனாலும் அவர்களுக்கு ஏழு தொகுதிகள்தான் தகுதியானவை என்று பிடி தளராமல் இருந்தார் ஸ்டாலின். 'நீங்கள் குறிப்பிடும் தொகுதிகளை மாமாவிடம் கேட்டு வாங்கித் தருவேன்’ என்று வாக்குறுதி கொடுத்த மருமகன் சபரீசனால், அதைச் செய்ய முடியவில்லை. அரசியல் ஸ்டாலினின் நிஜ கேரக்டரை அன்றுதான் சபரீசன் உணர்ந்திருப்பார்.

ஆரம்பத்தில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒன்று என்பதும் ஸ்டாலின் முடிவே. 'இன்று இரண்டு கொடுத்தால் சட்டமன்றத் தேர்தலில் 12 தொகுதிகள் தரவேண்டி வரும். கூட்டணிக் கட்சிகளுக்கு வாரிக் கொடுத்துவிட்டு தலைவர் போல மைனாரிட்டி அரசை நடத்தும் சோகம் இனி தி.மு.க-வுக்கு வரக் கூடாது’ என்று சொல்லி இருக்கிறார் ஸ்டாலின். அதனால்தான், எல்லோரையும் 'அண்ணா வழியில்’ ஆள்காட்டி விரலை மட்டுமே காட்டி, முடிக்கும் முடிவுக்கு வந்தார். தி.மு.க. 35 இடங்களில் உதயசூரியனை நிறுத்துவது முதல் தடவையாக இந்தத் தேர்தலில்தான்!

தங்களை தி.மு.க. கழற்றிவிடும் என்று கனவிலும் நினைக்க வில்லை காங்கிரஸ். அகமது படேல் ஆரம்பித்து ப.சிதம்பரம் வரையில் எத்தனையோ தூதுகள், நெருக்கடிகள், பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. ஆனால், ஜெயலலிதாவின் பிரசாரம் தொடங்கியதுமே காங்கிரஸோடு சேராமல் இருப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்தார் கருணாநிதி.

'அந்த அம்மா மொத்தமுமே காங்கிரஸைத்தான் திட்டுது. அவங்களோட சேர்ந்தா இதுக்குப் பதில் சொல்றதே நம்மோட வேலையா போயிடும்’ என்றும் நினைத்துள்ளார். மகன் வழிக்கு மனம் மாறியது இதனால்தான். தனித்து நிற்கும் தைரியம் இல்லாதவர் அல்ல கருணாநிதி. ஆனால், அவருக்குக் கூட்டணிக் கட்சிக் கூட்டம், ஆலோசனைகள், பேச்சுவார்த்தைகள்... போன்ற பந்தாக்கள் பிடிக்கும். பழகிப்போன விஷயங்களை எளிதில் அவரால் விடமுடியாது. ஆனால், ஸ்டாலினுக்குப் பந்தாடப் பிடிக்கும். அதுதான் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் மட்டுமல்ல, கட்சி நடவடிக்கைகளிலும் வெளிச்சத்துக்கு வந்தது!

மிழக பா.ஜ.க. இவ்வளவு வெளிச்சத்துக்கு வரும் என்று அந்தக் கட்சியினரே நினைக்கவில்லை. 'அந்நியர்கள் பிரவேசிக்கக் கூடாது’ என்று கமலாலயத்தின் வாசலில் பலகை மாட்டாத குறையாக, அளவுக்கு மீறிக் கூட்டம் கூடாமல் பார்த்துக்கொண்ட பா.ஜ.க. தலைவர்களுக்கு, மோடி அறிமுகத்தை அரசியல் அறுவடை செய்யும் லாகவம் தெரியாமல் இருந்தது. அந்த நிலையில் தமிழருவி மணியன் தனிப் பாதை காட்டினார். தி.மு.க. அணிக்குப் போவார் எனக் கருதப்பட்ட விஜயகாந்த், அ.தி.மு.க. அணிக்குப் போகலாம் என நினைக்கப்பட்ட வைகோ., சமூக ஜனநாயக அணி அமைத்துப் போய்க்கொண்டிருந்த ராமதாஸ் ஆகிய மூவரையும் 'ஆறு சீட் கொடுப்பார் அம்மா’ என்று நினைத்திருந்த பா.ஜ.க. பக்கமாகத் திருப்பினார் அவர். 'தமிழ்நாடு பாலிட்டிக்ஸ்... தமிழருவி பாலிட்டிக்ஸா மாறிடுச்சேய்யா’ என்று கருணாநிதியே கலங்கும் அளவுக்கு இது போனது. மாறி மாறிக் கூட்டணி அமைத்ததால் நம்பகத்தன்மை சரிந்த வைகோ., 'போன தேர்தலில் ஜெயலலிதாவுடன்... இந்தத் தேர்தலில் கருணாநிதியுடன் என்றால் உள்ள ஓட்டும் போய்விடும்’ என்று பயந்த விஜயகாந்த்... ஆகிய இருவருக்கும் பா.ஜ.க. பாதையே வேறு வழி இல்லாத பாதையாக இருந்தது. தன்னைத் தவிர, அனைவரையும் திட்டித் தீர்த்துக்கொண்டு இருந்த ராமதாஸையும், 'அமைச்சர் ஆக வேண்டுமானால் அப்பா அமைக்கும் கூட்டணி வேலைக்கு ஆகாது’ என்று அன்புமணியின் அடம் பா.ஜ.க-வின் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வரச் செய்தது.

கருணாநிதி - ஜெயலலிதாவின் நேருக்கு நேர்!

விருத்தாசலத்தில் விஜயகாந்த் ஊன்றிய விதை, வட தமிழ்நாட்டில் தனக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்குமான விரிசலின் விளைவு ஆகியவற்றை உணர்ந்தவர்தான் ராமதாஸ். ஒரு கட்சியை எதிர்த்து, இரண்டு கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை விட்டது விஜயகாந்த் விஷயத்தில்தானே நடந்தது. பா.ஜ.க. அணியில் விஜயகாந்த் பங்கேற்றுப் பலம்பெறுவது பா.ம.க-வுக்கு இழப்பு என்பதால்தான், தே.மு.தி.க-வின் தலைமைக்கழகம் அறிக்கை வெளியிட்ட ஒரு மணி நேரத்தில், 'பா.ஜ.க-வுடன் பேச்சுவார்த்தை’ என்று ராமதாஸும் அறிக்கைவிட்டார்.

மார்ச் 10-ம் தேதி நிலவரப்படி பா.ம.க-வுக்கு எட்டுத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் 10, புதுச்சேரி 1 என 11 தொகுதிகளை எதிர்பார்க்கிறார் ராமதாஸ். மேலும், விஜயகாந்த் பட்டியலும் ராமதாஸ் பட்டியலும் ஏறத்தாழ ஒன்றுபோல் உள்ளன. குறிப்பிட்ட ஏழு தொகுதிகளை இவர்கள் இருவருமே எதிர்பார்க்கிறார்களாம். ஒருவர் விடாக்கண்டன், இன்னொருவர் கொடாக்கண்டன். இருவரில் ஒருவரை பா.ஜ.க. கழற்றிவிடும் போல தெரிகிறது. அப்படியானால், தான் ஏற்கெனவே ஸ்டாக் வைத்திருக்கும் சமூக ஜனநாயகக் கூட்டணிக் குதிரைக்கு லாடம் அடிப்பார் ராமதாஸ்.

கருணாநிதி - ஜெயலலிதாவின் நேருக்கு நேர்!

ருணாநிதியால் தனிமைப்படுத்தப்பட்ட காங்கிரஸ், ஜெயலலிதாவால் கழற்றிவிடப்பட்ட கம்யூனிஸ்ட்கள் இரண்டு பேருமே தனிமைப் பயணத்துக்குத் தயாராக வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள்.

1970-ல் தொடங்கி, எவர் தோளிலாவது ஏறிப் பயணம் செய்து சுகம் கண்டதன் விளைவு... கால்கள் நடக்கவும் கைகள் எடுக்கவும் பயன்படக்கூடியவை என்ற எண்ணத்தை இடதுசாரிகளும் வலதுசாரிகளும் மறந்துபோனார்கள். நாளையத் தீர்ப்பு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், இன்று இந்தியாவை ஆளும் பலம் பொருந்திய அதிகார மையமான காங்கிரஸ் கட்சிக்குக் கூட்டணி சேர ஆள் இல்லை என்பதைவிட, கூட்டணி பற்றி பேசவே ஆள் வரவில்லை என்ற யதார்த்தத்தின் பின்னணியை இப்போதாவது ப.சிதம்பரமும் ஜி.கே.வாசனும் 'சேர்ந்து’ யோசிக்க வேண்டும்.

கருணாநிதியிடமும் ஜெயலலிதாவிடமும் கெஞ்சிக் கூத்தாடி எப்படியாவது ராஜ்ய சபாவுக்குப் போய்விட வேண்டும் என்று டி.ராஜாவும் டி.கே.ரங்கராஜனும் நினைப்பதால்தான் தமிழகத்தில் மாற்று அணிக்கான யோசனை வந்தாலே கம்யூனிஸ்ட்களுக்குக் காய்ச்சல் ஏற்படுகிறது. காய்ச்சலுக்குப் பயந்தவர்களை காலம் முடக்குவாதத்தில் தள்ளிவிட்டது. தனித்துப் போட்டியிடலாம். தைரியமாக ஜெயலலிதாவை விமர்சிக்க முடியுமா? 'இரண்டு தொகுதிகள் கிடைக்காததால் எதிர்க்கிறார்கள்’ என்று சொல்ல மாட்டாரா? 'இழப்பதற்கு என்று எதுவும் இல்லை’ என்று இனிமேலாவது அவர்கள் புரிந்துகொள்வார்களா?!

இதற்குமேல் என்ன சொல்ல..? சொல்லிக் கொள்ளுமளவுக்கு கூட்டணிக் கட்சிகள் துணையில்லாமல், அதிசயத்திலும் அதிசயமாக தேர்தல் களத்தில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் நேருக்கு நேர் மோதுகிறார்கள். 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் தமிழா’ என்று முடிவுகளுக்குக் காத்திருக்க வேண்டியதுதான்!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism