Published:Updated:

“வருத்தம் இருக்கத்தான் செய்கிறது!”

உள்காயம் திருமாடி.அருள்எழிலன், படங்கள்: கே.ராஜசேகரன்

“வருத்தம் இருக்கத்தான் செய்கிறது!”

உள்காயம் திருமாடி.அருள்எழிலன், படங்கள்: கே.ராஜசேகரன்

Published:Updated:

''தேர்தல் கூட்டணிகளில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை என்பது அத்தனை எளிய காரியம் அல்ல. 'முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை’ என்ற லாஜிக் எல்லாம் கூட்டணி அரசியலில் செல்லுபடி ஆகாது. நீண்டகால நட்பு, விசுவாசமான உறவு என்பதெல்லாம் தொகுதிப் பங்கீட்டுக்குப் பயன்படாது. வாக்கு வங்கியை நிறுவிக் காட்டுவதும், பேச்சுவார்த்தையில் அழுத்தம் ஏற்படுத்துவதுமே தொகுதி பேர வலிமைக்கு அடிப்படைத் தேவைகள். அதைவிட முக்கியம், கூட்டணி அரசியலில் வேறு கட்சிகளோடும் கூட்டணி வைத்துக்கொள்ளும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை, எப்போதும் உறுதிப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

கூட்டணி சாத்தியங்களின் எல்லாக் கதவுகளையும் நாங்களே சாத்திவிட்டு, ஒரு கட்சியோடு கூட்டணி பேசுவது என்பது பேர வலிமையைக் குறைத்துவிடுகிறது. 'மதவாதச் சக்திகளோடும், அ.தி.மு.க-வோடும், காங்கிரஸ் கட்சியோடும் போக முடியாது’ என்று கொள்கைரீதியாக நாங்களே அறிவித்து, பிற கூட்டணி வாய்ப்புகளைச் சாத்திக் கொண்டோம். எங்களுக்கான அனைத்து கதவுகளையும் நாங்களே அடைத்துக்கொண்டு தொகுதி பேரத்தில் ஈடுபட்டால், என்ன நடக்கும் என்பதை அனுபவரீதியாகப் புரிந்து கொண்டோம்!''   - அளந்து, உணர்ந்து  பேசுகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.

“வருத்தம் இருக்கத்தான் செய்கிறது!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தி.மு.க-வுடனான தொகுதிப் பங்கீட்டில் ஒரே ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட, சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் ரௌத்ரமானார்கள். நடுநிலை அரசியல் பார்வையாளர்களும் 'ஒரே ஒரு தொகுதி என்பது விடுதலைச் சிறுத்தைகளை அவமானப்படுத்தும் செயல்’ என்று கருதினார்கள். ஒரே நாளில் பலப்பல அத்தியாயங்களுக்குப் பிறகு கூடுதலாக ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. உள்காயத்தின் வலி ஆறாமலேயே பேசினார் திருமாவளவன்.

''தி.மு.கவுடனான தொகுதிப் பங்கீடு இவ்வளவு கசப்பான அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?''

''அரசியலில் எதைத்தான் எதிர்பார்க்க முடியும்? இப்போதும் நிறைய வருத்தங்கள் இருக்கின்றன. ஆனால், 'நம்பிக்கையாக இருந்தோம்... உண்மையாக இருந்தோம்... ஏமாத்திட்டீங்களே...’ என்ற கோணத்தில் வருத்தம் இல்லை!''

''பேச்சுவார்த்தையில் என்னதான் நடந்தது?, உங்களுக்கான முக்கியத்துவத்தைக் குறைத்தது யார்? மனம் திறந்து பேசலாமே..!''

''முதலில் ஐந்து தொகுதிகள் கேட்டோம். பிறகு 'மூன்றாவது கொடுங்கள்’ என்றோம். 'விழுப்புரம் அவசியம்’ என்றோம். 'அது சிக்கல்’ என்றார்கள். 'அப்படியானால் காஞ்சிபுரம் வேண்டும்’ என்றோம். அதற்கும் உடன்படவில்லை. 'சிதம்பரம் தவிர்த்து கூடுதலாக ஒரு தொகுதி நிச்சயம் வேண்டும்’ என்று அழுத்திக் கேட்கவுமே திருவள்ளூரைக் கொடுத்தார்கள்.

பேச்சுவார்த்தையில் என்ன பேசினோம் என்பதை எல்லாம் நான் விளக்கமாகச் சொல்ல முடியாது. அது எங்கள் கூட்டணியைப் பாதிக்கும். அப்படியெல்லாம் திறந்த மனதோடு பேச பிற கட்சிகள் மறுக்கும் நிலையில், நான் ஓரளவுக்கேனும் இது பற்றிப் பேசுகிறேன். ஆனால், இப்போது நாங்கள் திருப்தியாக உள்ளோம்.

திருவள்ளூர் தொகுதி, தி.மு.க-வும் விடுதலைச் சிறுத்தைகளும் வலுவாக இருக்கும் பகுதி. எனவே, எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம்!''

“வருத்தம் இருக்கத்தான் செய்கிறது!”

''தி.மு.க. தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் கருணாநிதி அளவுக்கு, பிறர் உங்கள் மீது கரிசனம் காட்டவில்லை என்கிறார்களே?''

''அப்படியெல்லாம் இல்லை. இதெல்லாம் சும்மா கிளப்பிவிடப்படும் வதந்தி. கலைஞர் என்மீது வைத்திருக்கும் அதே அளவு பாசத்தைத்தான், தி.மு.க-வின் பிற தலைவர்களும் என் மீது வைத்திருக்கிறார்கள்!''

''நாடாளுமன்ற அரசியலில் இரண்டு அல்லது மூன்று தொகுதிகள், சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகள்... இதை மனதில் வைத்து மட்டுமே வி.சி. செயல்படுகிறதா? 10 ஆண்டுகள் கழித்து கட்சியின் நிலை எப்படி இருக்க வேண்டும் என்று தொலைநோக்குத் திட்டம் ஏதேனும் உண்டா?''

''நாங்கள் அரசியலில் இன்னமும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. ஓர் அரசியல் இயக்கத்தின் வீரியமான செயல்பாட்டுக்கு தேர்தல் வெற்றிகளே கணிசமான பங்களிக்கும். ஆகவே, அதையும் மனதில் வைத்து நாங்கள் செயல்பட வேண்டியிருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் 'அரசியல் கட்சி’ என்ற அங்கீகாரம் பெற வேண்டும் என்பது எங்கள் லட்சியம். தமிழகம் முழுக்க தலித் மக்களையும் தாண்டி தமிழ் சமூகத்தின் கட்சியாக சிறுத்தைகளை மாற்றுவதே எங்கள் தொலை நோக்கு இலக்கு!''

''விடுதலைப்புலிகள் அழிப்பு, ஈழத் தமிழர் இன்னல்களின் பாதிப்பு... போன்றவை தமிழக வாக்குப்பதிவில் ஆதிக்கம் செலுத்துமா?''

''தி.மு.க., அ.தி.மு.க. போன்ற பெரிய கட்சிகளின் நிலைப்பாடுகளுக்கு ஏற்பதான் கூட்டணி அமைகிறதே தவிர, ஈழத்தை வைத்து யாரும் கூட்டணி அமைக்கவில்லை. சிலர் தங்களின் பிரசாரத்துக்காக அதைப் பேசுகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை ஈழத் தமிழர் படுகொலையில் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டுமே ஒரே தன்மையுள்ள கட்சிகள்தான்!''

''திவ்யா-இளவரன் காதலை முன்வைத்து, வட தமிழக மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சி ஆதாயம் அடையும் என எதிர்பார்க்கிறீர்களா?''

'' 'நாடகக் காதல்’ என்று அடிக்கடி சொல்லும் ராமதாஸ், அரசியல் நாடகத்தை அடுத்தடுத்து அரங்கேற்றுகிறார். 'கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும், கடல் நீர் வற்றிப்போனாலும் திராவிடக் கட்சிகளோடும், தேசியக் கட்சிகளோடும் கூட்டணி இல்லை’ என்றார். ஆனால், திராவிடக் கட்சி என்று தன்னை அழைத்துக்கொள்ளக்கூடிய தே.மு.தி.க. பங்கேற்கும், பா.ஜ.க. கூட்டணியில் தொகுதி பேரத்தை நடத்திக்கொண்டு இருக்கிறார். இதேபோன்ற ஒரு நாடகம்தான், தன் சொந்த சாதி அலை வட மாவட்டங்களில் வீசிக்கொண்டிருக்கிறது என்பதும்.

ராமதாஸ், அரசியலுக்கு வந்த இத்தனை ஆண்டுகளில் வன்னிய மக்கள் ராமதாஸின் குடும்ப அரசியலை நன்றாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள். ஆட்சிக் கட்டிலில் இடம்பிடிக்கும்போதெல்லாம் வன்னிய மக்களைக் கைவிடும் ராமதாஸ், தேர்தலுக்காக அந்த மக்கள் மீது பாசம் உள்ளது போல நடிக்கிறார் என்பது அவர்களுக்கும் தெரியும். ராமதாஸையோ, பாட்டாளி மக்கள் கட்சியையோ வைத்து ஒட்டுமொத்த வன்னிய மக்களையும் சாதிப் பாசம் உடையவர்கள் என்று சொல்லிவிட முடியாது!''

'' 'நாடாளுமன்றம் சென்று ஈழ மக்களின் துயர் நீக்கும் குரலை எதிரொலிப்பேன்’ என்று சொல்லித்தான் அங்கு சென்றீர்கள்... ஆனால், என்ன சாதித்தீர்கள்?''

''என்னைப் போல ஓர் உறுப்பினரைக்கொண்ட கட்சிகள் மட்டும் நாடாளுமன்றத்தில் 14 உள்ளன. நாங்கள் எல்லாம் பதிவுசெய்யப்பட்ட கட்சிகளே தவிர, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் அல்ல. எட்டு உறுப்பினர்களுக்கு மேலான நாடாளுமன்றப் பிரதிநிதிகளைக் கொண்டிருந்தால் மட்டுமே, ஓர் இயக்கம் அரசியல் கட்சி என்று அங்கீகரிக்கப்படும். நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி, எதிர்க் கட்சிகளுக்கு நேரம் ஒதுக்கியது போக, எமக்கு அதிகபட்சமாக மூன்று நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும்.

எனது நாடாளுமன்றக் கன்னிப்பேச்சை நான் ஈழ மக்கள் நலனுக்காகத்தான் ஒலித்தேன். ஆனால், பெரும்பாலும் மாலை நேரங்களில்தான் எங்களுக்கு வாய்ப்புத் தருவார்கள். அந்த நேரத்தில் என் உரையைக் கேட்க அவையின் முக்கிய உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்த ஆட்சியின் இறுதிக் கூட்டத்தொடர் முழுக்க தெலங்கானா விவகாரம் ஆக்கிரமித்துக்கொண்டது. முக்கியமாக நிறைவேற்றவேண்டிய பெண்கள், பழங்குடிகள், தலித் மக்கள், சிறுபான்மை மக்கள் தொடர்பான பல மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லை. இதில் நான் தட்டிக் கழித்ததாகவோ, உதாசீனப்படுத்தியதாகவோ எப்படிக் குற்றம் சுமத்த முடியும்?''

“வருத்தம் இருக்கத்தான் செய்கிறது!”

''பொதுத் தொகுதிகளின் வெற்றியை பெரும்பான்மை சாதி வாக்குகளே தீர்மானிக்கும் நிலையில், உங்கள் கட்சிக்காகப் பொதுத் தொகுதிகளை நீங்கள் தி.மு.க-விடம் கேட்க என்ன காரணம்?''

'' 'சிதம்பரம்’, 'திருவள்ளூர்’... இரு தொகுதிகளிலும் நாங்கள் வெல்வோம். நாங்கள் அரசியலுக்கு வந்த காலத்தில் இருந்தே பொதுத் தொகுதி கேட்டு வருகிறோம். மூப்பனார் எங்களுக்குப் பொதுத் தொகுதி கொடுத்தார். 'விடுதலைச் சிறுத்தைகளுக்குப் பொதுத் தொகுதியா?’ என்ற வியப்பின் பின்னால் சாதீயம் உள்ளது. நாங்கள் சாதிக்கு எதிராகப் போராடுகிறோம். அந்த வகையில் பொதுத் தொகுதிகளையும் கேட்டுப்பெறுவது எங்கள் உரிமை.''

''காதல் விவாகரங்களில் சாதிப் பஞ்சாயத்து நுழைவது போல உங்கள் கட்சியைச் சார்ந்தவர்களும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுகிறார்களே?''

''காலம் காலமாகப் பஞ்சாயத்து என்ற பெயரில் மரத்தடிகளிலும் காவல் நிலையங்களிலும் வைத்து தலித் மக்களை சாதிக் கொடுமைக்கு உள்ளாக்கியவர்கள்தான், இந்த அபாண்டமான பழியை எங்கள் மீது சுமத்துகிறார்கள். அவர்களை நாங்கள் களத்தில் சந்திப்போம்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism