Published:Updated:

பாலியல் வல்லுறவு அல்லது கொலை - இதுதான் வாச்சாத்திக்கான நம் நீதி! #25YearsOfVachathiAtrocity

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பாலியல் வல்லுறவு அல்லது கொலை - இதுதான் வாச்சாத்திக்கான நம் நீதி! #25YearsOfVachathiAtrocity
பாலியல் வல்லுறவு அல்லது கொலை - இதுதான் வாச்சாத்திக்கான நம் நீதி! #25YearsOfVachathiAtrocity

பாலியல் வல்லுறவு அல்லது கொலை - இதுதான் வாச்சாத்திக்கான நம் நீதி! #25YearsOfVachathiAtrocity

`நேரம் ஒரு மாயை’ என்பார் என்ஸ்டீம். அந்த மாயை எல்லா காயங்களையும் மறக்கச் செய்யும்... துயரங்களை ஆற்றும் என்பது பொது விதி. ஆனால், நேரமும் அதன் பொது விதியும் இந்த எளிய பழங்குடி மக்களிடம் பரிதாபமாகத் தோற்று நிற்கிறது. நேரம் இவர்களின் காயங்களை ஆற்றவில்லை மாறாக அதன் மீது அமிலம்தான் வீசி இருக்கிறது.

வாச்சாத்தி துயரம் நிகழ்ந்து சரியாக 25 ஆண்டுகள் ஆகப்போகிறது. வலிகளை, பெண்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் என அனைத்துக்கும் சாட்சியாக அந்த ஒற்றை ஆலமரம் நிற்கிறது. துயரம் குறித்த வார்த்தைகளுக்கு நமக்குள் என்ன விவரிப்பு இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால், இந்த மக்களுடன் உரையாடும்போது புரிகிறது, இவர்களின் வலிகளை, காயங்களைத் தாங்கும் சக்தி ‘துயரம்’ என்ற ஒற்றை வார்த்தைக்கு இல்லை என்று. 

என்ன நடந்தது வாச்சாத்தியில்...?

ஜூன் மாதம் என்றால் உங்களுக்கு என்ன நினைவு வரும்...? அமெரிக்க அரசியலைக் கூர்ந்து படித்தவராக இருந்தால், இந்த மாதத்தில்தான் பெண்கள் வாக்களிக்கும் சட்ட மசோதாவுக்கான தீர்மானம் 1919-ல் அமெரிக்க காங்கிரஸால் கொண்டுவரப்பட்டது என்பது நினைவுக்கு வரலாம். இல்லை மத்திய கிழக்கு போர்கள் மீது உங்கள் கவனம் இருந்திருந்தால் இஸ்ரேல் 1967-ல் சிரியா மீது தொடுத்த யுத்தம் உங்கள் நினைவுக்கு வரலாம். ஜென் Z தலைமுறை என்றால் உங்களுக்கு இந்தியா, பாகிஸ்தானிடம் தோற்றது நினைவுக்கு வரலாம். ஆனால், இந்த மக்களுக்கு, அவர்களின் சந்ததிகளுக்கு எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் உடலில் மின்சாரம் பாய்ச்சியதுபோல நினைவுக்கு வரும் ஜூன் 20, 1992 -ம் ஆண்டு அந்த ஊரில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளும், பாலியல் பலாத்காரச் சம்பவங்களும்தான். 

“ஜூன் 20, 1992-ம் ஆண்டு. ஏறத்தாழ 200-க்கும் மேற்பட்ட காவலர்கள், வருவாய் அதிகாரிகள், வனத்துறையினர் எங்கள் ஊருக்குள் நுழைகிறார்கள். என்ன நிகழ்ந்துகொண்டு இருக்கிறது என்று நாங்கள் உணர்வதற்குள், சந்தன மரங்களை எங்கே ஒளித்து வைத்திருக்கிறீர்கள் என்று எங்களை அடிக்கத் தொடங்குகிறார்கள். வலி காரணமாக  நாங்கள் மட்டும் அழவில்லை. நடந்து கொண்டிருந்த துயரத்தைக் கண்டு எங்கள் கால்நடைகளும் கதறின. எனினும், அதிகாரிகளின் வன்மம் குறையவில்லை. கால்நடைகளைக் கொல்கிறார்கள். வயல்களை நாசம் செய்கிறார்கள்... பின் எங்களையெல்லாம் அரூர் வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். அதன்பின்...”இதற்கு மேல் பேச முடியாமல் மல்லிகா வெடித்து அழ, தன் வலிமிகுந்த நினைவுகளை உதிர்க்க விரும்புவதுபோல அன்று நிகழ்ந்த அனைத்தையும் அறிந்த ஆலமரம் தன் இலைகளை உதிர்க்கிறது. இதற்கு மேல் அங்கு இருந்த யாருக்கும் பேச வரவில்லை. அடர்த்தியான மெளனம், வெளியை நிரப்புகிறது.

அதற்கு மேல் நிகழ்ந்தது இதுதான், “பெண்களை வயது வித்தியாசம் பார்க்காமல், அரூர் வன அலுவலகத்தில் வைத்து பாலியல் வல்லுறவு செய்கிறார்கள். ஆண்களைக் கண்மூடித்தனமாகத் தாக்குகிறார்கள்.” வாட்ஸ் அப், இணையமற்ற அந்தக் காலகட்டத்தில் இவர்களது அழுகுரல் 50 கி.மீ தொலைவில் இருக்கும் தருமபுரிக்குக் கேட்பதற்கே சில நாள்கள் ஆனது. 

பின், மார்க்சிஸ்ட் கட்சி இந்த விஷயத்தைக் கையில் எடுத்துப் போராடியது. ஒரு நீண்ட சட்டப் போராட்டத்துக்கு பின் ஆறு ஆண்டுகளுக்குப் பின் அந்த மக்களுக்கு நீதி கிடைத்தது. அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 215 அதிகாரிகளுக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் ஒரே வழக்கில் இத்தனை நபர்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டது இதுதான் முதல்முறை. 
ஆனால், துரதிர்ஷ்டமாக இந்தப் புள்ளியில் வாச்சாத்தித் துயர அத்தியாயம் முடியவில்லை. அடுத்த அத்தியாயத்தின் பக்கங்களும் ரத்தத்தால்தான் எழுதப்படுகின்றன.

நீங்கள் எங்களுக்கு செய்தவை இவைதான்!

 2015-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 7-ம் தேதி 20 பேர் ஆந்திர மாநிலத்தில் திருப்பதி வனத்தில் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். 'அவர்கள் செம்மரம் வெட்டினார்கள் தடுக்கச் சென்றோம், எங்களைத் தாக்கினார்கள்  அதனால் சுட நேரிட்டது' " என்று வழக்கமான கதையைப் போலீஸார் சொன்னார்கள். இறந்த 20 பேரில், 7 பேர் சித்தேரி மலையைச் சேர்ந்தவர்கள். அந்த சித்தேரி வாச்சாத்தி பகுதியில்தான் அமைந்திருக்கிறது.

அவர்கள் செம்மரக் கடத்தலில் ஈடுப்படவில்லை என்று சொல்லவில்லை. அந்த மலைகளிலிருந்து கூலிகளாக ஆந்திராவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்கள். செம்மரம் வெட்டி இருக்கிறார்கள். ஆனால், அதன் பின்னால் ஓர் அரசியலும் சமூக அநீதியும் இருக்கிறது என்கிறேன். 

சித்தேரி மலைக்கு செய்தி சேகரிக்கச் சென்றபோது, அந்தப் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் கேட்டது இதுதான், “நீங்கள் எங்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள் என்று பாருங்கள்...? சாலை வசதி தரவில்லை, மருத்துவம், பேருந்து, தொழில் வாய்ப்பு என்று எதுவும் செய்து தரவில்லை. ஆனால், பாலியல் பலாத்காரங்களையும் துப்பாக்கிக் குண்டுகளையும்தான் எங்களுக்குப் பரிசாக அளித்து இருக்கிறீர்கள்.” என்றார். அவர் கேட்டது எதுவும் மிகையில்லை. ஒரு முறை நீங்கள் சித்தேரி மலையில் இருக்கும் கலசாப்பாடி, அரசநத்தம், ஆலமரத்துவலவு ஆகிய ஊர்களுக்குச் சென்று பாருங்கள், அந்த மக்களின் உண்மை நிலை தெரியும். இந்த அரசு எப்படி அவர்களைத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்றும் புரியும். 

வாச்சாத்தி சம்பவம் நடந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது, சித்தேரி படுகொலை நடந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், இன்றும் அந்த மக்கள் இந்த அரசால், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். எப்போதும் வாச்சாத்திகளுக்கான நம் நீதி பாலியல் வல்லுறவும் படுகொலையும்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு