Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்

மாநிலம் முழுக்க பதின்ம வயதின் முற்றத்தில் நிற்கும் சுமார் 12 லட்சம் பேர், வரும் வாரம் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதப்போகின்றனர். ஆண்டு முழுவதும், அவர்களின் மனதில் ஏற்றப்பட்ட அரசுப் பொதுத் தேர்வு குறித்த அச்சம், உச்சம் பெற்றிருக்கும் நேரம் இது!

'பதற்றம் வேண்டாம்; படபடப்பு தேவை இல்லை’ என அவர்களை இளைப்பாறச் செய்து, தேர்வு அறைக்குள் அனுப்பிவைக்க வேண்டியவர்கள் பெற்றோரும், பள்ளி நிர்வாகமும்தான். ஆனால் அவர்களோ, மாணவர்களைவிட படபடப்புடன் இருக்கிறார்கள். ஏனெனில், ஒரு மாணவன் படிப்பதும், படிக்காமல்போவதும் இப்போது அவனது எதிர்காலத்துடன் மட்டும் சம்பந்தப்பட்டது இல்லை. 'எல்லாம் உன் நல்லதுக்குத்தான் சொல்றோம்’ என்று சொல்லப்பட்டாலும் அதில் பள்ளியின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதனால், ஒவ்வொரு மாணவனும் தங்களின் வயதுக்கு மீறிய அழுத்தத்தைச் சுமக்க வேண்டியிருக்கிறது. அந்த அழுத்தமே தாங்க முடியாத சுமையாக மாறும்போது பிஞ்சு மனம் உடைந்துபோகிறது. இறுதியில் அது தற்கொலையை நாடுகிறது. கடந்த வாரம்கூட, படிப்பின் சுமை தாளாமல் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்களைப் பற்றிய செய்திகளைப் பார்த்தோம். வாழ்வின் நலம் பேண வேண்டிய கல்வி, இப்படி பிள்ளைகளின் உயிர் பறிக்கும் எமனாக மாறலாமா?

'படித்தவர்கள்’ குறித்து நம் ஊரில் உள்ள பெருமிதம் இன்னமும் நீடித்திருக்கக் காரணம், அவர்கள் உலகை விசாலப் பார்வையுடன் அணுகும் ஆற்றல் பெற்ற நாகரிக மனிதர்கள் எனும் நம்பிக்கைதான். அந்த நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு, பெற்றோருக்கும் பள்ளிகளுக்கும் இருக்கிறது. நீங்கள் மாணவர்களை வெறுமனே தேர்வு அறைப் பண்டமாகத் தயார் செய்யவில்லை. மாறாக, அந்த இளங்குருத்துகளை உலகை, வாழ்க்கையை எதிர்கொள்ளத் தயார்படுத்துகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் விளையாட்டு, கலை, ஆளுமை ஆகியவற்றோடு படிப்பு என்பதும் இணைந்தே மாணவ மனங்களில் பதியனிப்பட வேண்டும். ஆனால், இன்றோ 'படி... படி... படி’ என்று மனப்பாடப் புட்டிகளாக மட்டுமே மாணவர்கள் வடிவமைக்கப்படுகிறார்கள்.  

ஏதும் அறியாத குழந்தைகளாகப் பள்ளிக்குள் நுழைபவர்களை, எதையும் சந்திக்கக்கூடிய ஆற்றலும், சிந்திக்கக்கூடிய அறிவும், சாதிக்கக்கூடிய திறமையும்கொண்ட மாணவர்களாக  உருவாக்கும் உயரிய பொறுப்பு பெற்றோர், ஆசிரியர் கரங்களில் இருக்கிறது. மாணவர்கள் புத்தகங்களைப் படிப்பது பிறகு... முதலில் நீங்கள் மாணவர்களின் மனங்களைப் படியுங்கள். அதுவே இப்போதைய உடனடித் தேவை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism