Published:Updated:

“செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?” - ஹெலி கிலி

ப.திருமாவேலன் படங்கள்: கே.ராஜசேகரன், ஜெ.முருகன், தேவராஜன்

“செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?” - ஹெலி கிலி

ப.திருமாவேலன் படங்கள்: கே.ராஜசேகரன், ஜெ.முருகன், தேவராஜன்

Published:Updated:
“செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?”  - ஹெலி கிலி

ற்ற கட்சியாக இருந்தால் தலைவரின் பேச்சைக் கேட்கத்தான் கூட்டம் வரும். ஆனால், அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆராக இருந்தாலும் ஜெயலலிதாவாக இருந்தாலும் ஆளைப் பார்ப்பதே ரத்தத்தின் ரத்தங்களுக்கு முழு திருப்தியைக் கொடுத்துவிடும். இந்தத் தேர்தலில் அதுவும் மாற்றம். ஜெயலலிதா வந்த ஹெலிகாப்டரைப் பார்ப்பதே பெரும்பேறு ஆகிப்போனது.

தேர்தல் பிரசாரத்துக்கு ஹெலிகாப்டரில்தான் சுற்றுப்பயணம் என்று ஜெயலலிதா முடிவெடுத்துவிட்டதால், இப்போதெல்லாம் மாலை, இரவு நேரக் கூட்டங்கள் கிடையாது. மதிய வேளையில் கொளுத்தும் வெயிலில்தான் பிரசாரக் கூட்டம். பிற்பகல் 3 மணிக்குப் பொதுக்கூட்டம் என்றால், 12 மணிக்கே கூட்டம் நடக்கும் மைதானத்தில் மக்கள் கூடிவிடுகிறார்கள். 12 மணியில் இருந்து 5 மணி வரைக்கும் வெயிலில் காத்திருப்பதே பெரிய அவஸ்தைதான். ஆனால், ஜெயலலிதாவைப் பார்க்கும் பரவசத்தில் அத்தனை கஷ்டங்களையும் மறந்துவிடுகிறார்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிதம்பரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தைப் பார்க்க நான் போனபோது, பொதுக்கூட்ட மேடைக்கு எதிரில் கூடிய கூட்டத்துக்கு இணையாக அந்தப் பந்தலுக்குப் பின்னால் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடிலும் கூட்டம். அடித்தட்டு மக்கள் அதிகம் வாழும் கிராமங்கள் சூழ்ந்த தொகுதி என்பதால், அந்த மக்களுக்கு ஹெலிபேடும் ஹெலிகாப்டருமே அதிசயமாக இருந்தது.

'வாத்தியாரு ஒரு படத்துல ஹெலிகாப்டர்ல வந்து சண்டை போடுவாருல்ல... அதுல ஹெலிகாப்டரைப் பார்த்தது. அதுக்குப் பிறகு பார்த்ததே இல்லை!’ என்றபடி ஓடி வருகிறார் ஒரு தொண்டர்.

'உனக்குப் படம் பேரே தெரியலை... அது 'ஊருக்கு உழைப்பவன்’. தலைவரோட சண்டையைப் பார்க்கிறதுக்காகவே ரெண்டு மூணு தடவை போனோம்!’ என்கிறார் அவருடைய சகா.

இவர்கள் வருவதற்கு முன்பே பெருங்கூட்டம் அந்த இடத்தில் கூடி இருந்தது. அந்த நேரத்தில் வானத்தில் வெள்ளைப் புள்ளி. அதைப் பார்த்தே, 'அதோ அம்மா வந்தாச்சு... அம்மா வந்தாச்சு...’ என்று கத்த ஆரம்பித்தார்கள். ஆனால், சிதம்பரத்தை பைபாஸில் தாண்டிப்போய்விட்டது அந்த விமானம். அடுத்த சில நிமிடங்களில் 'ப்ஃப்’ என ஹெலிகாப்டர் சத்தம். முதலில் யார் அதனை உணர்ந்தது என்றே தெரியவில்லை. மொத்தக் கூட்டமும் வானத்தைப் பார்த்தது.

“செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?”  - ஹெலி கிலி

'இந்தப் பக்கமா இருந்து வர்றாங்க... மெட்ராஸ் அந்தப் பக்கம்ல இருக்கு?’ என்று ஒருவர் வானத்திலேயே சென்னையின் திசையை காம்பஸ் இல்லாமல் கணித்துக்கொண்டு இருந்தார். அந்த நேரம் பார்த்து ஒருவர் ஓடிவந்து, சின்ன பாக்கெட் டைரி ஒன்றைக் கொடுத்து, 'சார் இதுல மணியோட நம்பர் பார்த்துச் சொல்லுங்க சார்’ என்றார். 10, 15 பெயரில் மணி என்பதைக்கூட அவர் வாசிக்க முடியாதவராக இருந்தார். ஆனால், செல்போன் வைத்திருந்தார். மணியின் எண்ணை எடுத்துச் சொன்னதும், அதை அழுத்தி 'மணி’யைப் பிடித்து, 'மணீ... ஹெலிகாப்டர் வந்திருச்சி... அம்மா வந்தாச்சு... சத்தம் கேட்குதா?’ என்று குஷியில் குதித்தார். பிரசாரப் புழுதியைக் கிளப்பியபடி தரை இறங்கியது ஹெலி!

முன்பெல்லாம் சேலம், திருச்சியில் போய் தங்கிவிட்டு அங்கிருந்து காரிலோ, ஹெலிகாப்டரிலோ பிரசாரப் பயணம் போய் வந்தார் ஜெயலலிதா. இந்த முறை சென்னையில் இருந்து காஞ்சி. அங்கே முடித்துவிட்டு சென்னை. அங்கிருந்து மீண்டும் சிதம்பரம். சென்னைக்கு வந்துவிட்டு மீண்டும் ஈரோடு... என இரண்டு நாட்களுக்கு ஒரு முறை றெக்கை கட்டிப் பறக்கிறார். மிக அதிக நேரம் காரில் அவரால் உட்கார முடியவில்லை என்பதால்தான் இந்தப் பயணத் திட்டமாம். மார்ச் 3-ம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கிய ஜெயலலிதாவின் பயணம், அடுத்த மாதம் 21-ம் தேதி ஆலந்தூரில் முடிவது போல திட்டமிடப்பட்டுள்ளது.

கோயில் நகரமான காஞ்சியில் தொடங்கியதைக் கவனியுங்கள். முதல் நாள் காஞ்சிபுரம் கிளம்பும்போது நிறைகுடத் தண்ணீருடன் ஒரு பெண், கார்டனின் போர்ட்டிகோவில் நிற்கிறார். பூஜை அறையில் வணங்கிவிட்டு, துளசித் தீர்த்தத்தை வெள்ளிக் கரண்டியில் சிறு துளி எடுத்து வாயில் விட்டபடி அங்கிருந்து நகர்ந்த ஜெயலலிதா, முன் அறையில் இருந்த தனது தாய் சந்தியா, எம்.ஜி.ஆர். படங்களை வணங்கிவிட்டு வெளியில் வருகிறார். தண்ணீர்க் குடம் தாங்கிய பெண்ணைப் பார்த்தபடி காரை நோக்கி வருகிறார். திருஷ்டிப் பூசணிக்காய் சுற்றுகிறார்கள். அதனையும் ஏற்றுக்கொண்டு கார் ஏறி உட்காருகிறார். ஒவ்வொரு நாள் பிரசாரம் கிளம்பும்போதும், இந்தச் சம்பிரதாயம் அப்படியே கடைப்பிடிக்கப்படுகிறது.

காரில் ஏறி உட்கார்ந்ததும் விஷ்ணு சகரஸ்நாமம் அல்லது லலிதா சகரஸ்நாமம் ஒலிக்கிறது. சில நிமிடங்கள் கழித்ததும் அம்மன் பாடல் ஒலிக்கிறது. ஐந்து நிமிடங்களில் அதனை நிறுத்தச் சொல்கிறார். அன்று கலந்துகொள்ளப்போகும் பேச்சுகள் முன்பே தயார் ஆனவை என்பதால், அதனை அசைபோட்டபடி விமான நிலையம் வருகிறார்.

ஹெலிகாப்டரில் ஏறுகிறார். உட்கார்ந்ததும் சூப் அருந்துகிறார். அவரது பேச்சின் நகல் அங்கு வைக்கப்பட்டு இருக்கிறது. அதனை வாசித்துப் பார்க்கிறார். கூட்ட மேடைக்கு மேலே சுற்றும்போதே மக்கள் கூட்டம் எவ்வளவு இருக்கும் என்பதை பார்வையாலேயே அளந்துவிடுகிறார். கீழே இறங்கி பூரண மரியாதையை ஏற்றுக்கொண்டு மேடைக்கு வந்து மைக் முன் அவர் நின்று பேச ஆரம்பிப்பது வரை யாரும் அவரைத் தொந்தரவு செய்யக் கூடாது. மேடையில் அவர் உட்காருவது இல்லை. அவருக்கு முன்னால் யாரும் பேசுவதும் இல்லை. வந்ததும் அவரே பேச்சைத் தொடங்குகிறார். கர்ஜனைக் குரலையும், முகத்தில் கடுமையையும் மைக் முன் நின்றதும் பொருத்திக்கொள்கிறார்!

'எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதுதான் காங்கிரஸ் ஆட்சியின் தாரக மந்திரம். 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் விளையாட்டை நடத்தியதில் ஊழல், விமானத்துக்கான இன்ஜின் வாங்கியதில் ஊழல்... என ஊழல் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை முன்னின்று நடத்தியது தி.மு.க. என்பதை மறந்துவிடாதீர்கள். இப்படிப்பட்ட மக்கள் விரோத ஊழல் காங்கிரஸ் அரசை ஆட்சியில் இருந்து தூக்கி எறிவது நம் எல்லோருடைய கடமை’ என்று சொல்லிவிட்டு, 'செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?’ என்று கேள்வியைக் கேட்டு மக்களை உசுப்பேற்றுகிறார்.

“செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?”  - ஹெலி கிலி

'எங்கெல்லாம் 'இரட்டை இலை’ இருக்கிறதோ அதனை எல்லாம் மறைக்க வேண்டும் என்று ஸ்டாலின் வழக்குப் போடுகிறார். அப்படி என்றால் காங்கிரஸ் கட்சியின் சின்னம் கை. அனைவரின் கைகளையும் வெட்டிவிட வேண்டும் என்று மனு கொடுப்பாரா ஸ்டாலின்? சில கட்சிகளுக்கு சைக்கிள் சின்னம் இருக்கிறது. நாட்டில் யாரும் சைக்கிள் ஓட்டக் கூடாது என்று மனு கொடுப்பாரா ஸ்டாலின்? ஒரு கட்சிக்கு மாம்பழச் சின்னம் இருக்கிறது. மாம்பழம் விற்பனையைத் தடைசெய்ய வேண்டும் என்று மனு கொடுப்பாரா ஸ்டாலின்? 'காமாலைக்காரனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்’ என்பதைப்போல அ.தி.மு.க-வைப் பார்த்துப் பயப்படும் தி.மு.க-வினருக்கு, எதைப் பார்த்தாலும் இரட்டை இலையாகவே தெரிகிறது. இப்படிப்பட்ட தி.மு.க-வுக்கும் காங்கிரஸுக்கும் பாடம் புகட்டுங்கள். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?’ என்று கேட்கிறார்.

'பல்வேறு சுமைகளில் இருந்து விடுபட தேவை, மாறுதல். அதற்கு வழிவகுக்க இருப்பது வருகிற மக்களவைத் தேர்தல்’ என்று தொடங்கி, 'அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா, ஆறிலும் சாவும் நூறிலும் சாவு, தாயகம் காப்பது நம் கடமையடா...’ என்று முடிக்கிறார். இதில் 'தாயகம்’ என்ற வார்த்தையை அழுத்திச் சொல்கிறார். அதாவது நாட்டைக் காப்பாற்றுவதற்கு எங்களுக்கு வாக்களியுங்கள் என்று சொல்கிறார்.

எப்போதும் தன்னுடைய எதிரிகளை விமர்சிக்கும் ஜெயலலிதாவுக்கு, முதன்முறையாக அடிமனதில் பா.ஜ.க-வைப் பற்றிய ஒரு பயம் வந்திருப்பது அவரது பேச்சுகளில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது. 'மத்தியில் மாற்றம் வேண்டும் என்று நினைக்கும் மக்களின் ஆதரவு, மோடிக்கும் பா.ஜ.க-க்கும் உள்ளது’ என்று உளவுத் துறை அறிக்கை சொல்லி இருக்கிறது. அதனால், 'மற்றவர்களுக்கு வாக்களித்துவிடாதீர்கள்’ என்பதைப் பதற்றமாகச் சொல்கிறார்.

“செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?”  - ஹெலி கிலி

'உங்கள் வாக்கை வீணடித்துவிடாதீர்கள். வேறு கட்சிகளுக்கு வாக்களித்தால், அது எதற்கும் உதவாது. அவர்களும் வெற்றி பெற மாட்டார்கள். உங்கள் வாக்கும் வீணாகிவிடும்’ என்று அவர் சொல்வது இதுவரையிலான தேர்தல்களில் அவர் உச்சரிக்காதது காங்கிரஸையும் கருணாநிதியையும் காய்ச்சி எடுக்கும் ஜெயலலிதா, மறந்தும் பா.ஜ.க-வையோ மோடியையோ விமர்சிப்பது இல்லை. இடதுசாரிகள் அமைத்துள்ள மூன்றாவது அணியையும் விமர்சிப்பது இல்லை.

'அம்மாதான் அடுத்த பிரதமர்’ என்று தொண்டர்கள் முழங்குகிறார்கள். அவர் பேச வரும் மேடைக்கு முன்னால் அதைத்தான் வளைவுகளாக வைத்துள்ளார்கள். ஆனால், அது பற்றி ஜெயலலிதா பேசுவது இல்லை. 'அ.தி.மு.க-வால் மட்டும்தான் பல நன்மைகளைச் செய்ய முடியும். அ.தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய அரசு, நாட்டுக்கு பல நன்மைகள் செய்யும்’ என்று எச்சரிக்கையுடன் பேசுகிறார். பேச்சை முடித்துவிட்டு ஹெலிகாப்டரில் கிளம்புகிறார்.

விமான நிலையத்தில் இறங்கியதும் பைலட், துணை பைலட் இருவருக்கும் மறக்காமல் நன்றி சொல்லிவிட்டு வீட்டுக்கு வருகிறார். அவர் வருகைக்காக பூசணி காத்திருக்கிறது. மறுபடியும் திருஷ்டி சுத்துகிறார்கள்.

அவரைப் பொறுத்தவரை இந்தத் தேர்தலில் தமிழகத்தில் சிங்கிள் லார்ஜஸ்ட் சிங்கம் ஆகவேண்டும் என்பதே லட்சியம். அதனால்தான் சிங்கிளாகவே பறந்து பறந்து சிலிர்க்கச் சிலிர்க்கப் பிரசாரம் செய்கிறார்!

“செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?”  - ஹெலி கிலி

மேடையில் பேசவேண்டியதைப் பார்த்து வாசிப்பதற்காக, பெரிய எழுத்தில் டைப் செய்யப்பட்டு வைக்கப்படுகிறது. மேடையில் யாரும் அவருக்கு மாலையோ, சால்வையோ அணிவிக்கக் கூடாது. பொதுவாக, கோயில் பிரசாதங்களைப் பெற்றுக்கொள்வார். ஆனால், அதற்கும் இந்த முறை தடா.

• ஜெயலலிதாவின் காருக்குப் பின்னால் அவர் பயன்படுத்தும் பொருள்களை மட்டும் எடுத்துச் செல்லும் ஒரு கார் செல்கிறது. இதில் டிரைவர் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.

•  எவ்வளவு கூட்டம் இருந்தாலும் அவர் கைகாட்டினால் மட்டும்தான் காரை நிறுத்த வேண்டும். போகச் சொன்னால்தான் போகவேண்டும் என்பது டிரைவருக்கான உத்தரவு!

•  ஹெலிகாப்டரில்  ஏறியதும் அவருக்கு கீரை சூப் தரப்படுகிறது. காலிஃப்ளவர் சூப், தக்காளி சூப் போன்றவை அவருக்குப் பிடித்தவை. பேசி முடித்துவிட்டு வந்ததும் பனங்கற்கண்டு, மிளகு போட்ட பால் கொஞ்சம் அருந்துகிறார். ஹெலிபேட் அருகிலேயே மினி ரூம் ஒன்று இருக்கிறது. அங்கு சில நிமிட ஓய்வுக்குப் பிறகே ஹெலிகாப்டருக்குச் செல்கிறார்.  

•   ஜெயலலிதாவின் உணவுப் பழக்கவழக்கங்கள் சமீபகாலமாக மாறியுள்ளன. காரைக்குடி சமையல்காரர்கள் இப்போது கார்டனுக்குள் வந்துள்ளார்கள். சமையலில் செட்டிநாடு வாடை அதிகமாக இருக்கிறது. கந்தரப்பம், வெள்ளைப் பணியாரம் ஆகியவை அவரது விருப்பமான உணவு. இவை இரண்டிலும் எண்ணெய் இருக்கக் கூடாது. டிஸ்யூ தாளை வைத்து எண்ணெயை முழுமையாக எடுத்துவிட்டு, ஹாட் பேக்கில் வைத்துவிடுகிறார்கள். வெள்ளைப் பணியாரத்துக்கு விருப்பமானது கொத்தமல்லி சட்னி. கூட்டம் பேசி முடித்ததும் இதனைச் சாப்பிடுகிறார். பால் பணியாரம் அவருக்கு மிகவும் பிடித்தது. தேங்காய், தேங்காய் எண்ணெய் கூடாது. காலை உணவு சப்பாத்தி, இட்லி. சப்பாத்தி ரவுண்டாக இருக்கக் கூடாது. முக்கோண சைஸ்!

•  சர்க்கரைச் சத்து அவருக்கு இருந்தாலும் இனிப்பு சாப்பிடுவதை விடவில்லை. அல்வா, லட்டு போன்றவை பிடிக்கும். ஐஸ்க்ரீம், சாக்லேட் போன்றவை எப்போதும் அவருக்காகக் காத்திருக்கும். பிறந்த நாள், கல்யாண நாள் என்று ஆசீர்வாதம் வாங்க வருபவர்கள் அழைத்து வரும் குழந்தைகளுக்கு நிறைய சாக்லேட் கொடுப்பார். சிறு குழந்தைகளை கையில் வாங்கிக் கொஞ்சுகிறார். சுட்டித்தனமாகப் பேசும் குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்குக் கொடுக்க கார்டனில் பொம்மைகள் வாங்கிவைத்துள்ளார். இப்படி அவருக்குப் பிடித்த குழந்தைகளை ஒன்றிரண்டு நாள்கள் கூடவே வைத்திருந்து சாப்பாடு ஊட்டிவிடுவாராம்.  

•  இரவு தூங்குவதற்கு முன் ஒரு மணி நேரம் புத்தகங்கள் படிக்கிறார். ஒரு மணி நேரம் பழைய பாடல்கள் கேட்கிறார்; பார்க்கிறார். மதியத் தூக்கம் எப்போதும் இல்லை!

•  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிற சேலை அணிந்து வருகிறார். புதிய சேலைகளைக்கூட துவைத்த பிறகுதான் உடுத்துகிறார். சென்ட் போட மாட்டார். சென்ட் அணிந்து அருகில் யார் வந்தாலும் அலர்ஜி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism