அரசியல்
Published:Updated:

“தமிழக காங்கிரஸுக்கு நான் தலைவராக முடியாது!”

டி.அருள் எழிலன், படங்கள்: கே.ராஜசேகரன், ஜெ.முருகன்

“தமிழக காங்கிரஸுக்கு நான் தலைவராக முடியாது!”

மிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் பல்ஸ் குறித்த கவரேஜ்!

ஒரு கட்சியின் தலைமை அலுவலகத்தில்தானே அதன் அனல், தணல் நிலவரம் தெரியவரும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்குக் கிளம்பினேன். செல்லும் வழியில் எதிர்ப்பட்ட சரவண பவன், வசந்த பவன், ஆரிய பவன்... என அத்தனை 'பவன்’களிலும் எக்கச்சக்கக் கூட்டம். ஆனால், சத்யமூர்த்தி பவனில்..?

கூட்டணி பேரங்கள், வேட்பாளர் அறிமுகங்கள், புயல் பிரசாரம் என எல்லாக் கட்சிகளும் பரபரவென இருக்க... காங்கிரஸின் தமிழகத் தலைமையகம் சத்தியமூர்த்தி பவனோ ஈயடிக்கிறது. 'வாழ்ந்து கெட்ட வீடு’ கணக்காக களையிழந்துகிடக்கிறது அந்தக் கட்டடம்.

பவன் வாசலில் பொறி விற்றவர் கடையைக் காலி பண்ணிவிட்டாராம். சைக்கிளில் தம் டீ விற்பவர் காலி மைதானத்தை ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு, 'போலீஸ்காரங்களைக்கூட காணோமே..!’ என்று அலுத்துக்கொள்கிறார்.

ப.சிதம்பரம், கே.வி.தங்கபாலு, ஞானதேசிகன், ஜி.கே.வாசன் போன்ற தமிழக காங்கிரஸின் பெருந்தலைகள், தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்று அறிவிக்க, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி மட்டும் 'தில்’லாகக் களம் இறங்கியுள்ளார். எத்தனை களேபரக் கலவரமாக இருந்தாலும், நாராயணசாமியை மட்டும் கள நிலவரம் துளியும் பாதிக்காது. அவரிடமே கேட்டுவிடுவோமே..!

“தமிழக காங்கிரஸுக்கு நான் தலைவராக முடியாது!”

''தமிழகத்தில் போட்டியிடாமல் ஆளாளுக்கு எஸ்கேப் ஆகும்போது, முதல் பட்டியலிலேயே உங்கள் பெயர் வந்திருக்கே?''

''புதுச்சேரி காங்கிரஸ் தொண்டர்களுக்கு என் மேல் அந்தளவுக்கு நம்பிக்கை! அதனாலதான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் பணிக் குழு, என்னை இரண்டாவது முறையா புதுச்சேரியில் இருந்து போட்டி போடணும்னு கேட்டாங்க. அன்னை சோனியா காந்தி தலைமையிலான கூட்டத்தில் ஏகமனதாக என்னைத் தேர்ந்தெடுத்தாங்க. கட்சித் தலைமை என் மீது வைத்துள்ள நம்பிக்கையிலும் தொண்டர்களின் ஆதரவிலும் புதுச்சேரியில் நான் ஜெயிப்பேன்!''

''ஆனா, ப.சிதம்பரம், கே.வி.தங்கபாலு, ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன்... என காங்கிரஸ் பிரபலங்கள் பலரும் தேர்தலில் போட்டி போடாததுக்கு காரணம் என்ன?''

''அது அவங்கவங்களோட தனிப்பட்ட முடிவு. அதை எஸ்கேப் ஆகுறாங்கனு சொல்லாதீங்க. காமராஜர், ராஜாஜி, மக்கள் தலைவர் மூப்பனார் வரைக்கும் அரசியல் செய்த கட்சி இது. நாங்க எல்லோருமே அவங்க வழி வந்தவங்கதான். அதனால அவங்க மனசு நோகாமலும் கட்சி மானத்தைக் காப்பாத்தும்படியாவும் நான் கருத்துச் சொல்லணும்ல.

சரி, நான் கேட்கிறேன்... எல்லோரும் தேர்தல்ல நின்னா, யார்தான் தேர்தல் பிரசாரம் பண்றது? மக்களுக்கு நல்லா முகம் தெரிஞ்ச தலைவர்கள் பிரசாரம் பண்ணாத்தானே ஜெயிக்க முடியும்? அவங்களோட பிரசாரம் கட்சிக்குத் தேவைங்கிறதால, அப்படி முடிவு எடுத்திருப்பாங்க. இதைப்போய் ஒரு குத்தமாச் சொல்ல முடியுமா?''

''தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எல்லாக் கட்சிகளும் தமிழகத்தில் காங்கிரஸைக் கை கழுவிட்டதால்தான், காங்கிரஸ் தலைவர்கள் போட்டி போடலைனு சொல்லலாமா?''

''காங்கிரஸை யாரும் கையும் கழுவ முடியாது; காலும் கழுவ முடியாது. எங்க கட்சி தமிழ்நாட்டுல இல்லாத இடமே கிடையாது. தென் தமிழ்நாட்டில் நாங்க ரொம்ப வலுவா இருக்கோம். அதெல்லாமே எங்களுக்குப் பரம்பரை ஓட்டு. வட மாவட்டங்களில் கட்சி கொஞ்சம் வீக்கா இருக்குனு சொல்லலாம். ஆனா, எங்களோட துணை இல்லாமல் தி.மு.க., அ.தி.மு.க. ரெண்டுமே ஆட்சிக்கு வர முடியாது. இதான் கிரவுண்ட் ரியாலிட்டி. இதை நீங்க புரிஞ்சுக்கணும்.

காங்கிரஸ் கட்சிக்கு இது ஒரு தற்காலிகப் பின்னடைவுதான். எல்லாக் கட்சிகளுக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் இடைக்காலப் பிரச்னைனு ஒண்ணு இருக்கும். அது மாதிரிதான் இதுவும். இதை எல்லாம் கடந்து நாங்க தமிழ்நாட்டுல ஃபீனிக்ஸ் பறவை மாதிரி மீண்டு வருவோம்!''

“தமிழக காங்கிரஸுக்கு நான் தலைவராக முடியாது!”

''காங்கிரஸ், தமிழர்களுக்கு இழைத்த துரோகங்கள் என 15 விஷயங்களைப் பட்டியலிடுகிறார் ஜெயலலிதா. அதில் ஈழத் தமிழர்களுக்கு காங்கிரஸ் கட்சி செய்த துரோகம்தான் முதல் இடம் வகிக்கிறதே!''

''இந்திரா காந்தி காலத்தில் இருந்து ஈழத் தமிழர் நலனுக்காக நாங்க உழைச்சுட்டு இருக்கோம். இப்போ வரை நாங்கதான் இலங்கைத் தமிழர்களுக்கு நண்பர்களா இருக்கோம். இலங்கையில் தமிழர்களுக்காக தனி நாடு கேட்பதை இந்தியா ஆதரிக்காது.  அதே நேரத்தில், தமிழர்களும் சம உரிமை பெற வேண்டும் என்று ஐ.நா. சபை வரை குரல் கொடுத்திருக்கோம்.

இன்னைக்கும் போரில் வீடு இழந்தவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கிறோம்; ரயில் பாதைகள் அமைக்கிறோம்; நிலங்களை மீண்டும் ஒப்படைக்கச் சொல்லியிருக்கிறோம். இவ்வளவு செய்திருக்கிறோம். ஆனா, அந்த அம்மா எங்களைக் குத்தம் சொல்றாங்களே...

அவங்க ஈழத் தமிழர் நலனுக்காக என்ன செஞ்சாங்க? அறிக்கை விடுறது, அதை வெச்சு அரசியல் செய்றது, இதைத் தாண்டி பிரயோஜனமா ஏதாவது செஞ்சிருக்காங்களா? மீனவர்களுக்குப் பிரச்னைனு பிரதமருக்குக் கடிதம் எழுதுவாங்க. கடிதம் பிரதமருக்குப் போய்ச் சேர்வதற்குள் பத்திரிகைகளில் அதை வெளியிட்டுருவாங்க. அந்தக் கடிதத்துக்குப் பதில் வர்ற வரைக்கும்கூட பொறுமை இல்லை. எல்லாம் தேர்தல் ஸ்டன்ட்!''

''சரி, நீங்க நேர்மையாப் பதில் சொல்லுங்க... காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் காலியாக ஈழத் தமிழர் விரோத நடவடிக்கைதானே காரணம்?''

''அப்படி என்ன விரோதமாச் செயல்பட்டோம்னு புரியலையே! நீங்க 'கட்சி காலியாயிடுச்சு... கட்சி காலியாயிடுச்சு’னு திரும்பத் திரும்பச் சொல்றீங்க. 2009-ம் வருஷம் தி.மு.க-வும் நாங்களும் ஒரே கூட்டணியில்தானே இருந்தோம். அப்போதானே இலங்கையில் இனப்படுகொலை நடந்துச்சு. அதை நாங்களா செய்தோம்? ராஜபக்ஷே செய்த படுகொலை அது. தனி ஈழக் கோரிக்கையை காங்கிரஸ் ஏத்துக்கலை. ஆனா, நாங்க உருவாக்கிக் கொடுத்த உரிமைகளைத்தான் வடகிழக்கு மக்கள் கொஞ்சமாவது அனுபவிக்கிறாங்க. அதை மறந்துடாதீங்க.

'எங்களோட பிரச்னையில் தமிழகக் கட்சிகள் தலையிட வேண்டாம். நாங்களே பார்த்துக்கிறோம்’னு இலங்கையின் வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் சொல்றார். அதை நாங்களா சொல்லச் சொன்னோம்? ஆக, நாங்க ஈழத் தமிழர்களைக் கைவிடலை. அதே போல எங்கள் கட்சியை தமிழக மக்களும் கைவிட மாட்டாங்க!''

''மத்திய காங்கிரஸ் அரசாங்கம் தனித் தெலங்கானா மாநில முடிவை எடுத்தப்போ, ஆந்திர காங்கிரஸார் பொது மக்களின் நலன் கருதி அதைத் தீவிரமா எதிர்த்தாங்க. ஆனா, தமிழகத்தில் அணு உலை எதிர்ப்பு, தூக்குத் தண்டனை ஒழிப்பு, ஈழ மக்கள் நலன் உள்ளிட்ட எந்த விவகாரத்திலுமே மக்கள் நலனைக் கண்டுகொள்ளாமல், டெல்லி தலைமைக்கு அப்படியே கட்டுப்பட்டு நடக்கிறாங்களே... ஏன்?''

'' 'தெலங்கானா’, நீண்ட காலப் பிரச்னை. அதில் காங்கிரஸுக்கு ஆந்திராவில் சில பின்னடைவுகள் இருந்தாலும், அது காலப்போக்கில் சரியாகிடும். ஆந்திர மக்களும் அதைச் சீக்கிரமே புரிஞ்சுக்குவாங்க. கூடங்குளம் அணு உலை என்பது வளர்ச்சித் திட்டம். கூடக் குறைய இருந்தாலும் அது மின்சாரம் கொடுக்க ஆரம்பிச்சிருச்சு. அதை யாரும் மறுக்க முடியுமா?

“தமிழக காங்கிரஸுக்கு நான் தலைவராக முடியாது!”

தூக்குத் தண்டனை விவகாரத்தில் எங்கள் தலைவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களை, அன்னை சோனியா காந்தியே மன்னித்தாலும் நாங்க மன்னிக்கத் தயாராக இல்லை. டெல்லி மாணவி நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்குத் தூக்கு விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதுபோன்ற விவாதங்கள் தேவையற்றவை. இதில் எல்லாம் தவறான பிரசாரமே மேற்கொள்ளப்படுது!''

''ஆளுக்கொரு கோஷ்டி, தொண்டர்களிடம் ஒருங்கிணைப்பு இல்லாமைனு கவலைக்கிடமா இருக்கு கட்சி நிலவரம். அதைச் சரிபண்ண நீங்க ஏன் தமிழக காங்கிரஸ் கட்சிக்குப் பொறுப்பாளர் ஆகக் கூடாது?''

''இந்தியாவில் கோஷ்டி இல்லாத கட்சி எது? பல கட்சிகள்ல கோஷ்டி மோதல் கொலை வரை போகுது. எங்க கட்சியில் அந்தளவுக்கு பிரச்னை இல்லையே. இந்தக் கோஷ்டி முரண்பாடுகள் கட்சியின் வளர்ச்சியைப் பாதிக்காத வரைக்கும் ஓ.கே-தான்!

காங்கிரஸ் பேரியக்கத்தின் தொண்டனா, கட்சித் தலைமை எந்தப் பொறுப்பு கொடுத்தாலும் நான் ஏத்துக்குவேன். ஆனா, நான் தமிழ்நாடு காங்கிரஸுக்குத் தலைவராக முடியாது. ஏன்னா, புதுச்சேரி மக்கள் என்னை விட மாட்டாங்க. அதுவும்போக, தமிழ்நாடு காங்கிரஸில் திறமையான நல்ல தலைவர்கள் பலர் இருக்காங்க. அவங்க, கட்சியை ஆரோக்கியப் பாதையில் கொண்டுபோவாங்க!''

''அப்போ தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் இன்றைய தேதியில் காமராஜர் யார்... கக்கன் யார்?''

(அதிர்ச்சியடைகிறார்...) ''இதென்னங்க இப்படிக் கேட்டுட்டீங்க? நான் இரண்டாம் தலைமுறையில் அரசியலுக்கு வந்தவன். அவங்ககூட எல்லாம் எனக்குப் பழக்கமோ பரிச்சயமோ கிடையாது. அதனால இந்தக் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது!''