அரசியல்
Published:Updated:

அப்பாவி அரசியல் தொண்டனுக்கு......

அன்புடன் சு.சமுத்திரம்

அப்பாவி அரசியல் தொண்டனுக்கு......

னுதாபத்துக்குரிய அன்பார்ந்த அப்பாவி அரசியல் தொண்டனே!

வணக்கம்.

வணக்கத்துக்குப் பதில் வணக்கம் போடக்கூட உன் கைகளுக்கு நேரம் இருக்காது. இந்தத் தேர்தல் அமர்க்களத்தில் உன் கரம் உதயசூரியனாக விரிந்தோ, இரட்டை இலையாக இரண்டு விரல்களை நீட்டிக்கொண்டோ, இன்னும் தாமரையாக, பம்பரமாக, மாம்பழமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும்.

இந்தக் கடிதம் வெளியாகும்போது தேர்தல் முடிந்த மாவட்டமாக இருந்தால், வேட்பாளர் வாக்குப்பதிவோடு ஓய்வு எடுக்க... நீயோ கட்டிய பேனர்களைக் கழட்டுதல், தேர்தல் அலுவலகங்களைக் கலைத்தல் போன்ற வேலை பார்த்து முடித்து இப்போதுதான் லேசாக, ஓய்வு எடுப்பாய். இந்தச் சமயத்தில், எலும்பாடை அணிந்த உன் தந்தை 'விதைநெல்லு முளைக்கப்போகுது... இன்னும் வயலுக்குப் போவாத நீயெல்லாம் ஒரு விவசாயியா?’ என்று கோபமாகக் கேட்டிருப்பார். 'என்னைப் பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டார், நீ வருவ வருவனு காத்திருந்து கடைசியில் கௌரவத்தைக் காப்பாத்திக்க, திரும்பிப் பார்க்காமப் போயிட்டாங்களே அண்ணாச்சி... உனக்கு நேரம் இருந்து நான் எப்போ கரையேற?’ என்று உனது தங்கை கோபதாபமாக உன்னைப் பார்த்துக்கொண்டிருப்பாள். கழுத்தில் போட்ட தங்க செயினை உனக்குக் கொடுத்துவிட்டு, மஞ்சள் கயிற்றைக் கட்டிக்கொண்டிருக்கும் உன் கந்தல் புடைவை மனைவி, 'பிள்ளைகளுக்கு நோட்டு வாங்கக் காசு இல்ல... வாங்கித் தர்றதா நீங்க கொடுத்த வாக்குறுதியும் உங்க கட்சி கொடுத்தது மாதிரி ஆயிட்டுது.

நீங்கெல்லாம் எதுக்குக் கல்யாணம் பண்ணிக்கணும்? எதுக்குப் பிள்ளைகுட்டி பெத்துக்கணும்?’ என்று பொரிந்து தள்ளியிருப்பாள். உடனே உன்னைப் பெற்ற தாய், 'ஒரு நாளும் வீட்டுக்கு வராத என் பிள்ளை, திருநாளா இன்னிக்குத்தான் வந்திருக்கான். அப்படியும் கரிச்சிக்கொட்டுறியே’ என்று மருமகளை அதட்டியிருப்பாள்.

நீயோ கண்டுங்காணாமல், தூங்குவதுபோல் பாசாங்கு செய்வாய். அந்தப் பாசாங்கிலேயே தூங்கிப்போவாய். சிறிது நேரத்தில் நான்கைந்து பேர் தடபுடலாக வருவார்கள். 'அடேய்... நம்ம தலைவரு ஜெயிச்சுடுவாருனு தெரிஞ்சு ஓட்டுப்பெட்டியில கோளாறு பண்றாங்களாம். நீ என்னடானா கும்பகர்ணன் மாதிரி தூங்குறியே... நீயெல்லாம் ஒரு தொண்டனா? எந்திரிடா’ என்று அதட்டுவார்கள். உடனே நீ வாரிச் சுருட்டி எழுந்து, அவர்களோடு கலந்து வீட்டிலிருந்து காணாமல்போயிருப்பாய். இந்நேரம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கல்லெறிந்துகொண்டிருப்பாய். இல்லையென்றால், லத்திக்கம்பால் லாடம் அடிக்கப்பட்டிருப்பாய்.

இன்னும் தேர்தல் முடியாத மேற்கு மாவட்டமாக இருந்தால், சுற்றுப்பயணமாக வந்திருக்கும் தலைவரைப் பார்த்ததும் கும்பலில் நெருக்கியடித்து தலைவரை நோக்கி முன்னேறுவாய். உன்னை ஒரு போலீஸ்காரர் லத்தியை ஓங்கித் தடுத்திருப்பார். நீயோ தலைவர் இருக்கிற தைரியத்தில், போலீஸ்காரரை முறைத்திருப்பாய். உன் அங்க அடையாளங்களை மனதில் குறித்துக்கொள்ளும் அந்த போலீஸ்காரரும், சின்னச் சிரிப்போடு உன்னை விட்டுவிடுவார். தலைவர் பொதுப்படையாகக் கையாட்டுவதைப் பார்த்த நீ, அது உன்னைப் பார்த்து மட்டுமே ஆட்டிய கை என்று நினைத்திருப்பாய்.

தேர்தல் முடிவுகள் தெரிந்த பிறகாவது சும்மா இருப்பாயா? மாட்டாயே... உன் கட்சிக்காரர் வெற்றி பெற்றிருந்தால், ஊர்வலமாகச் சென்று எதிர்க் கட்சிக் காரர்களான உன் சொந்த மாமன் மச்சான்களை எதிரிகளாக நினைத்து அடிக்கப்போவாய். உன் தலைவர் தோற்றுப்போனால், இது அரசியல் சூழ்ச்சி என்று பேருந்துகளில் கல்லெறிவாய். காவல் துறையில் பிடிபடுவாய். உன்னைத் தடுத்த அதே போலீஸ்காரர், உன்னை அடித்து உதைத்துப் பிடிப்பார். யாரும் உன்னை ஜாமீனில் எடுக்க முன்வர மாட்டார்கள். காரணம், தேர்தல் உறவும் கட்சி உறவும், ரயில் உறவு மாதிரி. உன் லாக்கப் வாசத்தையும், லத்திக் குத்துகளையும் கட்சிக்காகச் செய்யப்பட்ட தியாகத் தழும்புகளாக எடுத்துக்கொள்வாய்.

இந்தப் பின்னணியில், நான் என் பட்டறிவின் அடிப்படையில் உன்னையே உனக்கு அடையாளம் காட்ட வேண்டியது என் கடமையாகிறது. நீ ஒரு வெள்ளந்தி. அதாவது, அப்பாவி. கட்சியென்று வந்துவிட்டால், ராமபக்த அனுமான் நீ. ஆனால், ஒரு வித்தியாசம். அந்த அனுமானோ ராமரைப் பற்றி எல்லாம் தெரிந்ததால், அவருக்கு அடிமையானார். நீயோ, உன் கட்சியைப் பற்றியோ, உன் தலைவரைப் பற்றியோ எதுவும் தெரியாததால் அடிமையானாய்.

நஞ்சை புஞ்சைகளை அதட்டி மிரட்டி அடிமாட்டு விலைக்கு வாங்கி, ஓட்டை சைக்கிளில் இருந்து ஒய்யாரமான காருக்குள் ஏறி, கள்ளச்சாராயம் காய்ச்சுவதில் இருந்து ஒயின் ஷாப்களை ஏலத்தில் எடுத்து, ஊராட்சிப் பொறுப்பில் இருந்து ஒன்றியத் தலைவராக மாறி, அதற்கு மேலுமேலுமாக முன்னேறிப் போகும் கெட்டிக்கார அரசியல்வாதி அல்ல நீ. அதற்குரிய கிரிமினல் புத்தியோ, நயவஞ்சகமோ இல்லாத கள்ளங்கபடமற்ற தொண்டன்.

நீயும் மேலே போவதாகத்தான் நினைக்கிறாய். துண்டுப் பிரசுரம் விநியோகிப்பதில் இருந்து, சுவர் ஏறி பேனர் கட்டுகிறாய். சைக்கிளை உதறிவிட்டுக் கும்பலோடு கோவிந்தா வாகி லாரியில் ஏறுகிறாய். கல் எறிவதில் இருந்து சைக்கிள் செயினுக்கு வருவாய். முன்பு, சொந்த ஓட்டைக்கூட போடாத நீ, இப்போது கள்ளஓட்டுப் போடுகிறாய். ஆக, முன்னேறியிருப்பதாக நினைத்துக் கீழே விழுந்தவன் நீ. சுயத்தை இழந்த மனோ அடிமை நீ.

ஒருவன், இன்னொருவன் நிலத்தில் வரப்பை வெட்டினால் எதிர்ப்பாய். அதே சமயம், உன் தலைவர் அல்லது தலைவி கொள்ளையடித்து சொத்துகள் சேர்த்தாலும் அதைச் சாதனையாக நினைக்கிறவன் நீ. வாக்கை நிறைவேற்றாத தோழனைப் பார்த்து 'நாளைக்கு ஒரு பேச்சு. நீயெல்லாம் ஒரு மனுஷனா?’ என்று அடிக்கப்போகிறவன் நீ. அதே சமயம் உன் தலைவர் அந்தத் தேர்தலில் ஒரு பேச்சு... இந்தத் தேர்தலில் ஒரு பேச்சு என்று பேசினாலும் கைதட்டுகிறவன் நீ.

அப்பாவி அரசியல் தொண்டனுக்கு......

இதுதான் உன் நிலைமை. ஆனால், இது உனக்குப் புரிவதே இல்லை. நடப்பதை நம்புவதை விட்டுவிட்டு, நடக்க வேண்டும் என்று நினைப்பதை மட்டுமே நம்புகிறவன் நீ. இது ஒரு போதை. ஒரு விதமான மனநோய். காற்றில் ஆடும் தென்னை மரத்தை தான் ஆட்டுவதாக ஓணான் நினைத்தால் எப்படியோ... அப்படி.

'சீறும் சீங்கமே... சினக்கும் சிறுத்தையே... பாயும் புலியே... பலம் கொண்ட வேழமே!’ என்று உன் தலைவர்கள் உன்னைக் கொடிய மிருகங்களோடு ஒப்பிடுகிறார்கள். எப்போதாவது உன்னை 'மனிதனே வா’ என்று அழைக்கிறார்களா? மாட்டார்கள். காரணம், நீ மிருகமாக இருந்தால்தான் அவர்களுக்கு லாபம். மனிதனாக மாறிவிட்டாலோ, பெருத்த இழப்பு.

நீ தனிப்பட்ட முறையில் சாதுவாகவும் நல்ல தொண்டனாகவும் இருக்கிறாய். ஆனால் கட்சி, கும்பல் என்று வந்துவிட்டால், குண்டனாகிறாய். சிறு சொல் தாங்க முடியாமல்கூட மாற்றாரை அடித்துப் போடுகிறாய். இதை வீரம் என்று நினைக்கிறாய். இது வீரம் அல்ல.

தனிப்பட்ட முறையில் பயந்தாங்கொள்ளியான நீ, ஒரு கும்பலோடு இணைந்து பலசாலி போல் காட்டிக்கொள்கிறாய். இது உன் நிலைமை. பயந்தாங்கொள்ளித்தனத்தைப் பகிர்ந்து பகிர்ந்து பயங்கரவாதியாகும் நிலைமை. இதற்கு ஓர் அரசியல் முலாம் பூசிக்கொள்கிறாய்.

இதற்காக நீ வெட்கப்பட வேண்டாம். பொருளாதாரத்தில் பின்னடைந்த நாடுகளில் ஏழை எளியவர்களின் நோக்கும் போக்கும் இப்படித்தான் இருக்கும் என்று ஐ.நா. கல்வி விஞ்ஞானக் கலாசாரக் கழகம் நடத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.

இந்த நிறுவனத்து ஆய்வாளர்கள், பெரிய பெட்டி ஒன்றை, மூன்று தட்டுகளாகப் பிரித்து அவற்றுக்கிடையே வாசல்கள் வைத்தார்கள். ஒரு தட்டில் குறைந்த உணவையும் கூடுதலான எலிகளையும் வைத்தார்கள். இன்னொரு தட்டில் அதிக உணவையும் குறைந்த எண்ணிக்கையிலான எலிகளையும் விட்டார்கள். இன்னொரு தட்டைக் காலியாக வைத்தார்கள்.

குறைந்த உணவும் அதிக எலிகளும் கொண்ட தட்டில் இந்தியாவில் இப்போது என்னவெல்லாம் நடக்கிறதோ, அவையெல்லாம் நடந்தன. கற்பழிப்பு எலிகள், கொள்ளை எலிகள், ரௌடி எலிகள் என்று எலி வர்க்கங்கள் உருவாகின. பெரும்பாலான எலிகள் கடிபட்டும் உதைபட்டும் கஷ்டப்பட்டன. இப்படிக் கஷ்டப்பட்ட ஓர் எலியை ஆராய்ச்சியாளர்கள், அதிக உணவுள்ள தட்டில் வைத்தார்கள். ஆனால் இந்த எலியோ, எங்கே கடிபட்டதோ, அந்த முதல் தட்டுக்கே வர விரும்பியதாம். ஆக, பரம்பரை பரம்பரையாக வறுமைப்பட்டால், வறுமையே ஒரு ரசனையாகிவிடும். இப்படிச் சுயவெறுப்பு ரசனைக்கு உள்ளான அப்பாவி அரசியல் தொண்டன் நீ. தலைவர்கள் உன்னை புலி என்று அழைத்தாலும்... நிஜமாகவே, நீ எலிதான்.

தற்காக வருத்தப்படாதே... நானும் உன் போல்தான் என் மாணவப் பருவத்தில், கொடி கட்டிப் பறந்த திராவிட இயக்கத்தில் சேராமல், கேட்பாரற்ற தேசிய இயக்கத்தில் சேர்ந்தேன். பல மேடைகளில் பேசினேன். வடசென்னை கல்லூரி ஒன்றில் படித்தேன். மாணவர் பிரமுகனாக மாறிய நானும், திராவிட இயக்க மாணவர் தலைவர்களும் ஒரு மாணவனை, கல்லூரி நிர்வாகம் தண்டித்ததற்காகப் போராடினோம். எங்களை நிர்வாகம் கல்லூரியில் இருந்து வெளியேற்றியது. அப்போது தி.மு.க-வின் சக்தி வாய்ந்த நடிகர் ஒருவர், கல்லூரி நிர்வாகத் தலைவர். தி.மு.க. மாணவர்கள் அவரை அணுகியபோது அவர்களைக் கைவிட்டார். என்னை காங்கிரஸ் அமைச்சர்கள் கைவிட்டார்கள். தந்தை பெரியார்தான் எங்களை இன்னொரு கல்லூரியில் சேர்த்தார். இதில் ஒரு வேடிக்கை... மாணவர்களாகிய நாங்கள் வெளியேற்றப்பட்டது உறுதியானதும், நிர்வாகத் தலைவரான அந்த நடிகர், 'அய்யகோ! மாணவர்களை வெளியேற்றலாமா?’ என்று நீலிக்கண்ணீர் வடித்து அறிக்கைவிட்டார்.

அரசியல் சிலந்தி வலையில் இருந்து நான் எப்படியோ மீண்டுவிட்டேன். நீயும் மீள வேண்டும் என்பதே என் விருப்பம்.

டைசியாக ஒரு தகவல்.

எங்கள் கிராமத்துக்குப் பக்கத்துக் கிராமத்தில், எட்டாவது படித்த ஆசிரியை ஒருத்தியும் அந்தக் காலத்துப் பெரிய படிப்பான எஸ்.எஸ்.எல்.சி. படித்த ஒரு வாலிபனும் காதலித்தார்கள். இரு வீட்டாரும் காதலுக்குப் பச்சைக் கொடி காட்ட, கல்யாணம் உறுதியானது. ஆனால், மணவிழாவுக்கு எந்தக் கட்சித் தலைவரை அழைப்பது என்ற பிரச்னை இருதரப்பினருக்கும் இடையே சண்டையை உருவாக்கிவிட்டது. இதனால் கல்யாணமே நின்றுபோனது. இந்தக் கட்சி அரசியலை வைத்து, 'அங்கே கல்யாணம் - இங்கே கலாட்டா’ என்ற எனது முதல் சிறுகதையை விகடனுக்கு அனுப்பிவைத்தேன். அதில் எந்தத் தலைவருக்காக இவர்கள் சண்டை போட்டார்களோ, அந்தத் தலைவர்களின் மகனுக்கும் மகளுக்கும் சர்வகட்சித் தலைவர்களின் வாழ்த்தோடு திருமணம் நடைபெற்றது என்ற முத்தாய்ப்போடு முடித்தேன். விகடன் மட்டும் அந்தக் கதையைப் பிரசுரிக்காமல் இருந்திருந்தால், மீண்டும் நான் அரசியல் போதையில் சிக்கிச் சீரழிந்திருப்பேன். என்னை வெளிக்காட்ட எழுத்து கிடைத்தது. இதே போல் உன்னை வெளிக்காட்ட சமூக சேவை, வீதி நாடகம், அறிவொளி இயக்கம் போன்ற நல்லதைப் பேணி அல்லதைச் சாடும் அமைப்புகள் உனக்காகவே காத்திருக்கின்றன. இதில் நீ உன்னை ஈடுபடுத்திக்கொள்ளலாம்.

இப்படிச் சொல்வதால், நீ அரசியல் தொண்டனாக இருக்கக் கூடாது என்று அர்த்தம் அல்ல. அரசியலில் இரு... நேர்மையாக இரு. யார் செய்தாலும் குற்றம் குற்றமே என்று நீ சார்ந்த கட்சியில் உள்ஜனநாயகத்தை வற்புறுத்துவாயாக. நம்முடைய தமிழ் சமய இலக்கியம், ஆண்டவனைவிட தொண்டனையே பலமாகக் காட்டுகிறது. பரம்பொருள் மீது பரிபூரண நம்பிக்கை வைத்திருந்த திருநாவுக்கரசர், ஒரு கட்டத்தில், சிவனை, திறந்த கோயில் கதவு மூடாததற்காக 'திருமறை காடரோ’ - அதாவது 'நீ காட்டானோ’ என்று கண்டனப் பாட்டுப் பாடினார். ஆளுடைய பிள்ளையான சம்பந்தர், 'நீ, என்னை ஆட்கொண்டதற்கு அடையாளமாக என்ன தந்துவிட்டாய்?’ என்று கேள்வி கேட்டார். சுந்தரமூர்த்தியோ, தன் கண் இழந்ததற்காக ஆண்டவனை 'வாழ்ந்து போவீரே’ என்று அங்கதமாகத் திட்டினார். ஆண்டவனே அவன் தொண்டர்களால் சோதனைக்கு உள்ளாகும்போது, உன் தலைவனோ தலைவியோ அப்படி ஆகக் கூடாதா? ஆகையால்...

அரசியலை உன்னால் விட முடியாது போனால், இந்தத் தலைவர்களுக்கு அடியார்களைப் போல சோதனை கொடு. கேள்விக்கு மேல் கேள்வி கேள். இதில் அவர்கள் தேறாதுபோனால்... அவர்களை வெளியேற்று அல்லது வெளியேறு. கட்சியிடம் இருந்து மக்களிடம் வா. காரணம், தலைவரைவிட கட்சி பெரிது. கட்சியைவிட மக்கள் சக்தி பெரிது.