அரசியல்
Published:Updated:

உலகத் தொலைக்காட்சிகளில் தாறுமாறு ஜல்லிக்கட்டு!

தோட்டா ஜெகன், ஓவியங்கள்: கண்ணா

முன் குறிப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெறும் சம்பவங்கள் மற்றும் சவால்கள் அனைத்தும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்துபவை அல்ல!

15 கோடி பட்ஜெட் சினிமா வெளியீட்டுக்கே அத்தனை டி.வி. ஷோக்களையும் ஆக்கிரமிக்கிறார்கள் சம்பந்தப்பட்ட படக் குழுவினர். ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் எவ்வளவு காஸ்ட்லி? ஒரு தொகுதிக்கே சர்வசாதாரணமாக 50சி, 100சி என்று எகிறுமே! அதற்கு, பிரபல டி.வி. ஷோக்களில் 'ஷோகேஸ்’ போடாவிட்டால் எப்படி? தங்களின் தகுதிகளையும் தொகுதிகளையும் தக்கவைக்க, ரதகஜதுரகப் பதாதிகளை போர்க்கால அவசரத்தில் சேனல் அலுவலகங்களுக்கு அனுப்புகின்றன தமிழகத்தின் அரசியல் கட்சிகள். இனி, ஓவர் டு லைவ் ஆக்ஷன்!

தேர்தல் சமயங்களில், பாடி கட்டப்போற அசோக் லேலண்ட் லாரி மாதிரி பம்பரமா சுத்தும் கம்யூனிஸ்ட்களின் கண்கள், இப்போ செம்பரம்பாக்கம் ஏரி மாதிரி தண்ணி தேங்கிக் கிடக்க, லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் பீக் ஹவர் ஸ்லாட்டில் அமர்ந்திருக்கிறார்கள் காம்ரேட்கள்.

லக்ஷ்மி: ''சொல்லுங்க சார், அழுது அழுது செவந்துபோன உங்க கண்களுக்கு முன்னால, உங்க தோளுல கிடைக்கிற துண்டே வெளுப்பாத் தெரியுதே..! சொல்லுங்க என்னதான் நடந்தது?''

தா.பா: ''ஆடு நடந்ததும்மா, மாடு நடந்ததும்மா, என் கட்சி ஆபீஸ்ல இருந்து கார்டனுக்கு 4,000 தடவை என் ரெண்டு காலும் நடந்ததும்மா. ஆனா, நல்லதா ஒண்ணுமே நடக்கலியேம்மா!''

உலகத் தொலைக்காட்சிகளில் தாறுமாறு ஜல்லிக்கட்டு!

லக்ஷ்மி: ''அ.தி.மு.க-வுடனான உங்க கூட்டணி நல்லாத்தானே போச்சு?!''

ஜி.ஆர்: ''நல்லாப் போச்சும்மா..! குண்டாவுல இருந்து இறக்கி வெச்சவுடனே காணாமப்போற  அம்மா மெஸ் இட்லி மாதிரி, வியாபாரம் சர்ர்ர்ர்ருன்னு ரொம்ப நல்லாப் போச்சும்மா. மேடைக்கு மேடை அன்லிமிட்டெட்டா அம்மா புகழ் பாடிட்டும் இருந்தோம். ஆனா, புகழுற தொழில்லகூட போட்டி அதிகமாயிடுச்சு. சரத்குமார், அம்மாவைப் புகழ்றதுக்குனே பிரைவேட் டியூஷன்லாம் போயிட்டு வந்து டிசைன் டிசைனா புகழ்ந்தாரு!''

லக்ஷ்மி: ''சரி... உங்களுக்குள்ள அப்பிடி என்ன பிரச்னை?''

தா.பா: ''ஒண்ணும் இல்லம்மா. 'நாடாளுமன்றத் தேர்தல்ல 40 சீட்’ கேட்டோம். 'முதல்ல, மொத்தமா 40 வேட்பாளர்களைக் காட்டுங்க’னு சொன்னாங்க. அது ரொம்பக் கஷ்டமாச்சே..! 'சரி... 20 சீட் கொடுங்க’னு கேட்டோம். 'சிக்கிம், பூட்டான் லாட்டரி சீட்டா?’னு லந்துவிட்டாங்க. அழுவாச்சியை அடக்கிக்கிட்டு, 'போகட்டும் 10 சீட்டாவது குடுங்க’னு கேட்டோம். 'எந்தப் படத்துக்கு?’னு எகத்தாளம் பண்ணினாங்க. 'டெம்போ, கிம்போலாம் வெச்சு வந்திருக்கோம். நாலு சீட்டாவது...’னு இழுத்தோம். பொள்ளாச்சிஜெயராமன் 'ஆ...யிரம்’னு சொல்ல, செங்கோட்டையன் 'ரெண்டா...யிரம்’னு சொல்ல, நத்தம் விச்சு 'மூவா...யிரம்’னு வந்து கடைசியா ஓ.பி.எஸ். 'பிம்பிலிக்கா பிளாப்பி’னு சொல்லி, எல்லோரும் எங்களைக் கிண்டல் பண்ணி சிரிச்சாங்கம்மா சிரிச்சாங்க!

'சரி... ஆனது ஆச்சு, எங்க ரெண்டு கட்சிக்கும் சேர்த்து ரெண்டு சீட் கொடுங்க’னு கெஞ்சினோம். 'ரெண்டா?’னு கேட்டுட்டு, 'இங்கி பிங்கி பாங்கி’னு சொல்லி எங்க பக்கம் விரலே காட்டாம, அவங்களுக்குள்ள விரல் காமிச்சு விளையாட்டை முடிச்சுட்டாங்க. நாங்கதாம்மா அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தோம். கடைசி வரை அவங்க எங்களோட கூட்டணியில் இல்லவே இல்லம்மா... இல்லவே இல்லை!''

லக்ஷ்மி: ''ச்சே... கூட்டணிக்குள்ளயே நம்பிக்கைத் துரோகமா? கேட்கவே கஷ்டமா இருக்கு. நீங்க எந்த நம்பிக்கைல கடைசி வரை காத்துட்டு இருந்தீங்க?''

தா.பா: ''எங்க கட்சிக்குச் சேதாரம் வந்தாலும் நான் ஆதாரம் இல்லாமப் பேச மாட்டேன்மா. இந்தாங்க இந்தப் பேப்பர்ல, அவங்க போட்ட அக்ரிமென்ட் இருக்கு பாருங்க..!''

லக்ஷ்மி: (சீட்டை வாங்கிப் பார்த்துவிட்டு) ''சார்... இது சீட் அக்ரிமென்ட் இல்லை. உங்களை அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினராச் சேர்த்துக்கிட்டதா பெருமிதமாச் சொல்ற தலைமைக் கழகக் கடிதம்!''

தா.பா, ஜி.ஆர்: (ஒரே குரலில்...) ''அப்போ இவ்வளவு நேரம் இதை வெச்சுக்கிட்டுத்தான் சுத்திக்கிட்டும் கத்திக்கிட்டும் இருந்தோமா?'' என்றபடி 'கோ’வென அழுகிறார்கள்.

லக்ஷ்மி: (கேமரா பக்கம் திரும்பி) ''பாருங்க நேயர்களே... இந்த ரெண்டு பச்ச மண்ணையும் பாருங்க. இவங்க எதிர்காலம் எப்படி இருக்கப் போகுது? பார்க்கலாம், சிறிய விளம்பர இடைவேளைக்குப் பிறகு!''

னைத்துக் கட்சிக் கதம்பக் கூட்டணியுடன் ஒளிபரப்பாகிறது 'நீயா? நானா?’

கோபிநாத்: ''வெல்கம் டு 'நீயா? நானா?’ நமது இந்தியாவின் நாளைய பிரதமர் யார்? சண்டை போடுவோம்... சாதனை செய்வோம்! பன்னீர்செல்வம் சார்... நீங்க ஆரம்பிங்க, அடுத்த பிரதமர் யார்?''

பன்னீர்: ''எங்களின் இதயதெய்வம், கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளர், தமிழகம் கண்ட வீரமங்கை, காவிரிக்குக்கூடவே ஓடும் கங்கை, தமிழகத்தின் நிரந்தர முதல்வர், நாளைய இந்தியாவை ஆளப்போகும் ஜான்சிராணி, எங்க புரட்சித்...''

கோபி: ''பன்னீர் சார், நீங்க பேசிட்டு இருங்க. நாங்க போயி டிபன், காபி சாப்பிட்டுட்டு வர்றோம். பின்ன என்ன சார், பேசக் கொடுக்குறதே அஞ்சு நிமிஷம். அதுல அம்மா புகழ் 10 நிமிஷமா? வேற... வேற... மைக்க பிரேமலதா மேடம்கிட்ட கொடுங்க!''

பிரேமலதா: ''அடித்துச் சொல்கிறேன், இந்த மைக்கைப் பிடித்துச் சொல்கிறேன். கேப்டன் யாரைக் கைகாட்டுகிறாரோ, அவர்தான் நாளைய பிரதமர்!''

உலகத் தொலைக்காட்சிகளில் தாறுமாறு ஜல்லிக்கட்டு!

டி.ஆர்: ''சாமான் நிக்காலோனா சரோஜா... செந்தூரப் பூவே பட ஹீரோயின் நிரோஷா. கேப்டன் தோனி கையைக் காட்டுற இடத்துல பீல்டிங் பண்றது ரவீந்தர ஜடேஜா... அப்போ ஜடேஜா ஆவாரா பிரதமரு? பிரதமர் ஆகிற அளவு உங்க வீட்டுக்காரர் என்ன உத்தமரா?''

கோபி: ''வேற... வேற... சார்... மேல மைக்கை நாஞ்சில் சம்பத்கிட்ட கொடுங்க.''

நாஞ்சில்: ''அம்மா அன்பாகத் தந்தது இன்னோவா. இப்போ நான் எது வாங்கினா உனக்கு என்னவாம்? குறுந்தொகையிலே, மூத்த தமிழ் முன்னோடி ஒருவன் பாடுகிறான், வெச்ச காபி சூடு ஆறிடுச்சோ, பாலின் நிறம்தான் மாறிடுச்சோ, வண்டிக்கு ஆயில் சர்வீஸ் டைம் ஆயிடுச்சோ! காணாமப்போச்சு கண்ணகி சிலை, எங்கப் பார்த்தலும் இலை அலை. சிலரின் தேவை பெட்டி, சிலரின் தேவை புட்டி, நாற்பது தொகுதிகளிலும் நாங்கள் கெட்டி!''

கோபி: ''ப்ப்ப்ப்ப்பா... மதுரை ஆதீனம், உங்க கருத்து என்ன?''

ஆதீனம்: ''சிவபெருமானே கனவுல வந்து சொன்ன மாதிரி, இந்த ஆட்சி நைஸ்... எல்லோருக்கும் கிடைக்குது ரேஷன் ரைஸ். அம்மாடி வைஷ§, அந்த ஞானப்பாலைக் கொண்டுவந்து எல்லோருக்கும் வீசு!''

கோபி: ''உங்களையெல்லாம் சாமினு சொன்னா, தினம் கோயிலுக்குப் போற மாமிகூட நம்பாது. வேற வேற வேற... ஆங்..! மைக்கை பொன்.ராதாகிருஷ்ணன்கிட்ட கொடுங்க.''

பொன்: ''எல்லாக் கட்சிகளுடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஓரிரு நாளில் நல்ல முடிவு எடுக்க...''

கோபி: ''ஐயோ சார்... நீங்க இன்னும் அந்தக் காய்ச்சல்ல இருந்தே வெளியே வரலியா? அந்தப் பஞ்சாயத்துலாம் முடிஞ்சு உங்காளுங்க பிரசாரத்துக்கே கிளம்பிட்டாங்க. பாவம்... என்னா அடி!''

யாருமே கூட்டணிக்குக் கிடைக்காவிட்டாலும், கிடைத்த கேப்பில் 'காபி வித் டிடி’யில் கலக்குகிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.

டிடி: ''சூப்பர்ல... எல்லா கோஷ்டி தலைவர்களும் ஒண்ணா கூடியிருக்கீங்க. எப்படி ஃபீல் பண்றீங்க?''

ஞானதேசிகன் : ''சூப்பரா இருக்கு. ஃபீலிங் குட். பாருங்க, தங்கபாலு சிரிச்ச மாதிரியே மூஞ்சியை வெச்சிருக்காரு. இதெல்லாம் பார்த்தே பல வருஷம் ஆச்சு!''

டிடி : ''தமிழ்நாட்டில் தனித்துப் போட்டிங்கிற பயங்கரமான முடிவை எப்படி எடுத்தீங்க?''

தங்கபாலு: ''ம்க்கும், இது நாங்க எடுத்த முடிவு இல்லம்மா. மத்த எல்லாக் கட்சியும் சேர்ந்து எடுக்கவெச்ச முடிவு!''

உலகத் தொலைக்காட்சிகளில் தாறுமாறு ஜல்லிக்கட்டு!

டிடி: ''இப்போ ஆளுக்கு ஒரு போட்டோவை எடுங்க. வர்ற போட்டோவைப் பத்தி நீங்க பேசணும். இளங்கோவன் சார்... நீங்க மொதல்ல எடுங்க!''

இளங்கோவன்: ''ஹாஹா... எனக்கு வந்திருக்கிறது டைம்ஸ் பத்திரிகைனு நினைச்சு டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையை எரிச்ச போட்டோ!''

டிடி: ''செம ட்விஸ்ட் சார் அது! எப்படி சார் கரெக்டா தப்பு பண்றீங்க?''

இளங்கோவன்: ''கொடும்பாவி எரிப்புனா கரெக்ட்டா பண்ணிடுவோம்மா. ஏன்னா, சத்தியமூர்த்தி பவன்ல ஒவ்வொருத்தர் கொடும்பாவியையும் அடையாள ஸ்டிக்கர் ஒட்டி, ரெடியா ஸ்டாக் வெச்சிருப்போம். இது படிக்கிற பேப்பரா போயிடுச்சா... அதான் டங் ஸ்லிப் ஆயிடுச்சு!''

டிடி: ''தங்கபாலு சார்... நீங்க சொல்லுங்க, எதுக்குத் தனித்துப் போட்டி போடுறீங்க?''

தங்கபாலு : ''தமிழ்நாட்டுல இருக்கிற எல்லாக் கட்சிகளுக்கும் 'எங்களோட கூட்டணி போடுங்க’னு லெட்டர்ல ஆரம்பிச்சு, ட்விட்டர் வரை தகவல் அனுப்பியாச்சு. காடு காடாத் தேடியும் ஒரு ஆடுகூட சிக்கலையே! அதான், 'தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய’ காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுது!''

உலகத் தொலைக்காட்சிகளில் தாறுமாறு ஜல்லிக்கட்டு!

டிடி : ''அட... அட... அட... பின்றீங்க சார். ஆனா, நடக்கிறது டெல்லிக்கான நாடாளுமன்றத் தேர்தலாச்சே?''

இளங்கோவன் : ''அப்போ டெல்லி போய் 'காமராஜர் ஆட்சி அமைப்போம்’, போதுமா?''

டிடி: ''ஓ மை காட்..! கடவுளே இதுக்கு எதுக்குக் கோவப்படுறீங்க?''

தங்கபாலு : ''தேர்தல் மேட்டரு, ஃப்ரெண்டு ஃபீல் ஆயிட்டாப்ல. டெபாசிட் கிடைச்சா கூல் ஆயிடுவாப்ல!''

ஞானதேசிகன் : ''சூப்பர்ஜி, சூப்பர்ஜி, சூப்பர்ஜி. அப்படியே ஃப்ரெஷ்ஷா இருக்குஜி. என் காதுல வந்து இன்னொரு தபா சொல்லுங்கஜி!''

தங்கபாலு: ''தேர்தல் மேட்டரு, ஃப்ரெண்டு ஃபீல் ஆயிட்டாப்ல. டெபாசிட் கிடைச்சா கூல் ஆயிடுவாப்ல!''

டிடி: ''மொத்தம் எத்தனை கோஷ்டிகள், இதுவரை கிழிக்கப்பட்டது எத்தனை வேஷ்டிகள், கல் எறிதல் மற்றும் சொல் எறிதல்... இப்படிச் பல விஷயம் இவங்ககிட்ட பேச இருக்கு, பேசலாம், ஒரு சின்ன பிரேக்குக்கு அப்புறம்..!''

உலகத் தொலைக்காட்சிகளில் தாறுமாறு ஜல்லிக்கட்டு!

திராவிடக் கட்சிகள் தந்தைமார்களையும் தாய்மார்களையும் கவர, இளைஞர்களைக் கவர மாம்பழப் புகழ் பாட ஸ்லாட் பிடிக்கிறார் தைலாபுர மருத்துவர் ராமதாஸு.

''என் மனசுல இருக்குற ஒரே வெறி என்னன்னா, நான் பிறந்து வளர்ந்து வந்த இந்தத் தமிழ்நாட்டில என் பேரப் பசங்களுக்கும், மகன் போன்ற வாலிபர்களுக்கும், என் உடன்பிறந்த சகோதரர்களுக்கும் இந்த மாம்பழ அல்வாவை என்னால முடிஞ்ச அளவுக்குக் கொண்டுபோயி சேர்க்கணுங்கிறதுதான்.

கண்ணுங்களா... நீங்க பண்றதைப் பார்த்தா எனக்குக் கோவம் கோவமா வருதுடா. கண்ணு டேய்... கையெடுத்துக் கும்பிடுறேன்டா, டேய், கண்ணுங்களா... தயவுசெய்து ஓட்டு சக்தியை மட்டும் வீணடிக்காதீங்கடா. 18 வயசுலாம் ஓட்டு போடுற வயசுதான். உனக்கு, 'யாருக்கு ஓட்டு போடுறது?’னு குழப்பமா இருந்தா, 49o போட்டுடு. இல்லை... எங்கேயாவது ஓடிப்போயிடு. ஏண்டா... ஒரு நாட்டோட வாழ்க்கையைக் கெடுக்கிற? விஞ்ஞானம் வளர்ந்திடுச்சு, அந்த மருத்துவத்துல இதைப் பண்றாங்க, இந்த மருத்துவதுல அதைப் பண்றாங்கனு நம்பிப் போகாதடா. இங்கே வா... இது என் சொந்த மருத்துவம். மாற்று மருத்துவத்தை நம்பாதீங்க என் மகன் போன்ற வாலிபர்களே..! அது மாற்று மருத்துவம் அல்ல, ஏமாற்று மருத்துவம்!

அடுத்த தேர்தலுக்குள்ள உன் சித்தத்துல இருக்கிற பித்தமெல்லாம் சுத்தமாகி ரத்தம் கிளியர் ஆகிடும். தாத்தாவ நம்புடா, இந்த தாத்தாவ நம்பு!''