அரசியல்
Published:Updated:

“இது அனௌன்ஸ்மென்ட் அரசு!”

வெளுத்துக்கட்டும் ஸ்டாலின்எஸ்.கலீல்ராஜா, ம.கா.செந்தில்குமார், படங்கள்: கே.ராஜசேகரன்

ல்லாச் சுமைகளும் இப்போது ஸ்டாலின் தோளில்! மக்கள் மத்தியில் மட்டுமல்ல தி.மு.க. தொண்டன் உள்ளத்திலும் தன்னை நிரூபித்துக்காட்ட வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார் அவர். அதனால்தான் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காகத் தகிக்கும் வெயிலில் தமிழகத்தை பரபர பிரசார வலம் வருகிறார் தி.மு.க-வின் தளபதி!

இந்தப் பிரசாரக் காலத்தில், தினமும் ஸ்டாலின் நள்ளிரவு ஒரு மணிக்குத்தான் படுக்கச் செல்கிறார். காலை 6 மணிக்கே எழுந்துவிடுகிறார். பிறகு நடைப்பயிற்சி, யோகா... என ஒன்றரை மணி நேரம் உடல் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துகிறார். காலை உணவைத் தொடர்ந்து, மற்ற மாவட்டங்களில் பிரசாரம் எப்படி இருக்கிறது? என மாவட்டச் செயலாளர்களை தொலைபேசியில் அழைத்து விசாரிக்கிறார். சரியாக 10.30 மணிக்குத் தயாராகி வருபவர் மதியம் ஒன்றரை மணி வரை, தான் பிரசாரம் செய்யவுள்ள தொகுதியின் நிலவரம் பற்றி வேட்பாளர் மற்றும் மாவட்டச் செயலாளருடன் தனித்தனியாக ஆலோசனை நடத்துகிறார். ஏதேனும் குறைகள், வருத்தங்கள் இருக்கிறதா எனக் கேட்டுத் தெரிந்துகொள்கிறார். பிறகு, கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளை அழைத்துப் பேசுகிறார். மதிய உணவு முடித்ததும் ஒரு மணி நேரம் ஓய்வு.

சரியாக மாலை 3 மணிக்கு டெம்போ டிராவலரில் பிரசாரத்துக்குக் கிளம்பி விடுகிறார். அதிகபட்சம் ஏழு அல்லது எட்டு இடங்களில் திரண்டிருக்கும் மக்களிடையே வேனை நிறுத்திப் பேசுபவர், இரவு 9 மணி நெருங்கும்போது தொகுதியின் தலைமை இடத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் மேடையில் ஏறுகிறார். ஆங்காங்கே பேசிய பேச்சுகளைகொஞ்சம் விரிவாக்கி அரை மணி நேரம் பேசுகிறார். இதுதான் ஸ்டாலினின் பிரசார வியூகம்!

“இது அனௌன்ஸ்மென்ட் அரசு!”

ஸ்டாலினை, காஞ்சிபுரம் தொகுதிப் பயணத்தில் பின்தொடர்ந்தோம். ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்து அவரை அழைத்துச் செல்ல காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் வந்து காத்திருந்தார். மாலை மூன்றரை மணி அளவில் கறுப்பு-சிவப்பு துண்டுடன் வெளியே வந்த ஸ்டாலின் பிரசார வேனின் முன் இருக்கையில் ஏறிக்கொள்ள, பின்னால் அவரின் மனைவி துர்கா, சகோதரி செல்வி, இளைஞர் அணி துணைச் செயலாளர் ஹசன் முகமது ஜின்னா ஆகியோர் ஏறிக்கொண்டனர். இத்தனை வாகனங்கள்தான் வரவேண்டும் என்ற தேர்தல் கமிஷன் கெடுபிடி காரணமாக, ''சார் நீங்க வர்ற வண்டியில 'பிரஸ்’னு போட்டுருங்க. இல்லைனா அதையும் எங்க வண்டி கணக்குல வெச்சுடப் போறாங்க!'' என்று ஸ்டாலின் உதவியாளர் ஜாக்கிரதையாகக் கேட்டுக்கொண்டார்.

கேளம்பாக்கத்துக்கு முன் சிக்னலில் நிற்கிறது வண்டி. சாலையைக் கடக்கும் பள்ளி மாணவிகள் இருவர், ஸ்டாலினைப் பார்த்து கைகளை அசைக்கிறார்கள். ஸ்டாலின் கண்ணாடியை இறக்கிவிட, ''அங்கிள்... நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!'' என்கிறாள் ஒரு மாணவி. ஸ்டாலின் முகத்தில் வெட்கப் புன்னகை.

பிரசார வாகனம் கேளம்பாக்கத்தைத் தொட்டதும் தொண்டர்கள் வெடி வெடித்து ஸ்டாலினை வரவேற்கிறார்கள். காஞ்சிபுரம் வேட்பாளர் ஜி.செல்வம் அங்கிருந்து ஸ்டாலினுடன் சேர்ந்துகொள்கிறார்.

''சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரையிலான 150 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கிழக்குக் கடற்கரைச் சாலை, தி.மு.க. ஆட்சியில்தான் அமைக்கப்பட்டது. இதில், 40 நிமிடங்களில் இங்கு இருந்து நீங்கள் சென்னைக்குச் சென்றுவிடலாம். தி.மு.க. அரசால் 1,300 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட சிறுசேரி தகவல் தொழில்நுட்பப் பூங்காவால், இந்தப் பகுதி மக்களின் வாழ்க்கை மேம்பட்டுள்ளது. ஆனால், ஜெயலலிதா ஆட்சியிலோ, அந்தத் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அருகிலேயே உமா மகேஸ்வரி என்ற மென்பொறியாளர் கொலை செய்யப்பட்டார். அதைக்கூட பொதுமக்கள்தான் போலீஸுக்குத் தகவல் தர வேண்டி இருந்தது. நான் போலீஸைக் குறை சொல்வதாக எண்ண வேண்டாம். காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் ஜெயலலிதாவின் கையாலாகாத்தனத்தைத்தான் குறை சொல்கிறேன்'' என கரன்ட் டாபிக் பிடிக்கிறார்.

“இது அனௌன்ஸ்மென்ட் அரசு!”

விலைவாசி ஏற்றம்தான் மகாபலிபுரத்தில் பேசுபொருள். ''தி.மு.க. ஆட்சியில் ஒரு லிட்டர் பாலின் விலை 17.75 ரூபாய். இன்றைய அ.தி.மு.க. ஆட்சியில் அதுவே 24 ரூபாயாக உயர்ந்துஉள்ளது. அன்று மஞ்சள் விலை 65 ரூபாய். ஆனால், பாரத மாதா, புண்ணியவதி ஜெயலலிதா ஆட்சியில் மஞ்சள் விலை 160 ரூபாய்'' என்றதும் பெண்கள் மத்தியில் சிரிப்பலை.

''அடுத்து கட்டுமானப் பொருள்கள்'' என்றதும் எழுந்த கைதட்டல், அடங்க வெகுநேரம் பிடித்தது. காரணம், காஞ்சிபுரம், ரியல் எஸ்டேட் தொழில் அதிக அளவில் நடைபெறும் பிராந்தியம். ''அன்று சிமென்ட் ஒரு மூட்டை 250 ரூபாய். இன்று 350 ரூபாய். ஒரு டன் கம்பி விலை அன்று 28 ஆயிரம் ரூபாய். இன்று 48 ஆயிரம் ரூபாய். அன்று மணல் விலை ஒரு லோடு 7,000 ரூபாய். இன்று...'' என நிறுத்தி, பதிலை மக்களிடம் எதிர்பார்க்கிறார். ''49 ஆயிரம் ரூபாய்,  43 ஆயிரம் ரூபாய்...'' என மக்களிடம் இருந்து விதவிதமாக விலை வருகின்றன. ''நான் ரெண்டு நாளைக்கு முன் இந்தப் பட்டியலைத் தயார் பண்ணினேன். அப்ப 43 ஆயிரம் ரூபாய். இப்ப எவ்வளவுனு நீங்களே விசாரிச்சுக்கங்க'' என்று முடிக்கிறார்.

ஸ்டாலினின் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் இணையதளத்தை அவரது மருமகன் சபரீசன் தலைமையிலான குழு நிர்வகித்து வருகிறது. இந்தக் குழு, ஸ்டாலினுடன் பிரசாரத்துக்குக் கூடவே தனி காரில் செல்கிறது. அப்போது எடுக்கப்படும் புகைப்படங்களையும், அவரின் உரையையும் உடனுக்குடன் அப்டேட் செய்கிறது. சமயத்தில் ஸ்டாலினே தன் ஐபாட் மூலம் அப்டேட் செய்கிறார்.

ஸ்டாலினின் கான்வாயைத் தொடரும் வாகனங்களை, அது போலீஸ் வண்டியா, பத்திரிகையாளர்கள் வண்டியா என்றெல்லாம் தொண்டர்கள் பார்ப்பது இல்லை. சகட்டுமேனிக்குக் கும்பிடு போடுகிறார்கள்; டாட்டா காட்டுகிறார்கள். ''பத்திரிகைக் காரங்கலாம் தப்புத்தப்பா எழுதுறாங்க. 40 தொகுதியிலயும் தி.மு.க-தான் ஜெயிக்கும்னு போட்டுக்கோங்க'' என்கிறார் ஓர் உடன்பிறப்பு.

செங்கல்பட்டு பேசும் ஸ்டாலின், அம்மா குடிநீர் பற்றி கோடிட்டுச் சாடினார். ''ஜெயலலிதா, 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், '60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்’ என்றார். வழங்கினாரா? 'வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் மினரல் வாட்டர் வழங்கப்படும்’ என்றார். வழங்கினாரா? ஆனால், இன்று மக்கள் வரிப்பணத்தில் அரசே குடிநீரை விற்கும் மோசமான ஆட்சியில் இருக்கிறோம்'' என்றார்.

கீழே நின்று கேட்டுக்கொண்டிருந்த தொண்டர் ஒருவர், ''அடுத்த சி.எம். இவர்தாங்க. டைட்டா செக்யூரிட்டி கொடுங்க'' என்று பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரரிடம் வேண்டுகோள் வைக்க, அவர் மௌனமாகத் தலையசைக்கிறார்.

முன்பெல்லாம் ஸ்டாலின் வரும் வழியெங்கும், 'எங்கள் தளபதியே...’ வகை ஃப்ளெக்ஸ்கள் படபடக்கும். இந்த முறை 'எங்கள் தலைவரே...’, 'எங்கள் மேம்பாலமே...’ என்று பளபளக்கின்றன பேனர்கள்.

“இது அனௌன்ஸ்மென்ட் அரசு!”

ஸ்டாலின் தன் பிரசார உரையில் ஜெயலலிதாவைத் தவறாமல் குத்திக்காட்டும் விஷயம், மின்வெட்டு. ''தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு இல்லை என்று நான் சொல்லவில்லை. ரெண்டு, மூன்று மணி நேர மின்வெட்டு இருந்ததை நான் ஒப்புக்கொள்கிறேன். அந்த ரெண்டு, மூன்று மணி நேரத்துக்கே எங்களை வீட்டுக்கு அனுப்பிய நீங்கள், இன்று 10 மணி நேரம், 18 மணி நேரம் மின்வெட்டு இருக்கிறது. அதற்கு என்ன செய்யப்போகிறீர்கள்?'' என்று கேட்க, ஆர்ப்பரிக்கிறார்கள் தொண்டர்கள்.

அவ்வபோது ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் பிரசாரத்தைப் பற்றியும் கிண்டலடிக்கிறார். ''நாங்கள் உங்களைத் தேடி உங்கள் ஊருக்கே, வீதிக்கே வருகிறோம். அந்த அம்மையார் விமானத்தில் பறக்கிறார். வானத்தில் பறக்கும் அந்த அம்மையாருக்கு தரையில் ஆயிரக்கணக்கான போலீஸ் பாதுகாப்பு'' என்ற அவரின் கிண்டலுக்கும், ''ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களுக்காக வருபவர்கள், உங்களுடன் இருப்பவர்கள் நாங்கள்தான். வெற்றி பெற்றால் கோட்டை; இல்லையென்றால் கொடநாடு. இதுதான் அந்த அம்மையாரின் பண்பாடு'' போன்ற ரைமிங் டைமிங் பன்ச்சுக்கும் தொண்டர்கள் மத்தியில் அப்ளாஸ் ஆதரவு!

பிரசார ஸ்பாட்களுக்குப் போகும் வழியில் தெரப்டீன் என்ற புரோட்டீன் பிஸ்கட் சாப்பிடுகிறார். நடுநடுவே மனைவி துர்கா கொடுக்கும் பனங்கற்கண்டு, கடலை மிட்டாய், வீட்டில் தயாரான முறுக்குகளைச் சாப்பிடுகிறார்.

பிரசார கான்வாய் காஞ்சிபுரத்தை நெருங்க நெருங்க, ஒவ்வொரு பாயின்ட்டிலும் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்த தொண்டர்களிடம் எல்லை கடந்த உற்சாகம். பல இளைஞர்கள் தலையில் தி.மு.க. கொடியைக் கட்டியபடி பைக்கில் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு கட் அடித்தும், வீலிங் செய்தபடியும் ஸ்டாலின் வேனை விரட்டி வருகிறார்கள். அதில் பலர் தங்கள் பைக்குகளின் சைலன்ஸரைக் கழற்றிவிட்டு ஓட்டியதால், எழுந்த சத்தம் சாலையின் இருபுறமும் வேடிக்கை பார்த்த மக்களை அதிர்ச்சிகொள்ளவும், முகம் சுளிக்கவும் வைத்தது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த ஸ்டாலின், அருகே அமர்ந்திருந்த  ஜின்னாவிடம் ஏதோ சொல்ல, அதற்குள் காஞ்சிபுரத்தில் 'அண்ணா வீடு’ வருகிறது.

அண்ணாவின் வீட்டுக்குள் ஸ்டாலின் நுழைந்தபோது அவரின் சகோதரி செல்வி கீழே இறங்கி பைக் இளைஞர்களிடம் கைகூப்பியபடி, ''நம் பிரசாரம் எந்த வகையிலும் மக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது. தயவுசெய்து மெதுவா வாங்க!'' என்று தன்மையாகச் சொல்கிறார்.

அண்ணாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பிறகு, ஸ்டாலினின் பிரசார வாகனம் மேடை நோக்கி நகர்கிறது.

“இது அனௌன்ஸ்மென்ட் அரசு!”

மேடையேறி மைக் பிடித்ததும், 'அவர்களே... இவர்களே..’ என்று வரவேற்புப் பட்டியலை நீட்டி முழக்காமல், சட்டென சப்ஜெக்ட்டுக்கு வருகிறார்.

'' 'வானத்தைப் பிளந்து வைகுண்டத்தைக் காட்டுவோம், மணலையே கயிறாகத் திரிப்போம்’ என்று தினம் ஓர் அறிவிப்பாக வெளியிடும் ஜெயலலிதா அரசை, நாம் 'அனௌன்ஸ்மென்ட் அரசு’ என்று சொல்வதில் என்ன தவறு?'' என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியதும், ஆரவாரமாக 'ஆமாம்..ஆமாம்’ போடுகிறது கூட்டம்.

''ஜெயலலிதா வருகிறார் என்றால் பக்கத்து மாவட்டத்துக்காரர்களை ஒரு திடலில் கூட்டிப் பேசிவிட்டுச் சென்றுவிடுவார். ஆனால், நாங்கள் அப்படி இல்லை. கிராமம் கிராமமாக உங்களைத் தேடி வருகிறோம்!'' என்று உருகுகிறார். ஆனால், ''கோட்டை என்றாலும், கொடநாடு என்றாலும் ஜெயலலிதாவுக்கு கருணாநிதியின் நினைப்புதான். எதற்கெடுத்தாலும் கலைஞர்தானா உங்களுக்கு?'' என்று ஸ்டாலின் பேசுவதற்குக் கைதட்டினாலும், 'ஸ்டாலினா இப்படிப் பேசுவது!’ என்று ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள் பொதுமக்கள்.

''ஜெயலலிதாவின் அறிவிப்புகள் எதுவும் செயல்வடிவம் பெறுவது இல்லை. வெறும் ஏட்டளவே உள்ளன'' என்கிறவர், 'சீனிச் சக்கரை சித்தப்பா, ஏட்டில் எழுதி நக்கப்பா!’ என்ற ஒரு பழமொழியைச் சொன்னதும் சிரித்து மகிழ்கிறது கூட்டம்.

'' 'காஞ்சிபுரம் பிரசாரம் போகிறேன்!’ என்று தலைவரிடம் சொன்னதும், 'கண்டிப்பாக அண்ணா வீட்டுக்குப் போயிட்டுப் போ’ என்று கட்டளையிட்டார். அதன்படியே அண்ணா இல்லம் சென்றுவிட்டு வந்து உங்கள் முன்னால் நின்று பேசுகிறேன்!'' என்று ஆங்காங்கே பெர்சனல் டச் கொடுக்கிறார்.

'எதிர்கால நலன் கருதியோ’ என்னவோ காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ஜ.க. பற்றியெல்லாம் வாயே திறப்பது இல்லை. பலமான கூட்டணி இல்லாதது, மதுரைப் பக்கம் அழகிரியின் சலம்பல்... என சிக்கல் சிரமங்களுக்கு மத்தியில், தான் கை காட்டிய வேட்பாளர்களை ஜெயிக்கவைக்க வேண்டும் என்ற அக்னிப் பரீட்சையை எதிர்கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.