அரசியல்
Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

ரு புதிய பயணத்துக்கான பாதை நம் முன்னே விரிந்திருக்கிறது. இந்தப் பாதை, நம் சொந்த வாழ்வை மட்டுமல்ல... இந்தத் தேசத்தின் தலைவிதியை, திசைவழியைத் தீர்மானிக்கப்போகிறது. உலகின் மாபெரும் ஜனநாயக நாடு என்ற பெருமையை சொற்களில் இருந்து செயலுக்கு மாற்றிக்காட்டுவதற்கான இன்னொரு தருணம் இது. சுமார் 60 ஆண்டு கால குடியாட்சி அனுபவம்கொண்ட இந்தியாவுக்கு, இது 16-வது பொதுத் தேர்தல். 'பதினாறு பெற்றோம்; பெறுவாழ்வு அடைந்தோமா?’ இந்தக் கேள்வியைப் பரிசீலித்துப் பார்ப்பதில் இருந்து, இந்தத் தேர்தலுக்காக நம் மனதைத் தயார்படுத்தலாம்.

ஜனநாயகம் என்பது, பல உரிமைகளை உள்ளடக்கியது. வாக்கு அளிப்பது அதில் ஒன்று. வாக்கு அளிப்பது மட்டுமே ஜனநாயகம் ஆகிவிடாது. பேச்சுரிமை, எழுத்துரிமை, அடிப்படை வசதிகளைப் பெறும் உரிமை, கல்வியுரிமை... என எத்தனையோ ஜனநாயக உரிமைகள், குடிமக்களாகிய நமக்குக் கிடைக்க வேண்டும். ஆனால் நமது அரசியல்வாதிகளோ, வெறுமனே வாக்கு அளிப்பதை மட்டுமே ஜனநாயகத்துக்கும் நமக்குமான பந்தமாக மாற்றிவைத்திருக்கிறார்கள். மற்ற உரிமைகள் மெள்ள மெள்ளப் பறிக்கப்படுகின்றன; அல்லது கட்டுப்படுத்தப்படுகின்றன. எனினும், சுமார் 120 கோடி மக்களைக் கொண்ட இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவை இத்தனை ஆண்டு காலமாகத் தக்கவைத்துக்கொண்டிருப்பதும் அதே வாக்கு அளிக்கும் உரிமைதான்.

தலையங்கம்

இந்தியாவில் வாக்கு அளிப்பது என்பது திருவிழாவைப் போல. காப்புக் கட்டியதும் உற்சாகமாக ஒலிக்கும் ஒலிபெருக்கிகளின் சத்தத்தைப் போல, வேட்புமனு தாக்கல் செய்ததும் பிரசாரம் தூள் பறக்கும். திருவிழாவுக்குக் கூடிவரும் உறவினர்களைப் போல, தேர்தல் தேதி நெருங்கிவிட்டால் அரசியல்வாதிகளின் வருகை களைகட்டும். ஆர்ப்பாட்டம், உற்சாகம், கூச்சல், கொண்டாட்டம் இரண்டிலும் உண்டு. சாமி, தங்களைக் காப்பாற்றுகிறது என்ற நம்பிக்கையில் மக்கள் திருவிழாவைக் கொண்டாடுவதைப் போல, இந்த அரசு நம்மைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் தேர்தலில் வாக்கு அளிக்கின்றனர். கூன் விழுந்த முதுகுடன் 90 வயதில் தள்ளாடியபடி வாக்குச்சாவடிக்கு வரும் மூதாட்டிக்கு, வேறு என்ன நம்பிக்கைகள் எஞ்சியிருக்க முடியும்?

ஆனால், வெறுமனே திருவிழாக் கொண்டாட்டமாக இந்தத் தேர்தல் அமைந்துவிடக் கூடாது. அதைத்தாண்டி அறிவுபூர்வமாக அணுகப்பட வேண்டும். மாறிவரும் நவீன உலகுக்கு ஏற்ற இந்தியாவுக்கான பாத்திரத்தை வடிவமைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பணி, நம் கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பின் தன்மையை உணர்ந்து, அப்படி உணர்ந்தவர்களைத் தேர்வுசெய்ய வேண்டும்.

ஏப்ரல் 24-ம் தேதியன்று தேர்தல். 81.4 கோடி இந்திய வாக்காளர்களில் 5.37 கோடி பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். ஊர்கூடி இழுக்கவேண்டிய தேரில் நம் கரங்களும் இணைந்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டிய முக்கியமான தருணம் இது!